Monday, September 20, 2010

பிரம்ம ரிஷி! எண்டமூரி வீரேந்திரநாத்


ராமாயணம் தெரிந்த எவருக்கும் 'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி' என்ற வார்த்தை பரிச்சயமாகியிருக்கும்! கௌசிகன் என்ற ராஜாவாக இருந்து வசிஷ்டருடைய தபோ பலத்துக்கு முன்னால் தான் ஒன்றுமே இல்லை என்பதை சகித்துக் கொள்ள முடியாமல், ராஜ்யபாரத்தைத் துறந்து காட்டில் தவம் செய்ய ஆரம்பித்த கதை, ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ராஜ ரிஷி என்றடைந்த பிறகும் கூட வசிஷ்டரோடு போட்டி, கடுமையான தவம் என்று போய்க் கொண்டே இருந்ததில் ஒரு வழியாக பிரம்ம ரிஷி என்றும் அழைக்கப் பட்டாயிற்று, வரம் கிடைத்தாயிற்று! அப்போது கூட கௌசிகனாக இருந்து விஸ்வாமித்திரனாக மாறிய தபஸ்விக்கு ஒரு குறை!   மும்மூர்த்திகளும் பிரம்மரிஷி என்று அழைத்து வரம் தந்ததனால் என்ன பயன்? அதை வசிஷ்டர் வாயால் அல்லவோ கேட்க வேண்டும்!



வசிஷ்டரும் விஸ்வாமித்திரரை,பிரம்ம ரிஷியே! என்றழைத்த பிறகுதான் விஸ்வாமித்திரர் சாந்தமடைகிறார்! இந்தக் கதையை, தசரதனிடம் விஸ்வாமித்திரர் என்னுடைய வேள்விக்கு அரக்கர்களால் தொந்தரவு வருகிறது. அதைத் தடுக்க ராமனை காவலுக்கு அனுப்பு என்று கேட்டு வரும் தருணம், தசரதன் பிள்ளைப் பாசத்தினால் மயங்கி மறுக்கிற நேரம். வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் கதையை தசரதனுக்குச் சொல்கிறார்.


இது எல்லோருக்கும்  தெரிந்த கதையாக இருக்கலாம்! ஆனால், இந்தக் கதை, இன்றைக்கும் கூட நமக்குள்  நடந்து கொண்டிருப்பது தான்! நம்முடைய நண்பர்கள் வாயால் பாராட்டப் படுவதை விட, நாம் போட்டியாக, எதிரியாக நினைப்பவரிடமிருந்து வருகிற சிறு அங்கீகாரத்துக்காகத் தான் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோமா?


எண்டமூரியின் இந்தச் சிறுகதையில்  நம் ஒவ்வொருக்குள்ளும் இருந்து 'பிரம்மரிஷி' பட்டத்தை எதிர்பார்த்துத் தவிக்கும் இயல்பு என்ன அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!


பிரம்ம ரிஷி!

புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்கிறானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஏன் என்றால் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

என்னைப் போலவே!

நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியத்தில் நுழைந்தவர்கள் இல்லை. இருவரும் சமவயதினரும் இல்லை. அவன் என்னை விட பத்து வயது சிறியவன். எனக்கு ஒரு சின்ன தம்பி இருந்தால் அவனைப் போலவே இருந்திருப்பானோ என்னவோ!

தொடக்கத்தில் நான் துப்பறியும் கதைகள், சிரிப்புத் துணுக்குகள், அம்புலிமாமா கதைகள் போன்றவற்றை எழுதி வந்தேன். பிறகு நாவல்களை எழுத ஆரம்பித்தேன். நான் எழுத ஆரம்பித்த போது தமிழ் இலக்கிய உலகில் பாபுலர் எழுத்தாளர் என்று யாருமே இருக்கவில்லை. நான்தான் முதலிடத்தில் இருந்தேன். ஓரிரு எழுத்தாளர்கள் இருந்தாலும் என்னை தோற்கடிக்கும் அளவுக்கு திறமைப் படைத்தவர்கள் யாருமே இல்லை.

அதற்குப் பிறகு பத்து வருடங்கள் நான் முடிசூடா மன்னனாக இருந்து வந்தேன், இலக்கிய உலகில் சசிதர் காலடி எடுத்து வைக்கும் வரையில்.

ooOOooOOoo

"வணக்கம். என் பெயர் சசிதர்!"

பணிவுடன் கைகளை கூப்பிக்கொண்டே சொன்னான் அவன். பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது போலவே என் கண்களுக்கு முன்னால் தோன்றியது.

"வாங்க" நாற்காலியை காண்பித்துக்கொண்டே அவனை பரிசீலனை செய்வது போலப் பார்த்தேன். அந்த முகத்தில் என்னை ஈர்த்தது ஒரே விஷயம்தான். அவன் கண்களில் தென்பட்ட தூய்மை!

அவன் உட்கார்ந்துகொண்ட பிறகு "சொல்லுங்க" என்றேன்.

"நான் உங்களுடைய நேரத்தைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாமா?" தெளிவான ஆங்கிலத்தில் கேட்டான்.

"வித் ப்ளெஷர்" முறுவலுடன் அலட்சியமாக சொல்லிவிட்டு, ரிலாக்ஸ்ட் ஆக பின்னால் சாய்ந்துகொண்டு சிகரெட்டை பற்றவைத்தேன்.

அவன் ஒரு நிமிடம் என் பக்கம் தயக்கமாக பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்த பைலை டீபாய் மீது வைத்தான். பிறகு சொன்னான். "நான் ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். என் அபிமான எழுத்தாளரான நீங்க இந்த ஸ்க்ரிப்டை படித்து விட்டு தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பீர்கள் என்ற எதிர் பார்ப்புடன் வந்தேன்."

சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் போட்டுவிட்டு மனதில் எழும்பிய எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முன்னால் குனிந்து பைலை கையில் எடுத்துக் கொண்டேன்.

"சப்ஜெக்ட் என்ன?"

அவன் சற்று வெட்கம் கலந்த முறுவலுடன் "யூனிவர்சல் சப்ஜெக்ட், காதல்!" என்றான்.

"காதலைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் பாக்கி ஏதாவது இருக்கிறதா என்ன? இருப்பதை எல்லாம் எங்களைப் போன்ற சீனியர்ஸ் எழுதி முடித்து விட்டோமே?" என்றேன்.

"மன்னிக்க வேண்டும். என் பார்வையில் காதல் என்பது எப்படி சாசுவதம் ஆனதோ. அந்த சப்ஜெக்டும் அப்படித்தான். தட் ஈஸ் எவர் க்ரீன் சப்ஜெக்ட். ஒரு நபர் மற்றொரு நபரிடம் தான் காதலிப்பதாக சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அந்தக் காதலில் தான் பெற்ற உணர்வுகளை எடுத்துச் சொல்வது கடினம். அனுபவத்தை பகிர்ந்து கொள்வது சாத்தியமோ என்னவோ. உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கொஞ்சம் கஷ்டம். அதைத்தான் நான் சப்ஜெக்ட் ஆக எடுத்துக் கொண்டேன். வெறும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல் இது. நாவலை படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஏதோ ஒரு இடத்தில் தன்னை அடையாளம் கண்டுகொள்வான் என்பது என்னுடைய கருத்து." ரொம்ப நிதானமாக, தெளிவாக சொன்னான். அப்படிச் சொல்லும் போது அவன் குரலில் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

அவன் பேசும் முறை, கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பாங்கு எல்லாமே நன்றாக இருந்தன. ஆனால் ஒரு எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளளை சந்திக்கும் போது, அங்கே இல்லாத மூன்றாவது எழுத்தாளனைப் பற்றித் தாழ்வாக பேசி பொழுது போக்கும் இந்தத் துறையில் இத்தனை நேர்மை, மென்மை கொஞ்சம் கூட ஒத்துவராது.

"ஓ.கே. ஆனால் நான் இப்பொழுது சற்று பிஸியாக இருக்கிறேன். ஸ்க்ரிப்டை கொடுத்துவிட்டுப் போ. நாளை மறுநாள் வந்தாயானால் அதற்குள் படித்து முடித்துவிட்டு என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்." நயம் கலந்த குரலில் சொன்னேன்.

மற்றொரு முறை அவன் வணக்கம் தெரிவித்துவிட்டு போய்விட்டான்.

அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ ஸ்க்ரிப்டை மேஜை மீது வீசி விட்டு யாரோ ஒரு வாசகன் என்னைப் புகழ்ந்து எழுதிய கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். அவன் மறுபடியும் வருவதற்குள் அங்காங்கே நாலு வரிகளை படித்துவிட்டு பரவாயில்லை என்றோ, சுமாராக இருக்கு என்றோ சொல்லிவிட்டால் வேலை முடிந்தது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அன்று இரவே நான் ஸ்கிரிப்ட் முழுவதும் படிக்க வேண்டியதாகிவிட்டது.

அதற்குக் காரணம் என் மனைவி சௌதாமினி. மாலை ஐந்து மணி அளவில் சௌதாமினி என்னுடைய அறைக்கு வந்தாள்.

"காபி ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டாள். நான் தலையை உயர்த்தி "கலந்து வை. நானே வருகிறேன்" என்றேன்.

"சரி" என்று சொல்லிவிட்டு திரும்பினாள். போகப் போனவள் நின்று கீழே குனிந்து தரையிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டே "இதென்ன? இங்கே கிடக்கிறது?" என்றாள்.
"எது?"
"தெரியவில்லை. காகிதம் ஒன்று தரையில் கிடந்தது" என்று சொல்லிக் கொண்டே என்னிடம் கொடுக்கப் போனவள் அந்தக் காகிதத்தில் எழுதியிருந்த வரிகளை படித்தாள்.

படித்து முடித்ததும் தலையை உயர்த்தி "இதை எழுதியது யாரு?" ஆர்வத்துடன் கேட்டாள்.

"அதை இப்படிக் கொடு." கையில் எடுத்துக் கொண்டு பார்த்தேன். சசிதரின் ஸ்க்ரிப்ட்தான் அது. அதைத்தான் அவளிடம் சொன்னேன்.

"நான் படிக்கலாமா?"

"தாராளமாக." பைலை அவளிடம் கொடுத்தேன். எப்படியும் நான் அதை படிக்கப் போவதில்லை. அவள் படித்த பிறகு கதையின் சுருக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

சௌதாமினி அந்த ஸ்க்ரிப்டை எடுத்துக்கொண்டு போன பத்து நிமிடங்கள் கழித்து, நானும் எழுந்து ஹாலுக்குப் போனேன். சௌதாமினி ஹாலில் இல்லை. படுக்கை அறையில் ஸ்க்ரிப்டை படிப்பதில் ஆழ்ந்து போயிருந்தாள்.

அன்று இரவு சாப்பிடும்போது சௌதாமினி சொன்னாள். "அவன் யாரோ தெரியவில்லை. மனதின் ஆழத்திற்குள் ஊடுருவுவது போல் எழுதி இருக்கிறான். அந்த ஸ்க்ரிப்டை படிக்கும்போது எனக்கு எவ்வளவு வியப்பு ஏற்பட்டது என்றால், இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் நீங்க அதுபோன்ற நாவல் ஒன்று கூட ஏன் எழுதவில்லை என்று தோன்றியது."

"அவ்வளவு நன்றாக இருந்ததா?" சாதாரணமான குரலில் கேட்டேன்.

சௌதாமினி சராசரி வாசகி இல்லை. ஸ்க்ரிப்ட் படித்துவிட்டு அவள் சொன்ன அபிப்பிராயத்தின் மீதுதான் இத்தனை நாளாய் என்னுடைய படைப்புகளின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டு வந்தன என்று சொன்னால் அது மிகை அல்ல.

அவள் மௌனமாக இருந்ததை பார்த்துவிட்டு மறுபடியும் கேட்டேன்.

"ஆமாம். இதுதான் அவனுடைய முதல் நாவலாக இருந்தால், பப்ளிஷ் ஆவதுதான் தாமதம், உங்களைப் போன்ற ஓரிருவரைத் தவிர மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் தங்களுடைய பேனாவை மூடி வைக்க வேண்டியதுதான்" என்றாள்.

என் மனைவி என் முன்னாடியே வேறு ஒரு எழுத்தாளனை புகழ்ந்து பேசியது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அவளை ஈர்க்கும் அளவுக்கு விஷயம் அதில் என்ன இருக்கிறது?

உறங்கப் போகும் முன் சற்று நேரம் மேலாக புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு அந்த ஸ்க்ரிப்டை கையில் எடுத்துக் கொண்டவன், ஒரு எழுத்து விடாமல் படித்தேன். சில இடங்களில் அவன் வெளியிட்ட எண்ணங்கள் கீட்ஸின் கவிதையை மிஞ்சி விட்டன. 

இதுவரையில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பிரமாதமாக யாருமே எழுதவில்லை என்று தோன்றியது.

அன்று இரவு நான் உறங்கவில்லை.

ooOOooOOoo

சசிதர் எழுதிய நாவல் பிரபல பத்திரிகை ஒன்றில் தொடராக வெளிவந்தது. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய இடத்தை இழக்க நான் தயாராக இல்லை.

அதற்குப் பிறகு நான் ஒரு நாவல் எழுதினேன். அந்த நாவலின் முன்னுரையில் நான் ஒரு ஆங்கில நாவலை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் என்றும், ஆனால் என்னுடைய சக எழுத்தாளர்களில் ஒருவர் அந்நாவலை அப்படியே காபி அடித்து எழுதிவிட்டதால் அந்த எண்ணத்தை கைவிட்டேன் என்றும் எழுதியிருந்தேன். அதோடு சசிதர் எழுதிய நாவலின் கதையை சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

இப்படி எழுதுவதால் எழுத்துலகில் என் எதிரியான சசிதர் ஆங்கில நாவல்களை காப்பி அடித்து எழுதுவான் என்ற எண்ணத்தை வாசகர்களின் மனதில் மறை
முகமாக பதிய வைத்தேன்.


இது நடந்த மூன்று மாதங்கள் கழித்து சசிதர் எழுதிய ஒரு நாவல் வெளியானது. திருவையாற்று காவேரியின் பின்னணியில் மிக அற்புதமாக நாவலை எழுதியிருந்தான். "ஆங்கில நாவல்களை காப்பி அடித்து எழுதுகிறான்" என்று அவன் மீது குற்றம் சாட்ட வாய்ப்பு இல்லாத விதமாக வேதங்களை, உபநிஷத்துக்களை கோர்வையாக கலந்து அந்த நாவலை மெருகேற்றி இருந்தான். அவ்வளவுதான்! இலக்கிய மதிப்பீட்டாளர்களின்  பார்வையில் சசிதர் ரொம்பவும் உயர்ந்துவிட்டான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் ஆங்கில நாவல்களை நிறைய படிப்பேன். அவற்றிலிருந்து சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து அங்கும் இங்குமாய் ஜோடனைகளை செய்து நாவல்களை மார்க்கெட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருந்தேன். நான் எழுதும் ரொமான்ஸ் முழுவதும் ஆங்கில இலக்கியத்திலிருந்து சுருட்டப்பட்டதுதான். காமெடி  ஓட்  ஹவுசுடையது.

ஆனால் நான் செய்து கொண்டிருந்த இலக்கியத் திருட்டை என் எதிரி மீது சுமத்த வேண்டும் என்று நான் செய்த முயற்சி தோல்வி அடைந்ததோடு, அவனுக்குள் புதைந்திருக்கும் உண்மையான எழுத்தாளன் வெளியில் வருவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இலக்கியத்தின் மீது முழுமையான  ஈடுபாடு இருக்கும் வாசகர்களின் மனதில் சசிதர் நிலையான இடத்தை பெற்று விட்டான்.

அவனை மனதளவில் ப்ரேக் செய்யும் அளவுக்கு எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் .......

இயக்குனர் ஒருவர் என்னிடம் வந்து என்னுடைய கதையை சினிமாவாக எடுக்கப் போவதாகச் சொன்னார். தமிழ் திரைப்பட உலகில் அந்த இயக்குனருக்கு நல்ல பெயர் இருந்தது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. என் மகிழ்ச்சிக்குக் காரணம் முதல் முறையாக என்னுடைய கதை திரைப் படமாக வரப் போகிறது என்பதால் இல்லை. சசிதருக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு!

உடனே அந்த விஷயத்தை அவனிடம் சொல்வதற்காக கிளம்பினேன்.
நான் போன பொழுது அவன் வீட்டின் முன்னால் மாருதி கார் ஒன்று நின்றிருந்தது. வந்தது யாராக இருக்கும் இன்று நினைத்துக் கொண்டே உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.

வெளியில் சசிதரின் அசிஸ்டென்ட் போலும், உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டது போல் அவள் கண்கள் மின்னின.

பரபரப்புடன் எழுந்து கொண்டு, "சாரிடம் நீங்க வந்திருப்பதாக சொல்லட்டுமா?" என்று கேட்டாள்.

"தேவையில்லை. உள்ளே யார் இருக்கிறார்கள்?" உரிமையுடன் கதவு அருகில் சென்றுகொண்டே அவளிடம் கேட்டேன்.

"டைரக்டர் சோமசுந்தரத்துடன் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார்."

"என்ன?" புரியாதவன் போல் மீண்டும் கேட்டேன்.

"ஆமாம் சார். டைரக்டர் சோமசுந்தரம் தெரியும் இல்லையா? அவர் சசிதர் சாரின் கதையை சினிமாவாக எடுக்கப் போகிறார்" என்றாள்.

என்னால் அந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

வேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். சோமசுந்தரம் சாதாரண டைரக்டர் இல்லை. ஒரே சினிமாவை பல மொழிகளில் எடுத்து வெற்றி பெற்று, புகழின் உச்சியில் இருப்பவர். அவருடன் ஒப்பிட்டால் என் கதையை சினிமாவாக எடுக்க முன் வந்த டைரக்டர் கால்தூசு கூட பெறமாட்டார் என்று எனக்குப் புரிந்துவிட்டது.

அதற்கு மேல்  அந்த விஷயத்தை சசிதரிடம் சொல்ல முடியாமல் திரும்பிவிட்டேன்.

ooOOooOOoo

பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. அதுநாள் வரையில் இலக்கியத் துறையில் சசிதரை மிஞ்சக் கூடிய எழுத்தாளர் யாருமே உருவாகவில்லை. நான் இரண்டாவது இடத்தில்தான் இருந்து வந்தேன். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சசிதர் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.என்னுடைய ஸ்டாண்டர்ட் காரை விற்று விட்டு ·பியட் காரை வாங்கினேன். அதை அவனிடம் காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய தவிப்பு. அதை வாங்கிய அடுத்த நாளே சசிதரைப் பார்க்கக் கிளம்பினேன்.

இப்போது அவனுடைய வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.

அவனுடைய புது பங்களா ரொம்ப பிரம்மாண்டமாக இருந்தது. விலை உயர்ந்த ·பர்னிச்சர், கிரானைட்டால் இழைக்கப்பட்ட தரை, வால் கார்பெட். எல்லாவற்றையும் பார்த்த பிறகு எனக்குள் நான் குன்றிப் போய்விட்டேன்.

அங்கிருந்து வந்த பிறகு முதல் முறையாக என்னை நான் சுயபரிசோதனை செய்துகொண்டேன். அவனுடைய முன்னேற்றதிற்கான காரணங்களை ஆராய்ந்தேன். அப்பொழுது புரிந்தது எனக்கு. நான் செய்ய வேண்டிய முதல் காரியம் என் எதிரியின் ஸ்தானத்தை தாழ்த்துவது இல்லை. அவனை விட ஒரு படி முன்னால் இருப்பதற்கு முயற்சி செய்வது.

மாதத்திற்கு ஒரு நாவல் என்ற கணக்கில் ரொம்ப சுலபமாக எழுதித் தள்ளும் நான் இந்த முறை புது கருத்துடன் நாவலை எழுதத் தொடங்கினேன். அதை எழுதி முடிக்க எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பிடித்தது. அதை எழுதும் போது தூக்கம் சாப்பாடு, இரவு பகல் எதுவுமே எனக்கு நினைவு இருக்கவில்லை. என்னுடைய லட்சியமெல்லாம் ஒன்றுதான். தாழந்துவிட்ட என் இடத்தை மறுபடியும் கைப்பற்றுவது மட்டுமே இல்லை. நிலைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்று.

எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் வேறு ஒன்று இருந்தது. இலக்கிய உலகில் சசிதரை காணாமல் அடித்துவிட வேண்டும் என்ற வெறி. சஸ்பென்ஸ், செக்ஸ், வயலென்ஸ் என்று எல்லா விதமான மசாலாக்களையும் கலந்து எழுதினேன்.

ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்த நாவல் வெற்றி பெறவில்லை. பொருள் ரீதியாகவும் எனக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை. எழுத்து உலகிலும் என்னுடைய இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. என் நாவல் தோல்வி அடைந்ததற்கான காரணம் புரிந்துவிட்டது. அதில் "மனம்" இருக்கவில்லை.

நான் எதிர்பார்த்த விதமாக என்னுடைய நாவல் சசிதரின் இடத்தை அசைக்க முடியாமல் போனதும் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நாவல் மீத நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தென். கமர்ஷியல் ஆக ஹிட் ஆகாவிட்டாலும் நான் வருத்தப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் இலக்கிய ரசிகர்கள் கூட அந்த நாவலை புறக்கணித்துவிட்டது எனக்கு ரொம்ப வேதனையைத் தந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இனி நேர் வழியில் போனால் பிரயோசனப்படாது என்று தோன்றியது. என்னுடைய செல்வாக்கை எல்லாம் பயன்படுத்தி மாநில அளவில் தரப்படும் இலக்கியப் பரிசை விலை கொடுத்து வாங்கினேன். இதற்காக இருபத்தையாயிரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டி வந்தது. இருந்தாலும் நான் கவலைப்படவில்லை. செலவை விட முக்கியம் சசிதரை தோற்கடிப்பது. அவார்டுக்காக என்னுடைய பெயரை வெளியிட்ட பிறகு எனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பத்திரிகை ஆசிரியர்களை அழைத்தேன். 

பப்பளிஷர்களும் வந்தார்கள். பெரிய பார்ட்டீ நடந்தது. அவர்கள் போகும் முன் அசல் விஷயத்தைச் சொன்னேன். எனக்கு அவார்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கான செலவுகளை நானே ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். சம்மதம் தெரிவித்தார்கள். பாராட்டு விழா பற்றி நாளேடுகளில் தொடர்ந்து விளம்பரம் செய்ய வைத்தேன். சீ ஃ·ப் கெஸ்டாக என் எதிரியான சசிதரை அழைக்கச் சொன்னேன். எல்லாம் நான் நினைத்தது போலவே நடந்தது. என்னுடைய ரசிகர்கள் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார்கள். சசிதரை சீ ஃ·ப் கெஸ்டாக அழைத்தார்கள்.

ரொம்ப த்ரில் ஆக உணர்ந்து கொண்டே ஆடிடோரியத்திற்கு முன்னால் காரில் போய் இறங்கினேன்.

ஆனால் அங்கே விழாவுக்கு வந்திருந்த இலக்கிய ரசிகர்கள் முதற் கொண்டு, முக்கியமானவர்கள் வரை எல்லோரும் சசிதரை சூழ்ந்து இருந்தாகள். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. 

மாநில அளவில் இலக்கியப்பரிசு பெற்ற என்னை விட்டு விட்டு எழுத்துலகில் நேற்று நுழைந்த சசிதரின் ஆட்டோகிராப் வாங்குவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களைப் பார்க்கும் போது எனக்குக் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டன.

என்னுடைய மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த நான் சசிதர் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. பின்னால் அசல் விஷயம் தெரியவந்தது. அதற்கு முதல் நாள் அவனுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது.

ooOOooOOoo

சசிதரின் ஸ்டேட்டஸ் மேலும் உயர்ந்தது. நான் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அவனுடைய இடத்தை இறக்க வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவனோ எந்த விதமான வாய்ப்பும் எனக்குக் கிடைக்காத விதமாக கவனமாக இருந்து வந்தான்.

பிறகு ஒரு கதை எழுதினேன். அதில் கதாநாயகன் ஒரு எழுத்தாளன். அவன் தன்னுடைய செயலாளர்களிடமிருந்து புதுப் புது கருத்துக்களை பெற்றுக் கொண்டு கதைகளை உருவாக்குவான் என்று எழுதி சசிதர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினேன். அவன் சுயமாக எழுத மாட்டான் என்றும் கோஸ்ட் ரைட்டர்ஸை விட்டு எழுத வைப்பான் என்று பிரசாரம் செய்தேன்.

ஆனால் இந்தக் குற்றச் சாட்டுகள் எதுவும் அவனுடைய மார்க்கெட் மீதோ, கேரீர் மீதோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில நாட்கள் சசிதர் விஷயத்தில் தலையிடாமல், என்னுடைய கேரீர் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு எழுத்தாளனாக எனக்கு திருப்தி கிடைக்காத நாவல்களை எழுதுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. கவனமாக ஆராய்ந்தேன். சசிதரால் வாசகர்களை எப்படி ஈர்க்க முடிந்தது என்று புரிந்து கொண்ட பிறகு என்னுடைய நடையை மாற்றி வேறு ஒரு நாவலை எழுத முடிவு செய்தேன்.

இரண்டு வருடங்கள் தொடர்ந்து சப்ஜெக்ட்டை ஆராய்ச்சி செய்தேன். அந்தக் கால கட்டத்தில் நான் எழுதியது ஒரே ஒரு நாவல் அதை எழுதுவதற்கு நூற்றுக் கணக்கான புத்தகங்களை ரெ·பர் செய்ய வேண்டியிருந்தத. குறிப்பிட்ட இனத்தை மக்களின் வாழ்க்கையை ஸ்டடீ செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய லட்சியம் ஒன்றுதான். சசிதரை மிஞ்சும் அளவுக்கு ஒரு நாவலையாவது எழுத வேண்டும்.

நாவலை எழுதி முடித்த பிறகு பப்ளிஷரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். வாழ்க்கையில் ஒரு நாளும் அந்த அளவுக்கு டென்ஷனை நான் அனுபவித்தது இல்லை. நஷ்டத்தைப் பற்றிக் கூட யோசிக்காமல் குறைந்த விலைக்கு டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குக் கொடுத்தேன்.

அவ்வளவுதான்! முதல் பதிப்பு வேகமாக விற்கத் தொடங்கியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு கூட வெளி வந்து விட்டது.

சரியாக அப்பொழுதுதான், நான் மட்டுமே இல்லை, யாருமே ஊகித்திராத விதமாக என்னுடைய நாவலுக்கு ஞானபீட அவார்ட் அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியால் சசிதரை மிஞ்சி விட்டேன். 

இப்பொழுது முதல் இடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான்தான்.
என் புத்தகங்களின் விற்பனை இரு மடங்காகிவிட்டது. ஞானபீட் அவார்ட் பெற்ற நாவலை படத் தயாரிப்பாளர் ஒருவர் ஐந்து லட்சம் பணம் கொடுத்து  உரிமைகளை வாங்கிக் கொண்டார். அதை டைரக்ட் செய்யப் போகிறவர் சோமசுந்தரம்.

நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேன். எங்கே போனாலும் பாராட்டு விழாக்கள்! ஆட்டோகிராப்கள்!

பப்ளிஷர்களிடம் என்னுடைய ராயல்டீயை உயர்த்தினேன். எடிட்டர்கள் என்னை சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

என்னுடைய வேலைகளில் மூழ்கியிருததால் சசிதர் என்ன செய்கிறான், என்ன எழுதுகிறான் என்று பொருட்படுத்தவில்லை. இனி மேல் என்ன எழுதினாலும் என்னுடைய படைப்புகளுக்கு பிறகுதான். அது மட்டும் நிச்சயம்.
எடிட்டர்களாகட்டும், டைரக்டர்களாகட்டும் என் படைப்புகளுக்குத்தான் முக்கியத்தும் கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நான் விரும்பியதும் அதைத்தான்.

இந்த அளவுக்கு வெற்றியைச் சாதித்த பிறகு நான் சசிதரின் வீட்டுக்குக் கிளம்பினேன். எனக்கு ஞானபீட  அவார்ட் கிடைத்த விஷயம் அவனுக்கு முன்னாடியே தெரிந்திருக்கலாம். ஆனால் என் வாயால் சொல்லி அவன் கண்களில் தெரியும் பொறாமையைப் பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

நான் போன போது அவன் அந்த வீட்டில் இல்லை. அதை விற்று விட்டு ஊர் கோடியில் இருக்கும் தோட்டத்தில் குடியிருக்கிறான் என்று தெரிந்தபோது வியப்பு அடைந்தேன். உள்ளூர மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு முறை வெற்றி கிடைத்தால் போதும், அதனை பிணைத்துக் கொண்டு அதிர்ஷ்டமும் வந்து சேரும் என்று நினைத்துக் கொண்டேன்.

உடனே அவனைச் சந்திக்கப் புறப்பட்டேன். கிட்டத்தட்ட ஊர் எல்லையைத் தாண்டி இருந்தது அந்த தோட்டம். சின்னதாக இருந்தாலும் ரொம்ப அழகாக இருந்தது.

காரை விட்டு இறங்கி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே கால் எடுத்து வைத்தேன். ஒரு ஆசிரமத்திற்கு உரிய சூழ்நிலை அங்கே நிலவியிருந்தது. நடைபாதைக்கு இரு பக்கமும் பூஞ்செடிகள், நடுவில் சின்னதாக ஒரு ஓலை குடிசை. சற்று தொலைவில் பள்ளிக்கூடமும், அதற்கு முன்னால் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மாணவர்கள் தென்பட்டார்கள். மற்றொரு பக்கம் ஊனமுற்றவர்களுக்காக ஏற்பாடு செய்த பள்ளி இருந்தது.

நான் குடிசையை நெருங்கியபோது அங்கே வராண்டாவில் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு பகவத்கீதையை படித்துக் கொண்டிருந்த சசிதரன் தென்பட்டான்.

அரவம் கேட்டு தலையை உயர்த்தியவன், என்னைப் பார்த்ததும் பகவத் கீதையை கண்ணில் ஒற்றிக் கொண்டு மூடிவைத்துவிட்டு "வாங்க" என்றான்.
நான் முன்னால் நடந்து அவன் காட்டிய ஓலை தடுக்கின் மீது உட்கார்ந்து கொண்டேன். அவனும் எனக்கு எதிரில் வந்து அமர்ந்துகொண்டே "அவார்ட் கிடைத்திருப்பதாக பேப்பரில் படித்தேன், வாழ்த்துக்கள்" என்றான்.

"ஆனால்... இதென்ன? நீ ... இப்படி இங்கே..?." குழப்பத்துடன் கேட்டேன்.
அவன் முறுவலித்து விட்டு பேசாமல் இருந்தான்.

"அத்தனை சொத்தையும் என்ன செய்தாய்?"

"முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டேன்." முறுவல் மாறாமல் சொன்னான்.

"என்ன?" வியப்படைந்தேன். "அப்படி என்றால் உன் வாழ்க்கைக்கு வழி என்ன?" என்று கேட்டேன்.

"மனிதனாக வாழ்வதற்கு பங்களாக்கள், கார்கள், ஸ்டேடஸ் எதுவுமே தேவையில்லை என்று தெரிந்து கொண்டேன். எனக்கு இது போதும் என்று தோன்றியது. இங்கே நான் வயிறு நிரம்ப சாப்பிடுகிறேன். மீதம் இருப்பதில் மற்றவர்களுக்கும் உதவி செய்கிறேன். இதில் எனக்கு முழுத் திருப்தி கிடைக்கிறது."

ஆழமான மூச்சு ஒன்று என்னையும் அறியாமல் வெளியில் வந்தது. மறுபடியும் அவனே சொன்னான்.

"அங்கே நாம் இருந்த துறையில் எப்போதும் அதிருப்தியாகத்தான் உணர்ந்து வந்தேன். சில சமயம் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சுயகௌரவத்தையும் இழக்க வேண்டிய நிலை. எழுத்தாளன் என்ற முறையில் எவ்வளவோ சாதித்தாலும் ஒரு மனிதனாக தனித்தன்மையை இழக்க முடியாது என்று தோன்றியது. மனதுடன் போராட்டம் நடந்த பிறகு இந்த முடிவுக்கு வந்தேன்."

"அப்படி என்றால் எழுத்துத்துலகிலிருந்து விலகிக் கொண்டாற்போல் தானா?"

"முழுவதுமாக! இனி மேல் என்னால் எழுத முடியாது. இது வரையில் நான் எதுவுமே படிக்கவில்லை. முதலில் இந்த உலகத்தைப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கோபதாபங்களுக்கு, கலவரங்களுக்கு மூலகாரணத்தை சோதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதை நீங்க வைராக்கியம் என்று அழைத்தாலும் சரி, விரக்தி என்று சொன்னாலும் சரி. எனக்கு ஆட்சேபணை இல்லை. முதலில் எனக்குள் இருக்கும் "நான்" யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்." சொல்லி முடித்தான்.

சற்று நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தேன். காரில் வரும் போது ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது அவன் எழுதியது தான்.

"ஞானமே இல்லாத போது என்னை பெரிய ஞானி என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் ஞானம் வந்த பிறகு என்னைப் போன்ற முட்டாள் எவனும் இருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டேன்."

நான் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக மேலே மேலே உயரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வளர்ச்சி என்பது ஒரு வட்டம் போன்றது என்றும், புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வந்து சேர்க்கும் என்றும், அதுதான் உண்மையான வேதாந்தம் என்றும் அவன் உணர்ந்து கொண்ட அளவுக்கு அவ்வளவு சீக்கிரமாக நான் புரிந்து கொள்ளவில்லை.

எப்போதும் அவன் என்னை விட ஒரு அடி முன்னாலேயே இருக்கிறான். எனக்கு பின்னால் பயணத்தைத் தொடங்கியவன், என்னையும் தாண்டிப் போய்விட்டான். மனதளவில் என்னைவிட உயர்ந்து விட்டான். 

எதிர் காலத்தில் நானும் வேதாந்தியாக மாறலாம்.

ஆனால் அதிலும் அவன் என்னை விட ஒரு படி முன்னால்தான் இருக்கிறான். 

ooOOooOOoo

தி பெஸ்ட் ஆ·ப் எண்டமூரி வீரேந்திரநாத்  (சிறுகதைத் தொகுப்பு)
எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்

அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர், சென்னை வெளியீடு.
 

2 comments:

  1. \\ஞானமே இல்லாத போது என்னை பெரிய ஞானி என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் ஞானம் வந்த பிறகு என்னைப் போன்ற முட்டாள் எவனும் இருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டேன்."\\

    அருமை...மிக..அருமை.. நம் மனித குணங்களை இதைவிட சிறப்பாக யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை

    ReplyDelete
  2. வாருங்கள் சௌமியன்!

    எழுத்தாளன் ஒன்றும் தனித்தீவு அல்ல! அவனும் சமூகத்தின் ஒரு அங்கள்! தன்னைச் சுற்றி நிகழ்வதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்கிறான், பிறகு அதைத் தன் கற்பனையோடு கலந்து , ஏதோ ஒரு விஷயத்தை focus செய்து ஒரு கதையாக வடிக்கிறான். படிக்கிறவர் மனத்தில் அந்த குறிப்பிட்ட விஷயம் நச்சென்று உறைக்கிற மாதிரி!

    இந்தக் கதையின் மூல வடிவம் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று ராமாயணத்தில் வருகிற ஒரு சிறு சம்பவம் தான்! ஆனால், அது என்றோ, எவருக்கோ நடந்தது என்பதை விட, பொதுவாக எவருக்கும் எந்தக் காலத்திலும் நடக்கக் கூடியதே என்பதைத் தான் இந்தக் கதையை வைத்துப் பார்த்தோம் இல்லையா!

    இதை எண்டமூரி இரண்டு எழுத்தாளர்களுக்கிடையில் நீயா நானா என்ற ஈகோ பிரச்சினையாக வைத்துக் கதை எழுதினர். நாளையே, வேறு எவரோ இதைவிட மிகச் சிறப்பாக, துல்லியமாக இந்த மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் கதை ஒன்றை எழுதலாம்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)