ஒரு பிரார்த்தனையோடு . ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் அடியவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தியோடு புத்தாண்டை வரவேற்போம்!
ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நூற்றாண்டை ஒட்டி, முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னால்,
ஸ்ரீ அன்னை அளித்த செய்தி இது! இந்த ஆண்டுமே, ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்து சேர்ந்த தருணத்தின் நூற்றாண்டாகவும் இருக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நூற்றாண்டு நினைவு விழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.
இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.
பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடு கூடவே இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.
பாரத தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது! தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!
சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!
புது வருடத்தின் பிறப்பை, அன்னையின் அருளாசிகளோடு தொடங்குவோம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!