கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார். ராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!
கவலைப்படுவதா? அது மிக மோசமாயிற்றே என்று தான் நமக்குத் தோன்றும். கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப்போகியாது என்று வேதாந்தமும் கூடப் பேசுவோம். கவலைப் படவேண்டிய தருணங்கள் வரும்போது அதை முரட்டுத்தனமாக எதிர்ப்பதிலோ, அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிவிடுவதிலோ தான் நம்முடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த மனப்பான்மை மிகவும் காலாவதியாகிப் போனது என்கிறார் ராபர்ட் ரோசென்.
கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.
பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.
கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை!
கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற இந்த வலைப்பக்கங்களையும் படித்துப்பாருங்கள்!!
இந்தப் புத்தகத்தை எனது நண்பர் ஒருவர் சில நாள் இரவலாகக் கொடுத்திருந்தார். குறிப்புக்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நினைவில் இருந்ததை வைத்து, இணையத்தில், ஆசிரியருடைய வலைப் பக்கங்களில் படித்ததை வைத்தும் தான், படித்தவற்றை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி நினைவு படுத்திக் கொண்டவை கூட, புதிய விஷயங்களாகத் தென்படவில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மைனஸ் பாயின்ட். என்று இப்போது திரும்பிப் பார்க்கிறபோது தோன்றுகிறது.
புத்தகங்கள் ஒரு ஆரம்பப் புள்ளியாக மட்டுமே இருக்க முடியும். How to stop worrying and start living புத்தகத்தில் டேல் கார்னகி சொன்ன விஷயங்களில் இருந்து இவர் சொல்வது அதிக வித்தியாசமில்லை. கார்னகி நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார், இவர் கவலைப்படுவது என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்!
இன்னொருத்தர் Fear is the Real Driving Force என்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பயப்படுங்கள் அதுவும் நல்லது என்று புத்தகம் எழுத, அதுவும் கூட பரபரப்பாக விற்பனையாகும்! பேசப்படும்! சுய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்று புத்தகங்கள் எழுதுகிறவர்கள் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு, புத்தகங்களில் பேசப்பட்ட கருத்துக்கள் உதவியாக இல்லை என்பதையும் இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டும்.
புத்தகங்கள் உற்ற தோழனாக இருக்க முடியும், உதவியாகவும் இருக்க முடியும் என்று சொல்கிற அதே தருணத்தில், எல்லாப் புத்தகங்களையும் அதே தரத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்பதைச் சொல்வதற்காகவே, ஏற்கெனெவே என்னுடைய இன்னொரு வலைப் பூவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தபோதிலும் கூட, தேர்ந்தெடுத்துப் படிப்பது குப்பை கூளங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும் என்பதற்காக, இந்தப் புத்தகத்தைப் பற்றிய கருத்தை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
சுய முன்னேற்றம், மனித வளம் பற்றிய ஏராளமான உதவிப் புத்தகங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல கோடிப் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பின்னரும் கூட, இந்தப் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்றோ இரண்டோ தான், படிப்பவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதிகக் கஷ்டப்பட வேண்டியது இல்லை.
மனிதவளம், வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள, புத்தகங்கள் ஒரு எல்லை வரைதான் துணையாகவும், கருவியாகவும் பயன் படும். வாழ்க்கையை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம்முடைய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அந்த அணுகுமுறையைப் புத்தகங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்து விட முடியாது என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment