கற்றதும் பெற்றதும் என்று எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது அந்தநாட்களில் ரொம்பவுமே பிரசித்தம். விகடன் அந்தத் தொடரை 4 பாகங்களாக வெளியிட்டது என்று நினைவு. கொஞ்சம் புதிய விஷயங்களைத் தொட்டு எழுத ஆரம்பித்த எழுத்து அது! வலைப்பக்கங்களில் எதற்கு எழுதுகிறோம் என்ற கேள்விக்கு முன்னெல்லாம் உழைத்துக் களைத்ததில் (?!!) ச்சும்மா டைம்பாஸ் என்று தான் பதில் வரும்! இப்படி blogs எழுதுவது பொழுதுபோக்க, மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை சீரியசான மேட்டர் மட்டும் பேசாதே என்று கும்மியடிக்க கூடிய கூட்டமாகவே இருந்த பழைய காலம் மலையேறிவிட்டது என்றுதான் எனக்கு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகாலத்துக்கும் மேலான பதிவுலக அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
நல்ல எழுத்தென்பது எழுதியவனுக்கும் வாசிப்பவருக்கும் கொஞ்சம் பயனுள்ளதாக, எழுதுகிறவன் தான் கற்றுக் கொண்ட அனுபவத்தை வாசிப்பவருக்கும் கடத்துவது தான்! இது ஒருவாசகனாக என்னுடைய தீர்மானமாக இன்றுவரை இருக்கிறது. ஏதோ பதிவுக்கு வந்தோமா என்னத்தையோ வாசித்தோமா என்றில்லாமல் வந்ததற்குப் பயனாக ஏதோவொரு புது விஷயத்தை அல்லது ஒரு மாறுபட்ட பார்வையில் செய்தியைப் பார்க்க முடிவதாக இந்தப் பக்கங்கள் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக! எனக்குப் புதியவிஷயங்களைக் கற்றுக்கொடுத்த இணையத்தில், பயனுள்ளதாக சிலவிஷயங்களைக் கவனப் படுத்துவது என்னுடைய நன்றியைத் திருப்பிச் செலுத்துவதாக இருக்கவேண்டும், இல்லையா!
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காஷ்மீரில் மத்திய அரசு செய்திருக்கிற ஆர்டிகிள் 370 abrogation இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்தியா பாகிஸ்தான் சீனா மூன்று நாடுகளிலும் தேநீர்க் கோப்பைக்குள் சுனாமியாக மட்டுமே பேசுபொருளாக இருக்கும் என்பதால் அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவோ பேசாமல் இருக்கவோ முடியுமா? ஜம்மு காஷ்மீர் விவகாரம் இதுவரை இருந்த தேக்கத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு விட்டது. எப்படி என்பதை சேகர் குப்தா 14 நிமிட வீடியோவில் இங்கே சொல்கிறது.
இதுவரை சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு மட்டுமே சாதகம், ஆதரவு என்றிருந்த நிலை அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது. தீவீரவாதிகளை அனுப்பிக் கலவரங்களை உருவாக்குவது, அணுஆயுதப் பூச்சாண்டி காட்டுவது, எல்லைப் பகுதியில் போர்ப்பதற்றத்தை சும்மா லுலுலாயிக்காகவேனும் பில்டப் கொடுத்துப் பார்ப்பது என்ற வழக்கமான ஸ்டன்ட் எதையுமே செய்யமுடியாமல் இம்ரான்கான் தொடர்ச்சியாக ஐந்து ட்வீட்டர் செய்திகளோடு ஒப்பாரியை நடத்திக்கொண்டு குறுகிப்போய்க் கிடக்கிறார். அவரைப் பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கும் பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கு மேலும் ஆர்டிகிள் 370 கைகழுவப்பட்டது சரிதானா என்ற வீண் சந்தேகம், விவாதங்கள் எல்லாம் எதற்கு? நேரமிருந்தால் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்திருக்கிற கமென்ட்ஸ் என்னவென்றும் பாருங்களேன்!
இங்கே படத்தில் லொள்ளு பிரசாத் யாதவுடன் கைகொடுத்துக் கொண்டிருப்பவர் பீஹார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா.பிஹார் மாநிலத்தில் 3 முறை முதல்வர் பதவியை வகித்தவர் ஜெகநாத் மிஸ்ரா. இன்று காலமானார் என்ற தகவலோடு இந்துதமிழ்திசை நாளிதழ் இப்படி அவருடைய கீர்த்தியைச் சொல்கிறது: பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முன்பாக காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மாநிலத்தின் மிக வலிமையான தலைவராக விளங்கினார். லாலு பிரசாத்தின் அரசியல் எழுச்சிக்கு பிறகு மிஸ்ராவின் அரசியல் வீழ்ச்சியடைந்தது. பிஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.
முதல் முறை முதல்வராக இருந்தது 750 நாட்கள் 2வது முறை 1133 நாட்கள் 3வது முறை 95 நாட்கள் என்று மொத்தம் 1978 நாட்கள் பீஹார் முதல்வராக இருந்தார். பீகாரின் கடைசி காங்கிரஸ் முதல்வர் இவரே! 1990 மார்ச் மாதத்தோடு சரி! அப்புறம் காங்கிரஸ் கட்சி இன்றைக்கும் அங்கே எழுந்திருக்க முடியவில்லை என்பது தான் முக்கியமான செய்தி. இன்னொரு சுவாரசியமான கேள்வி, ஊழல்புகாரில் சிக்கிய காங்கிரஸ் மந்திரிகள் தண்டிக்கப் பட்டாலும் கூட சிறைக்குப் போனதில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் அதீத சாமர்த்தியமா? அல்லது நம்முடைய சிஸ்டம் எப்படிக் காங்கிரசால் கெடுக்கப்பட்டது என்பதன் அடையாளமா?
யோசித்து ஒரு பதில் கிடைக்கிறதா என்று பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment