கொரோனா வைரஸ் தொற்று பயம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற இந்த சமயம் கண்ணில் படுகிற சில வீடியோக்கள் சிரிப்பையும் வரவழைக்கிற மாதிரி! அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது ஒருவகையில் நிஜம் தான் போல!
ஊரடங்கின் போது ஏன் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறாய் ? என்று கேட்கும் காவலர்களிடம் ..
'ஏன் எதற்கு எப்படி எங்கே எப்போ எப்பொழுது' [ pheww] ..என்று துள்ளிக் குதித்து அடுக்குமொழியில் நரம்பு புடைக்க..'முதலமைச்சரை இங்கு வரச்சொல்லு' என்று பேசும் பொடியன்..
'நீ ஓவரா ஆடிக்கிட்டிருக்க' - பெண் காவலர்
கடைசியில் காவல்நிலையத்தில் வைத்து கையில் பிரம்பால் அடி வாங்கும் போதும்...
பொடியன் : இனி வெளியில் வந்தால் மாஸ்க் போட்டு வருகிறேன்.
ஊரடங்கு வெளிப்படுத்தும் வேடிக்கைகளில் சிறப்பான ஒன்று...
பொடியனிடம் இருக்கும் எனர்ஜி, துறுதுறுப்பு அனைத்தும்.... அண்ணன்களின் அரசியல் மேடைகளில் இருந்தும், தமிழ் சினிமாக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு .. நேர் மறையாக திருப்பிவிடப்பட்டால் ...சிறப்பானதொரு மனிதனாக உருவாகி வருவார்.
பானு கோம்ஸ் இந்த நாம்தமிழர் சவடால் பையன் வீடியோவை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்போல! ஆனால் இதெல்லாம் தனியாகச் சிக்கிக் கொள்கிற ஏப்பை சாப்பைகள் மீதுமட்டும் தானோ?
இது கர்நாடகாவில்!
தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்க முடியாது
கொஞ்சம் பயனுள்ளதாகப் பொழுதுபோக்க உதவும் புத்தகங்கள் இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்ட புதினம்:
நீலரதி - சாண்டில்யன்
தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக களப்பிரர்கள் ஆண்ட காலம் குறிப்பிடப் படுகிறது. களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்ற செய்திகளே கிடைக்க விடாமல் பிற்கால சைவசமய எழுச்சி இருட்டடிப்பு செய்ததனாலேயே இருண்டகாலமாக சொல்லப்படுகிறது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. வடுகக் கரு நாடர் என்றே பெரிய புராணம் இவர்களைச் சொல்கிறது. கிபி முதல் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததாக, வைதீக மதத்தை எதிர்த்தவர்களாகவும், சமண, பவுத்த மதங்களை ஆதரித்தவர்களாகவும் இருந்தார்கள். தமிழ்மொழியை ஆதரிக்காவிட்டாலும் களப்பிரர் காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்தன என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
கிபி முதலாவது நூற்றாண்டில் தமிழகம் முழுதையும் ஆண்ட அச்சுத விக்கண்டன் என்கிற அச்சுத விக்கிராந்தன் என்கிற அச்சுத விக்கந்தக் களப்பாளன் ஒருவன் மட்டுமே சாண்டில்யனின் நீலரதி கதையில் வரலாற்றுப் பாத்திரம். கதையில் மற்ற எல்லோருமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதால், இதை சரித்திரக் கதை என்று வகைப்படுத்த முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை. கதை கடல்கொண்டதுபோக மீதம் இருந்த புகாரில் ஆரம்பிக்கிறது. நாற்பதை ஒட்டிய இளமாரன், இருபதுவயதே ஆன உதயகுமாரன் என்ற இருவரிடம் வந்து சேர்கிற நீலரதி என்கிற இளம்பெண் அவளைத் துரத்திவருகிற புத்தமடத் துறவிகள், புத்த மடக் காவலர்கள் என்று விறுவிறுப்பாகக் கதை தொடங்குகிறது. மடத்துக்காவலர் தலைவனைக் கொன்றுவிட்டாள் என்ற குற்றச்சாட்டு நீலரதிமீது. புத்தமடத்தில் நடக்கும் விசாரணையில் அடுத்தடுத்து சில சுவாரசியமான ட்விஸ்ட், அச்சுத விக்கண்டனே விசாரணையை நடத்த வந்துசேருகிறான். அவனிடம் பணிபுரிபவனான இளமாரனிடம் நீலரதியை தனது உறையூர் அரண்மனைக்கு அழைத்துவருமாறு சொல்லி விட்டுப் போகிறான்.
சாண்டில்யன் கதை என்றால் வரலாறு கொஞ்சம், வர்ணனைகள் கொஞ்சம், பாத்திரங்களை அறிமுகம் செய்வதிலிருந்தே திருப்பம், அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பம் என்று தொடர்ந்து கொண்டே போவதில் மயங்குகிற வாசகர் கடைசி வரை அந்த மயக்கத்தில் இருந்து விடுபடுவதே இல்லை என்பதை தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. இந்தக் கதையும் அப்படித்தான்! என்ன, நீலரதியின் எகிப்திய பின்னணி, ஐசிஸ் (Isis) என்கிற பெண் தெய்வம் காவல் தெய்வமாக கூடவே இருப்பது என்கிற fantasy சரித்திரக் க்தைக்குப் பொருத்தமாக இல்லையே என்பது படித்து முடித்த பிறகுதான் உறைக்கிறது! அது போலவே வேறு சில விஷயங்களும்! களப்பிரன் நியாயம் என்று கதை சுபமாக முடிவதில், களப்பிரர்களைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை என்பது பெருங்குறை! போதாக்குறைக்கு கொஞ்சம் நெருடலான பாத்திரப் படைப்பும் சேர்ந்து கொள்கிறது.
ஆனால் படித்து முடிக்கிறவரை இந்தமாதிரிக் குறை எதுவுமே தெரியவில்லை என்பது சாண்டில்யனின் கதை சொல்கிற திறம்!
குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த நீலரதி 1985 இல் பாரதி பதிப்பக வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. 57அத்தியாயங்கள். 420+ பக்கங்கள்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment