எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம் என்ற சிறுகுறிப்போடு எழுதிவரும் பூ வனம் பதிவரும் எழுத்தாளருமான ஜீவி முந்தைய பதிவில் எழுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் கதையை யாரேனும் அறிந்திருப்பார்களா என்று பின்னூட்டத்தில் இப்படி ஆதங்கப்பட்டிருந்தார்.
பொங்கல் என்றாலே ஏறு தழுவுதல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு புத்தகக் கண்காட்சியில் இருக்க வேண்டாமா?.. சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரிந்தாலல்லவா வாங்குவதற்கு?.. ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் தான்
எளிதில் வாங்குவோரை கவரும் என்பதனை இந்தப் பதிப்பகங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகங்களின் உள்ளடக்கத்தைக் குறித்து அத்தனை அலட்சியம்!
உண்மை என்னவென்றால், தி.ஜானகிராமனை நான் ஒரு வெறியோடு வாசித்திருக்கிறேன் என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிட வெறித்தனமாக நா.பார்த்தசாரதி, அகிலன், பி.வி.ஆர், ரா.கி.ரங்கராஜன், கண்ணதாசன், மு.மேத்தா, வைரமுத்து, வல்லிக் கண்ணன், அசோகமித்திரன், மௌனி, லா.ச.ராமாமிருதம், இப்படி இன்னும் நிறைய எழுத்தாளர்களை வாசித்த காலம் உண்டு. நாடோடி என்ற பெயரில் நகைச்சுவையாக எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளரை நண்பர் அறிந்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது!
கல்கி, புதுமைப் பித்தன்,தேவன் முதற்கொண்டு,பல எழுத்தாளர்களுடைய படைப்புக்களை, அவர்களுக்குப் பிந்தைய தலைமுறையில் பிறந்தவன் என்றாலுமே கூட தேடிப்பிடித்துப் படித்த அனுபவமும், அலுப்பூட்டுவதாக இருந்த போதிலுமே கூட, வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மர்ம நாவல்களைக் கூட விடாமல் படித்த காலம் ஒன்று இருந்தது. ஆக, நபரை வைத்து அல்ல என்னுடைய மதிப்பீடு! அவர்களுடைய எழுத்து எனக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பது ஒன்றே, ஒரு புத்தகத்தை அல்லது எழுத்தாளரை மதிப்பிட, இன்றைக்கும் நான் பயன்படுத்துகிற ஒரே அளவு கோலாக இருந்துவருகிறது. இன்றைக்கு ஜெயமோகன் கூட அம்மா வந்தாள் கதையை அவருக்குத் தெரிகிற கோணத்தில் அவரது வலைப்பக்கங்களில் விமரிசித்திருக்கிறார். ஜெயமோகன் விமரிசனம் சரியா தவறா என்ற கேள்விக்குள்ளேயே நான் போகப்போவதில்லை. ஜெயமோகனை எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக ஆதரிப்பதோ, அல்லது பிடிக்காது என்பதால் கல்லெறியும் ரகத்தையோ சேர்ந்தவனில்லை.
எந்த ஒரு இருவரும் ஒரே வானவில்லைப் பார்க்க முடியாது என்கிறது நவீன அறிவியல். அதே மாதிரித் தான், சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ, அந்த அளவுக்குள் நம்முடைய பார்வையும் குறுகிப் போய் விடுகிறது. அதே மாதிரித்தான், எழுத்தும்! வார்த்தைகளில் இல்லை உண்மையான ஜாலம்! எழுத்து, வாசிப்பு என்பது வெறும் வார்த்தைகளின் அடுக்கு மட்டும்அல்ல.
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் சிவாஜி கணேசனும், பத்மினிப் பாட்டியும் தான் நினைவுக்கு வருகிறார்கள் இல்லையா?
எனக்கோ, கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தில் வடித்த வடிவம் மட்டும் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது!தஞ்சை மண்ணின் இசை வேளாளர்களை, அந்த மண்ணுக்கே உரிய இசை ஞானத்தை அறிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவே தான் தெரிகிறது. ராவ் பகதூர் சிங்காரமும், இன்னும் பிற கதை வடிவங்களும் கூட கொத்தமங்கலம் சுப்புவின் எழுத்தாளுமையை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதாகவே இன்றைக்கும் படுகிறது.
கதைகளில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் உயிரோடு வந்து என்னோடு பேசுவதாகவே, ஒவ்வொருமுறையும் இவர்களது எழுத்தைப் படிக்கும் போது உணர்கிறேன். அந்த மாதிரித் தான், மோகமுள் பாபுவாகட்டும், அன்பே ஆரமுதே நாயகன் அனந்தசாமியாகட்டும், அம்மா வந்தாள் அப்புவாகட்டும், இந்தக் கதைகளில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்களைக் கூட, என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் பார்க்க முடிவது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!
திரு ஜீவி, பூவனம் என்ற தனது வலைப்பதிவில் எழுத்தைப் பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு, வரிசையாக எனக்குள் ஒரு தொடர் சிந்தனையாக ஓட ஆரம்பித்தது.அவருடைய பதிவில் பின்னூட்டமாக
"உணர்வுகள் எல்லோருக்கும் பொது என்றாலும்
உணர்வதில் பலவிதமான படித்தரம்!
உணர்ந்ததுபோதாதென்று அதை நளினமாய் பிறருக்கும்
வெளிப்படுத்துவதே எழுத்து!அதுவே அதன் தனிச் சிறப்பு!
எழுதுவதனால் கவிஞனோ எழுத்தாளனோ பிறப்பதில்லை!
அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு அதனைப் பக்குவமாய்ச் சொல்ல
அதைப் படிப்பவர் தங்கள் சொந்த அநுபவமாய் அங்கே அறியும்போது
எழுத்தும் பிறக்கிறது! எழுத்தாளன், கவிஞனும் கூடவே பிறக்கிறான்!
அனுபவமே எழுத்து! அந்த எழுத்தே சுகமான அனுபவம்! வாசிக்கும் அனுபவம்!
வீணையும் மீட்டும் விரல்களும் கூடும்போது பிறக்கும் இசை போல
எழுத்தும் வாசிப்பும் ஒருசேரக் கூடிடும்போது அங்கே விளைவது அற்புதம்!
அதியற்புதம்!அதிசயம்!"
"1951வது ஆண்டில் அப்படி அந்த விளையாட்டை விளையாடிய ஒரு நாள் வில்லியம் பர்ரோஸ் குறி பார்த்து ஜோன் வோல்மரின் இரு கண்ணுக்கு நடுவே சுட்டு விட்டான். ஜோன் வோல்மரின் மரணம் நிகழ்த்தப்பட்டது இவ்விதமே.
எட்டு வருடம் கழிந்த பின் வில்லியம் பர்ரோஸ் எழுதிய நாவல் 'Naked Lunch' .
ஹென்றி மில்லர் உணர்ச்சிப்பூர்வமாக ' அமெரிக்காவின் என் காலத்து ஒரே எழுத்தாளன் வில்லியம் பர்ரோஸ் தான்!' என்று சொல்லும்படியானது.
எழுத்து என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?
தி.ஜா,
திரு .ராஜநாராயணன்,ஜயகாந்தன்,இன்னும் ராஜம் கிருஷ்ணன் ,அநுத்தமா
வித விதமான எழுத்துகள் .ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.
அனந்தசாமியும் ருக்குவும் ,டொக்கியும்,சந்திராவும், இன்னும் அம்மாவந்தாளின் அம்மாவும், அவள் மகனும்,
அவனை வளர்க்கும் வேதபாடசாலை,காவிரிக்கரை, இந்து,அந்தப் பாட்டி.
ஒரு, கதா பாத்திரத்தை மறக்கமுடியுமா.??
நன்றி.
ஒருவன் தன்னை, தன்னுடைய மனைவி மக்களுள் கானுவதாலேயே, தன்பொருட்டே அவர்களை நேசிக்கிறான் என்கிறது அவரது உபதேசம். அதே மாதிரி, ஒரு கதையாக இருந்தால் கூட, அதில் வரும் பாத்திரங்களோடு, அந்த மொழியோடு தன்னை, தன்னுடைய அனுபவங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள முடியும் போது ஏற்படும் லயிப்பு, அதுவே வாசிக்கும் அனுபவமாகவும்விரிகிறது.
அன்பே ஆரமுதே புதினத்தில், நீங்கள் சொல்லும் பிரதான பாத்திரங்கள் மட்டுமே அல்ல, சினிமா நடிகனாக டாம்பீகத்தைக் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அருண், அனவது மனைவி, உடல் குறைபாட்டோடு பிறந்த அவர்கள் குழந்தை, இப்படி எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் நினைவில் தங்குகிற மாதிரி, அதே மாதிரி ஆனந்தசாமி தங்கியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியாக வரும்கிழவி இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே முழுமையாகச் செதுக்கப்பட்டிருப்பதும், அவர்களில் நாம் அன்றாடம் பார்க்கும் பழகிய மனிதர்களாகவே நம் முன் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துகிற வல்லமையைத் தான் எழுத்து என்றுசொல்கிறேன்!i
சிறப்பான பதிவு. வாசகன் தனக்கென எல்லைகளை கொண்டிருந்தாலும் அவனது வாசிப்பனுபவம் அவன் எல்லைகளை பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
படைப்பு குறித்த விமர்சனம் என்பது, நான் விரும்பிய புத்தகங்கள் மீது நான் கொண்ட கருத்தை பெரிதும் மாற்ற உதவியதில்லை. என் பார்வை வேறாகவும், விமர்சகரின் பார்வை வேறாகவும் இருக்கிறது. அவ்விமர்சகர் யாராகவிருப்பினும் ஒரு நாவல் எனக்கு தந்த வாசிப்பனுபவத்தை அவர் விமர்சனம் தந்து விடுவதில்லை. விமர்சனங்கள் வழியாக பல பார்வைகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது என்பதால் அதுவும் தேவையானதே.
ஒரு வாசகனாக எனக்கென்று இது தான் எல்லை என்று எதையும் எல்லை கட்டி வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்ததில்லை!
விமரிசனங்களை, ஒரு புத்தகத்தைக் குறித்த அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை! தான் படித்ததை, தன்னுடைய அனுபவமாகப் பகிர்ந்துகொள்கிற நிலையில், வாசகன் தான் படித்ததை மட்டுமல்ல, தன்னையுமே ங்கே வெளிப்படுத்திக் கொள்கிற அனுபவமாக ஆகிவிடுகிறது. இங்கே ஒரு வலைப்பதிவில், எழுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு அனுபவத்தைப் படித்தபோது, ஏற்பட்டஉணர்வுகள் இவை!
எண்ணங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களால் உருவாவது.
நீங்கள் சொல்லியுள்ள எழுத்தாளர்களை நானும் படித்திருக்கிறேன். நன்றாகச்சொல்லியுள்ளீர்கள். அடுத்தவர்களுடைய விமர்சனங்களால், அல்லது அறிமுகத்தால் புதிய எழுத்துக்கள் அறிமுகமானால் சந்தோஷம். அவரவர் ரசனை அவரவர் மனதைப் பொறுத்து. எனக்குப் பிடித்தது மற்றவர்க்குப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. படித்தவற்றை படமாகப் பார்க்கும்போது ஒன்ற முடியாது. படிக்கும்போது மனதில் உருவாகும் பிம்பங்கள், திரையில் வேறு நடிகர்கள் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது ஒத்துப் போவதில்லை. கதை படிக்காமல் பார்த்தால் ஒட்டலாம்.உணர்ந்தவைகளை உணர்வு மாறாமல் சொல்லத் தெரிந்தாலே போதும்
கொத்தமங்கலம் சுப்புவின் இரண்டு புதினங்கள் திரைப்படமாக சிவாஜி நடிப்பில், ஒன்று தில்லானா மோகனாம்பாள், இன்னொன்று ராவ் பகதூர் சிங்காரம் விளையாட்டுப் பிள்ளை என்ற பெயரில் வந்தன. திரைக்கதை கதையின் மைய நீரோட்டத்தை விட்டு விலகியிருந்தது கதையைப் படித்துப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.
கதையில் மைய நீரோட்டம், திரைக்கதையில் எந்த அளவுக்கு விகாரப் படுத்தப் பட முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களே போதும்.
அதே மாதிரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், துப்பறியும் சாம்பு கதையில் இருந்து சில பகுதிகளை எடுத்து நாகேஷை வைத்துத் தனியாகக் காமெடி ட்ராக் பண்ணியிருந்ததற்கும், நாவலைப் படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
தொலைக் காட்சியில், ஒய் ஜி மகேந்திரா துப்பறியும் சாம்புவாக வந்ததுமே கூட அவ்வளவாக எடுபடவில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லத்தோன்றுகிறது.
இது கதையைப் படித்திருந்த என்னுடைய கருத்து மட்டுமில்லை! இந்தக் கதைகளைப் படிக்காதவர்களே கூட சொன்னதும் கூட!