Tuesday, April 19, 2011

தேவன் வருவாரா? ஜெயகாந்தன் சிறுகதை!

ஜெயகாந்தன் சிறுகதைகளைத்திரும்பப் படித்துக் கொண்டிருந்த போது, அனலாய்த் தகித்த ஒரு தலைப்பு தேவன் வருவாரா?சிறுகதை மன்னன் என்று என்னைஎவர் சொன்னது? நான் சிறுகதைச் சக்ரவர்த்தி என்று ஜெயகாந்தன் ஒரு கல்லூரி விழாவில் சொன்னதாக ஒரு மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு இழையில் படித்த நினைவு வந்து அலைமோத, அது சரிதான், மெத்தச்சரிதான் என்று மனம் சொன்னது. மனம் நெகிழப் படித்த கதை இதோ உங்களுக்காகவும்!

தேவன் வருவாரா?    ஜெயகாந்தன் சிறுகதை!

பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை.

குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது.
'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா ? ' கிழவிக்கு நெஞ்சு படபடத்தது.

இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை.
சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது.

'அதாரு ? சின்னப் பொண்ணா...ஏ, சின்னப் பொண்ணு ' எங்க அழகம்மா எங்கே ? உங்க கூட வரலியா ?.... '

'நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா.....வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ, தெரிலியே..... '

குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம். எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள்.
'எங்க அழகம்மாளைப் பார்த்தீங்களா, அழகம்மாவை ? '

எல்லோரும் பார்த்ததாகத்தான் சொன்னார்கள். அவள் எங்கே என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

சேரித் தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்... ' அந்தக் கும்பலில் இருப்பாளோ ' '--கிழவி சாயபுக் கடையை நோக்கி ஓடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம்.

'' ஐயோ, கடைக்கார ஐயா...எங்க அழகம்மா இந்தப் பக்கம் வந்தாளா, பாத்திங்களா ஐயா ?... '

'அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே...நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே ? எங்களுக்கு வேறே வேலை
ல்லியா ? ' என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு--அவனுக்கு வியாபார மும்முரம்.

பைத்தியம்;--அந்த வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது.

ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில், குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக் கொண்டு, 'ஆடை பாதி, ஆள் பாதிக் கோலத்துடன் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்தவள்தான் அழகம்மாள்.
'
 இப்ப இல்லியே......இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தெளிஞ்சு போச்சுதே ' ' கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தெளிந்தது ? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம் '

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதா கோயிலுக்குப் போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவெளியில் உடலை மறைத்துக்கொண்டு 'ஆயா ஆயா ' என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்...அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ?

'ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே ?...ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்திக்கிட்டே போறியே ஆயா... ' என்று கதறியழுதாளே, அழகம்மாள் --அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ?

அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டுவந்தது.

கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும் எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு, காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லாவா ..அழகம்மாளா ?...யாராயிருந்தால் என்ன ? பெண் '

கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய்
அவளிடம் கொடுத்தாள். உடுத்திக் கொண்டதும் கண்கள் கலங்க, கரம் கூப்பிக் கும்பிட்டவாறு, 'ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்... ' என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ?

ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக்கொண்டு, 'நீதான் எனக்கு மகள்... ' என்று கண்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே...

'இருவர்க்கும் இருவர் துணையாகி -- நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்துக் கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம் ?

'இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை ' என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதாகோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள்.

அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம், பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும்--அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யும். மற்றவர் கண்ணுக்கு 'இது என்ன அழகு ' என்று தோன்றும் இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அழகம்மாளுக்கும் அப்படித்தானோ ? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற் குன்றுகளுக் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஒதிய மரங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள்.

அதோ.....
 
நிலா வெளிச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்.... ?

'அழகம்மா....அழகம்மா.... '
---பதிலில்லை.

கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான் ' கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள் ' அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன.

'அழகம்மா.... ' கிழவி அவள் காதருகே குனிந்து மெல்ல அழைத்தாள்.
'ஆயா.... ' நிலவில் பதிந்த பார்வை பெயராமல் குரல் மட்டும் வந்தது; கிழவிக்கு உயிரும் வந்தது.

'தெய்வமே, அவளுக்கு புத்தி பேதலித்து விடவில்லை.... ' கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள்.
'ஆயா ' இப்பொழுதும் பார்வை நிலவில்தான் இருந்தது.
'என்னாடி கண்ணே.... '
'அதோ நெலாவிலே பாரு.... ' கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஒளியிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன.

'அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, 'தேவன் வருவாரா 'ன்னு.... '--- கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்தது. பல மணி நேரம் மெளனமாய் இருந்து விட்டுத் திடாரென அவள் கேட்பாள்--- 'ஆயா, தேவன் மறுபடியும் வருவாரா.... ' அதற்கு கிழவி பதில் சொல்வாள்; 'வருவார் மகளே, வருவார்.... பெரியவங்க அப்படித்தான் சொல்லி இருக்காங்க... ' என்று.

'சரி; அதற்கு இப்பொழுது என்ன வந்தது ?... '

அவள் முகம் புன்னகையில் மலரக் கண்கள் ஜொலிக்கப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

'அதோ நெலாவிலே பாரேன்....அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்....ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்---அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு '.... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு... அதைப் பார்க்கும் போது கண்ணும் நெஞ்சும் நெறைஞ்சி எனக்கு மூச்சே நின்று போறமாதிரி இருந்தது...அவரு எனக்குப்பணம் காசெல்லாம் தர்ரேன்னாரு...நான் வேணாம்னு சொல்லிட்டேன். 'ஒனக்கு என்ன வேணும் 'னு கேட்டாரு.... 'நீங்கதான் வேணும்னு சொன்னேன்--- அந்தத்தேவனோட நெழல் என்மேலே விழுந்தது; நிலாவிலேயும் விழுந்தது --- நிலா கறுப்பாயிடுச்சி --- என் ஒடம்பும் இருண்டு போயிடுச்சு. 'நான் கண்ணை மூடிக்கிட்டேன் --- நூறு நூறா,....ஆயிரம், கோடியா மானத்திலே நட்சத்திரமில்லே, அந்த மாதிரி நிலாக் கூட்டம் என் கண்ணுக்குள்ளே சுத்திச் சுத்தி வந்தது. வெளியே ஒலகம் பூராவும் ஒரே இருட்டு. என் உடம்புக்குள்ளே மட்டும் வெளிச்சம், வெளிச்சம், ஒரே வெளிச்சம் ' வெளியிலேருந்த வெளிச்சமெல்லாம் என் உள்ளே புகுந்துக்கிட்டுது. அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பு பூரா பரவிக் கிட்டிருந்தது. அப்புறம் லேசாக் கண்ணைத் தெறந்து பாத்தா, நெலாவும் இல்லே, தேவனும் இல்லே; இருட்டும் இல்லே, சூரியன் பொறப்படற நேரம்; ஆகாசம் பூரா ஒரே செவப்பு நெறம். நெருப்பு மாதிரி இருந்தது. கண்ணெல்லாம் எரிச்சல், அப்பத்தான் நான் இருந்த நெலையைப் பார்த்தப்ப எனக்கு வெக்கமா இருந்தது.... அந்தத் தூங்கு மூஞ்சி மரத்திலேருந்து ரெண்டு மூணு பூவு, முண்டக் கட்டையா கெடந்த என் உடம்பிலே உதுந்து கெடந்தது,  

எனக்கு ' 'ன்னு அழணும் போல இருந்தது. அப்ப யாரோ ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா வந்தது....என்னைப் பாத்து 'நீ யாரு 'ன்னு கேட்டுது... அது என்னா கேள்வி ?.... 'நான்தான் அழகம்மா 'ன்னு சொன்னேன். 'ஒனக்கு அப்பா அம்மா இல்லியா 'ன்னு கேட்டுது, அந்தக் கேள்வியை யாரும் என்னைக் கேக்கக் கூடாது, தெரியுமா ? கேட்டா கொன்னுப் போடலாம் போல ஒரு கோவம் வரும் எனக்கு, ஆமாம்; அப்படித்தான்... அந்தப் பொண்ணு பயந்து போயி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அதுக்கு அப்புறம் நீ வந்தே, ஆயா.... ஆயா, அந்தத் தேவன் இன்னொரு தடவை வருவாரா ?..... '

கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை ' 'கிறுக்குக் குட்டி என்னமோ உளறி வழியுது ' என்று நினைத்துக்கொண்டு 'சரி சரி, வா நேரமாச்சு, போவலாம்... இந்த மாதிரி நேரத்தில் நீ தனியா இங்கெல்லாம் வரக்கூடாது, வாடி கண்ணு போவலாம்... ' என்று கையைப் பிடித்திழுத்தாள். அழகம்மாள் அப்பொழுது தான் சுயநினைவு பெற்றாள்--


'ஆயா ' என்று உதடுகள் துடிக்க, பரக்கப் பரக்க விழித்து உறக்கம் கலைந்தவள் போன்று கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் அழகம்மாள்.
'ஆயா....என்னெ நீ ரொம்ப நாழி தேடினியா ? என்னமோ ஒரே மயக்கமா இருந்துது---இங்கேயே உக்காந்துட்டேன்....நேரம் ரொம்ப ஆவுது இல்லே....இந்தா பணம்.... ' என்று தனது உழைப்பால் கிடைத்த கூலியை முந்தானை முடிச்சிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தாள் அழகம்மாள்.
கிழவி, அழகம்மாளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்தாள், 'ஒடம்புக்கு ஒண்ணுமில்லே.... பசி மயக்கமா இருக்கும். '
'காத்தாலே பழையது சாப்பிட்டதுதானே....வா வூட்டுக்குப் போயி சோறு திங்கலாம். '

வீட்டுக்கு வந்ததும், அடுப்பில் போட்டுவிட்டுப் போயிருந்த ஒரு பானை வெந்நீரை ஊற்றி அழகம்மாளை 'மேல் கழுவ ' வைத்து, வேறு உடை கொடுத்து தட்டத்துக்கு முன் உட்கார வைத்துச் சோறு பரிமாறினாள் கிழவி.

அழகம்மாள் எங்கோ கூரை முகட்டைப் பார்த்தபடி தட்டிலிருக்கும் சோற்றில் விரலால் கோலம் போட்டவாறு குந்தி இருந்தாள்.

'என்னாடி பொண்ணே.....சோறு திங்காம குந்தி இருக்கியே ? ' என்றாள் கிழவி.

'ஆயா, என் தேவன் வருவாரா ?.... '

'வருவாரம்மா, நீ சாப்பிடு.... '

'எனக்குச் சோறு வாணாம் ஆயா.... '

'நாள் பூராவும் எலும்பை ஒடிச்சிப் பாடுபட்டுட்டு வாரியே.... ஒருவேளைகூட நல்லா சாப்பிடல்லேன்னா இந்த ஒடம்பு என்னாத்துக்கு ஆவும்..... எங் கண்ணுல்லே, சாப்பிடு ' என்று அழகம்மாளின் முகவாயைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் கிழவி.

கிழவியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் அழகம்மாள் ஒரு புன்முறுவல். 'சரி, சாப்பிடறேன் ஆயா....கொஞ்சம் தண்ணி குடு..... '

இரண்டு கவளம் சாப்பிட்டாள். மூன்றாவது வாய்க்கு ஒரு குவளை தண்ணீரையும் குடித்தாள். அடுத்த கவளம் வாயருகே வரும்போது குடலை முறுக்கிற்று....அழகம்மாள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு எழுந்து குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். ஓடி வந்து குனிந்து நின்று '' வென்ற ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்தாள்.

அடுத்த நாள் அழகம்மாள் வேலைக்குப் போகவில்லை; சாப்பிடவுமில்லை. மயங்கிக் கிடந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருவாறு எழுந்து நடமாடினாள்; வேலைக்குப் போனாள்.

அழகம்மாளுடன் வேலை செய்யும் பெண்கள் தனியே என்னவோ கூடிப் பேசுகிறார்களே, அது என்ன பேச்சு ?....

இவளைக் கண்டவுடன் பேச்சு நின்றுவிடுகிறதே, ஏன் அப்படி ?.....

அழகம்மாளுக்கு புரியாத முறையில் குறும்பாகச் சிரித்துக் கொண்டு என்னென்னவோ கேட்கிறார்களே, அதெல்லாம் என்ன கேள்விகள் ?.....
இவளால் முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லையே, ஏன் அப்படி ?....

இப்பொழுதெல்லாம் அழகம்மாள் வரும் வரை அவளுக்காகக் காத்திராமல் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அவள் மட்டும் கடைசியில் தனியாக வருகிறாள். அழகம்மாளுக்கும் கொஞ்ச நாளாய், இருந்த வாயும் அடைத்துப் போயிற்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை. வேலை செய்யும்போதும், சும்மாயிருக்கும்போதும் அவள் மனம் அந்த ஒரே வார்த்தையை ஜெபித்துக்கொண்டிருக்கும் ---- 'என் தேவன் வருவாரா ? என் தேவன் வருவாரா ? '

அன்று இரவு வழக்கம்போல் ஆரோக்கியத்திடம் கேட்டாள் அழகம்மாள்: 

'ஆயா, தேவன் வருவாரா ? '

'போடி, புத்தி கெட்டவளே ' தேவனாம் தேவன் ' அவன் நாசமாப் போக ' எந்தப் பாவி பயலோ ஒண்ணுந் தெரியாத பொண்ணைக் கெடுத்துட்டுப் போயிருக்கான். மானம் போவுதுடி பொண்ணே, மானம் போவுது ' என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கிழவி.

கிழவி கோபமாகப் பேசியதைத் தாள முடியாமல், அழகம்மாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். விம்மி விம்மி, கதறிக் கதறிக் குழந்தைப் போல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் கிழவியும் அழுதாள். கிழவியின் நினைவில் பத்து வருஷத்துக்குமுன் யாருடனோ, எங்கோ ஓடிப் போன இஸபெல்லா நின்றாள்.

'மகளே....இஸபெல் ' நீயும் இப்படித்தான் ஏதாவது கெட்ட பேருக்கு ஆளாகி என் மொகத்திலே முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு ஓடிப் போனியா ?...ஐயோ '.... இவளும் அந்த மாதிரி ஓடிப்போவாளோ ? '----கிழவிக்கு மார்பில் பாசம் பெருகி வந்து அடைத்தது.

'என் இஸபெல் எங்கேயும் ஓடிப் போகல்லே...இதோ இருக்காளே ...இதோ, இங்கேயே இருக்கா,--- கிழவியின் பார்வை அழகம்மாளின் மேல் கவிந்திருந்தது.


'மகளே.... ' என்று அழகம்மாளை அணைத்துக் தேற்றினாள் '
'வருத்தப்படாதே அழகம்மா...எந்திரிச்சி வந்து சாப்பிடு... '

'போ '.... நீதான்... நீதான் என் தேவனை நாசமாப் போகன்னு திட்டினியே .... நா, சாப்பிடமாட்டேன்... ஊம் ஊம் ' என்று குழந்தைபோல் கேவிக் கேவி அழுது கொண்டே சொன்னாள் அழகம்மாள்.

'தெரியாத்தனமாய் திட்டிட்டேன்டி கண்ணே.....வா, எந்திரிச்சி வந்து சாப்பிடு... இனிமே உன் தேவனைத் திட்டவே மாட்டேன். '

அழகம்மா அழுது சிவந்த கண்களால் கிழவியைப் பார்த்தாள். கண்ணீருடன் புன்முறுவல் காட்டி 'சோறு தின்னும்மா, ' என்று கெஞ்சினாள் கிழவி.


'சொல்லு ஆயா.... தேவன் வருவாரா ? '

'வருவான் '

'போ ஆயா, 'வருவான் 'னு சொல்றியே ? '

'இல்லேயில்லே, வருவாரு ' '

'ஆயா எம்மேலே கோவமா ? '

'இல்லேடி தங்கம்....நீ சாப்பிடு.... '

'கொஞ்சம் ஊறுகாய் வெச்சாத்தான்..... '

'வெக்கிறேன், உனக்கு இல்லாததா ? '

'ஆயா..... '

'மகளே.... '

'ஆ.....யா.... '

'மகளே.... '

----இருவர் கண்களிலும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக்கொண்டு....அதென்ன ? அழுகையா ?..... சிரிப்பா ?....

அழகம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சி அல்லது துயரம் அழகம்மாளுக்கு இருந்ததோ என்னவோ, ஆரோக்கியத்திற்கு முதலில் இரண்டும் இருந்தது. பிறகு தனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் ஆனந்தம் ஏற்பட்டு, அந்த ஆனந்தத்திலேயே அவள் இப்பொழுது திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை '
ஆமாம்: இஸபெல்லுக்குப் பிறகு அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் சில மாதங்களில் ஒரு குழந்தை தவழப் போகிறதே '

கொஞ்ச நாளாய் அழகம்மாள் வேலைக்குப் போவதில்லை. எப்பாடு பட்டோ கிழவி அவளுக்கு மூன்று வேளையும் வயிறாரச் சோறு போடுகிறாள். தனக்கு ஒரு வேளைக்கு இல்லாவிட்டாலும் சகித்துக் கொண்டு பிள்ளைத் தாய்ச்சிப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றுகிறாள் கிழவி.

 'என் மகள் ஒரு கொறையுமில்லாமல் பெற்றுப் பிழைக்க வேண்டுமென்று நாள்தோறும் கர்த்தரை ஜெபிக்கிறாள்.


கிறிஸ்மசு க்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி. அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது.

கிறிஸ்மசுக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும் ' என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று. கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன. உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின.

மாலை மணி நாலுக்கு, பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்--பக்கத்தில் இருந்த குழந்தை 'வீல் வீல் ' என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள்.

ஆமாம்: விடியற்காலை நேரத்தில், கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது: ஆண் குழந்தை ' கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது. அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது.
 
'ஏது இந்தக் குழந்தை ' '

'ஏ பொம்பளே...புள்ளை கத்துது பேசாம பாத்துக்கினு இருக்கியே...பால் குடு ' என்று அதட்டினாள் ஒரு கிழவி.
 
'இதுஎன் குழந்தையா? எனக்கேது குழந்தை ? '--அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை குழந்தை வீறிட்டது.'

'ஆமாம்; இது என் குழந்தைதான்...என் மகன் தான். ' குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள்.

'பையனைப் பாரு, அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான் ' என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள். அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர்.
 
'அந்தக் குழந்தைக்கு அவன் அப்பனாம்; என் குழந்தைக்கு ? '

'ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன், தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை ' என் மகனுக்கு அப்பன் எங்கே ? அவன் எப்பொழுது வருவான் ? ' கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள்.

குழந்தை மீண்டு அழுதது.
'ஏண்டா அழறே ? உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா ? இரு இரு; நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன் ' என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள்.

கிறிஸ்மசுக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது.

 
--கட்டிலின் மீது குழந்தை கிடக்கிறது. அழகம்மாளைக் காணோம். எல்லோரும் தேடுகிறார்கள்.

கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பொழுது திடாரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள்.
ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி. எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா ?

பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்கும் அந்த மனிதரிடம் அழகம்மாள் என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் ?

'சீ சீ, போ ' என்று விரட்டுகிறாரே அந்த மனிதர்.
 
பிச்சையா கேட்கிறாள் ? என்ன பிச்சை ? கிழவி மகளை நெருங்கி ஓடினாள். அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள். அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தெளிவாகக் கேட்டது.
 
'என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை ?.... அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க; நம்ப மகனைப் பாக்க வாங்க.... ' என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள். அவன் பயந்து போய் விழிக்கிறான்.

'மகளே.... ' என்று ஓடி வந்தாள் கிழவி.

திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள். 'என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா ? ' அந்த ஒரே கேள்விதான் '

'நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா, உன் மகனுக்குப் புதுச்சட்டை ' என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி. அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள் ' 'நல்லா இருக்கு; பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா ? ' என்றாள் புன்னகையுடன். அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது.
'போ, என் மகனுக்குச் சட்டை வேணாம்; அப்பாதான் வேணும் ' என்று சிணுங்கினாள்.

'மகளே ' உனக்குத் தெரியலியா ? முன்னே எல்லாம் நீ சொல்லுவியே 'தேவன் 'னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே ' இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே ' '

கிழவியின் வார்த்தைகள் அழகம்மாளுக்கு ஆறுதல் அளித்திருக்குமா ? அவள் பார்வை....
 
அழகம்மாளின் பார்வை, உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது.
 
தேவனே எதிரில் வந்திருந்தால் கூட அவளால் அந்த ஒரே கேள்வியைத் தான் கேட்க முடியும்—

 'என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா ? '


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)