மல்லுதேசத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கிற வியாதி தொற்றிக் கொண்டிருப்பதில், 2019 ஜூன் முதல் வாரம் வெளியான ஒரு திரைப்படம், படத்தின் பெயரே வைரஸ் தான், கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற தருணத்தில், மிகவும் பொருத்தமான திரைப்படமாகப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்காகவும், உங்களுக்குப் பரிச்சயமான சில தளங்களில் தரவிறக்கம் செய்துகொள்கிற மாதிரியும் கிடைக்கும்.
மல்லுதேசத் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு தீர்க்க தரிசனம் இருந்தது என்று கதைகட்டவெல்லாம் நான் முயற்சிக்கப் போவதில்லை. 2018 இல் கேரளாவை ஆட்டிப் படைத்த நிபா வைரஸ் தாக்கத்தை வைத்து எடுக்கப் பட்ட ஒரு மெடிகல் த்ரில்லர்! 152 நிமிடங்கள்! திரைக்கதை, களத்தைப் பக்காவாக ரெடிபண்ணி வைத்துக் கொண்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஷெட்யூலில்,52 நாட்களில் படமாக எடுத்திருக்கிறார்கள். குழப்பமே இல்லாத வகையில் படமாக்கப்பட்ட விதம் ஜனங்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே செமஹிட்!
வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில் வைரஸ் படத்தில் நடித்த நடிகர் பட்டாளம் மனோரமா ஆன்லைன் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் ஜெயித்தால் கொஞ்சம் அலட்டலும் ஜாஸ்தியாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள முடிந்தால் இந்த 35 நிமிட வீடியோவைப் பார்க்கலாம்! இல்லையேல் கடந்தும் போய்விடலாம்!
குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி,டொவினோ தாமஸ்,இந்திரஜித் சுகுமாரன், ரேவதி, பார்வதி, பூர்ணிமா இந்திரஜித், ரகுமான், மடோனா செபாஸ்டியன், ரம்யா நம்பீசன் இன்னும் மலையாள சினிமையின் அறியப்பட்ட பல திரை முகங்கள் எல்லாம் சேர்ந்து நடித்திருக்கிற திரைப்படம் இது என்பது தமிழகத்தில் நமக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்! தமிழ் சினிமாவில் பலபிரபலங்களை ஒரே இடத்தில் சேர்த்துப் பார்ப்பதே மிக அபூர்வம்தான் இல்லையா? ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்து, தவற விட்டார். அவர் நழுவவிட்ட இடத்தை ஸ்ரீநாத் பாஸி என்கிற இளம் நடிகர் பிடித்துக் கொண்டார்.
ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படம், 2018 இல் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்த நிஜ சம்பவங்களைஅடிப்படையாகக் கொண்டது. ஆக இந்தப்படத்தில் கதைக்களம் தான் நிஜமான ஹீரோ, வில்லன் என்று எல்லாமாகவும்! நடிகர்கள் கதைக்களத்தோடு ஒன்றி, ஒரு நோய்த் தொற்றை கேரளாஎப்படி எதிர்கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறார்கள். எப்படி நிபா வைரஸ் ஒரு தொற்றாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது, பரவுகிற விதம், வேகம் இவற்றைக் கணிப்பது, 21 நாட்கள் கணக்கு என்று பலவிதத்திலும் கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தோடு ஒத்துப் போகிறது என்பதுதான் சிலமாதங்களுக்கு முன்பு பார்த்த ஒரு படத்தை ரீவைண்ட் செய்து இங்கே ஒரு திரைப்பட அறிமுகம் அல்லது விமரிசனமாகவும்!
இந்தப்படத்தை பத்தோடு பதினொன்றாக வெறும் documentary film மாதிரி ஆகிவிடாமல் திரைக்கதையை முஸின் பராரி, சுஹாஸ், சஹரஃபு என ஒரு மூன்று பேர் கூட்டணி மிகத்திறமையாக எழுதி இருக்கிறார்கள். ஒன்றன்மீது ஒன்றாகக் கதைக்களம் விரிவதை இயக்குனர் ஆஷிக் அபு மிகத்திறமையாகப் படமாக்கி இருக்கிறார். கட்டாயமாக இந்த படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். நிபா வைரஸ் குறித்த பயம், தொற்று ஏற்படாமல் இருக்கப் போராட்டம், இவைகளைத் தாண்டி உயிர் மேல் ஆசை எல்லாம் இந்த கொரோனா தொற்று விஷயத்திலும் அச்சுப்பிசகாமல் அப்படியே இருப்பதுதான் முக்கியமான விஷயம்.
மீண்டும் சந்திப்போம்.
இந்த பரபரப்புகள் அடங்கியபின்னர் படத்தைப் பார்க்கவேண்டும்! இன்னும் இரண்டு மலையாளப்படங்கள் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் நிற்கின்றன.
ReplyDeleteஇந்தப்பரபரப்போடு படத்தைப் பார்ப்பதுதான் இன்னும் விசேஷம் ஸ்ரீராம்! முதல்முறை பார்த்தபோது கொரோனா பரபரப்பு வெளியே அதிகம் தெரியாத நேரம். படம் சுவாரசியமாக இருந்தது என்பதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை. இப்போது மறுபடி பார்த்தபோதுதான், இன்னும் சில பொருத்தமான விஷயங்கள் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.
Deleteமுன் அனுபவம் இருந்தும் கூட கேரளா கொரோனா வைரஸ் விஷயத்தில் ஏன் தடுமாறிக் கொண்டே இருக்கிறது என்பது வெறும் அரசியல் கேள்வி மட்டுமல்ல .