Tuesday, January 12, 2010

தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!

லண்டனில் கல்வி பயில்வதற்காக,  விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல் மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப் பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக, கதைசொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன்,  சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு  இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படன்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என் குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என் குடும்பத்தோடு
ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு  வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல  சத்தம் கேட்கவே, இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான். 


அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில் உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?"
என்று கேட்பதோடு கதை இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்! பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த  கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு. தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின்  பேதப்பட்டு நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனிதமனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்தவர்.  


அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம் சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு
லட்சியவாதி. தமிழ் எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும்  இருந்தார்கள் என்பதே இன்றைக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப் பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம், கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில் இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?

பேதங்கள் தேவை தானா?  தவிர்க்க முடியாதவை தானா?

கொஞ்சம் நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்!

8 comments:

 1. பேதங்கள் தேவையில்லை, இவைகளை எளிதாகத் தவிர்க்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு கனவாகவே இருக்கிறது.

  ReplyDelete
 2. வாருங்கள், திரு ராதாகிருஷ்ணன்!
  கனவுகள் என்பவையே நனவுகளாகக் காத்திருப்பவை தானே!
  நம்முடைய முயற்சி எந்த அளவுக்கு இருந்தது, காலச் சூழ்நிலை எப்படி இருந்தது என்றெல்லாம் பார்க்காமல்,ஒரே வரியில்முடித்துவிட்டால் எப்படி!

  ReplyDelete
 3. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்களுக்கு நன்றி! உலவு திரட்டி நண்பர்களுக்கு, என்னுடைய வேண்டுகோள், பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களை எழுதுங்கள். திரட்டிக்குத் தானே உறுப்பினர்களும், விளம்பரமும் வந்துசேரும்!

  ReplyDelete
 5. இதை நீங்கள் தமிழகத்திலும் காணமுடியும். மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டியாக இருப்பவர்களை புறக்கனிப்பதென்பது பல இடங்களில் காண முடியும். இங்கு மெஜாரிட்டி/மைனாரிட்டி என குறிப்பிடுவது அவர்கள் வாழும் இடங்களில் யார் அதிகம் என்பதை குறிப்பிட. ஒரு சில ஊர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வேற்றுமை உணர்வை புறந்தள்ள ஆரம்பப் பள்ளிகளில் தான் அடித்தளம் அமைக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் வரும் தலைமுறைகளில் மாற்றம் காண முடியும். ஒருவர் அடுத்த மதத்தின் கொள்கைகளை ஏற்காமல் இருக்கலாம் ஆனால் வெறுக்காமலும் இருக்கவேண்டும். இது மதத்தை பின்பற்றாதவர்களும் பின்பற்றவேண்டும்.

  ReplyDelete
 6. தமிழகத்திலேயே இதைப் பார்ப்பதினால் தானே, இந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்கிறேன்! தமிழகத்தில் என்று இல்லை, இங்கே என்னுடன் தாய் பிள்ளையாகப் பழகிய பல நண்பர்களே, இப்போது கொஞ்சம் ஒதுங்கித் தங்களுக்குள் ஒரு கூட்டமாகச் செயல்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இப்போது, அவர்களுக்கு மதமும், நம்பிக்கைகளும் முக்கியமாகஆகிவிட்டன.

  பேதப் படுத்திபார்ப்பது என்பது என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இல்லை. இரண்டு பக்கங்களிலுமே இருக்கிறது என்பது தான் விஷயம். இப்போது கேள்வி, பேதங்களை அகற்றி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியும் அதேபோல் இரண்டுபக்கங்களில் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும்.
  ஆரம்பப் பள்ளியில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்பதில் தான் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது. காரணம், பேதங்களை வளர்ப்பதாகவே இன்றைய கல்விமுறையும், கையாலாகாதவர்களாக ஆசிரியர்களும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 7. பாதிக்கப் பட்ட பக்கம் பழிவாங்கும் நோக்கில் தலைமுறைகளைத் தாண்டி செயல்படத் தொடங்கும் போதுதான் பிரச்னை வெள்ளையர்களின் உயர்வு மனப்பான்மைக்கு அந்த இனத்துப் பெண்ணை பலி வாங்குவது மனிதாபிமானமில்லையே..

  அவர்களுக்கு உயர்வு மனப்பான்மை எனும்போது இவர்களின் தாழ்வு மனப்பான்மையே பேதங்கள் தொடர்வதற்குக் காரணமாகின்றன

  ReplyDelete
 8. ஸ்ரீராம்! இங்கே கறுப்பர் - வெள்ளையர் என்ற இடத்தில், நம்மூர் நிலவரத்தையே வைத்துப் பார்ப்போமே!

  இப்போது கூட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால், இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டபோது, பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு, உயர்நீதிமன்றம் தலையிட்டு, பாதுகாப்பளிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த இடத்தில் உயர்வு-தாழ்வு மனப்பான்மை முன்னுக்கு வருவதில்லை. காரணமில்லாத வெறுப்பு, தன் இனத்தார்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம், இப்படியல்லவா இருக்கிறது!

  ReplyDelete