நேற்றிரவு, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனிடமிருந்து, சேட்டில் ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை வந்தது. ஒரு குழுமத்தில் நடந்த அக்கப்போர் பிடிக்காமல், நேற்று முற்பகலில் தான் அந்தக் குழுமத்தை விட்டு வெளியேறி ஒதுங்கி இருந்தேன். இந்தக் கவிதையை முதலில் படித்த போது, எனக்குள்ளே நானே இரு பகுதியாகப் பிரிந்து, அந்த சிறு பறவையாகவும், அதை விரட்டுகிறவனாகவும், அப்புறம் அதை நினைத்துப் பார்ப்பவனாகவும், கடைசியில், "உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும் என்னுடைய ஆசைப்படி அல்ல" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய பிரார்த்தனையை செய்கிறவனாகவும் கொஞ்சம் அனுபவித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது.
ஆனால், இதை எழுதிய ஆங்கிலக்கவிஞன் அப்படி நினைத்து எழுதவில்லை என்பது நிச்சயம்!
இந்தக் கவிதை மொழிபெயர்ப்புக்காக ஸ்ரீரங்கம் மோகனரங்கனுக்கும், இதை வெளியிட்டிருக்கும் தமிழ்வாசல் கூகிள்வலைக் குழுமத்திற்கும் நன்றி!
Whittier என்ற கவிஞர் எழுதிய The Common Question என்ற கவிதையின் தமிழாக்கம்:
மங்கிய நிறத்தில் ஒரு பறவை
கூடியுண்டபின் கிளம்பியது
வட்டமிட்டொரு வாகினிலே
வளைந்த கூரலகைத்
தேய்த்துக்கொண்டே.
சிறகுகளசைத்துச் செவ்வாலாட்டி
சிரத்தை ஒருபுறம் ஒருக்களித்தே
சில்லெனும் குரலில் பொறுமையற்றே
கேட்டது,
"சின்னப்பயலுக் கென்னவேண்டும்?
பதில்சொன்னேன், “உதை! சிறு புள்ளே!
புதை உன் தலையை சிறகுக்கிடையே
துயில்வதி! போ” என சொன்னாலும் *
மறுபடி மறுபடி கேட்டது
முதலில் கேட்ட அதையேதான்.
புன்சிரிப்பில் நான் எனக்குரைத்தேன்:
“மனிதரும் பறவையும் ஒன்றுதானோ!
அது சொன்னதைத்தானே
நாம் சொல்கின்றோம்.”
செயலிலோ அல்லது சொற்களிலோ
சாட்டைப் பம்பரம் பறையுடன் சிறுவரும்
தாண்டுகயிறு பாவையுடன் சிறுமியரும்
நிலங்களும் வீடும் கொண்டே மனிதரும்
கேட்கும் ஏழமைக் கேள்வியும் அதுதானே!
போட்டுப் பிதுங்கி வெளியில்வந்தாலும்
பைக்குள் எதையோ திணிக்கின்றோம்;
வீசும்வலையும் நிரம்பிவிட்டாலும்
வராத மீனுக்கும் ஏங்குகிறோம்
வானம் திறந்து கொட்டித் தந்தாலும்
வரையற்ற ஆசை விட்டுவிடாது
தான் என்ற ஆசைப் பூத யந்திரத்தில்
தளராமல் பிரார்த்தனை மாவரைக்கும்.
அருள்மிகும் கடவுள்
அனைத்தையும் கேட்டே
ஐயோ பாவம் என்றுரைப்பார்;
நம் தேவைகள் அனைத்தும் அவர் அறிவார்;
கண்ணை மூடி நாம் கேட்பதையே
தருவதும் மறுப்பதும் அவர் அருளே.
எனவே நானும் சமயத்தில் நினைப்பதுண்டு;
நம் பிரார்த்தனை அனைத்தையும் ஒன்றாக்கி
கூட்டில் வீட்டில் குலவுமிடத்தில் கோயிலினில்
கேட்பது ஒன்றே,
உன் சித்தம் போலே நடக்கட்டும்.”
--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
அப்பாடி! ஒரு வழியாக இந்தப் பக்கம் வந்தீர்களா?.. எவ்வளவு நாளாச்சு?.. எந்தப் பக்கமும் போகாமல், கொஞ்ச நாட்கள் இந்தப் பக்கமே இருங்கள், சார்!
ReplyDeleteவாருங்கள் ஜீவி சார்!
ReplyDeleteஒருவாசகனாக, வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த இந்தப்பக்கங்கள் எனக்கு முக்கியமானவை. வெறும் வாசிப்பு என்று கதை, கவிதைகளோடு மட்டும் நின்றுவிடாமல், மனிதவளம், மேலாண்மை உள்ளிட்ட பலவிஷயங்களை இந்தப்பக்கத்தில் பேசலாம் என்று தான் ஆரம்பித்தது என்றாலும், தேர்தல், தேர்தலை ஒட்டிய சில விஷயங்களையும் பேச வேண்டியிருந்தது. அதுவும் ஒரு குடிமகனாக, என்னுடைய கடமை என்பதால் மட்டுமே.
இந்தப்பக்கங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.