ஆயிரம் பக்கங்களுக்கு மேல், நூற்றுக்கணக்கான பாத்திரங்களை வைத்துக் கதை பண்ணிவிடலாம்! அது கூட அவ்வளவு கஷ்டமான ஒன்றில்லை! ஆனால், நாலைந்து அல்லது ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாகக் கூட இருக்கலாம், அதற்குள், ஒரு மையக் கருவைக் குழப்பமில்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகப் படைப்பதற்கு அதிகத் திறமை இருக்க வேண்டும்! சிறுகதை, வடிவத்தில் தான் சின்னது! சின்னஞ்சிறுவனாக வாமன மூர்த்தியாய் வந்தவன், தன் காலடி மூன்றினால் மூவுலகையும் அளந்தது போல, ஒரு நல்ல சிறுகதையின் கீர்த்தியும் கூடப் பெரியது தான் என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு! இந்தப் பக்கங்களில், சிறுகதை என்று பேச முனைகிறபோதே, இந்த வாமன மூர்த்தியை நினைத்துக் கொண்டு தான், ஒரு சிறுகதைக்குள் எப்படி ஒரு அழுத்தமான கருத்தை கதாசிரியரால் படைக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவதுண்டு!
இந்தக் காதல் இருக்கிறதே, இது தான் எப்படிப் பட்ட பெருமிதத்தை அல்லது ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறது!
காதல் வசப்பட்டவன், வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாத பரவசத்தில் ஆழ்ந்து விடுகிறான்! அதனால் தானோ என்னவோ ஷேக்ஸ்பியர் உலகம் முழுவதுமே காதலர்களை நேசிக்கிறது என்று சொன்னார்! காதல் தோற்றுவிட்டால், சொல்லவே வேண்டாம், இந்த வானமே இடிந்து தலைமீது விழுந்து விட்டதைப் போல, அப்படி ஒரு சோர்வு, ஏமாற்றம்!
இந்தச் சிறுகதையில் கூட, ஒருவன் தன்னுடைய காதலைப் பற்றிப் பேசுகிறான். காதல் தோற்றபின், அந்த ஏமாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவனாகத் தான் துவளுகிறான்! அப்படித் துவளுகிற எல்லோருமே தேவதாஸ் மாதிரி 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே' என்று சோகமான பாட்டைப் பாடிக் கொண்டு, காதல் ஏக்கத்திலேயே மரணத்தைத் தழுவுவதில்லை!
யாருக்காக, இது யாருக்காக என்று பாட்டுப் பாடித் தன்னையும் பிறரையும் தொந்தரவு செய்வதில்லை. வாழ்க்கை அதன் போக்கில் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது!
இந்த யதார்த்தத்தைச் சொல்கிற கதை ..கதை சொல்கிறவன் தன்னுடைய பெயரைச் சொல்வதில்லை! காதலித்து ஏமாற்றம் தந்தவளுடைய பெயரோ, வாழ்க்கையில் இணைந்து கொண்டவளுடைய பெயரோ கூட ஒற்றை எழுத்திலேயே நின்று விடுகிறது.கதையைப் படித்து முடிக்கும்போது, இது உங்களுடைய சொந்தக் கதையாகவுமே கூட இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறார் பாருங்கள், அங்கே தான் மு.வ எழுத்தின் வசீகரம் இருக்கிறது! படித்துப் பாருங்கள்!
எவர் குற்றம்? டாக்டர் மு.வரதராசன்
பரந்த உலகம் என்று சொல்கின்றார்கள். இருக்கலாம். உணவுத்துறையிலே பரந்த உலகம் தான். விருப்பான உணவை அல்லது விருப்பான உடையை வேண்டிய இடத்தில் வேண்டிய போது ஒருவன் பெற முடியும். நாளுக்கு நாள் மாறும் உடையா? வாழ்க்கையிலே ஒரு முறை தோன்றி எந்நாளும் நிலைத்து நின்று வாழ்க்கையோடு முடிந்துபோகும் உணர்வு. இந்த உணர்வுத் துறையிலே, உலகத்தைப் பரந்த உலகம் என்று சொல்ல மனம் இல்லை. இது மிக மிகக் குறுகின உலகம். ஒரு சிறு வீடு அல்லது ஒரு சிறு கூடு எனலாம்.
இந்த உணர்வுத் துறையிலே எனக்கும் ஒருத்திக்கும் தான் இடம் உண்டு. அந்த 'ஒருத்தி' யார்? இதுதான் பெருங் கலக்கத்தின் வித்து; ஏமாற்றத்தின் காரணம்; என் உயிரைப் பணயமாகக் கேட்ட போர்.
ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் பழகிய எனக்கு ஒரு சிலரே நண்பர்களாகக் கிடைத்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் பேருடன் பழகினேன். அவர்களும் என்னைப் பொறுக்க முயன்றார்கள், நானும் அவர்களில் பலரைப் பொறுக்க முயன்றேன். இது பரந்த உலகம் என்று தவறாக எண்ணியதால் அவ்வாறு முயன்றேன். முயற்சியின் பயனாக நண்பர்கள் இருவரே கிடைத்தனர். நட்புத் துறையிலும் இது குறுகிய உலகமே என்ற உண்மை உணர்ந்தேன். ஆம் நட்பும் உணர்ச்சிதானே? 'உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற திருவள்ளுவரைக் கேட்டிருந்தால், அவரும் இது குறுகின உலகம் தான் என்று உடன்பட்டிருப்பார். அப்போது 'மாயிரு ஞாலம்' என்று இதனை வாழ்த்தியிருக்கமாட்டார்!
இந்த இரண்டு நண்பர்களும் எனக்குத் துணை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். உள்ளத்தையெல்லாம் ஒளிக்காமல் எடுத்துரைத்தேன். இரவெல்லாம் பேசினேன். வைகறையில் வாய் திறந்து அவர்கள் கருதியதை எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மருந்து இல்லாமலே என் மனப் புண்ணை ஆற்ற முயன்றார்கள். அது ஆறவில்லை.
"வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அனுபவம் உடையவர்களின் துணை வேண்டும். ஏட்டுக் கல்வியைக் கொண்டு அதனை எட்ட முடியாது. நாங்கள் சொல்வதைக் கேள். நீ விரும்பிய காதல் நல்லதுதான். விரும்பியபடி நீ அதைப் பெற்று வாழலாம். விருப்பத்தை மறந்து விட்டும் வாழலாம். ஆனால் எது நல்லது என்பதை எண்ண வேண்டாவா? உலகத்தை ஒட்டிச் செல்லாமல் சுற்றுப் புறத்தை புறக்கணித்து, எவரையும் பொருட் படுத்தாமல் ஒதுங்கி நீ அவளை மணந்து கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை இன்பமான வாழ்க்கை ஆகுமா? காதல் வாழ்க்கை கட்டற்று விளங்குவது கற்பனை உலகத்தில் தான்! நீ நினைப்பதுபோல உலகத்தை மறந்து சுற்றுப் புறத்தைப் புறக்கணித்து ஒருத்தியோடு வாழ்க்கை நடத்த முடியாது".
இவ்வாறு நண்பர்கள் உரைத்த உபதேசம் என் மனத்தை ஓரளவு மாற்ற முயன்றது; மாற்றியது என்று சொல்வதற்கில்லை. மாற்ற முயன்றது, அவ்வளவு தான்!
அந்த அழகிய முகத் தோற்றத்திற்கு நான் அடிமையாகவில்லை. அவளுடைய புன்முறுவலில் விளங்கும் கலைக்கதிருக்கு நான் அடிமை ஆகவில்லை. அவளுடைய இனிய பேச்சில் மிதக்கும் அறிவொளிக்கு நான் அடிமையாகவில்லை. அந்த அழகையும், நகையொளியையும், கூரிய அறிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் இவற்றிற்கு நான் அடிமையாகவில்லை. அழகும், சிரிப்பும், அறிவும் நான் எங்கெங்கும் காண்கின்றேன். நான் அவற்றைத் தேடித் திரியும் இளைஞனாயிருத்தால் இன்று இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லையே! அழகையும் சிரிப்பையும் அறிவையும் கடந்து அவள் உள்ளத்தில் வாழும் உணர்வு, நான் எங்கும் காணாத உணர்வு; இதனை நினைக்கும்போது இந்த உலகத்தில் நானும் அவளும் தவிர வேறொன்றும் இல்லை என்று தோன்றுகின்றது. இதை அந்த நண்பர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். அறிந்தும் என்னைத் திருத்த வேண்டும் என்று எண்ணி என்னவோ சொல்கின்றார்கள்.
இந்த உலகில் நான் வாழவேண்டும். வாழ்வதற்கு உணர்வு வேண்டும். என் உணர்வுக்கு ஒரு துணை வேண்டும். அதற்குத்தான் அவளை நாடினேன். உணர்வுலகத்தில் பழகிய நண்பர்களும் அதைத் தடுக்கிறார்கள். உணர்வை விட உலகம் பெரியது என்கிறார்கள். நான் உலகம் சிறியது என்கிறேன்.
எங்களுக்குத் தனித் தனி மனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் உணர்வது போலவே நான் உணர்கின்றேன். நான் உணர்வது போலவே அவளும் உணர்கின்றாள். எங்கள் வாழ்வு ஒரு மனத்தின் வாழ்வாக இருக்கிறது. அத்தகைய வாழ்விற்கு இடம் இல்லையா? இரண்டு வேறு பட்ட மனங்கள் இடையறாமல் போர் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே வேண்டும் என்பது படைத்தவன் நோக்கமா?
"அவளை மறந்து வாழ்வதனால்-" இப்படி மூன்று மாதங்களுக்கு முன் நான் எண்ணியிருந்தால், அந்த எண்ணமே எமனாய் மாண்டிருப்பேன். எண்ணிய எண்ணம் அடுத்த நொடியிலே என்னை மாய்த்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த எண்ணத்தை எண்ணவும் முடிகின்றது. ஏமாற்றம் விளையுமே என்று நடுங்கவும் முடிகின்றது. அவளை மறந்துவிட்டு இன்னொருத்தியை மணந்து கொள் என்று நண்பர்கள் சொல்லும் சொல்லைக் கேட்கவும் முடிகின்றது.
இன்னொருத்தியும் - அவளும் அழகிதான்; கலை வல்லவள்தான்; அறிவு நிரம்பியவள் தான். ஆனால் என் மனம் நடுங்குகிறது. அவளுடைய உள்ளம் எப்படிப்பட்டதோ? அறிவார் யார்? அறிவது எப்படி? அறியாமல் துணிவது எவ்வாறு? கரவற்ற பார்வை, அடக்கமான நடை, ஒழுக்கமான வாழ்வு... இந்தச் சிறந்த பண்புகள் காண்கின்றேன். ஆயினும்-.........
oooOooo
நான் எங்கோ நடந்து போய்க் கொண்டிருந்தேன். அழகான பாதையாக இருந்தது. என் கையில் திருக்குறளோ வேறு எதுவோ இருந்தது, அதை ஊர்ப்பயணம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் என் நடையிலே ஒருவகை ஊக்கம் இருந்தது. ஊக்கத்திற்குக் காரணமாக என்னை அடுத்தாற்போல் க--- நடந்து வந்து கொண்டிருந்தாள். என் பக்கத்தில் என்னோடு கைகோத்து நடந்துவர வேண்டும் என்று விரும்பினேன். அவள் அதற்கு இணங்கவில்லை. என் பின்னே மெல்ல நடந்து வந்தாள். நான் முன்னே சென்றேன். அந்தப் பாதையில் நடப்பதில் ஓர் இடையூறும் இல்லை என்பது என் எண்ணம். ஆனால் என்ன காரணத்தாலோ அவள் பின் வாங்கினாள். எனக்கு முன்னும் செல்லாமல், என் பக்கத்திலும் வராமல், பின்னே நடந்து வந்தாள். அதுவே போதும் என்று மகிழ்ந்து நான் ஊக்கத்துடன் நடந்தேன். திரும்பித் திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். நெடுந்தூரம் நடந்தேன். நின்றேன். திரும்பி நோக்கியபோது அவள் நெடுந்தொலைவில் காணப்பட்டாள்.
அப்போது என் பின்னே சிறிது தொலைவில் அடக்கத்தோடு அச்சத்தோடு இன்னொருத்தி நடந்து வருவதைக் கண்டேன். அவள் தான் த------
இந்தக் கனவு எவ்வளவு பொருளுடைய கனவு என்பதை நான் அன்று உணரவில்லை. கனவு கண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கனவு கண்ட அன்று விடியற் காலையில் என் நெஞ்சம் பட்டபாடு சொல்ல முடியாது. அந்தக் கனவை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அமைதியோடு நினைக்கின்றேன். அவள் எனக்கு முன்னே சென்றிருப்பாளானால், என்னை ஒருவரும் தடுத்திருக்க முடியாது. அவள் எவ்வளவு வேகமாகச் சென்றிருந்தாலும் நான் அவளை விடாமல் தொடர்ந்திருப்பேன். என்னை ஒருவரும் இழுத்துப் பிடித்திருக்க முடியாது. அல்லது, அவள் என்னுடன் கைகோத்துப் பக்கத்தே நடந்துவந்திருந்தாலும் நாங்கள் பிரிந்திருக்க மாட்டோம். நண்பர்களின் உபதேசம் எங்களுக்குத் தடையாக இருந்திருக்க முடியாது.
ஆனால், நல்ல பாதை என்று அறிந்தும், இல்லாத இடையூறுகளை நினைந்து அஞ்சி, பின்வாங்கி, என்னை முன்னே நடக்க விட்டுத் தான் பின்னே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தபோது என் கண்ணுக்கு எட்டாத் தொலைவில், என் வாழ்க்கைக்கு எட்டா நிலையில் தனித்து, நின்று விட்டாள்.
இது என் குற்றமா?
oooOooo
இன்று .....................
இந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தக் கனவை அமைதியாக எண்ணும் வாய்ப்புக் கிடைத்த போது, என் வாழ்க்கைத் துணைவியாக விளங்குகின்றாள், த-----. இந்தக் கூட்டில் நான் எதிர்பார்த்த கிளி என்னோடு இல்லை. அது கூட்டினுள் புகுவதற்கு அஞ்சி இன்னும் பறந்து திரிந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதியான கிளி த....... என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அன்று அவள் இல்லாத குறையால் என் நெஞ்சமே வெடித்து விடும் போல் தோன்றியது; என் உயிர் வாழ்வு முறிந்து போகும் போல் இருந்தது.
ஆனால் இன்று இவளோடு நானும் வளமாகத்தான் வாழ்கின்றேன், என் நெஞ்சமும் அமைதியாகத்தான் இருக்கின்றது."
மு.வ படைத்த இந்த சொற்சித்திரம் எப்படி இருக்கிறது என்பதைக் கொஞ்சம் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்!
பின்னூட்டத்தில்; திரு ராஜு மு.வ பற்றி விக்கிபீடியா பக்கங்களில் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலிலும், அப்புறம் வேறு இரண்டு பக்கங்களின் தொடுப்பையும் கொடுத்திருந்தார்.சென்னை லைப்ரரி டாட் காமில் டாக்டர் மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு புதினமும், வேறு பல சிறுகதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கிறது.
கொஞ்சம் விரிவான விக்கி பக்கம் இங்கே.
thnx for sharing...didn't read this story ...but read his 'Agal Vilakku' from my friend...he has simple but excellent story telling...i think he is one of the(or only?) writer(s) from T.N got an highest sahithya academy award.
ReplyDeleteThough i'm youngster , i found his writing very close and simple(though written on 1950) while reading..
didn't find information abt him in wiki...if possible request some to compile and publish in wiki.
Mistakes in my last comment..sorry for that
ReplyDeleteWiki page on Mu.Varatharasanar: http://en.wikipedia.org/wiki/Mu._Varadarajan(breifone)
List of Sahitya_Akademi_Award_to_Tamil_Writers
http://en.wikipedia.org/wiki/Sahitya_Akademi_Award_to_Tamil_Writers
திரு.ராஜு,
ReplyDeleteநீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி இரண்டிலும் போதிய விவரங்கள் இல்லை, என்றாலும் தமிழ் விக்கி பக்கங்களில் ஏற்கெனெவே டாக்டர் மு.வ குறித்து விரிவான பக்கம் இருக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%௮
தமிழில் மு.வரதராசன் என்று கொடுத்துத் தேடினாலேயே நிறைய விவரங்கள் கிடைக்கும். ஆனால், அவற்றைத் தேடித் படிக்க விரும்புகிறவர்கள் எத்தனை பேர்? எத்தனைபேருக்கு, அவருடைய தூய தமிழில் எழுத முனைந்த அந்த நாளைய முயற்சியைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்? அப்படி ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவே, தெரிந்து கொள்ள விரும்புகிரவர்களுக்காகவே,அவருடைய சிறுகதை ஒன்றை ஒரு முன்னோட்டமாக இந்தப் பக்கங்களில் எடுத்துப் பதிவு செய்திருக்கிறேன்.
அவருடைய புதினங்களை மேலோட்டமாகப் பார்த்தால், இன்றைய சூழலில் படித்து உள்வாங்கிக் கொள்வது கடினமாகத் தோன்றும்! ஆனால் உண்மையில் அப்படியில்லை, இன்றைக்கும் கூட அவரது எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது, நல்ல எழுத்து என்று பகுத்துக் காணக் கூடியதாக இருக்கிறது.
அல்லி, கள்ளோ காவியமோ, கரித்துண்டு, அகல் விளக்கு முதலான புதினங்கள் என்னுடைய பள்ளிப் பருவத்தில் படித்து இன்றைக்கும் நினைவில் நிற்பவை. கி.பி.2000 என்ற புதினத்தைத் தான் படித்ததாக நினைவில் இல்லை, ஆனால் படிக்க வேண்டும் என்ற என்னுடைய பட்டியலில் இருப்பது.
மேலே கொடுத்திருக்கும் விக்கி லிங்க்கை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து உபயோகிக்க முடியவில்லை. bad request என்று பிழைச் செய்தி வருகிறது.
ReplyDeleteபின்னூட்டங்களில் இந்தமாதிரி ஹைபர்லின்கை எப்படித் தருவது என்று எனக்குத் தெரியவில்லை.
கூகிள் தேடலில் தமிழில் மு.வரதராசன் என்று மட்டும் கொடுத்துத் தேடுங்கள். நிறைய விவரங்கள் கிடைக்கும்.
@ கி.மூ சார்
ReplyDelete// ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாகக் கூட இருக்கலாம், அதற்குள், ஒரு மையக் கருவைக் குழப்பமில்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகப் படைப்பதற்கு அதிகத் திறமை இருக்க வேண்டும்! சிறுகதை, வடிவத்தில் தான் சின்னது! //
அது தான் சாரே ஞ்யான் சிறுகத மாத்திரம் எழுதுறேன் )
@ கி.மூ சார்
ReplyDelete//பின்னூட்டங்களில் இந்தமாதிரி ஹைபர்லின்கை எப்படித் தருவது என்று எனக்குத் தெரியவில்லை.//
ஒன்னுமில்ல. முன்னாடி பின்னாடி சேர்த்தால் சுபம். ராதே கிருஷ்ணா.
@ கி.மூ சார்
ReplyDelete// மு.வ படைத்த இந்த சொற்சித்திரம் //
மு.வ அந்த காலத்துலயே சொற்சித்திரம் எழுவியிருக்காரா. பொனைவு எதுனா இருக்கா சார் அவுரு எழுதுனது :)
மயில் ராவணன்!
ReplyDeleteகொண்டை உள்ள சீமாட்டி அள்ளி முடிக்கிறாள்! அந்த மாதிரி, நாவலாக எழுதுவதற்கும், பத்திரிகைகளில் தொடர் இழுவைகளாக வருவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நாவல் அல்லது தொடர் கதை எழுத நிறைய சரக்கு (க்வார்டர், ஆப், என்ற அளவில் வருகிற சரக்கு இல்லை!), முக்கியமாக எந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது என்பதில் பிரக்ஞை இருக்க வேண்டும்.
ஒரு தோழர் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் பாதிக்கும் மேல் எடிட் செய்கிறேன் என்று பாதிக்கும் மேல் வெட்டி எறிந்த பிறகும் கூட அது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கா'வியமாக இருந்தது. இரண்டு ஜாம்பவான்கள் என்று தங்களைத் தாங்களே கற்பனை செய்து கொள்கிறவர்கள், ஒருத்தர் வெட்டியும், இன்னொருத்தர் ஒட்டி ஆதரித்தும் விமரிசனங்கள் எழுதினார்கள். முன்கதை, பின்கதைச் சுருக்கம் எல்லாம் படித்த பிறகு, வாங்கிப் படிக்கும் துணிவு இன்னும் வரவில்லை.
சிறுகதை எழுத இன்னும் அதிக சாமர்த்தியம் வேண்டும்!
....அப்புறம் அந்த ஹைபர்லின்க் விவகாரம், நீங்கள் சொன்ன பின்னாடி கலர் மாறி வருகிறதே தவிர இணைப்புச் சுட்டியாக இல்லை.! இன்னும் இந்த விவரம் எனக்குப் புரிபடவில்லை!
மு.வ எழுதிய காலங்களில் சந்தனம் சந்தனமாகவும், முல்லை முல்லையாகவும் இருந்தன! மயில் என்று சொல்லிக் கொண்டு கோட்டான் ஒன்று புகைச்சலைத் தூண்டவில்லை! மண்டபத்தில் எவரோ எவருக்கோ எழுதிக் கொடுத்த கூத்தும் நடக்கவில்லை. சுருக்கமாக பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மற்றவர்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிக் கொண்டிருந்த புண்ணிய ஆத்மாக்கள் எவரும் இல்லை!
நான் ஓடிப் போறேன் என்று கோழைத்தனமாக ஓடிப்போன புனைவர்களும் இல்லை! அதனால், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கேட்கிற பொனைவு எதையும் மு.வரதராசன் அவர்கள் எழுதவில்லை!
அதற்கு அவருக்கு சாமர்த்தியமும் போதாது!