Monday, January 24, 2011

தர்க்கத்திற்கு அப்பால்..........ஜெயகாந்தன் !

தர்க்கத்திற்கு அப்பால்...

ஜெயகாந்தன்


வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு 

இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.
என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர் பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று 'உன்னை நான் காதலிக்கிறேன் ' என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது '

இந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே ? அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன். 

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா ? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்
படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான். 

இப்பொழுது என் நிலைமை... பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன ? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ' 

அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன ? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ ? நிச்சயம் முடியும். 

சங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணாபோக, கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம். 'கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய் ' என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது. 

'ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... ' என்ற குரல். 

ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்
காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி கரம் குவித்து, 'சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ' என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு. 

புக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; 

'இன்னும் ஓரணா கொடுங்கள் சார். '

'பன்னிரண்டணாதானே ? '

'அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். '

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்றுவிட்டேன். 'யாரிடம் போய் ஓரணா கேட்பது ? '

'அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்..... ' என்று நினைக்கும்போதே.... ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே --- கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?

'அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது ? '

'அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் '

'இப்ப சந்தியில் நிற்கிறேனே ? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை 

? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா ? கேட்டால் தருவானா ? தரமாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று ' '

'எடுத்துக்கொண்டால் ? அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ' அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த -- என்னுடைய --இரண்டணாவை எடுத்துக்கொண்டால் ? '

'இது திருட்டு அல்லவா ? '

'திருட்டா ? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே... அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ' என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.

ஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

\'அடப்பாவி ' ' -- திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்.

'சாமி, இதுதானுங்களா தர்மம் ? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு.... அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே ? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே... '

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன், இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.தெரியாம எடுத்துட்டேன் ' என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.

அப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா ?

நான் யோசித்தேன்.

'அது அவன் பணமா ? '

'ஆமாம் ' '

'நான்தானே தந்தேன். '

'காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா ? தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். '

வெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில் தான்.

இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?

தருமம் காத்ததா ?

எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. 

சிறுகதையின் வடிவத்தைப் பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன், அவருக்கே உரிய பாணியில் இங்கே கலக்கிக் கொண்டிருக்கிறார்.எத்தனையோ பேர் எத்தனையோ தரம் பேசிப் பேசி இன்னமும் பிடிபடாத விஷயமாகத் தான் இருக்கிறது. 

ஜெயகாந்தனின் இந்த சிறுகதை, சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது என்று எனக்குப் படுகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்!9 comments:

 1. அற்புதமான கதை! கதையின் தளத்தில் நான் இருப்பது போல ஒரு பிரமை தோன்றியது!

  ReplyDelete
 2. தமிழ் வாசகர் உலகில் "சிறுகதை மன்னர்" என்ற பெயர் பெற்றவராயிற்றே நம் ஜெயகாந்தன் அவர்கள். இது போன்ற பட்டங்களுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா என்று தெரியாது. ஆனால். அது ஒரு அங்கீகாரம் தான் .

  ReplyDelete
 3. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சிருக்கீங்க... எனிவே, ஜெயகாந்தன் எப்போதுமே கலக்கல் தான்...

  ReplyDelete
 4. @பந்து!

  ஒருசிறுகதையின் வெற்றியே, வாசகரையும் கதையின் தளத்துக்குள் இழுத்துக் கொண்டு விடுவது தான்! ஜெயகாந்தனுடைய ஈர்ப்பைப் பற்றித் தனியாக எழுதவே வேண்டாம்!

  @மாணிக்கம்!

  இன்றைய நிலவரத்தில், பட்டங்கள் அர்த்தமிழந்து வெறும் தம்பட்டங்களாக மட்டும் குறுகி நிற்கின்றன. அதனால், சிறுகதை மன்னன், சிறுகதை சாம்ராட், சிறுகதைத் திலகம் என்ற அடைமொழிக்கெல்லாம் அர்த்தமே இல்லை. எல்லாவற்றையும் விட, ஜெயகாந்தன் இப்படிப்பட்ட அடைமொழிகளுக்குள் தன்னை எப்போதும் குறுக்கிக் கொண்டவரும் அல்ல.

  ReplyDelete
 5. @பிலாசபி பிரபாகரன்!

  எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேனா!?

  அந்த முடிவுதான் இந்தப் பதிவின் ஆரம்பமே! ஜெயகாந்தன் கலக்கிக் கொண்டிருந்தது நேற்றைய நாட்களில்!

  என்னுடைய வாசிப்பு அனுபவம் ஜெயகாந்தனோடு குறுகிப்போய்விடவில்லை. சிறுகதை, உரையாடல் பயிற்சிப்பட்டறை எல்லாம் இங்கே நடக்கின்றன. சிறுகதை எழுதுவது எப்படி என்று பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.ஆனாலும், சிறுகதை வடிவம் எல்லோருக்குமே பிடிபட்டு விட்டதாகச்சொல்லிவிட முடியாது. வாசிப்பு அனுபவம் என்பது, வளர்ந்துகொண்டே, மாறிக் கொண்டே இருப்பது, வாசித்த எழுத்தையும் தாண்டி யோசிக்கும் நிலைக்கு உயர்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் (சு)வாசிக்கப்போறேங்க தளத்தின் சுவாசமே!

  தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், கதை சிறுத்தாலும் என்ற விவாத இழையில் மிக அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதனுடைய ஹைபர்லின்க் தனி வண்ணத்தில் தெரிகிறதல்லவா! சொடுக்கிப் படித்துப்பாருங்கள்! சொக்கிப் போவீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்!

  ReplyDelete
 6. //அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்..... ' என்று நினைக்கும்போதே.... ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே --- கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது..
  மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?//

  யாசிப்பது என்பது அவ்வளவு சுலபத்தில் எல்லோராலும் முடிந்து விடுகிற காரியமில்லை..
  வாழ்க்கையுடனான மனம் செய்யும் தர்க்கத்தில்.. அப்படியான ஒரு தர்க்கம் நடைபெறுவது தான் அந்தத் தனிமனிதனின் சிறப்பாகிப் போகிறது. .


  //தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும்.
  .... தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.//

  கர்ணனின் தர்ம பலனை கண்ணன் கூட யாசித்து அவன் தந்ததால் தான் பெற்றான்.

  போட்ட இரண்டணா தர்மத்தை எடுக்க முயற்சித்தற்குத் தண்டனையாக தர்மத்தில் இன்னொரு ஓரணா கூடி மூன்றணா ஆனது மட்டுமில்லை, செய்த தருமமே கேள்விக் குறியாயிற்று. அடுத்த ஸ்டேஷன் வரை கால் வலிக்க நடந்த தண்டனை தான் செய்த அந்த தர்மத்தை அங்கீகரித்து..

  //இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?
  தருமம் காத்ததா ?
  எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது...//

  தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லி, தர்க்கத்தைத் தவிர்த்து தர்மத்தின் பலனை வெகு தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ஆசிரியர்.

  இது தான் சிறுகதையின் இலக்கணம். ஆசிரியரின் கூற்றாக எதையும் நியாயப்படுத்தியோ அன்றி அப்படி அல்லாமலோ ஒரு வார்த்தை இல்லை. கதை கதையாகவே காணக்கிடைக்கிறது.

  ஆகச் சிறந்த ஜே.கே.யின் சிறுகதை வார்ப்புத் திறமையையும் பறைச்சாற்றுகிறது.

  நல்ல ஒரு சிறுகதையைத் தேர்ந்து பதிந்தமைக்கு மிக்க நன்றி,எஸ்.கே. சார்!

  ReplyDelete
 7. வாருங்கள் ஜீவி சார்!

  ஜெயகாந்தனின் வார்ப்புத் திறமையைப் பற்றித்தனியாக நான் சொல்லவேண்டியதே இல்லை.

  எது சிறுகதை? சிறுகதையின் இலக்கணம் என்ன? இந்த விவாதம் நீண்ட நாட்களாகவே நடந்துகொண்டிருப்பதுதான்.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழ்வாசல் கூகிள் வலைகுழுமத்தில் "கதை சிறுத்தாலும்..."என்ற இழையில் சிறுகதையின் இலக்கணம் என்ன என்பதை மிக அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதற்குப் பொருத்தமான ஒரு சிறுகதை வடிவத்தை, இங்கே ஓர் உதாரணத்திற்காக மட்டும்!

  //வாழ்க்கையுடனான மனம் செய்யும் தர்க்கத்தில்.. அப்படியான ஒரு தர்க்கம் நடைபெறுவது தான்...//

  மிக அழகான வார்த்தைகள்! கொஞ்சம் அப்படியே பார்த்தோமேயானால், எது சிறுகதை அல்லது எப்படி ஒரு சிறுகதை உருவாகிறது என்பதற்கு இதையே ஒரு இலக்கணமாகக் கூட எடுத்துக்கொள்ள முடியும்.

  ReplyDelete
 8. ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தும் விதமாக இச்சிறுகதை இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எந்த சுற்றி வளைப்புல் இல்லாத, படித்து புரிந்து கொள்ள பெரிய அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல், மிக எளிமையாக அன்றாட வாழ்க்கையில் ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வை சிறுகதையாக்கியவருக்கும் அதனை எடுத்து அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 9. கதை அருமை..ஜே.கே. கதை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது..

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)