சில மாதங்களுக்கு முன்பாக உடுமலைடாட்காமில் தி.ஜானகிராமன் புத்தகங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஆர்டர் கொடுத்ததில், மலர் மஞ்சம் மட்டும் ஸ்டாக் இல்லை என்று தகவல் சொன்னபோது, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் இருக்கிறதா என்று கேட்டேன். வரவழைத்துத் தர முடியும் என்று சொல்லி, அனுப்பியும் உதவினார்கள்.
உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து,ஆனந்தவிகடனில் தொடராக வந்ததை எடுத்து கவனமாக பைண்ட் செய்யப் பட்ட வடிவத்தில், திரு கோபுலு வரைந்த ஓவியங்களோடு தில்லானா மோகனாம்பாள் கதையை நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். ஏ பி நாகராஜன் தயாரிப்பில் தில்லானா மோகனாம்பாள் படம் வந்த தருணத்தில், நூலகத்தில் புத்தகத்தை தேடியெடுத்து மறுபடி வாசித்திருக்கிறேன். இப்போது மறுபடியும்..!
1341 பக்கங்கள்! இரண்டு தொகுதிகளாக. முதல் தொகுதி தொள்ளாயிரம் பக்கங்கள், இரண்டாம் பகுதி நானூற்றிச் சொச்சம் பக்கங்கள் என்று என் மேசையில் இந்தப் புத்தகம் இருந்ததை உறவினர் ஒருவர் பார்த்து விட்டு, "இதுவா? ரொம்ப போரடிக்குமே!" என்று என் வீட்டம்மாவிடம் சொன்னாராம்! என் சேகரத்தில் வேறு கதைப் புத்தகங்களை எடுத்துப் போனவர், இந்தப் புத்தகத்தைத் தொட்டு ஒரு நாலு பக்கங்களைப் புரட்டியாவது பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து,ஆனந்தவிகடனில் தொடராக வந்ததை எடுத்து கவனமாக பைண்ட் செய்யப் பட்ட வடிவத்தில், திரு கோபுலு வரைந்த ஓவியங்களோடு தில்லானா மோகனாம்பாள் கதையை நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். ஏ பி நாகராஜன் தயாரிப்பில் தில்லானா மோகனாம்பாள் படம் வந்த தருணத்தில், நூலகத்தில் புத்தகத்தை தேடியெடுத்து மறுபடி வாசித்திருக்கிறேன். இப்போது மறுபடியும்..!
புத்தகங்களை வாசிக்கும்போது, நம்முடைய முன்கூட்டிய முடிவுகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஆசிரியர் என்ன கருத்தைச் சொல்ல வருகிறார், எப்படிப் பட்ட கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குத் தகுந்த மாதிரிப் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் என்பதை ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தோம் என்றால் எப்படிப் பட்ட புத்தகமும் அலுக்காது, போரடிக்காது, பயமுறுத்தாது!
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,தோல்ஸ்தாய் எழுதிய அன்னா கரீனினா புத்தகத்தை என்னுடைய பள்ளிப் பருவத்தில் தமிழில் படித்திருக்கிறேன். ஆரம்பத்தில் ரஷ்யப் பெயர்கள் கொஞ்சம் மிரட்டின என்றால், அந்தக் கதையில் நூற்றுக் கணக்கான பிரதான பாத்திரங்கள், அப்புறம் கொஞ்சம் துணைப் பாத்திரங்கள் என்று கதையில் வருகிறவர்களை நினைவு வைத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கும்போது, கதையோட்டத்தைப் புரிந்துகொள்வது எப்படி? ஆனால் புத்தகம் படிப்பதில் இருந்த ருசியில், இந்த மாதிரி விஷயங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தோன்றியதே இல்லை. இந்தக் கதையை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்று சொல்ல முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, இதையும் மறு வாசிப்புக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர ஒரு வாசகனாக என்ன செய்து விட முடியும்?
மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! ஒரு காவியத்துக்குள் எத்தனை ஆயிரம் கிளைக் கதைகள்! எத்தனை ஆயிரம் கதா பாத்திரங்கள்! ஒன்றோடொன்று இணைந்து எத்தனை ஆயிரம் உணர்வுகள், கருத்துக்கள் இந்தக் காவியத்தின் மூலமாக வெளிப் படுத்தப் பட்டன என்பதைப் பார்த்தோமானால், புத்தகங்களின் பக்க எண்ணிக்கை, காலச் சூழ்நிலை எல்லாம் தொடக்க நிலையில் கொஞ்சம் மயக்கத்தை உண்டு பண்ணினாலும், படிக்க ஆரம்பித்து விட்டோமென்றால் வருகிற மயக்கமே வேறு!
தஞ்சை மண்ணுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. கலைஞர்களும், கலையை ரசிக்கத் தெரிந்தவர்களும் வாழ்ந்த மண் அது. ஆடும் கலையானாலும், ஆட்டுவிக்கும் இசைக் கலையானாலும், இரண்டையும் ஆதரிக்கும் ரசிப்புத் தன்மையானாலும் சரி, தஞ்சை மண் மற்றப் பகுதிகளை விட ஒரு படி மேலாகவே இருந்த காலத்தைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு துவங்கும் புதினம் தில்லானா மோகனாம்பாள்.
இன்றைக்கு எண்பது தொண்ணூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த காலம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே!
நாதமே தங்களுடைய உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இசை வேளாளர்களைப் பற்றி, நாட்டியக் கலையைத் திருவாரூர் தியாகராசனுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த தாசிகள், தேவரடியார்கள் என்றழைக்கப் பட்ட ஆடல்கலைஞர்களைப் பற்றித் தமிழில் இந்த அளவுக்கு அற்புதமான ஒரு புனைவு, சொற்சித்திரம் வேறு ஒன்று இன்று வரை வந்ததே இல்லை. ஆடலும், நாதசுரமும் இருவேறு கலைகள் என்று தான் தோன்றும்! தங்களுடைய கலைத் திறமையை இறைவனுக்கே அர்ப்பணித்து அந்தக் கலையைத் தங்களுடைய உயிருக்கும் மேலாக மதித்து வாழும் இரண்டு கலைஞர்கள், ஒருவருடைய கலைத் திறமை இன்னொருவரை ஈர்த்துக் காதல், கல்யாணத்தில் கொண்டு விடுகிறது. தங்களுடைய கலையை உயர்வாக என்னும் குணம் கொஞ்சம் மோதலையும் தோற்றுவிக்கிறது.
கலையை மதிக்கத் தெரிந்தவர்கள் நாலு பேர் இருந்தால் ஒரு துளி விஷம் கலக்கிற மாதிரி, கலையைத் துச்சமாக எண்ணுகிற மனிதர்கள், சபையில் நடனமாடுகிறவள் என்றால் தங்களோடு அந்தரங்கத்தில் வேறுவிதமாகவும் ஆடவேண்டுமென்று சபலப் படுகிற ஒன்றிரண்டு பேராவது இருக்க வேண்டுமே! இருக்கிறார்கள்!
இப்படி சிக்கல் ஷண்முக சுந்தரம் என்ற நாதசுரக் கலைஞன், திருவாரூர் மோகனாங்கி என்ற நாட்டியக்காரி இருவரும் ஒருவரது கலையை ஒருவர் அதிசயித்து ஆசை கொண்டு அப்படியே தங்களை அறியாமல் காதல் வசப் படுகிறார்கள். நாகலிங்கம் என்று நாகப் பாம்பாகத் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் காலைச் சுற்றும் வெறும் சாரைப் பாம்பு தான், சிங்கபுரம் மைனர் - காசிருந்தால் எதுவும் வரும், எவளும் வருவாள் என்று நம்புகிற அப்பாவி, ஒரே ஒருதரம் சறுக்கி விழத் தெரிந்து திருந்தும் மனிதர், சவடால் வைத்தி என்ற பிரகிருதி, ஏமாறத் தயாராக ஜனங்கள் இருக்கும்போது எதற்காகத் திருட வேண்டும் என்று ஒரு கொள்கைப் பிடிப்புடன், எவரை வேண்டுமானாலும் தன்னுடைய சவடால் பேச்சினால் ஏமாற்றிக் கவிழ்க்கத் தெரிந்த மனிதர், நல்லவள்தான், ஆனால் தன்னுடைய மகள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும், இளமையும் அழகும் இருக்கும்போதே நாலு பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் காசு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிற மோகனாவின் தாய் வடிவு, பரமானந்தப் பரதேசி- காவியணிந்த பரதேசி தான் என்றாலும், ஆடல் கலை, சங்கீதம் இரண்டின் மீதும் அளப்பரிய காதல் கொண்ட விந்தைப் பரதேசி, ஜில்ஜில் ரமாமணி-நாகலிங்கத்தின் ஆசைநாயகியாக வாழ்ந்தவள், அவளும் ஒரு நாட்டியக் காரிதான், மதன்பூர் மகாராஜா- பழைய சமஸ்தானாபதிகளுக்கே உண்டான பகட்டும் போலிக் கௌரவமும் கொண்ட வீம்பு பிடித்த மனிதர் இப்படி வரிசையாக மோகனா-சண்முகசுந்தரம் இவருடைய வாழ்க்கையில் குறுக்கே வருகிறார்கள்.
கதை மோகனா-சண்முகசுந்தரம் இருவருடைய காதலோடு மட்டும் நகருவதில்லை! அன்றைக்குத் தஞ்சை மண்ணில் இசைக்கும், நாட்டியத்துக்கும் இருந்த மரியாதை, தங்களிடமிருக்கும் கலை ஆடிய பாதமாக திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட வேண்டியது என்ற உணர்வோடு போற்றிப் பாதுகாத்த இசை வேளாளர்கள் வாழ்க்கையைத் தொட்டும் நகருகிறது.
இந்தப் புதினத்தின் ஜீவனை, இதைத் திரைப்படமாக எடுத்த ஏ பி நாகராஜன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அல்லது, கதை வடிவமாகப் பார்க்கும்போது உயர்ந்த கோபுரமாகத் தெரிகிற ஒன்றைக் காமெரா வழியாகப் பார்க்க முடிகிற அளவு கம்மிதானோ என்னவோ!
சிவாஜியின் மிகைப் படுத்தப்பட்ட நடிப்பும், பத்மினிப் பாட்டியும் இந்தப் படத்தின் மைனஸ் பாயிண்டாகத் தான் இருந்தார்கள்.
கதையில் படித்த படி, கொஞ்சம் உயிரோட்டமாகப் படத்தில் பார்க்க முடிந்தது சவடால் வைத்தி பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த நாகேஷ், ஜில் ஜில் ரமாமணியாக வந்து ஒரு கலக்குக் கலக்கிய மனோரமா இருவரும் தான்! அவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வி தான்.
இரண்டு ஹிட் கொடுத்தவுடன் இங்கே கதாநாயகனுக்கு முதல் அமைச்சராகும் கனவு வந்து விடுகிறது! திரைப்படத்தில் நாட்டாமையாகவும், வீரப் பிரதாபனாகவும் விஜயகுமாரனாகவும் வேஷம் கட்டியவுடனேயே நடிகனுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மிரட்டுகிற அளவுக்கு, இன்றைய அரசியல் தரம் தாழ்ந்துபோயிருக்கிறது. கலைஞர்கள் அதைவிடத் தாழ்ந்து போயிருக்கிறார்கள்!
நல்ல கலைஞர்கள், ரசிகர்கள் அந்த நாட்களில் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது, இந்தப் புதினத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று பலமான சிபாரிசு செய்கிறேன்!
திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கலைமணி என்ற புனை பெயரில் அன்றைக்கு எழுதிய ஆரம்ப வரிகளை ஒரு சாம்பிளுக்காக-...........
எப்படி இன்றைக்கும் சுவாரசியம் குறையாமல் இருக்கிறது என்பதைத் தொட்டுக் காட்டுவதற்காக.......
"கடவுள் ஆண் பிள்ளையை முதலில் படைத்தாரா, அல்லது பெண்ணை முதலில் படைத்தாரா?" என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டதால் எனது நண்பர் பேராசிரியர் தில்லைநாயகம் அவர்களிடம் இதைப் பற்றி ஆராய்ந்தேன். அவர் பின்வருமாறு கூறினார்.
"கடவுள் ஆணைத்தான் முதலில் படைத்தார். ஆண்மகன் புதிதாகப் பிறந்த காளங்கன்று போல் துள்ளி விளையாடினான். அவன் உடலில் வலிமையையும், உள்ளத்தில் வீரமும், நடையில் அழகும், செயலில் கம்பீரமும், ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன. சிங்கம், புலி, கரடி ஆகிய எல்லாவற்றையும் மனிதன் அடக்கினான். மலையைப் புரட்டினான். மரத்தை வெட்டினான். கடலில் நீந்தினான். கப்பல் விட்டான். இவ்வாறு நாளாக நாளாக, அவன் வீரம் வளர்ந்து வரவே, அவனை எதிர்ப்பார் யாருமின்றி உலாவத் தொடங்கினான். உலாவினான், உலாவினான், உலாவினான், வேறென்ன செய்வது? வாழ்க்கை சலித்து விட்டது. வெறும் வீரத்தில் அவனுக்கு இன்பம் இல்லை."நம்மை யாராவது அடக்க மாட்டார்களா?" என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.அவனை அடக்குவார் உலகில் ஒருவருமே இல்லை என்றால் மனிதன் உயிரை விட்டு விடக் கூடத் துணிந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கடவுள் கையிலே ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு மனதில் தியானித்தார். வீராதி வீரர்களையெல்லாம் அடக்கும் ஒரு பிறவி இதில் பிறக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் கையிலிருந்து ஒரு பெண் குதித்தாள். கடவுளுக்கே அந்த வ்யக்தியைப் பார்த்ததும் தலை சுழன்றது. சற்று நேரம் சிந்தனை செய்து மனத்தை அடக்கிக் கொண்டு, "உன் பெயர் பெண். போ, ஆணுக்கு எதிரே போய் நில்" என்றார். மதோன்மத்தனாகத் திரிந்த ஆணின் முன் பெண் வந்து நின்றாள். ஆண்மகனைத் தன் கண்களால் ஒரு முறை பார்த்தாள். ஒரே ஒரு முறை தான் பார்த்தாள்.அந்தப் பார்வையிலேயே ஆண் மகனின் வீரம் தீரமெல்லாம் விடைபெற்றுக் கொண்டன. மயங்கி வீழ்ந்தான். அப்போது வீழ்ந்தவன், வீழ்ந்தவன்தான். இன்னும் அவன் எழுந்திருக்கவே இல்லை.
"இந்த முடிவுக்கு நன் வருவதற்குக் காரணமாயிருந்தது வெறும் ஆராய்ச்சியல்ல.........தில்லானா மோகனாம்பாளின் திவ்ய சௌந்தர்யம் தான் காரணம்." என்றார் தில்லைநாயகம்.
"ஐயா, உமது கண்களுக்கு அழகாகத் தோன்றும் ஒன்று எனது அவ நம்பிக்கை பிடித்த கண்களுக்கு அழகில்லாமல் தோன்றலாம். இருந்தாலும், அந்த மோகனாம்பாள் எங்காவது நாட்டியம் செய்தால் எனக்கும் சொல்லுங்கள்." என்றேன் நான்.
தில்லைநாயகம் பெருமூச்சு விட்டார்.
"சில கலைஞர்களுக்கு புத்தியும் வித்தையும் இருந்தாலே போதும். சங்கீதம், நாட்டியம் போன்ற காந்தர்வ வித்தைக் கலைஞர்களுக்கோ, இவைகளோடு கூட பூர்வ புண்ணியமும் நிறைய வேண்டியிருக்கிறது. அழகும், அமைப்பும், சரீரமும், சாரீரமும் நாமாக உண்டாக்கிக் கொள்பவை அல்ல. ஆண்டவன் அருளால் தான் கிடைக்க வேண்டும். அந்த ஆண்டவனோ, ஒரு நல்லதைக் கொடுத்தால் கூடவே பத்துக் கெடுதல்களையும் கொடுத்து விடுகிறார். அப்படி இல்லையென்றால், அந்த அபூர்வ சிருஷ்டியைப் போட்டு ஆட்டி அலைக்கழித்து காட்டி மறைத்து விடுகிறார்........
"மோகனாம்பாள் அத்தகைய பிறவிகளுள் ஒருத்தி. பற்றற்று வாழும் எனக்கே அந்தப் பெண்ணின் நினைவு ஒரு பாரமாக இருக்கிறதென்றால் அவளிடம் ஏதோ ஒரு சக்தி இருந்திருக்கத் தானே வேண்டும்?"
"அவள் யார், எந்த ஊர், அவள் வரலாறு என்ன? விவரமாய்ச் சொல்லுங்கள்" என்றேன் நான்.
ஸ்ரீ தில்லைநாயகம் அவர்கள் இந்தச் சரித்திரத்தை எனக்குச் சொல்லிப் பல வருஷங்களாய் விட்டன. இன்னும் அது என் மனத்தை விட்டு அகலவில்லை. இப்பொழுது நினைத்தாலும் பசுமையாகவே காட்சி அளிக்கிறது. அப்பேர்ப்பட்ட தில்லானா மோகனாம்பாளின் கதையைத் தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்....."
தில்லானா மோகனாம்பாள்
கலைமணி (எ) கொத்தமங்கலம் சுப்பு
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
மூன்றாம் பதிப்பு, விலை ரூ.250/-
மார்க்கெட்டிங் துறையில் நாங்கள் பெரும்பாலும் சவடால் வைத்திகளாக தானிருக்கிறோம்.
ReplyDeleteகதையை பற்றி அருமையாய் எழுதிருக்கீங்க.
கதை வடிவமான நாவலை பற்றி இன்னும் நிறைய எழுதிருந்தால் என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் ....
சினிமாவில் நாகேஷ் கதாபாத்திரம் மற்றவர்களின் நடிப்பினால் கொஞ்சம் மங்கி போனதுபோல் எனக்கு தோன்றியது.....
ஆனா எனக்கு அந்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாவலில் எப்புடி எழுதபட்டிருக்கோ எனக்கு தெரியல.
அது சரி சார் ....இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ரூபாய் 250 தானா ???
படிப்பதற்கு சுவையாக உள்ளது என்று சொல்வார்களே.. அதற்கு அர்த்தம் இந்த கட்டுரையில் காண முடிகிறது..
ReplyDeleteடம்பி மேவீ said...
ReplyDeleteமார்க்கெட்டிங் துறையில் நாங்கள் பெரும்பாலும் சவடால் வைத்திகளாக தானிருக்கிறோம்.
மேவீ! என்ன இது ஒப்புதல் வாக்குமூலமா?!
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பார்த்திருந்தீர்கள் என்றால், ஒரிஜினல் கதை எப்படி மிக நுணுக்கமாக, ஒரிஜினலாகவே இருந்தது என்பதை வாசிக்க ஆரம்பிக்கும்போதே புரிந்து விடும்!
திரைப்படத்தில் வைத்தி காரக்டரை நாகேஷ் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது மாதிரி வேறு எவரும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. " இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ?!" இந்த ஒரு வசனம் வேறு எவர் பேசி நடித்திருந்தாலும் கவனிக்கப் படாமலேயே போயிருக்கும்! நடிப்பில் பாலையாவும் தூள் கிளப்பியிருந்தாலும் கூட, ஒரிஜினல் கதையில் வரும் முத்துராக்கு பாத்திரத்தின் தன்மை வேறு. AVM ராஜன், சாரங்கபாணி பாத்திரங்கள் எல்லாம் திரைப்படத்தில் சேர்க்கப் பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங். ஜில் ஜில் ரமாமணி பாத்திரம், கதையில் இன்னமும் நன்றாகப் படைக்கப் பட்ட ஒன்று!
அன்றைய தஞ்சை மண்ணின் குணத்தை, இசைவேளாளர்கள் வாழ்ந்த விதத்தை கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடைய எழுத்து நடையிலேயே படிக்க முடிந்தால், உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியும்!
இரண்டு தொகுதிகளும் சேர்ந்து இருநூற்றைம்பது ரூபாய் தான்! வாங்கிப் படிக்க வேண்டியது தானே!
வாருங்கள் பிரசன்னா!
ReplyDeleteகட்டு+உரை என்று வைத்துக் கொண்டால், பொய்யாக, புனைந்து சொல்லப்பட்டது என்ற ஒரு பொருளும் உண்டு, தெரியுமோ?
இதை ஒரு வாசகனின் வாசிப்பில் எழுந்த அனுபவம், உணர்வுகள் என்ற வகையில் மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டு வருகிறேன். கட்டுரை எழுதி சமர்ப்பிக்கும் அளவுக்கு எனக்குத் திறமையில்லை!
இந்தக் கதையை, நம்முடைய மிகச் சமீப காலத்தில் வாழ்ந்த, இன்றைக்குப் பார்க்க மிகவும் அரிதான நல்ல கலைஞர்களைப் பற்றிய மிகச் சிறந்த ரெபரென்ஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக நாதசுரங்களில் திமிரி, பாரி வகை நாயனங்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் பாரி வகை நாயனனம் திருவாரூர் தியாகேசன் சன்னதிக்கு முன்பு மட்டுமே வாசிக்கக் கூடிய வாத்தியமாக இருந்தது, சோழர்கள் காலத்தில் இருந்து வந்த கலைமரபைத் தொடர்ந்து காப்பாற்றி வந்த இசை வேளாளர்களைப் பற்றி, நாட்டியக் கலைஞர்களைப் பற்றி இந்த அளவுக்கு விரிவாகப் பேசிய கதை வேறொன்று இல்லை.
உங்கள் பதிவை படிக்கும்போது பள்ளிவயதில்,கலைமணி எழுதிய அந்த ஆனந்தவிகடன் தொகுப்பை கோபுல வின் படங்களுடன்
ReplyDeleteபடித்து படித்து மாய்த்து போனது நினைவுக்குவருகிறது.
இதே போல மற்றொரு நாவல் பந்தநல்லூர் பாமா - அதே கோபுலவின் சித்திரங்களுடன் .
கலைமணியின் ராவ் பகதூர் சிங்காரம் -கோபுலு வின் படங்களுடன் படிக்க படிக்க சலிக்காத படைப்புக்கள்.
A,P. நாகராஜன் இதனை "விளையாட்டு பிள்ளை " படமாக எடுத்து அப்போதே 'வாங்கி கட்டிகொண்டதும் '
நினைவுக்கு வருகிது. அவரைச்சொல்லி என்ன ?
கலைமணியின் நாவல்களும் கோபுலுவின் சித்திரங்களும் படிப்பவர்களிடம் உண்டாகிய வித வித மான தாக்கங்களை
அதன் திரைப்படங்கள் தரவில்லை என்பது உண்மைதான்.
பழைய தமிழ் படைப்புக்களை படிக்காமல், அவைகளை அறியாமல் "நவீனத்துவம் " பேசும் கசடர்களுக்கு இப்போது
கிடைக்கும் விளம்பரமும், பணமும், வாழ்கை வசதிகளும் ஏராளம்தான்.
வாருங்கள் மாணிக்கம்!
ReplyDeleteதில்லானா மோகனாம்பாளை, ராவ்பகதூர் சிங்காரத்தைப் படமெடுத்தது கூடத் தப்பில்லை! கதையின் ஜீவன் என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே, திரைக்கதையைத் தான் சௌகரியத்துக்கு மாற்றிக் கொண்டது தான் ஏ பி நாகராஜன் செய்த மிகப்பெரிய தவறு.
சிவாஜியும், பத்மினிப்பாட்டியும் அந்தத் தப்பைத் தங்களுடைய மிகை நடிப்பால் இன்னும் கோரமாக்கினார்கள் என்று தான் எனக்கு இன்னமும் தோன்றுகிறது.படத்தில் நாகேஷ் மனோரமா இருவருடைய பங்கைக் கழித்து விட்டுப் பார்த்தால், படம் அப்போதே பெரும் தோல்வியைத் தான் தழுவியிருக்கும்.
கொத்தமங்கலம் சுப்புவின் படைப்புக்கு மட்டும் தான் இப்படி ஆகிப்போனது என்று சொல்ல முடியாது. திரைப்படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ வந்த பல கதைகளும் இதே மாதிரி, கதையாகப் படித்தபோது கிடைத்த அனுபவத்தை, திரையில் கொண்டுவர முடியவில்லை என்பதையும் பார்க்க முடியும்.
எழுத்தில் படிக்கும் அதே உணர்வை, விஷுவலாகத் திரைப்படத்தில் பார்க்கும் போது கொண்டுவர நம்மவர்கள் அதிகமாக உழைப்பதில்லை என்பது தான் முதல் காரணம். இரண்டு வடிவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமலேயே எடுக்கப்படும் திரைக்கதைக்கான ட்ரீட்மென்ட் கூட இந்த மாதிரி முயற்சி தோல்வியடைவதற்கான காரணம் என்று தோன்றுகிறது.
உங்களின் கலந்தாய்வு எனக்கும் மிக சரியாகவே இருப்பதை உணர்கின்றேன்.
ReplyDeleteதி.ஜ. ரா .வின் மோக முள்ளை படித்துவிட்டு சுமார் ஒரு வாரம் ஏதோ இனம் புரியாத உலகில் சஞ்சரித்தவன் கலூரி நாட்களில். கதை களமும் காவிரியும் ,கும்பகோணமாகி போனதால். அவரும் கும்பகோணதுக்காரர்தானே!!
ஆனால் பல வருடங்களுக்குப்பிறகு மோக முள் திரைப்படமாக வநத போது அதை பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அமைந்த அல்லது பிடித்தமான ஒரு கற்பித கொள்கைகளை அல்லது தனது சொந்த உலகத்தில் அமைந்த கண்ணோட்டங்களில் கதைகளில் ஆழ்ந்து விடுவதால் எந்த ஒரு சினிமா விற்பன்னரும் அவைகளை திரையில் முழுமையாக கொண்டுவர முடியாது.என்னதான் வியாபார, விளம்பர ,தனிநபர் வழிபாடு போன்ற வழக்கமான சினிமா தனங்கள் இல்லாமல் படைத்தலும் அது முழுமையாவதில்லை.
எனகென்னவோ நம்மவர்கள் நாவல்களை படமாக்குவதில் துளியும் இஷ்டமில்லை.
பழைய காகித மனம் வீசும் நாவல்கள் தரும் சுகம் திரைகளில் நிச்சயம் கிடைக்காது.
நமக்கும் அதுபோன்ற திரைப்படங்களை பார்க்காமல் இருப்பதே நிம்மதி. ஆனால் இப்படி நடப்பதில்லை.
"என்னதான் பண்ணிவைதுள்ளார்கள் பார்க்கலாம் "
என்ற துடிப்பில் பார்த்துவிட்டு பின்னர் நோட்டை நொள்ளை என்று. வேறு வழி?
மோகமுள்ளை ஒரு ஆர்வத்தோடு தான் ராஜ சேகர் தயாரித்தார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்தக் கதையின் மையமே, தஞ்சை மண்ணிற்கே உரித்தான இசையார்வம், கதாநாயகனின் தந்தை அவனை சங்கீதத்தில் தேர்ச்சி உள்ளவனாகப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை, அதைத் தொட்டு வரும் ரங்கண்ணா பாத்திரம் முதற்கொண்டு, பாபு சந்திக்கிற மராத்திப் பாடகர்கள் என்று இசையை மட்டுமே மையமாகக் கொண்டது. அதைத் திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை.
ReplyDeleteபார்த்திபன் கனவு! கல்கியின் இந்தக் கதையை ஜுபிடர் பிக்சர்ஸ் நல்ல முறையில் தான் படமாக்கி இருந்தார்கள் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அனேகமாக, நாவலில் வருகிற அதே வசனத்தை அப்படியே கையாண்ட ஒரே திரைப்படமாக இதுதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், ஆனாலும் படம் படுத்துக் கொண்டது. சிவனடியார் தான் நரசிம்ம பல்லவர் என்ற நாவலின் சஸ்பென்சைத் திரைப்படத்தில் தக்கவைத்துக் கொள்ள முடியாமல், படம் தோல்வியைத் தழுவியதாகச் சொல்வார்கள். அது உண்மையான காரணமில்லை என்றே எனக்குப் படுகிறது.
தூர்தர்ஷன் பொதிகையில், சில புதினங்களை அருமையாகத் தொலைக்காட்சித் தொடராகப் படித்ததும் நடந்தது. அகிலனின் சித்திரப்பாவை உள்ளிட்டு, பதின்மூன்றே எபிசோடுகளில் கதையின் ஜீவனைச் சிதைக்காமல் கொண்டு வர முடிந்த விந்தையையும் பார்த்திருக்கிறேன்.
ஒய் ஜி மகேந்திராவின் நடிப்பில், துப்பறியும் சாம்பு சொதப்பல் சாம்புவாகிப் போனதையும் பார்த்திருக்கிறேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், நாகேஷை வைத்து, துப்பறியும் சாம்பு கதைகளை வைத்து எடுக்கப்பட்ட காமெடி ட்ராக் சொதப்பலாகிப் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு ஊடகமும் தனித்தன்மை கொண்டது. கொஞ்சம் கடின உழைப்பு, முயற்சி இல்லாவிட்டால் பொருந்தாது. Guns of Navarone கதையையும், அதன் திரைப்பட வடிவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
பகிர்தலுக்கு நன்றி. Guns of Navarone படம் நீண்ட நாட்களுக்கு முன்பு பார்த்தது. ஆனால் அதன் நாவலை படித்ததில்லை.
ReplyDeleteஒரு மாறுதலுக்காக, அந்த நாவல் மறுபடியும் படித்து விட்டு படம் பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.
அவசியம் பாருங்கள்! கதையையும் படியுங்கள்! கிரெகோரி பெக், அந்தோணி க்வின் ரசிகனாக என்னை மாற்றிய படம் அது!
ReplyDeleteதிரைக் கதையை, மூலக் கதையை எந்த அளவுக்கு முடிந்தவரை சிதைக்காமல், மாற்றாமல் எடுத்திருந்தார்கள், எவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டார்கள் என்பதைத் திரைப்படத்திலும், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னணியில், நடக்காத சம்பவத்தை, ஒரு கற்பனைத் தீவு, பாத்திரங்களை வைத்து அலிஸ்டைர் மக்லீன் எப்படிக் கதை பின்னினார் என்பதைக் கதையிலும் கவனித்தால் அவ்வளவு ஆச்சரியப்படுவீர்கள்!
// பார்த்திபன் கனவு! கல்கியின் இந்தக் கதையை ஜுபிடர் பிக்சர்ஸ் நல்ல முறையில் தான் படமாக்கி இருந்தார்கள் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அனேகமாக, நாவலில் வருகிற அதே வசனத்தை அப்படியே கையாண்ட ஒரே திரைப்படமாக இதுதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், //
ReplyDelete----கிருஷ்ணமூர்த்தி said...
இது முற்றிலும் உண்மைதான். வழக்கம்போல நாவலை படித்து பரவசமடைந்தாகிவிட்டது.
ஆனால் திரையில் பார்க்கவில்லை. 1980 ஆம் வருடம் என்று நினைவு, சென்னை தூர்தர்ஷனில் ஒரு ஞாயிறு
மாலையில் அந்த படத்தை போட்டார்கள். நினைவில் இருந்த அதே கல்கியின் கதை வரிகள் வசனமாய் வந்தது நினைவுள்ளது.சக்ரவர்த்தியும் இளவரசியும் தந்தை மகள் என்ற பேதமில்லாமல் ஒருவரை ஒருவர் நட்புடன் கிண்டல் செய்துகொள்ளும் அதே வசன வரிகள். ஆனால் நாவலைப்போலவே படமும் எனக்கு பிடித்திருந்தது.
தில்லானா மோகனாம்பாள் கதையை படித்து விட்டு படம் பார்த்தவுடன் எதையோ இழந்தது போல் இருந்தது,எனக்கு. அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை..அந்த பிரம்மாண்டம் என்னை பயமுறுத்தியது போலும்..ஆனால் விளையாட்டுப் பிள்ளை நல்ல வேளையாய் பார்க்க வில்லை..அதனால், ராவ் பகதூர் சிங்காரம் கேரக்டர்ஸ் அந்த சிங்காரம்,செங்கமலம்,கவாய் வேலுச்சாமி,பஃபூன் பஞ்சு,பட்டாமணியம் தர்மலிங்கம் போன்றோர் பசுமையாய் மனதில் நிற்கின்றார்கள்..
ReplyDeleteஇதை என்னுடன் படித்துக் கொண்டிருந்த என் பெண் சொன்னாள்..”எனக்கும் இதே உணர்வு தான்..’ஹேரி பார்ட்டர்’ கதையை படித்து அதை ‘விஷுவலில்’ அதாவது ஒளிபரப்பில் பார்த்தால் ஏமாற்றம் தான்”
ReplyDeleteவேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தேன்..பேனா கொடுக்கும் பிருமாண்டத்தை காமிராவால் கொடுக்க முடியாது..அதிலிருந்து கிடைப்பது ‘மினியேச்சர்’ தான்!
பாருங்களேன்.. ‘ நரசிம்மம் ஹிரண்ய கசிபுவைக் கொல்ல அந்த தூணைப் பிளந்து கொண்டு வானுக்கும், பூமிக்குமாய் எழுந்து நின்றது என்பதை ஒரு சாதாரண பேனா சொல்வது போல் கேமிராவினால் அவ்வளவு ’பர்ஃபெக்ட்’ ஆக சொல்ல முடியுமா?
மேலும் கதாபாத்திரங்களை சிருஷ்டி பண்ணிய அந்த கர்த்தாவே ‘டைரக்ட்’ பண்ணினால் கூட அவருடைய அந்த எதிபார்ப்பை..அவரிடம் வாசகனுக்குள்ள எதிபார்ப்பை நூறு சதவீதம் அவராலேயே கொடுப்பது என்பது அசாத்யம் தான்!வேறொருவரிடம் அதை அவ்வளவு துல்லியமாய் எப்படி எதிர்பார்க்க முடியும்?
‘தில்லானா மோகனாம்பாளி’ல் பணத்துக்காகத் தான் நடிகர்கள் நடித்தார்கள் என்றாலும் ஒரு அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் தான் ஓரளவாவது கொடுக்க முடியும்? இதில் பாலையா சிரத்தை எடுத்துக் கொண்டு செய்தார் என்று கேள்வி...
கடைசியாக ஒன்று! அது என்ன எழுதும் போதெல்லாம் பத்மினி பாட்டி என்று எழுதுகிறீர்கள்..உங்களுடைய விருப்பமின்மையை..வெறுப்பை..படிப்பவன் மேல் அனாவஸ்யமாய் திணிப்பது போல் ஆகி விடாதா அது?
ReplyDeleteநமது முதல் சந்திப்பிலேயே இவ்வளவு அதீத உரிமை தேவையா என்று தங்களுக்குத்
தோன்றினால் மன்னிக்க...
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
கட்டோகடைசியாய் ஒன்று..எந்த நாவலையும் அதை சிதைக்காமல் சினிமாவாக எடுக்க முடியாது..இதற்கும் செய்கூலொ..சேதாரம் எல்லாம் உண்டு..கூட்டிக் கழித்துப் பார்த்தால்,’சமைத்துப் பார்’ புஸ்தகத்தைப் படித்து டிஃபன் செய்வது போல் தான்!
ReplyDeleteநாவல் ஒரு DIMENSION சினிமா வேறோரு DIMENSION!!!
வருகைக்கும், வரிசையான கருத்துக்கும் நன்றி திரு ஆர் ஆர்!
ReplyDeleteமுதலில், பத்மினிப் பாட்டி.....! இந்தப்படம், திரைக் கதையைப் பொறுத்தவரை, பத்மினி பொருந்தாத, வயது மிகவும் முதிர்ந்த நடிகைதான்! நாட்டியமாடத் தெரியும் என்ற ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, இந்தப்படத்தைப் பொறுத்தவரை, பத்மினி ஒரு ப்ளஸ் பாயிண்டே அல்ல!இந்த ஒரு திரைப்படம் மட்டுமே இல்லை, பத்மினி தன்னுடைய வயது, வசனங்களை டெலிவரி செய்கிற விதம் இப்படி எதிலுமே பொருந்தாமல் கிழடுதட்டிப் போன நடிகையாக நிறையப் படங்களில் பார்க்கவேண்டிய கொடுமையைத் தமிழ் சினிமா பார்ப்பவர்கள் தாங்க வேண்டி வந்தது. இந்தப்பட்டியலில் பத்மினி மட்டுமே அல்ல, இன்னும் நிறையப்பேரை சேர்த்து சொல்ல முடியும்.
அடுத்ததாக, நாவல், திரைக்கதை வடிவங்கள் இரண்டுமே வேறு வேறுதான். இரண்டையும் ஒப்பிடுவதே சரியாக இருக்காது என்றாலும், திரைக்கதை வடிவமைப்பதில் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தால், மூலக்கதையைச் சிதைக்காமலாவது இருந்திருக்கலாம். தில்லானா மோகனாம்பாள் நாவல் எடுத்துக் கொள்கிற ஒரு முழுமையான களமே வேறு, திரைக்கதையில் ஏ பி நாகராஜன் எடுத்துக் கொண்ட வடிவமே வேறு! முதல் கோணல் அங்கே இருந்து ஆரம்பிக்கிறதென்றால், கதைக்குப் பொருத்தமான வயதுள்ள நடிகர்கள் தேர்வு அடுத்த கோணல்! இந்திய சினிமாக்களில், குறிப்பாகத் தமிழ் சினிமாவில் கிழடுதட்டிப் போன நடிகர்களை கதாநாயகர்களாக ஏற்றுக் கொள்கிற ரசிகர்களின் கிறுக்குத்தனம், ஸ்டார் வால்யூ!
தில்லானா மோகனாம்பாள் ஒரு பீரியட் படம் மட்டுமில்லை, அது சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முந்தியும் கூட, தஞ்சை மண்ணின் கலை ரசனை, ஜனங்களுடைய ஆர்வம் ஆதரவு எப்படி இருந்தது என்பதைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. கதையைப் படிக்கும் போது கிடைக்கும் முழுமையான சித்திரத்தை, தஞ்சை மண்ணின் ஜீவநாடியை ஏ பி நாகராஜன் உட்பட அந்தப்படத்தில் நடித்த எவருமே சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. விதிவிலக்கு, நாகேஷ், மனோரமா! பாலையாவின் பாத்திரம் கொஞ்சம் காமெடிக்காக சேர்க்கப்பட்டது, அந்த அளவில் அது நன்றாக இருந்தது என்பதைத் தவிர ஒட்டுமொத்தப் படத்துக்கும் அது எந்த வகையிலும் உதவவில்லை. இதே மாதிரித்தான், ராவ் பகதூர் சிங்காரம் நாவலை, இதே சிவாஜி-பத்மினி ஜோடியை வைத்து ஏ பி நாகராஜன் படமெடுத்தார். விளையாட்டுப் பிள்ளையாக சிவாஜியை ஜனங்கள் ரசிக்கவில்லை!
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நடிகர்களைத் தேர்வு செய்வதில் வித்தியாசமாகக் கையாண்டிருந்தால், நாவலும் திரைப்படமும் அதிக வித்தியாசமாக இருந்திருக்காது. இதைத் தொட்டு தான், முந்தைய பின்னூட்டத்தில் கன்ஸ் ஆப் நவரோன் திரைப்படம், நாவல் இரண்டையும் தொட்டு சொல்லியிருந்தேன்.