காஷ்மீர் யாருக்கு சொந்தம்?
நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்துவிட்டிருக்கிறது.
படேல், அம்பேத்கர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநில மக்களைத் துளியும் கலந்தாலோசிக்காமல் காஷ்மீருக்கு என்று சிறப்பு சலுகையை நேரு தன்னிச்சையாக வழங்கினார்.
இன்று அந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் ஓர் அங்கமான காஷ்மீரில் அதே தேசத்தின் பிற அங்கங்களான பிற மாநிலத்தினர் நிலம் வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது என்பது தொடங்கி காஷ்மீருக்கு என்று தனி சட்டசபை; தனி கொடி; பாகிஸ்தானியருக்கு காஷ்மீரில் இருக்கும் சில உரிமைகள் கூட இந்தியர்களுக்குக் கிடையாது எனப் பல சலுகைகள் காஷ்மீருக்குத் தரப்பட்டதற்கு என்ன காரணம்?
உண்மையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா... பாகிஸ்தானுக்கா... அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? என்ற இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி எ மிஷன் இன் காஷ்மீர் (தமிழில்: காஷ்மீர் முதல் யுத்தம்) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார்.
பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார்.
பிரிவினையின் போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த மடாலயத்தில்தான் காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல், 91 வயதில் மரணத்தின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.
அவர் சொன்ன விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக் கண் முன் கொண்டுவருவதில் கடும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம்... பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.
பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்துஸ்தானானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை படேலின் பொறுப்பில் விடப்பட்ட 500 சொச்சம் சமஸ்தானங்களில் சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அது நேருவின் கையில் விடப்பட்ட காஷ்மீர்.
காஷ்மீர் பிரச்னை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது... உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய ராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷ்மீர் மீதான பாகிஸ்தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள் வரை அனைத்து அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷ்மீர் பிரச்னை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.
அக்கம் பக்கம்! என்ன சேதி! தளம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் புக்மார்க் செய்து வைத்துக் கொண்டோ அல்லது மின்னஞ்சலில் பதிவுகளைப் பெறுகிற மாதிரியோ செய்து கொள்வதுடன் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment