இனிமேலும் கிராக்கி பண்ணிக்கொண்டே போக முடியாது என்பதால் ஒருவழியாக பாமக, அதிமுக கூட்டணியில் நீடிப்பது என்பது உறுதியாகிவிட்ட மாதிரி செய்திகள் வருகின்றன. சீட்டு பேரம் பெட்டி பேரம் இரண்டும் அநேகமாக வருகிற ஒருசில நாட்களில் முடிவாகி விடும்.அடுத்த அழைப்பு தங்களுக்கு வருமென்று தேமுதிக போன்ற சில கட்சிகள் காத்திருக்கின்றன. வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு முன்னாலேயே இப்படி உதிரிக்கட்சிகள் தங்களுக்கான முக்கியத்துவம், ஆதாயம், சமயங்களில் அதிகாரத்தையும் பெற்று விடுகிற நமது ஜனநாயக அதிசயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சசிகலா வகையறா அதிமுகவுக்கே உண்டான தனிப் பிரச்சினை என்றாலும், உதிரிகளால் என்ன மாதிரி சேதம் விளைவிக்க முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
இந்தப்பக்கம் பாமக அதிமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிற மாதிரி அந்தப்பக்கம் சோனியா காங்கிரஸ், திமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து போய்விட்டார். தமிழக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த வருகை இருந்தது. இப்போது மூன்றாவது முறையாகவும் ராகுல் வருகிற 14,15,16 தேதிகளில் தமிழகத்துக்கு வருகிறாராம். திமுகவுடன் தான் கூட்டணி, இசுடாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று ராகுல் காண்டி சொல்லி விட்டாலும் இந்த முறையும் இசுடாலினை சந்திக்கிற ஐடியா இல்லை என்றே தெரிகிறது. காங்கிரசுக்கு 15 சீட் என்று திமுக தரப்பில் கோடி காட்டப்பட்டதில் அதிருப்தி, பின்னால் இருந்து கையை முறுக்குகிற வேலையை காங்கிரஸ் சைலண்டாக செய்து வருவது வெளிப்படை.
இப்படி இரண்டு கூட்டணிகளிலுமே, வலுவான உதிரிக் கட்சிகளான பாமக, சோனியா காங்கிரஸ் இரண்டும் வறட்டு இழுப்பாக அரசியல் செய்து கொண்டிருப்பதில், தமிழ்நாட்டில் இருக்கிற மற்ற உதிரிக்கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.
கழகங்களிடம் உறுதியாகப் பேரம் முடியாமல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் பொருமுவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் இருப்பது 2021 தேர்தல் களத்தில், தமிழக அரசியல் நிலவரம். இன்னும் வேடிக்கையான விஷயம், இரண்டு கழகங்களுமே கூட இந்த உதிரிகளை உதறித்தள்ளி விட்டுத் தனித்தே களம் காணத் தயங்கிக் கொண்டிருப்பதுதான்!
கோபுரத்தில் இருக்கும் பொம்மை எதுவும் கோபுரத்தைத் தூங்குவதில்லை. ஆனால் தேர்தல் அரசியலில் அப்படியே தலைகீழ் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
தேர்தல்நேரங்களில் நான் எப்போதுமே வலியுறுத்தி வருவதைத் தான் இப்போதும் சொல்கிறேன். ஒருநல்ல ஜனநாயகமாக நாம் வலுப்பட அவ்வப்போது தேர்தல் முறைகளில் தேவையான சீர்திருத்தங்கள் செயதே ஆக வேண்டும். தேர்தல் சீர்.திருத்தங்களை செய்யாததால் தான் இங்கே உதிரிக்கட்சிகள் ஆட்டம்போட முடிகிறது. தகுதியில்லாத கழகங்கள் அரசியலில் ஆட்டிப்படைக்க முடிகிறது. வாக்குச்சீட்டுகளை முந்திக்கொண்டு பணப் பெட்டிகளே முடிவைத் தீர்மானிப்பவை என்றாகிப் போகும் அவலமும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இப்படிக் குறைபாடுடைய தேர்தல் முறைகளே இருக்கின்றன என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?
மாற்றத்துக்காக என்ன செய்யப்போகிறோம்? எப்போது செய்யப் போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
//இருப்பது 2921 தேர்தல் களத்தில்,//
ReplyDeleteவிரல் மாற்றி வாக்குப் போட்டு விட்டதோ!
திருத்தம் செய்துவிட்டேன், ஸ்ரீராம்! நன்றி.
Deleteபாமகவை விடுங்கள். காங்கிரஸ் போன்ற தேசியக்கட்சி தமிழ்நாட்டில் உதிரிக் கட்சியாக அறியப்படுவதே வேதனை!
ReplyDeleteகாங்கிரஸ் தேசியக்கட்சியா ஸ்ரீராம்?
Deleteகேரளாவைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலாவது காங்கிரஸ் பொருட்படுத்துக்கூடிய கட்சியாக இருக்கிறதா சொல்லுங்கள்! சோனியா காங்கிரஸ் தேசிய உணர்வையும், மக்கள் ஆதரவையும் இழந்து நீண்ட காலமாகி விட்டதே! கட்சியில் முழுநேர அரசியல் செய்வதற்குக் கூட ஆட்களைக்காணோம்!