Wednesday, March 17, 2010

மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா !


மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  

உண்மையில் அப்படித்தானா ?
'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்
எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 

Consistency! Continuity! Concentration!

முதலில் , ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது.
உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் போது திரித்துச் சொல்வது அல்லது புரிந்து கொள்வதுமே ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.


அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!

மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.

ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்.தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடிப் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்
1 comment:

  1. Sir you are doing a great job indeed. We guys are reading a lot of books either fully or in parts but we dnt hav the feeling of sharing thoughts regarding that.But you are doing that. That too books like this. Very kind of you sir.Thank you

    ReplyDelete