Monday, March 1, 2010

சத்திய வெள்ளம்!

எழுத்தாளர் ஜீவி, தன் பூவனம் பதிவில்,  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எழுத்தாளர்களைப் பற்றிச் சின்னச் சின்ன அறிமுகமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தற்சமயம் பதிவில் வெளி வந்திருப்பது அகிலனைப் பற்றிய பதிவு!

"பாவை விளக்கு" அகிலன்
என்று தனித்து அடையாளம் காட்ட வேண்டிய நிலை வந்து விட்டதா என்ன?

அகிலாண்டம் என்ற அகிலனை வாசித்தவர்கள், அவரை அவ்வளவு எளிதாக மறந்துவிடவோ, ஒதுக்கி வைத்து விடவோ முடியாது! தமிழில், முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் லட்சிய வேகம், அதன் சத்தியத்தில் வெளிவரும் ஆவேசம் என்று தாங்கள் கண்ட சமூக அவலங்களைக் குறித்த கோபம், மாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தோடு எழுதுகிற எழுத்தாளர்களும் இருந்தார்கள் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடிகிறபோது உடனே நினைவுக்கு வருகிற சில எழுத்தாளர்கள் அகிலன், நா.பார்த்தசாரதி, தி.சா.ராஜு, ஜெயகாந்தன்! இவர்கள் எழுத எடுத்துக் கொண்ட களம் என்னவாக இருந்தாலும், அதில் ஒரு லட்சிய வேட்கை கொண்ட போக்கு, லட்சியத்தை  நோக்கி முன்னேறுகிற ஆவேசம்,  லட்சியத்துக்குக் குறுக்கே நிற்கும் சக்திகள், லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் இடையில் நிகழும் மோதல்கள்  என்றே கதா பாத்திரங்கள் வழியாக ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிற தன்மை இருக்கும். இதில் தி.சா.ராஜு, ஒரு காந்தீயச் சிந்தனை கொண்டவர். சரித்திரக் கதைக் களத்தை, நான் வாசித்தவரை எடுத்துக் கொண்டதே இல்லை.

அகிலன்  சரித்திரக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். நா.பாவும் சரித்திரக் களத்தைத் தொட்டு சில புதினங்களை எழுதியிருக்கிறார். யதார்த்த நிலையைத் தொட்டு  இருவருமே எழுதியிருக்கிறார்கள்! சமுதாயத்தில் கண் முன்னே தெரிகிற அவலங்களைக் கண்டு கதாபாத்திரங்கள் வழியாகக் கொதித்திருக்கிறார்கள்.. எழுத்தாளனை உதாசீனப் படுத்துகிற சிலபோக்குகளைச் சாடியிருக்கிறார்கள்.

ஆனாலும்  நா பார்த்த சாரதி, அதை இன்னும் கொஞ்சம் பட்டவர்த்தனமாகவே, கதையை படிக்கும்போதே, நடப்பு அரசியலில், நிகழ்வில்  இது எந்தப் புள்ளியைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் எழுதிய புதினம் சில  உண்டு.

சமுதாய வீதி புதினத்தில் வருகிறஅதிகம் அலட்டிக் கொள்கிற   சினிமாக் கதாநாயகன் கோபால் பாத்திரப் படைப்பு  சிவாஜி கணேசனை  மனதில் வைத்துக் கொண்டு தான் உருவானது என்பது  அதைப் படிக்கும்போதே வாசகர்களுக்குப்  புரியத் தான் செய்தது.

அதே மாதிரி, ஒரு அரசியல் அவலம், அதைத் தொடர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் உண்மையிலேயே நடந்த ஒரு  பின்புலத்தில் எழுந்தது தான் சத்திய வெள்ளம்! கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்தது. இன்றைக்குத் தமிழக முதல் அமைச்சருக்கு தினமொரு பாராட்டு விழா வேண்டியிருக்கிறது! சுயநலத்திலேயே ஊறி வளர்ந்தவர்கள் சிலர், தங்களுடைய ஆதாயத்திற்காக, ஒரு தனிமனிதனின் விளம்பர வெறியை வைத்து ஆடுகிற ஆட்டத்தில், அப்பாவி ஜனங்கள்  சிக்கிக் கொண்டு  படுகிற அவஸ்தை இருக்கிறதே...அதை வெறும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது! நா. பார்த்த சாரதி மாதிரி, ஒரு லட்சிய ஆவேசம் கொண்ட எழுத்தாளர்கள் கைகளில்  அந்த மாதிரியான வக்கிரங்கள்,  அவலங்கள் கூட படிப்பினை தருகிற ஒரு புதினமாக உருவாகி விடுகிறது!

வெறுமே படித்துவிட்டுப் பொழுது போக்குபவனாகத் தன்னுடைய வாசகனைக் குறுக்கிவிடாமல், ஒரு  சத்திய ஆவேசத்தோடு தன்னுடன் சேர்த்தழைத்துச் செல்கிற எழுத்து நா. பார்த்தசாரதியுடையது!  தனியாக ஒரு சிற்றிதழை, தீபம் என்ற பெயரில் நா.பா நடத்திய அந்த நாட்களை  தீபம் யுகம் என்று வல்லிக் கண்ணன் வியந்து சொன்னாரென்றால் அதில் காரணமில்லாமல் இல்லை! கல்கி, விகடன், குமுதம் என்று அன்றைக்கு வணிக ரீதியிலான பத்திரிகைகள் நிறுவன பலத்தோடு இருந்த நிலையில், அவைகளின் அசுர பலத்தை மீறி, ஒரு எழுத்தாளன் தன்னுடைய தன்மானத்தையும், கௌரவத்தையும்  காப்பாற்றிக் கொண்ட விதம் அது!

இன்றைக்குத் தினமொரு பாராட்டு விழா, மானாடி மயிலாடி நடப்பதற்கெல்லாம்  அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஒரு அரசியல்வாதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தான் பிள்ளையார் சுழியாக ஆரம்பித்தது. மாணவர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் கொடூரமான அடக்குமுறைக்கு  ஆளாக்கப் பட்டார்கள். எந்த மாணவர்களுடைய போராட்டத்தை வைத்து 1967 இல் ஆட்சியை பிடித்தார்களோ, அந்த ஆதரவெல்லாம் அனாவசியமாகப் போய்விட்டது. 

திருச்சியில், தெப்பக் குளம் அருகே ஒரு மந்திரிக்கு 'வேணுங்கப்பட்டவளை' கிளைவ் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் கிண்டல் செய்தார்களாம்! கண்மூடித் தனமான  தாக்குதலில், சில மாணவர்கள் பிணமாக திருச்சி மலைக்கோட்டை தெப்பக் குளத்தில் மிதந்தார்கள்!  கேள்விஎழுந்தபோது, வயிற்று வலி தாங்க முடியாமல் தெப்பக் குளத்தில் விழுந்து செத்திருப்பார்கள் என்று கேலியான பதில் வந்தது.

டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்த மாணவர்களில் உதயகுமார் என்ற மாணவன் இறந்து போனான். அவனுடைய பெற்றோர்களே, பிணத்தைப் பார்த்து விட்டு இது எங்கள் மகனில்லை என்று சொல்ல வைக்கப் பட்ட அவலமும் நடந்தது. இந்தக் கொடூரமான நிகழ்வின் பின்புலத்தில் உருவானது தான் நா.பா எழுதிய சத்திய வெள்ளம் புதினம்.

இந்தக் கதையை எழுதியபோது, நா பார்த்தசாரதி எழுதிய கதைமுகம்!
ஒரு சிறு அறிமுகமாக! இது எழுதப் பட்டு முப்பத்தெட்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால், அந்த வார்த்தைகளில் இருந்த சத்தியம் மாறவே இல்லை என்பது இந்த தேசத்து அரசியலின் பரிதாபம்! சாபக் கேடு!

 நாவலை இணையத்திலேயே இங்கே படிக்கலாம்.


கதை முகம்

     இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

     பணமே அதிகாரமாகவும் செல்வமாகவும் இருந்த காலம் மாறி அதிகாரமே பணமாகவும் செல்வமாகவும் இருக்கிற காலம் இப்போது கண்ணெதிரே மிகவும் பச்சையாகத் தெரிகிறது. இவற்றை எதிர்த்து, நேற்றும் இன்றும் போராட்டங்கள் நிகழ்ந்தன. நிகழ்கின்றன. நாளையும் நிகழலாம். அதிர்ஷ்ட வசமாக இன்றைய போராட்டங்கள் இளைஞர்களின் கரங்களில் வந்து விட்டன. தொழிலாளிகளின் கரங்களிலும் விவசாயிகளின் கரங்களிலும் அறிவாளிகளின் நினைவிலும் அவை வந்திருப்பதே ஒரு பெரிய மாறுதலாகும். 'மூத்த பொய்கள் யாவும் தகர்ப்போம்' - என்று மகாகவி பாரதி வேறோர் இடத்தில் கூறியபடி மூத்த பொய்களை எல்லாம் தகர்க்கும் தார்மீகக் கோபமும் ஆவேசமும் செயல் திறனுமுள்ள இளைஞர்களை இன்று நாம் மாணவ சமூகத்தில் தான் பார்க்கிறோம்.

     இது இளைஞர்களின் காலம். இளைஞர்கள் எதையும் ஆற்றவும், மாற்றவும் முடிந்த காலம். இளைஞர்களும் மாணவர்களும் தான் இன்று தீமைகளை எதிர்த்து, உள்நோக்கம் இன்றி நியாயங்களுக்காகப் போராடுகிற அளவற்ற யுவசக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதிகார ஆசை, பதவிப் பித்து, சுரண்டல், ஆதிக்க வெறி, ஆகியவை நான்கு புறமும், பூத கணங்களைப் போல சூழும் போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் பொங்கும் சத்தியப் பெருக்கின் முதல் ஊற்றுக் கண் இன்று மாணவர் உலகிலும், கல்லூரிப் பல்கலைக் கழகங்களின் எல்லையிலும் தான் இருக்கிறது. அப்படித் தற்காலப் பல்கலைக்கழக எல்லையில் நடைபெறும் மாணவ வாழ்வைப் பற்றிய சமூக நாவல் இது. இந்த மண்ணில் எப்போதோ யுகயுகாந்தரங்களுக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பாண்டவர்களுக்காகச் சத்திய வெள்ளம் பொங்கித் தணிந்தது. பின்பு நம் காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கும், மகாத்மா, நேரு போன்ற தேச பக்தர்களுக்கும் நடுவே மற்றொரு சத்திய வெள்ளம் பொங்கி வடிந்து சுதந்திரப் புதுமை பூத்தது. இதோ இன்னொரு சத்திய வெள்ளத்தைத் தான் துடிப்பும், துணிவும், நெஞ்சுரமும், நேர்மையும், மிக்க மாணவ சமூகம் இந்த நாவலில் பொங்கச் செய்கிறது.

     இன்றைய இளைஞர்கள் எதையும் சுற்றி வளைத்து நினைப்பதில்லை. நேராக நினைக்கிறார்கள். நேராகப் புரிந்து கொள்கிறார்கள். நேராகப் பேசுகிறார்கள். 1940-க்கும் 52க்கும் இடையே இங்கு இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 52க்கும் 67க்கும் இடையே இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 67க்குப் பின்னர் வரும் இன்றைய இளைஞர்களின் மனநிலை வேறு. 

இன்றைய இந்திய இளைஞன் தன் நாட்டை விஞ்ஞான, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்ற உலக நாடுகளோடு ஒப்பிட்டுச் சிந்திக்கும் வாய்ப்புக்களை அதிகமாகப் பெற்றிருக்கிறான். நேற்றைய மாணவன் ஒருவேளை தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டி இருக்கிறது. சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அளவு கூட அறிவும் சிந்தனையும் விசாலமடையாத எந்த அரசியல்வாதியும் இன்று அவனை ஏமாற்றி விட முடியாது. தங்கள் வசதிக்காக அவனைக் கிணற்றுத் தவளையாகவே இருக்கச் செய்ய இப்போது யார் முயன்றாலும் அது பலிக்காது. தலைமுறை இடைவெளி (ஜெனரேஷன் கேப்) கிணற்றுத் தவளை மனப்பான்மையை எதிர்க்கும் குணம், வேலையில்லாத் திண்டாட்டம், இவை இன்றைய இந்திய இளைஞனின் பிரச்சினைகள்.

     இந்த மாணவருலகப் பிரச்சினைகளோடு வெகு நாட்களுக்கு முன் நீங்கள் எனது 'பொன் விலங்கு' நாவலில் கண்ட அதே மல்லிகைப் பந்தலைச் சில மாறுதல்களோடும், பல வளர்ச்சிகளோடும் இந்த நாவலில் மறுபடியும் காண்கிறீர்கள்.

    இன்றைய மாணவர்கள் கற்கிறார்கள். பலவற்றை அவர்களே கற்பிக்கவும் செய்கிறார்கள். ஆசிரியர்களும், அரசாங்கங்களும், சமூகமும், பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிப்பை தவிர இன்றைய இளைஞர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவையே அதிகமாக இருக்கும் என்ற நினைவோடு இந்த நாவலைப் படிக்க வேண்டுகிறேன்.

நா.பார்த்தசாரதி

9, ஜூலை 1972

அகிலன், நா.பா இவர்களுக்குப் பின்னால், இப்படி ஒரு லட்சிய முனைப்போடு எழுத வந்தவர்கள், அநேகமாகத் தமிழில் இல்லாமலேயே போனார்கள் என்பது மிகப் பெரிய சோகம். இத்தனைக்கும் எழுதுவது என்பது இன்றைக்கு லாபகரமான தொழிலாகவே ஆன நிலையில்!

பழைய தலைமுறை எழுத்தாளர்கள், பழைய கதைகள் தானே  என்று தோன்றுகிறதா? இன்றைக்கும் பொருந்துவதான எழுத்து, விஷயம் அவர்களிடம் இருக்கிறது!

இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய எழுத்தாளர்கள், அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பரிந்துரைக்கும் போதே தீபம் நா பார்த்தசாரதி, அடுத்து அகிலன் என்று முன்னால் வருகிறார்கள்!

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)