Saturday, August 14, 2010

ஏன் தோற்கிறோம்..? ஒரு பத்துக் காரணங்கள்.....!


வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. மொக்கை போடுவதற்கும், பின்னூட்டங்களில் கும்மியடிப்பதாகவுமே வெறும் பொழுதுபோக்குக் கருவியாக நாம் பயன்படுத்தும் இணையம், கற்றுக் கொள்வதற்கான எளிமையான சாதனமாகவும் இருக்கிறது!

தட்டுங்கள் திறக்கப்படும்
! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம்
மட்டும் தான்!

டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள்  என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள்  கொஞ்சம் யோசிக்க  வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல  பதிவுகளில் ஒன்று, எப்படித் தோற்கிறோம் என்பதைப் பற்றியது.

தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.


என்னவென்று பார்ப்போமா?

முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.

இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.


நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.

ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.

ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.


ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?  

அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.


எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.

பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!

ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!

இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார். இதில் நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள், வைக்கப் போகிறீர்கள்  என்பது தான்!

உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!10 comments:

 1. Consistency in purpose is one of the important aspects. Is it covered in the above 10?

  ReplyDelete
 2. தேவையான கட்டளைகள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 3. கௌதமன் சார்!

  முதலாவது, இரண்டாவது காரணங்களைக் கொஞ்சம் பாருங்களேன்! நீங்கள் சொல்கிற Consistency in purpose இதற்குள்ளேயே அடங்கி விடுகிறதே! அதுவும் தவிர ஏழாவது காரணமும் சேர்த்துப் பார்த்தால்,உங்களுடைய கேள்விக்குப் பதில் கிடைக்கிறதா?

  உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப் பத்து, அல்லது பதினொன்று என்று காரணங்களை அடுக்கிக் கொண்டேபோவதால் மட்டும் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப்படுவதில்லை! இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இதனால் இப்படியிருக்கலாமோ, அதனால் இப்படியிருக்கலாமோ என்ற வகையில் ஆராயப்படுபவை தான்! இந்தப் பத்தோடு, இன்னும் எத்தனை பத்துக்கள் காரணியாக இருக்கும் என்பதை சொல்லிவிட முடியாது!

  அக்கார வடிசில் சமைப்பதற்கு அரிசி, வெல்லம், பால், நெய், ஏலம் கிராம்பு, பச்சைக் கற்பூரம் எல்லாம் வேண்டும் என்று சொல்கிற மாதிரி!

  ReplyDelete
 4. வாருங்கள் ஸ்ரீ!

  மனித வளத் துறையில் இருப்பதாக உங்கள் ப்ரொபைல் சொல்கிறது.
  கௌதமன் சார் சொன்னது மாதிரி, இந்தப் பத்தே போதுமா அல்லது ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்று உங்கள் கருத்தையும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 5. தமிழ் டிஜிடல் சினிமா என்ற பெயருடன், ஒரு திரட்டியில் இணைத்துக் கொள்ளுமாறு, திரட்டி விளம்பரம் செய்த ஒரு பின்னூட்டம் பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாததாலும், ப்ரொபைல் அடையாளமில்லாததாலும் நிராகரிக்கப்படுகிறது.

  ஊரில் இருக்கிற அத்தனை திரட்டிகளில் இணைத்துக் கொண்டிருப்பது என்று ஆரம்பித்தால்,அதைத் தவிர வேறு வேலையே பார்க்க முடியாது!சாரி!

  ReplyDelete
 6. தொழிலில் நட்புக்கு இடமில்லை.நட்பில் வியாபாரத்திற்கு இடமில்லை என ஞானத்துறவி விவேகானந்தர் கூறியதாக ஞாபகம்.

  எனது அனுபவத்தில் நண்பர்களாலேயே தொழிலை மட்டுமல்ல,உயிரையே இழந்து கிட்டத்தட்ட நடைபிணமாகவே மாற்றமடைந்து கடந்த பத்து வருடங்களாக எனக்கு நானே நண்பன் என்ற நிலை.

  அதேபோல் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்”என்பது எழுத்தாள்ர் நா.பா.வுக்கு முன்பே செய்யுள் நடையில் படித்ததாக ஞாபகம்.

  தன்னை தவிர வேறு எவரையும் நம்புதல் எந்த தொழில் செய்வோருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நான் எண்ணுவதில்லை.ஒரு வேளை எனது அனுபவத்தை வைத்து அளவீடு செய்தல் தவறெனினும்


  சுடும் பாலில் வாய் வைத்து சூடு பட்ட பூனை வேறு எந்தப் பாத்திரத்திலும் வாய் வைக்கத் தயங்குவது இன்னும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகவில்லை என்பதே.மற்றபடி பல கருத்துக்கள் ஏற்புடையதே.

  பின்குறிப்பு:-எவர் ஒருவர் நம்புகிறாரோ அவரையே ஏமாற்ற இயலும்.நம்பாத ஒருவரை ஏமாற்றுதல் அவ்வளவு எளிதன்று.

  ReplyDelete
 7. திரு சௌமியன்! முதல் வருகைக்கு நன்றி!

  அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
  அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

  என்பது திருக்குறளில் பொருட்பாலில் 1075 வது குறளாகச் சொல்லப்பட்டது உண்மைதான்! அதை மிகனளினமாக, பொருத்தமாகத் தன்னுடைய புதினத்தில் எடுத்தாண்ட விதம் நா.பாவுக்கே உண்டான தனிச் சிறப்பு.

  உங்களுடைய அனுபவமும், அதற்குண்டான தீர்வும் கூடத் திருக்குறளிலேயே (508,509,510 வது) சொல்லப் பட்டிருக்கிறதே!

  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
  தீரா இடும்பை தரும்.

  தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
  தேறுக தேறும் பொருள்.

  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும்.

  எவரையும் நம்பாமல் இந்த உலகில் வாழ எவராலும் முடியாது! அதே நேரம், எல்லோரையும் எல்லா நேரங்களிலும் நம்பிவிடவும் முடியாது! ஒருவரை நம்புவதற்கு முன்னால், ஆராய்ந்து அதன்பின் எடுக்கும் முடிவு தான் சரியான நம்பிக்கையாக இருக்க முடியும். பல தருணங்களில், நம்முடைய கைகளை மீறி இந்த தவறான முடிவுகள், விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்!

  தீர்வு, நேற்றைய சூடுபட்ட நிலையிலேயே தேக்கமடைந்து நின்றுவிடாமல், அதையும் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது, சரிதானே!

  தோல்விகள், ஏமாற்றங்கள் நம்மை விழிப்போடு இருக்கத் தூண்டுகின்றன, கற்றுக் கொடுக்கின்றன!

  ReplyDelete
 8. ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது எனது தந்தையாரின் வாய்மொழியாக அடிக்கடி எனது செவியில் நுழைந்து உயிரில் கலந்துவிட்ட ஒன்று.அதையே தங்கள் வலைமனையிலும்.

  எனது ஏமாற்றங்கள்,நான் மனிதர்களிடம் கொண்ட அசைக்க அளவிட முடியாத எனது நம்பிக்கையை குழிதோண்டிப்புதைத்து விட்டது.

  யாரையும் நம்பாதே..! என்பதே எனது தற்போதைய தாரகமந்திரம்


  //பல தருணங்களில், நம்முடைய கைகளை மீறி இந்த தவறான முடிவுகள், விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்//

  ஒருவேளை ஆகலூழ் எனை ஆட்கொள்ளாததால்,இழவூழின் காரணத்தால் இது போல் நடைபெற்றிருக்கலாம்.

  இருப்பினும் பிறந்து வரும்போது ஒன்றும் கொண்டுவராததாலும் போகும் நாளில் ஒன்றும் கொண்டு போக இயலாதாதலாலும்

  வாழும் வரை நெஞ்சின் உரமும் நேர்மைத்திறனும் என்னையே நம்பும் நம்பிக்கையுடன் ஓயாத போராட்டத்துடன் இவ்வாழ்வை வளமாக்கும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து முன்னேறத்துடிக்கும்,

  மனிதர்கள் மேலும் மனிதத்தின் மேலும் ந்ம்பிக்கை வைத்திருந்த ஒருவனுக்காக மதிப்பளித்து

  பதிலளித்துப் பதிவிட்டமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 9. திரு.சௌமியன்!

  உங்களுடைய நிலைமை புரிகிறது! கடந்தவைகளில் இருந்து மீண்டு வருவதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நீங்கள் அதிகம் பிரயாசைப்பட வேண்டியிருக்கும்! நார்மன் வின்சென்ட் பீல் எழுதிய The Power of positive thinking புத்தகம் கொஞ்சம் உங்களுக்கு உதவக் கூடும் என்றே நினைக்கிறேன்.

  எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்தவைகளில் இருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை, உங்கள் மீதே உங்களுக்கு இருப்பது, ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்!

  ReplyDelete
 10. திருப்பூரில் இருந்து மனோ என்ற பெயரில் வந்த ஒரு பின்னூட்டம், ப்ரோபைல் விவரம் இல்லாததால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. தங்களைப் பற்றிக் குறைந்தபட்சமாக அறிமுகம் செய்துகொள்ளத் தயங்குவதும், அனானிகளாக வருவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்று தான். ஏற்க இயலாமைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)