நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆர்டிகிள் 370 விஷயத்தின் மீது மக்களுக்கு ஒரு 40 நிமிட உரையை நிகழ்த்தியிருக்கிறார். புதியதலைமுறை டிவி ஒளிபரப்பிய நேரலை உரையை ஒரு காரணத்துக்காக இங்கே பகிர்கிறேன்.
எனக்கு ஹிந்தி தெரியாது என்பதால், ஆங்கில சேனல்களில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் போடுவார்கள், ஆங்கில செய்தி ஊடகங்களில் என்ன செய்தி ரிப்போர்ட் ஆகியிருக்கிறது என்று தேடித்தேடி, புரிந்துகொள்ள முயற்சி செய்வது எனக்குப் பழகிப்போய்விட்டது. ஆனால் சில முக்கியமான விஷயங்களை தமிழ் சேனல்கள் புரிந்து கொள்கிற, விவாதம் நடத்துகிற லட்சணத்தை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது என்பது தெரிந்த விஷயம் தான்!
நேற்றிரவே அவசர அவசரமாக புதியதலைமுறை ஒளிபரப்பிய நேர்பட பேசு நிகழ்ச்சியை இன்று பார்த்தேன். வீடியோ 35 திமுக தரப்பில் பேசிய வழக்கறிஞர் சரவணன், திராவிடங்களுக்கே உரித்தான அலட்சியம், அரைகுறைப் புரிதல், திரித்துப் பேசுதல் இவை தாண்டி விஷயம் புரிந்து கொண்டு பேசவில்லை. பத்திரிகையாளர் லட்சுமணன் பிரதமர் உரையைப் பற்றி பேசாமல் ஆர்டிகிள் 370 காலாவதியானவிதத்தைப் பற்றியே பேசுகிறார். நேரு இந்திரா காலத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் சட்டப்படிதான் பல விஷயங்களை செய்தார்களா என்ற முன்னுதாரணத்தைப் பற்றி பேசவில்லை. சுமந்த் சி ராமன் அவருடைய சந்தேகங்களைக் கேட்பதற்காகவே வந்தார் போல இருந்தது. பானு கோம்ஸ் ஒருவர் கொஞ்சம் புரிந்து பேச முயன்றார் என்றாலும் அவரைப் பேச விட்டார்களா அல்லது பிரதமர் என்ன பேசினார் என்பதன் மீதுதான் பேசினார்களா? எனக்கு இந்த நிகழ்ச்சியில் எதை நேர்பட பேசினார்கள் என்ற குழப்பம் இன்னமும் தீரவில்லை. ஆனால் உள்ளூர்ச் சேனல்களின் யோக்கியதை, உள்ளரசியல் தெரிந்ததனால் புதியதலைமுறை விவாதங்களை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
The Prnt தளத்தின் சேகர் குப்தா, இவரை அடிக்கடி இந்தப் பக்கம் ஒரு reference ஆக எடுத்துக் கொள்வதன் பின்னணியில் இவர் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ள முடியா விட்டாலும், இவரைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு, ஊடகத்துறை அனுபவமும், ஒரு செய்தியை எப்படிப்பகுத்துப் பார்க்க வேண்டும் என்கிற தெளிவும் இருப்பதுதான்!
இந்தப் பதினான்கு நிமிட வீடியோவில் பிரதமரின் 40 நிமிட உரையை நான்கு விதமாக ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக என்று மிகுந்த கவனத்துடன் இருந்ததாகச் சொல்கிறார். முதலாவது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு! தெளிவாக ஆர்டிகிள் 370 சிறப்பு அந்தஸ்து போனது போனதுதான் என்று சொல்லிவிட்டு, அந்த ஆர்டிகிள் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார். அடுத்து நாட்டுமக்களுக்கு! ஆர்டிகிள் 370 வெறும் ஆரம்பம் தான், முடிவெடுப்பதற்குத் தயங்கித் தயங்கியே தேங்கிப்போன நிறைய விஷயங்களில் இனிமேல் ஒரு தெளிவான செயல்கள் முடிவுகளுக்குத் தயாராக இருங்கள் என்கிற மாதிரி! மூன்றாவது பாகிஸ்தானுக்கு! இனி வரும் நாட்களில் இந்திய அரசின் அணுகுமுறை என்னமாதிரி இருக்கும் என்பதைக் கோடி காட்டுவதாக! காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதற்கு எதுவுமில்லை, சிம்லா ஒப்பந்தம், இஸ்லாமாபாத் தீர்மானம் என்பதெல்லாம் பழங்கதை என்று தெளிவுபடுத்துகிற மாதிரி! சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியும் நேற்றைய உரையில் இருக்கிறது. 6 பில்லியன் டாலர் கடனுக்காக நாட்டின் பொருளாதாரத்தையே அடகு வைத்திருக்கிற பாகிஸ்தானா? அல்லது வலுவான பொருளாதார அடித்தளத்துடன் நம்பகத் தன்மையுடன் இருக்கிற இந்தியாவா என்று (soverign bond வெளியீட்டுக்கு இருக்கிற ஆதரவைத்தொட்டு) முடிவுசெய்து கொள்ளுங்கள் என்கிற செய்தி. இப்படி நாலுவிதமான ஆடியன்சுக்கு நாலுவிதமான செய்தி இருப்பதை பிரதமர் உரையைக் கேட்டதும் புரிந்துகொள்ள முடிந்ததா? நம்மூர் சேனல்களை நம்பினால் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?
மேலே மூன்று வீடியோக்கள்! முதலாவது பிரதமர் பேசியது! அடுத்து உள்ளூர்ச் சேனல் எதுபொருளோ அதைக் கோட்டை விட்டு மற்ற ஆகாவரிகளைப் பேசியது. Reading inbetween the lines என்று பேச்சின் பின்னணியில் என்ன செய்தி யார் யாருக்குச் சொல்லப்பட்டது என்பதை கிரகித்துக் கொண்டு சொல்வது கடைசி வீடியோவில்.
ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் சொன்னது போல செய்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன அல்லது கிளப்பிவிடப் படுகின்றன என்பதை புரிந்து கொள்ள செய்திகளின் வேரைப் பிடித்துப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment