புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தை நிறுவிய ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி ஐயா ஜனவரி 31 அன்று பிறந்தநாள் காணுகிறார் என்பதில் கூடுதல் விசேஷம் 79 அகவையை நிறைவு செய்து எண்பதில் அடியெடுத்து வைக்கிறார். நேரில் சென்று வணங்க முடியாததால் இங்கே வலைப்பதிவில் வணங்கி ஞானாலயா தம்பதியினர் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஒரு கூகிள் வலைக்குழுமத்தின் வழியாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய புத்தகசேகரம் குறித்து அறிந்திருந்தாலும் புதுத்திண்ணை இணைய இதழில் மறைந்த எழுத்தாளர் மலர்மன்னன் (இயற்பெயர்:: சிவராம கிருஷ்ண அரவிந்தன்) எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தூண்டுதலாக இருந்தது. இளமையில் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கம் என மிகப்பல வெட்டி வேலைகளில் களம் இறங்கி, பின்னாட்களில் அதுவும் கசந்துபோய் ஒதுங்,கி இருந்தவனை ஒரு உருப்படியான களத்தில் வேலை செய்கிற வாய்ப்பாகவும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு அமைந்ததை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கூகிள் பிளஸ் தளத்தில் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்களை வேண்டி எழுதிய பல பகிர்வுகள் நிறையத் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கூடவே அனுபவங்களையும்!
ஞானாலயா ஆய்வுநூலகம் தொடங்கப்பட்டவிதம், அதன் பயன்பாடுகள் பற்றி ஒரு நிறைவான பதிவாக இங்கே வாசிக்க முடியும். தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா பேசியதை காணொளிகளாக இங்கே பார்க்கவும் முடியும்.
எண்பது வயது நிறைவை சதாபிஷேகம் நடத்திக் கொண்டாடி வணங்குகிற தேசம் நம்முடையது. ஒரு லட்சியத்துடன் புத்தகசேகரத்தை, தன்னுடைய 17வது வயதிலிருந்தே தொடங்கியவருக்கு, அந்த லட்சியத்தில் இன்றும் உறுதுணையாக இருப்பவர் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி.மீனாட்சி நூலகமாகத் தொடங்கி, இன்று ஞானாலயா ஆய்வு நூலகமாக ஒரு ஆலமரமாக வளர்ந்திருப்பதில் ஞானாலயா தம்பதியினரது ஆர்வமும் கடும் உழைப்பும் இருக்கிறது.
அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆகஸ்ட் 2012 இல் ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கும் இதர புத்தக சேகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள 2012 ஆகஸ்டில் சதீஷ் என்கிற வலைப் பதிவருக்கு எழுதிய மின்னஞ்சலில் நான் எழுதியது இது::
//தமிழ்நாட்டில் மிகப்பெரிய தனியார் புத்தக சேகரமாக இருந்த மறைமலையடிகள் நூலகம், வாரிசுகளின் பேராசையால் காணாமல் போனது.திருவருட் பிரகாச வள்ளலார் சென்னையில் வந்தபோது உரையாற்றிய இடம் என்பதைக் கூடக் கருத்தில் கொள்ளாது, வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாத்து வித்திருக்க வேண்டிய அந்த இடம், இன்றைக்குப் பணத்தாசையால் ஒரு வணிக வளாகமாகி விட்டது.அரும்பாடுபட்டு எகேசெட்டியார் சேகரித்துக் கொடுத்த நூல்களில் பெரும்பாலானவை கவனிப்பாரில்லாமல் கரையானுக்கு இரையாகக் கொடுக்கப் பட்டதில், தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞை இல்லை என்பதும், பாதுகாத்து வைக்கத்தவறிக் கொண்டே வருகிறோம் என்பதையும் நமக்கு ஒரு பாடமாகச் சொல்லி வைத்துப் போயிருக்கிறது.
ரோஜா முத்தையா நூலகம் சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு விற்கப்பட்டு விட்டது.தரமணியில் ஸ்கேன் செய்து வைக்கப் பட்ட சுமார் ஒருலட்சம் நூல்களுடன் அதனுடைய கிளை சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.அனால், அங்கே ஞானாலயாவைப் போல எளிதில் அணுகி பயன்படுத்த முடியாது. அரசின் பராமரிப்பில் இயங்கி வரும் கன்னிமாரா நூலகம், மிகப்பெரிய எண்ணிக்கையில் புத்தக சேகரத்தைக் கொண்டது. ஆனால், பயன்படுத்திக் கொள்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.புதுக்கோட்டை ஞானாலயா வெறும் நூல்களை சேகரிக்கும் கிடங்கி அல்ல!எந்தப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றே தெரியாத நூலகர்களைக் கொண்டிருக்கும் நூலகமும் அல்ல! ஒரு ஆராய்ச்சிக் கருவூலம்!மிகக் கவனமாகத் தகவல்களைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அறிவுக் களஞ்சியம்!
இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ள எழுத்தாளர் விக்கிரமன் நடத்தி வரும் இலக்கியபீடம் மாத இதழில், சென்ற ஆண்டு பிப்ரவரி இதழில் வெளியான ஒரு ஏழுபக்கக் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள். புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதை சுருக்கமாக இந்தச் சுட்டியில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்//
எண்பதாம் அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அவரது துணைவியார் இருவருக்கும் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துப் பதிவை நிறைவு செய்கிறேன்.
டிஸ்கி 1:: நான் எழுதிவரும் மூன்று வலைப்பூக்களிலும் சேர்த்து இது என்னுடைய 2000வது பதிவு. நேற்றே வெளி வந்திருக்கவேண்டும். புத்தகங்களை பேச ஆரம்பித்த இந்தப்பக்கங்களில் இது 648 வது.
No comments:
Post a Comment