Monday, October 11, 2010

ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்?

புத்தகங்களை ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்?

இந்தக் கேள்வியை வைத்துக் கொண்டு "கூட்டாஞ்சோறு" ஆர்வி புத்தகங்களுக்கான தன்னுடைய தனி வலைப்பதிவில் ஒரு தொடர் பதிவாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கேள்வியே எனக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே என்னுடைய அண்ணன்மார்கள் இடமிருந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கும் தொற்றி விட்டதால் இந்தக் கேள்வி விநோதமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் படிப்பது மட்டும் இல்லை, எந்த ஒரு பழக்கத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே முன்னோடிகளாக ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், நாம் நமது சூழ்நிலை, ஆர்வத்திற்குத் தகுந்த மாதிரி இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது.


புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை கைக் கொண்டிருப்பவர்களிடம், அந்த வாசிப்பு அனுபவத்தைப் பற்றிக் கேட்டால் எல்லோராலும் ஒரேமாதிரி சொல்ல முடிவதில்லை, ஆனாலும் வாசிப்பில் லயிப்பது போல ஒரு சுகானுபவம் வேறில்லை என்பதை அத்தனை பெரும் ஒருமித்துச் சொல்லுவார்கள்.

"உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?

அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்து கொள்கிறார்கள்! வேறு பலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது. வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.

வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!

புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக! 


புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவுமான நுழைவாயில் இது! "

இப்படி ஒரு அறிமுகத்துடன் தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற வலைப் பதிவுகள் மிகக் குறைவாகவே இருந்தாலும் கூட, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து, தான் அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கின்றன. தமிழில் விமரிசனக்கலை, விமரிசனத்துறை  சரியாக வேர்பிடித்து வளரவில்லை என்று சிலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.அப்படிச் சொல்பவர்களே தங்களைப் பற்றிய விமரிசனங்களை சகித்துக் கொள்வதில்லை. இங்கே தமிழில் படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் உள்ள குறைகளை விமரிசிப்பதை, தங்களையே தனிப்பட விமரிசிப்பதுபோல எடுத்துக் கொண்டு ஒருவிதமான விரோதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் ஏன் விமரிசனத்துறை இங்கே வேர் பிடிக்கவில்லை என்பதுமே புரியும்.

இங்கே தமிழில் இலக்கிய விவாதங்கள் என்று பார்த்தால், புத்தக மதிப்பீடு என்று பார்த்தால், பெரும்பாலும் தனிநபர் துதியாகவோ அல்லது தனிநபர் வசைபாடலாகவோ இருப்பது இன்னும் போதிய முதிர்ச்சியை, படைப்பாளிகளே அடையவில்லை என்பது தெளிவாகவே புரிய வைத்த சில விஷயங்களை சமீபத்தில் பார்த்தேன்.

ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், எழுத்தாளர் ஜெயமோகன் போகிற போக்கில் கல்கியை ராஜேஷ் குமார் ரேஞ்சுக்குக் கீழே தள்ளிவிட்டுப் போய் விடுகிறார். சுஜாதாவுக்கும் அதே கதிதான்! கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால்,  இலக்கிய விமரிசன
ம் கட்டும், இலக்கியம் படைப்பதிலாகட்டும்,தன்னைத் தவிர வேறு யாருமே இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது மட்டுமே மிச்சம் என்பது தெரியும். 
தி.ஜானகிராமனுடைய எழுத்துக்களில், "காமம் முதிர்ந்த பெண்களை" மட்டுமே இவர்களால் பார்க்க முடிகிறது  என்பது எழுதியவரின் குறையா அல்லது பார்ப்பவரின் குறையா? 

தி.ஜானகிராமனை படிப்பவர்களுக்கு, அவர் பெண்மையை வியந்து தலைமேல் வைத்துக் கொண்டாடிய அந்த அற்புதம் நன்றாகவே புரியும். புரியாதவர்கள், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, நளபாகம் இந்த மூன்று புதினங்களில் ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு அப்புறமாக அபிப்பிராயம் சொல்லட்டும்!

ஜெயமோகன் செய்யும் மொத்த விமரிசனமுமே இப்படித் தான் என்று முத்திரை குத்திவிட்டுப் போய்விட முடியாதபடிக்கு, அவருடைய வாசிப்பு அனுபவம், அவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும் விதம் இவற்றைப் பார்க்கும்போது, அவருடைய வாசிப்பின் பரந்த தளம் நன்றாகவே தெரிகிறது. ஆனால், முடிவுகளை முன்வைக்கும் விதம், சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. முக்கியமாக, ஒரு எழுத்தாளர் எழுதிய காலச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைய அளவீடுகளின் படி விமரிசிப்பது கொஞ்சம் சரியில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

வாசிப்பது எதற்காக? ஆரம்பிப்பது என்னவோ பொழுதுபோக்குக்காக  என்று தான் ஆரம்பிக்கும்! அப்புறம், வாசிக்கும்போதே, எழுத்தாளரின் எழுத்துக்களின் வழியாக ஒரு புதிய உலகத்தைப் பார்க்க முடிகிற அனுபவம் வரும்போது, வாசிப்பு, வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் பரிணமிக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்த்து எழும் கோபம், கதையில் வரும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி, அந்தப்பாத்திரம் கதையில் ஆவேசப் படும்போது, போராடும்போது தன்னையே அந்தப் பாத்திரத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பிக்கும் நிலை  என்று வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது.

ஒரு உதாரணத்துக்காக, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட்  புதினம், இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டதை வைத்து, அதே மாதிரி அமெரிக்காவிலும் நடந்தால் என்ற ரீதியில் கற்பனை விரிகிறது. சம்பவங்கள் என்னவோ கற்பனை தான், ஆனால் சாத்தியங்கள் என்று பார்க்கும்போது உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்ற கூற்றுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கிறதே! 

ஆர் டாகுமென்ட் புத்தகம் 1976 இல் வெளி வந்த போது அது இந்தியாவில் தடைசெய்யப் பட்டிருந்ததாக மட்டும் தெரியும். 1985 வாக்கில் தான் புத்தகத்தை முதன்முதலாக வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போது அந்தப் புத்தகத்தை மறுபடியும் வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது. கற்பனையை விட நிஜம் மிகவும் விசித்திரமானது என்பதை மறுபடியும் கண்டு கொண்டேன்!

இப்போது கூட இந்தியாவில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி நாட்கள், அந்த இருபத்தொரு மாதங்கள் நீடித்த இருண்ட காலத்தைப் பற்றி முழு விவரங்களும் வெளியே வரவில்லை. இந்திய சீனப்போர் 1962 இல் நடந்ததைப் பற்றிய முழுவிவரங்களும் இன்னமும் வெளியே வரவில்லை. நேரு குடும்பத்தினர் பெருமையைக் குலைக்கிற எதையும் வெளியே விடுவதில்லை என்று என்னதான் பூட்டி வைத்தாலும், அத்தனை தணிக்கை, தடைகளையும் மீறி விஷயங்கள் வெளியே கசிந்துகொண்டுதானிருக்கின்றன.

இந்தப்பதிவுகளில் அறிமுகமான புத்தகங்களை எடுத்துக் கொண்டால், வெறும் புத்தக மதிப்புரை, அல்லது திறனாய்வு என்ற ரகத்தில் எதையுமே தொட்டுப் பேசவில்லை. ஒவ்வொரு புத்தகமும் எனக்குள் எழுப்பிய சிந்தனை, அல்லது தாக்கத்தை மட்டுமே பதிவு செய்து வந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரிகிறது. வாசிப்பவை எல்லாம் இலக்கியங்களாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதைப் பேசுவதும் இலக்கிய விமரிசனமாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் அடைமொழியிட்டு அல்லது பிற்போக்கு முத்திரை குத்தி ஒதுக்கிவிட்டு போய்விட வேண்டிய அவசியமும் இல்லை.

அப்புறம் வாசிப்பது என்பதுதான் எதற்காக?

நம்முடைய முகத்தை அவ்வப்போது கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறோமே, அது போலத்தான்!

நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம், அதைப் பற்றிய பிரக்ஞை அல்லது கற்பனையில் பார்க்க முயற்சிப்பதைத் தவிர வாசிப்பு என்பது வேறென்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?9 comments:

 1. வாவ்! எத்தனை விஷயங்கள்! ரொம்ப நல்ல பதிவு.... அந்த READ Bookshelf படம் நல்லா இருக்குதுங்க.

  ReplyDelete
 2. வாருங்கள் திருமதி சித்ரா!

  ஏன், எதற்காகப் படிக்கிறோம் என்பதோடு எப்படிப் படிக்கிறோம் என்பதுமே கூட மிக முக்கியமான கேள்வி தான்! என்படிக்கிறோம் என்பதற்கு வேண்டுமானால், சும்மா வெறும் பொழுதுபோக்கு என்று சொல்லிவிடலாம். ஆனால் எப்படிப் படிக்கிறோம் என்பதில், படித்ததில் என்ன புரிந்து கொள்கிறோம், நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டி இருக்கும். படித்ததோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டிப் போகத் தூண்டுதலாக இருக்கும் கேள்வி அது.

  ஆர் டாகுமென்ட் புதினத்தில் இந்தியாவில் இரண்டு முறை எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டதைப் பற்றிய ஒரு பிரஸ்தாபம் வருகிறது. முதல் தரம் இந்திய சீனப் போர் 1962 ஆம் ஆண்டு நடந்தபோது பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் தாக்கம் அவ்வளவாக வெளியே தெரியவில்லை! காரணம், இரண்டாவது தரம் இந்திரா காந்தி கொண்டுவந்ததைப் போல, மிக அப்பட்டமாகவும், கொடூரமாகவும் இல்லை. ஏனென்றால், நேருவிடம் எவ்வளவு குறை இருந்தாலும், ஜன நாயக நெறிமுறைகளை மதிக்கும் பண்பு இருந்தது. அன்றைய அதிகாரிகளும், தங்களுடைய பொறுப்[பை உணர்ந்து, ஒரு வரம்பு மீறாமல் செயல்பட்ட காலம் அது.

  இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவந்த நெருக்கடி நிலை, நெருக்கடி அவருக்குத் தானே தவிர தேசத்துக்கு இல்லை என்பதை அப்பட்டமாகவே காட்டியது. உதாரணமாக, கட்சி மேடைகளில் ஆபாசமாக மட்டுமே பேசுவதைத் தொழிலாக கொண்டிருந்த ஒரு ஸ்தாபன காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மதுரையில், தீப்பொறி ஆறுமுகம் என்று பெயர், திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு மாறி, வெளியே வந்ததும் மறுபடி திமுகவிற்கே போனவர், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.அந்த நாளில் இந்த மாதிரியான ஆசாமிகள் மட்டுமே தமிழ் நாட்டில் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதே எமெர்ஜென்சி என்பது, ஆட்சியாளர்களின் கொடூரமான முகத்தையும், அதிகாரிகளின் அதீதமான செயல்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படி மிசாவில் போய் வந்த ஆபாசப்பேச்சாளர்கள், லோகல் ரவுடிகள் எல்லாம் பெரிய தீரச் செயல் செய்தவர்கள் மாதிரி தங்கள் பெயருக்கு முன்னால் மிசா என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட கூத்தும் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமே காணக் கிடைத்த விசித்திரம்.

  ஆக ஆர் டாகுமென்ட் புத்தகத்தை இப்போது மறுபடி படித்தபோது, அங்கே எழுத்தாளனின் கற்பனையின் ஊடாக, இங்கே இந்தியாவில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அதையும் விடக் கொடூரமாக நடந்தேறிய சம்பவங்களை நினைத்துப் பார்க்க முடிந்தது. சுதந்திரம் என்பது அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெம்பு, திராணி உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்ற நிதர்சனத்தைக் காட்டுவதாகவும் இருந்தது என்பது தான், ஏன் படிக்கிறோம் என்பதை விட எப்படிப் படிக்கிறோம், எதைப் புரிந்துகொள்கிறோம் என்ற கேள்விகளுக்குக் கிடைக்கிற விடை, அது தான் மிகவும் முக்கியம் என்று எனக்குப் படுகிறது.

  ReplyDelete
 3. மிக மிக அருமையான பதிவு! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ள இந்த காலத்தில் இப்படிப்பட்ட பதிவுகள் அவசியம்! நன்றி!

  ReplyDelete
 4. முதல் வருகைக்கு நன்றி எஸ் கே!

  வாசிப்பது முன்னைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பது தான் உண்மை! ஆழ்ந்த, தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம். முந்தைய காலங்களை விட வாசிப்பதற்கு அதிகமான தளங்கள் இப்போது கிடைப்பதில், ஒரு குறிப்பிட்ட தளத்தில் குறைந்திருப்பதாகத் தோன்றுவதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

  உதாரணமாக, வார, மாத இதழ்களில் இப்போது தொடர்கதையைக் காத்திருந்து வாசிக்கும் பொறுமை அனேகமாக இல்லாமலேயே போய் விட்டது!
  அல்லது வாசகர்களுடைய பொறுமையை, சரியாகப் புரிந்து கொண்டு, காத்திருந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய எழுத்தாளர்கள் இப்போது இல்லை என்று கூட சொல்லலாமே.

  ReplyDelete
 5. //எஸ். கிருஷ்ணமூர்த்தி said...//
  தாங்கள் சொல்வது உண்மைதான்! மொத்தமாக வாசிக்கின்ற பழக்கம் குறையவில்லைதான்! ஏனெனில் மற்றவரின் எழுத்தை படிப்பதற்காக பிளாக்குகளுக்கு செல்வது வாசிப்புதானே!

  மேலும் புத்தகங்கள் வாசிப்பதை பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் எழுத்து தரம் குறைந்து விட்டதாகவே கருதுகிறேன்! மேலும் இயந்திரத்தனமான உலகில் எதையெதையோ தேடி(முக்கியமாக பணம்) இயங்கி கொண்டிருக்கும் உலகில் பொறுமை என்பது மிகவும் குறைந்து விட்டது. அதனால் புத்தகங்கள் வாசிப்பு குறைந்திருக்கலாம்!

  முன்னெல்லாம் இரவில் தூங்கும் முன் புத்தக்கங்கள் படிப்பார்கள்! இப்போதெல்லாம் அதை காணவே முடியவில்லை!

  ReplyDelete
 6. முன்பு புத்தகங்கள், வார மாத இதழ்களைத் தவிரப் பொழுதுபோக்குவதற்கு இருந்த வாய்ப்புக்கள் கம்மி, செலவு பிடிப்பவை. இப்போது வீட்டுக்குவீடு, இலவசத் தொல்லைக்காட்சி உட்கார்ந்து கொண்டு வேறு வேறு விஷயங்களுக்குத் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றன.

  ஆனால், முன்பை விடப் புத்தகங்களைத் தேடிப்படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு புற்றீசல் மாதிரிப் பதிப்பகங்கள், புத்தகங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து பத்து ப்ளாகில் பின்னூட்டம் எழுதினால் உங்கள் பின்னூட்டங்களைக் கூடப் புத்தகமாகப் பதிப்பிக்கிறோம் என்று வலைவீசும் பதிப்பகங்களும் இப்போது முளைத்து வருகின்றன சார்!

  ஆனால், இங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது புத்தகங்களை! ஏன் படிக்கிறோம் எதற்காகப் படிக்கிறோம் என்பதோடு எப்படிப் படிக்கிறோம், என்ன புரிந்துகொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்பது தான் இந்தக் கேள்விக்கு என்னுடைய பதிலாக சொல்லத் தோன்றுகிறது.

  ReplyDelete
 7. புத்தகங்கள் என்றால் எனக்கு மிகவும் ஆசை சார்! ஆனால் சிறுவயதில் சிறுவர் புத்தகங்களை படித்த அளவிற்கு கூட தற்போது படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை அதனால் எனக்கு அப்படி தோன்றியிருக்கலாம். புத்தகங்கள் மட்டுமே அறிவு தாகத்தை உண்டாக்குகின்றன என்பது என் அனுபவம் உங்கள் பதிவின் தாக்கம்தான் என்னை உங்களோடு கருத்துப் பரிமாறக் கொள்ள தூண்டியது. தங்களோடு உரையாடியதல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது! நன்றி சார்!

  ReplyDelete
 8. எஸ்கே என்ற திரு.சுரேஷ்!

  புத்தகங்கள் என்றால் உங்களைப் போலவே எனக்கும் கொள்ளை ஆசை! சிறிய வயதில் என்னுடைய அண்ணன்மார்களிடமிருந்து கிடைத்த வர்பாம்! சாப்பிடும்போது கூட ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு, இன்றைக்கு சுமார் முன்னூறு நானூறு பக்கங்கள் படிக்கவில்லை என்றால் அன்றைக்குப் பொழுதே விடியாதமாதிரி, அப்படிப் பழகி விட்டது.

  புத்தகங்கள் வாசிப்பது பொழுதுபோக்குவதற்காக என்று ஆரம்பிப்பது, அப்புறம் நமக்குப் பிரியமான எழுத்துநடை, துறை என்று வளர்ந்து அந்த எழுத்தையும் தாண்டி யோசிக்க வைப்பதாக இருக்கும், இருக்கவேண்டும் என்பதைத் தான், இதேமாதிரி ஏன் படிக்கிறோம் என்ற தலைப்பில் மூன்று பதிவர்களுடைய தொடர்பதிவை வைத்துக் கொண்டு, கேள்வியை மாற்றிப் போட்டு யோசித்ததில் வந்த சிந்தனை இது.

  எழுதப்பட்டதையும் தாண்டிப்போகும்போது தான் அறிவுத்தாகம் அல்லது கலையார்வம், இலக்கிய ரசனை இப்படி என்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைக்கப்படுகிற அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கும் என்பதை மறுபடி உங்கள் யோசனைக்கு முன்வைக்கிறேன்.

  ReplyDelete
 9. வாசிப்பது எதற்காக என்ற கேள்விக்கு பதிலாக, இரு சம்பவங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. அண்ணாதுரை அவர்களை, முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்துகையில் மருத்துவரிடம், 'இந்தப் புத்தகத்தை முடித்து விடுகிறேனே' என்றாராம். அதே போல மறைந்த காளிமுத்து ஒருமுறை தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமாகிய பொழுது 'கள்ளிக்கட்டு (வைரமுத்து) இதிகாசத்தை படித்து முடிக்காமலேயே இறந்து போய் விடுவேனோ என்று பயந்தேன்' என்றாராம்.

  ReplyDelete