Thursday, January 28, 2010

எழுத்தும் விமரிசனமும் !



எப்படியிருந்த தமிழ்க் கதை உலகம் என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பேசியிருந்த பதிவு இது. "கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!"

பூவனம் வலைப் பதிவில் சென்ற ஆகஸ்ட் மாதம், எழுத்தாளர் ஜீவி விமரிசனக் கலையும், கதையின் கதையும் என்ற பதிவில் எழுத்தாளனைக் கதைசொல்லி என்று அழைக்கிறார்களே என்று ரொம்பவுமே ஆதங்கப்பட்டு எழுதியிருந்தார். அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு 'இதுவும் கடந்துபோகும்!' என்று சொன்னேன். அவருக்கு மனது ஆறவில்லை. ""காலங்கள் மாறும்"--இது சயின்ஸ் விதிதான்! இருந்தாலும் இப்பொழுதும் ராமராஜ்யத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?"

அப்போது கொஞ்சம் பற்றற்ற நிலையில் இருந்து பதில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுதியது இது!

"காலங்கள் மாறும் என்ற முழுமையான மாற்றத்தைச் சொல்வதில்லை இது-just a passing phase or passing cloud ஒரு நிலையில் இருந்து இன்னொரு திசைக்கு நகருகிற மாற்றத்தின் இடைப்பட்ட பகுதியாகப் பாருங்களேன்!

எந்தக் காலத்திலுமே கூட கலைஞனை, தகுதிக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினதும் உண்டு, கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்டு.ஜனங்கள் வெற்று ஆரவாரங்களில், ஒரு கலைஞனைத் தூக்கி நிறுத்தினார்கள், மற்றொருவனைத் தரையில் தேய்த்தார்கள்.

இத்தனையையும் மிஞ்சி நிற்பதில்தான் உண்மையான கலைஞனின் வெற்றி இருக்கிறது.அப்படிப்பட்ட கலைஞனைப் பிரித்து அடையாளம் கண்டுசொல்வதில் தான், நல்ல விமரிசகனின் வெற்றியுமே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நினைவில் நின்ற ஒரு பொற்காலத்தைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!

என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!"

கிருஷ்ண பிரபு  மோகமுள் புதினத்தை இப்போதுதான் படித்து விட்டுத்  தனது கண்ணோட்டத்தைச் சொல்லியிருக்கிறார்.

"மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன்."

"ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்." என்ற வார்த்தைகளைப் படித்தபோது, ஜீவி சார் ஆதங்கப்பட்டது போலவே எனக்கும் ஒரு ஆதங்கம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது எண்ணத்தைச் சொல்வது இப்படி:

மோகமுள் ——- தி.ஜானகிராமன்.


அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அகஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச்செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்கமுடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக்கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.

1956ல் பிரசுரமாயிற்று.


அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த ‘ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.

1967ல் பிரசுரமாயிற்று.

அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றி இன்னொரு விரிவான பதிவாக ஜெயமோகன் எழுதியது இங்கே!  ஒரு சின்ன மனவோட்டத்தைப் பற்றிப் போகிற போக்கில் தி.ஜானகிராமன் சொல்லிவிட்டுப் போகிற ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், ஃபிராய்டியன்  பாதிப்பு, காமம் கனிந்த அழகிய பெண்கள் என்ற வார்த்தைகளுக்குள், ஒரு படைப்பாளியை அடக்கிவிடத் துடிக்கிற மாதிரி இருக்கிறதே தவிர, ஒரு நேர்மையான விமரிசனமாக இல்லை என்பதோடு  கதை விரியும் தளங்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வீசப்படும் வெற்று வார்த்தைகளாகவே நின்று போய்விடுகின்றன!


மரபான தமிழ் ஒழுக்கவியலை என்னவோ தி.ஜா வந்து தான் கெடுத்து விட்டது போல இந்த வார்த்தை இருக்கிறது! சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் சொன்னதெல்லாம், தி.ஜானகிராமனை மட்டம் தட்ட வேண்டும்  என்ற ஒரே நினைப்பில் சௌகரியமாக மறந்து போய்விடுகிறது. மோகமுள்ளில் நாவலுக்கான விரிவும், தீவீர அக ஆராய்ச்சியும் இல்லையாம்!



இப்படித் தன் எழுத்தைத் தானே பாராட்டிக் கொள்ளும் ஒருவருடைய எழுத்தில் இருந்து  நல்ல எழுத்தைப்  பிரித்து அறிவது மிகவுமே கடினம். தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு அவதானிப்பு எனக்கு உண்டு என்று பீற்றிக் கொள்கிறவருக்கு, தி.ஜாவைப் பற்றி  ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

தி.ஜானகிராமன் என்ற தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளருக்கு, காஞ்சி மடத்தின் கடுமையான அனுஷ்டானம் என்ற போலித்தனத்தைச் சாடுகிற தெம்பு அந்த நாளிலேயே இருந்தது. காஞ்சிப்பெரியவர் என்றாலே எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி நின்ற அந்த நாட்களிலேயே அங்கே இருந்த ஆஷாடபூதித் தனத்தைச் சாடினவர் தி.ஜா!.  


இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சில  தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்கள், தி.ஜாவை வசைபாடியதை விட ஜெயமோகன்  அபத்தமாக உளறுவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை! மணியன் போன்றவர்களுக்குத் தாங்கள், காஞ்சி மடத்தின் காவலர்கள் என்ற மமதை, உள்நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக வியாபாரம் எல்லாம்  இருந்தது. ஜெயமோகன் மாதிரித் தற்பெருமையில் ஊறிய எழுத்தாளர்களுக்குத் தங்களுக்கு முன்னால் கொண்டாடப் பட்ட எழுத்தாளர்களைப் பற்றித் தப்பும் தவறுமாக இப்படி எதையாவது பேத்திக் கொண்டிருப்பது, ஒரு பிழைப்பாக இருக்கிறது.

இத்தனை குப்பையையும் கிளறுவதற்கு ஒரு காரணமிருக்கிறது.
தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசனம் செய்வது, இங்கே தமிழில் மிக எளிதாக இருக்கிறது. தங்களுக்குப் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது! இல்லையோ, தரையில் போட்டுத் தேய்ப்பது!

நல்ல எழுத்து, நல்ல வாசிப்பு என்பது வீணையும் மீட்டும் விரல்களும் சேருகிற மாதிரி! இனிமையான இசை அங்கே தான் பிறக்கும்!

ஜீவி சார் வேறோர் பதிவில் தி.ஜாவைப்  பற்றி இப்படி சொல்கிறார்!



"'சக்திவைத்திய'மும், 'சிவப்பு ரிக்க்ஷா'வும் சிறுகதைத் தொகுப்புகள்.


'சக்திவைத்திய'த்திற்கு சாகித்ய அகாடமி பரிசு தேடிவந்தது. பாத்திரப்படைப்புகளுக்கு உளவியல் காரணங்களை எடுத்துச்சொல்லி, அவர் உலவ விட்ட விதவிதமான மனிதர்களின் பால்  படிப்பவரின் பரிவைப் பொழியும்படிச் செய்த மிகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்கள். எல்லோரையும் தம் எழுத்திலும், வாழ்க்கையிலும் நேசித்த மனிதாபிமானி."


நல்ல வாசகனாக இருக்கும் சுகானுபவத்தைத் தமிழில் தர முடிந்த எழுத்தாளர்களில் தி.ஜானகிராமன் முதல் வரிசையில் இருக்கிறார்! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற, படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு புதிய அனுபவக் கிளர்ச்சியைத் தர வல்லதாக, படிக்கும்போதே பாத்திரங்களோடு அன்பில் ஒன்றிடச் செய்கிற விந்தையாக அவருடைய எழுத்து இருந்தது. அதனாலேயே, இன்றைக்கும் படித்தே ஆக வேண்டிய எழுத்தாகவும்  இருக்கிறது!


எது நல்ல எழுத்து என்ற என்னுடைய எண்ணவோட்டத்தை இங்கே நிறைவு செய்கிறேன்! அப்படித் தேடிப் பிடித்துப் படித்த எழுத்தாளர்களை, அவர்களுடைய படைப்புக்களைத் தொடர்ந்து இந்தப் பக்கங்களில்பார்ப்போம்!






Wednesday, January 27, 2010

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?


எது நல்ல எழுத்து என்று சொல்வதை விட எதுவெல்லாம் எழுத்து இல்லை என்று எளிதாகச் சொல்லிவிடலாம்!

அந்த அளவுக்கு, இப்போது எழுதிக் குவிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்! பெரும்பாலானவர்கள்,எழுதியதைப் படித்தார்களா, புரிந்து கொண்டார்களா என்பதே கூட சமயங்களில் தெரிந்துகொள்ள முடிவதில்லை, ஆனாலும் விமரிசனம் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்! நாலுபக்கம் கிறுக்கித் தள்ளியதுமே, புத்தகம் எழுதுகிற ஆசையும் வந்துவிடுகிறது! சிறுகதைப் பட்டறை, உரையாடல் பட்டறைக்குப் போய்வந்தால், உலக மகா எழுத்தாளனாகி விட்ட மாதிரி, ஒரு look வந்துவிடுகிறது பாருங்கள், அங்கே தான் செம காமெடி!

ஒரு வாசகனாக, வாசித்ததைக் கொஞ்சம் யோசித்து யோசித்து உள்வாங்கிக் கொள்வதில் இருக்கும் சுகத்தை அனுபவித்துப் பார்த்த பிறகே, கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணமே வந்தது. சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கொஞ்சம் நகாசு பண்ணி, மெலடியாக மெட்டமைத்துப் பாட்டுக் கேட்கும் பொது, நம்மையறியாமலேயே, மனம் ஒன்றிப்போய் நாமும் சேர்ந்து ஹம்மிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோமில்லையா, அதைப் போலத் தான் இதுவுமே என்று கூடத் தோன்றும்!

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?

கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் எழுத்தைப் பற்றிய கேள்விக்குமே  விடையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது!

பூவனம் வலைப்பதிவில் எழுத்தாளர் ஜீவி, தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜெயகாந்தன் என்று எழுத்தாளர்  ஜெயகாந்தனைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். முந்தைய பதிவிலுமே கூட இந்த வலைப்பதிவைத் தொட்டுத் தான் எழுத்து என்று ஒன்று பிறப்பது எப்போது என்ற கேள்வியை முன் வைத்திருந்தேன்.  

இந்தப் பதிவில் சிங்க(மாக) இருந்த ஜெயகாந்தன் என்று காவிரிமைந்தன்  என்ற பதிவர் ஜெயகாந்தனை வர்ணித்துவிட்டு, அதன் லிங்கையும் பூவனம் வலைப்பதிவில் "ஆனால் இப்போதுள்ள ஜெயகாந்தன் வேறு. முற்றிலும் மாறி விட்டார்" என்றும் விமரிசிக்கிறார். அதன் பின்னூட்டமாக ஜவஹர்லால் என்ற பதிவர் சொல்கிறார்:"நிச்சயம் ஜெயகாந்தன்தான். முரண்பாடுகளுக்குப் பெயர் போன அவர் செய்திருக்கும் இதுவும் முரண்பாடுதானே!"

வேறொரு பேட்டியில் ஜெயகாந்தன், அவரைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றி, சொன்னபதில் காவிரிமைந்தன், ஜவஹர்லால் போன்ற  விமரிசகர்களுக்குமே பொருத்தமான பதிலாகவும் இருக்கிறது! ஜெயகாந்தன், உயர்ந்து கம்பீரமாக நிற்கும் தருணம் இது என்றே நான்சொவேன்! 

 

"உங்கள் மீது மரியாதையும், நேசமும் வைத்திருக்கக்vகூடிய இடதுசாரி அமைப்புகள்,  உங்கள் மீது விமர்சனங்களையும்,  சில நேரங்களில்  ஆதங்கங்களையும்  வெளிப்படுத்தும் போது அவைகளை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? 
 
அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க முடியாது என்றுதான். நான்கூட அங்கே இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பேன். இந்த புரிதல் இருப்பதனால் அது என்னை பாதிப்பதில்லை. ஆனால் அவர்களை நான் பாதித்துக்கொண்டே இருப்பேன். அதுவே எங்கள் உறவின் ரகசியம். அப்புறம் கவனித்தீர்களா? 

அவர்கள் எல்லோரும் மாறிக் கொண்டே வருவதை. என் விஷயத்தில் கூட."

வெறும் கதைசொல்லி என்று ஒதுக்கிவிடமுடியாத ஆளுமை ஜெயகாந்தனுடையது!  தன்னுடைய சுயநலத்திற்காகப் பிரபலங்களின் நிழலில் நின்று கொண்டு தானும் பெரிய பருப்புத்தான் என்று சொல்ல முனைகிற எவனோ ஒரு crook வந்து கெடுத்துவிட முடியாத ஆளுமை ஜெயகாந்தனுடையது!

புதுச் செருப்பு கடிக்கும்! 1971 வாக்கில் வெளிவந்த சிறுகதை! 

அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.

" என்ன காலிலே?"  என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"
போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை  யாராவது வாங்குவாங்களாங்கோ?"

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்.

நந்தகோபால்! புதிதாகக் கல்யாணமானவன் அவன்.

அவனுடைய உணர்வுகளையோ, தவிப்பையோ புரிந்து கொள்ளாமல்திரும்பிப் படுத்துக் கொண்டு  தூங்குகிற மனைவி. முதுகில் இரண்டு அறை வைத்தால் என்ன என்ற நினைப்பின் ஊடேயே, இதே மாதிரித் தன்னுடைய தகப்பன் தாயை நடுராத்திரி, போட்டு மிதிப்பதும் , ஐயோ பாவி சண்டாளா என்று தாய் அழுதுகொண்டே திட்டத் திட்ட தகப்பன் அவளை மீண்டும் மீண்டும் அடிக்கிற காட்சியும், மறுநாள் காலை இருவருமே எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாக இருக்கிறமாதிரி நடிப்பதையும் தனது பதினைந்து வயது வரை பார்த்து அதிர்ந்ததும் நினைவு வருகிறது.

யாருக்கு வேண்டும் இந்த திருமணம், பந்தம் உறவு எல்லாம் என்று சலித்துக் கொள்கிறபோது, அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தூண்டிய  அந்த சைத்தான்-கிரிஜாவின் நினைவு வருகிறது.
சைத்தானைக் கட்டிக் கொண்டு வீட்டில் வைத்துக் கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று சொல்கிறேனே, அவளைப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான்.

கிரிஜா! இங்கிதம் தெரிந்தவள், இவனோடு குடித்தனமாகக் கொஞ்ச நாள் இருந்தவள். தொழிலாக இல்லாமல், நம்பிக்கை, தேவையின் அடிப்படையில் வேறு சிலரோடும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள். அவளோடு பேசிக் கொண்டிருந்தாலே மனதுக்கு இதமாக இருக்கும் அதற்காகத் தான், வேறு எதற்காகவுமில்லை என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டே கிரிஜாவின் வீட்டுக்குப் புறப்படுகிற பின்னணியில், இருவருக்கும் ஏற்பட்ட உறவை சுருக்கமாக சொல்கிறார் ஜெயகாந்தன். தன்னுடைய தாய், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதை, அவளிடம் சொல்லி, தன்னுடைய தயக்கத்தையும் பகிர்ந்து கொள்கிற சிநேகிதம், "அம்மாவை உங்க நயினா அடிச்சாருங்கிறதுக்காகவா கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க? நீங்க உங்க பொஞ்சாதியை அடிக்காம இருங்க." என்று கனிவோடு சொல்கிற இங்கிதம், உறவிலேயே, செல்லமாக வளர்க்கப் பட்ட பெண் ஒருத்தியை திருமணம் பேசியிருப்பதைச் சொல்லும்போது . அவள் மனத்துள் அவளே அறியாத வண்ணம் ஒரு  ஏமாற்றமும் வருத்தமும் இருந்தாலும், மனம் நிறைய அவனை சந்தோஷமாக வாழ்த்துகிற  காதலின் ஒரு புறமும் சொல்லப் படுகிறது.

திடீரென அவன் வந்து நின்றதில் ஒரு அதிர்ச்சி, உள்ளூர ஒரு சந்தோஷம். மண வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று அவனை விசாரிக்கிறாள்.
நந்தகோபால் தன்னுடைய மனைவி பாராமுகமாக இருப்பதையும், ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஒரே அழுகையும் பிடிவாதமுமாக இருப்பதையும் சொல்லி,
உன்னையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் என்று திரும்பத் திரும்ப அவன் மனைவி அவனைப் புறக்கணித்ததில் எழுந்த அவமானத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்.

அவனைத் தேற்றுகிறாள்! எப்படி!!

கல்யாணம்  ஆனதினாலேயே அவன் மனைவி, பாவம் சிறு பெண்  அவனுக்குச் சமமாகி விடுவாளா?  செல்லமாக வளர்ந்தவள், திடீரென்று ஊர்விட்டு வந்து, தனியாக..குழந்தைப் பெண்தானே? நீங்கள் அனுபவமுள்ளவர். அந்தப்பெண்ணுக்கோ எல்லாம் புதிது அல்லவா? ஆண் என்றாலே பயம், அருவருப்பு கூட   வருமே! நான் உங்களிடம் இயல்பாக இருந்தேன் என்றால், அதற்கு எக்ஸ்பீரியன்ஸ் தானே கரணம்! அதே எக்ஸ்பீரியன்ஸ் தானே  கல்யாணம் செய்து கொள்ள டிஸ்க்வாலிபிகேஷனுமாகவும் ஆகிப் போனது? உங்கள் மனைவியை விட நீங்கள் அனுபவஸ்தர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு,  அவள் குழந்தை என்று பொறுத்துப் போனால், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்.

அவள் பேசப் பேச, மனம் லேசாவதை அவன் உணர்கிறான். இவளைத் தேடி வந்தது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது?

கதை அவள் கால்விரல் புண்ணுக்கு செருப்புக் கடித்த காயத்திற்கு எண்ணெய் ஊற்றுவதில் திரும்புகிறது.

செருப்புக் கூடப் புதியதாக இருக்கும்போது கடிக்கிறது! அதற்காகப் பழைய செருப்பை யாராவது வாங்குவார்களா என்ன?

கிரிஜா சிரித்துக் கொண்டே தான் நந்தகோபாலிடம் கேட்கிறாள்! அவன் அவள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுவதோடு இந்தக் கதை முடிகிறது. அந்தக் கடைசிக் கட்ட உரையாடலைத் தான் முதலில்பார்த்தோம்!

கேள்வி இன்னமும் அப்படியே இருக்கிறது அல்லவா? எத்தனை தரம் படித்தாலும் இந்த கேள்வி
எதிரொலித்துக்  கொண்டே இருப்பதை நிறுத்த முடியவில்லையல்லவா!

அதுதான் ஜெயகாந்தன்! யோசிக்க வைக்கும் எழுத்து, நல்ல எழுத்து இதை விட வேறு என்ன இருக்க முடியும்?




ஜேகே என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜெயகாந்தன், தனக்கென்று எந்த ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முனைந்தவர்  இல்லை . உண்மையைச் சொல்லப் போனால், பிம்பங்களை உடைக்கிற மாதிரித் தான் அவருடைய புயல் வேகத்திலான எழுதும் காலம் இருந்திருக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் இயல்பைத் தன்னிடம் காண முடிந்த அளவுக்கு மற்றவர்களிடத்திலும் காண முடிந்து அதை ஏற்றுக் கொண்ட பக்குவம் அவரிடம் இருந்தது. அவருடைய உலகத்தைக் கண்டு மிரண்டவர்கள்ஏராளம்!

தான் ஜேகேயைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பம் உடைந்ததைப்  பற்றிய ஒரு  விமரிசனத்தை இங்கே கீற்று தளத்தில் வாசிக்கலாம்!


அலங்கார வார்த்தைகளின் அடுக்கு, எதுகை மோனை, எழுத்துச் சித்தர், கருத்துப் புத்தர் என்ற அடைமொழிகள் எதுவுமே இல்லாமல், காமத்தைத் துணைக்கழைத்துக் கொள்ளாமல், உபதேசம் செய்வது, ஊரை ஏமாற்றுவது இப்படி எந்த போலித்தனமுமில்லாமல், வாழ்க்கையின் நிதர்சனம், யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைகிற மாதிரி,

சொல்ல முடியுமானால் --

அது எழுத்து!





Saturday, January 23, 2010

எழுத்து, வாசிப்பு என்பது வெறும் வார்த்தைகளின் அடுக்கு மட்டும்அல்ல.



எழுத்து! இந்தப் பதிவைப் படித்த போது, எது எழுத்து, எழுத்து என்ன என்னவெல்லாம்  செய்யக் கூடியது என்ற சிந்தனைகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன. புத்தகக் கண்காட்சியைப் பற்றிய முந்தைய பதிவில்  ஒரு சக பதிவர் நான் சொன்னதைப் பற்றி கொஞ்சம் வருத்தப் பட்டிருந்ததுமே நினைவுக்கு வந்தது. தி.ஜானகிராமனை வாசிக்காதவர் வாசகரே இல்லை என்ற தொனியில் நான் எழுதியிருந்ததாக,  வலைப்பதிவுகளில் கிறுக்கிக் கொண்டிருப்பவர்களில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் கொண்டாடப்படும் எழுத்தாளர் எவரும் வரப்போவதில்லை என்று நான் நினைப்பது போல ரொம்பவுமே வருத்தப் பட்டிருந்தார்.

உண்மை என்னவென்றால், தி.ஜானகிராமனை நான் ஒரு வெறியோடு வாசித்திருக்கிறேன் என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிட வெறித்தனமாக நா.பார்த்தசாரதி, அகிலன், பி.வி.ஆர், ரா.கி.ரங்கராஜன், கண்ணதாசன், மு.மேத்தா, வைரமுத்து, வல்லிக் கண்ணன், அசோகமித்திரன், மௌனி, லா.ச.ராமாமிருதம், இப்படி  இன்னும் நிறைய எழுத்தாளர்களை வாசித்த காலம் உண்டு. நாடோடி என்ற பெயரில் நகைச்சுவையாக எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளரை நண்பர் அறிந்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது!

கல்கி, புதுமைப் பித்தன்,தேவன் முதற்கொண்டு,பல எழுத்தாளர்களுடைய படைப்புக்களை, அவர்களுக்குப் பிந்தைய தலைமுறையில் பிறந்தவன் என்றாலுமே கூட  தேடிப்பிடித்துப் படித்த அனுபவமும், அலுப்பூட்டுவதாக இருந்த போதிலுமே கூட, வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மர்ம நாவல்களைக் கூட விடாமல் படித்த காலம் ஒன்று இருந்தது. ஆக, நபரை வைத்து அல்ல என்னுடைய மதிப்பீடு! அவர்களுடைய எழுத்து எனக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பது ஒன்றே, ஒரு புத்தகத்தை அல்லது எழுத்தாளரை மதிப்பிட, இன்றைக்கும் நான் பயன்படுத்துகிற ஒரே அளவு கோலாக இருந்துவருகிறது. இன்றைக்கு ஜெயமோகன் கூட அம்மா வந்தாள் கதையை அவருக்குத் தெரிகிற  கோணத்தில் அவரது வலைப்பக்கங்களில் விமரிசித்திருக்கிறார். ஜெயமோகன் விமரிசனம் சரியா தவறா என்ற கேள்விக்குள்ளேயே நான் போகப்போவதில்லை. ஜெயமோகனை எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக ஆதரிப்பதோ, அல்லது பிடிக்காது என்பதால் கல்லெறியும் ரகத்தையோ சேர்ந்தவனில்லை.

எந்த ஒரு இருவரும் ஒரே வானவில்லைப் பார்க்க முடியாது என்கிறது நவீன அறிவியல். அதே மாதிரித் தான், சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ, அந்த அளவுக்குள் நம்முடைய பார்வையும் குறுகிப் போய் விடுகிறது. அதே மாதிரித்தான், எழுத்தும்! வார்த்தைகளில் இல்லை உண்மையான ஜாலம்! எழுத்து, வாசிப்பு என்பது வெறும் வார்த்தைகளின் அடுக்கு மட்டும்அல்ல.

தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் சிவாஜி கணேசனும், பத்மினிப் பாட்டியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்  இல்லையா?

எனக்கோ, கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தில் வடித்த வடிவம் மட்டும் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது!தஞ்சை மண்ணின் இசை வேளாளர்களை, அந்த மண்ணுக்கே உரிய இசை ஞானத்தை அறிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவே தான் தெரிகிறது. ராவ் பகதூர் சிங்காரமும், இன்னும் பிற கதை வடிவங்களும் கூட கொத்தமங்கலம் சுப்புவின் எழுத்தாளுமையை  நினைவுபடுத்திக் கொண்டிருப்பதாகவே இன்றைக்கும் படுகிறது.

கதைகளில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் உயிரோடு வந்து என்னோடு பேசுவதாகவே, ஒவ்வொருமுறையும்  இவர்களது எழுத்தைப் படிக்கும் போது உணர்கிறேன். அந்த மாதிரித் தான், மோகமுள் பாபுவாகட்டும், அன்பே ஆரமுதே நாயகன் அனந்தசாமியாகட்டும்,  அம்மா வந்தாள் அப்புவாகட்டும்,  இந்தக் கதைகளில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்களைக் கூட, என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் பார்க்க முடிவது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!

திரு ஜீவி, பூவனம் என்ற தனது வலைப்பதிவில் எழுத்தைப் பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு, வரிசையாக எனக்குள் ஒரு தொடர் சிந்தனையாக ஓட  ஆரம்பித்தது.அவருடைய பதிவில் பின்னூட்டமாக

"உணர்வுகள் எல்லோருக்கும் பொது என்றாலும்
உணர்வதில் பலவிதமான படித்தரம்!
உணர்ந்ததுபோதாதென்று அதை நளினமாய் பிறருக்கும்
வெளிப்படுத்துவதே எழுத்து!அதுவே அதன் தனிச் சிறப்பு!

எழுதுவதனால் கவிஞனோ எழுத்தாளனோ பிறப்பதில்லை!
அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு அதனைப் பக்குவமாய்ச் சொல்ல
அதைப் படிப்பவர் தங்கள் சொந்த அநுபவமாய் அங்கே அறியும்போது
எழுத்தும் பிறக்கிறது! எழுத்தாளன், கவிஞனும் கூடவே பிறக்கிறான்!

அனுபவமே எழுத்து! அந்த எழுத்தே சுகமான அனுபவம்! வாசிக்கும் அனுபவம்!

வீணையும் மீட்டும் விரல்களும் கூடும்போது பிறக்கும் இசை போல
எழுத்தும் வாசிப்பும் ஒருசேரக் கூடிடும்போது அங்கே விளைவது அற்புதம்!
அதியற்புதம்!அதிசயம்!"

இப்படி எழுதிவிட்டுத் திரும்பிப் பார்த்தால், கிட்டத்தட்ட இதே நிலையை திரு R P ராஜனாயஹம் தன்னுடைய வலைப்பதிவில் சொல்லியிருக்கிறார்!

"1951வது ஆண்டில் அப்படி அந்த விளையாட்டை விளையாடிய ஒரு நாள் வில்லியம் பர்ரோஸ் குறி பார்த்து ஜோன் வோல்மரின் இரு கண்ணுக்கு நடுவே சுட்டு விட்டான். ஜோன் வோல்மரின் மரணம் நிகழ்த்தப்பட்டது இவ்விதமே.

எட்டு வருடம் கழிந்த பின் வில்லியம் பர்ரோஸ் எழுதிய நாவல் 'Naked Lunch' .
ஹென்றி மில்லர் உணர்ச்சிப்பூர்வமாக ' அமெரிக்காவின் என் காலத்து ஒரே எழுத்தாளன் வில்லியம் பர்ரோஸ் தான்!' என்று சொல்லும்படியானது.
வில்லியம் பர்ரோஸ் சொன்னான் :"I would have never become a writer but for Joan's Death."

எழுத்து என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?


 

Tuesday, January 12, 2010

தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!

லண்டனில் கல்வி பயில்வதற்காக,  விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல் மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப் பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக, கதைசொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன்,  சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு  இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படன்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என் குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என் குடும்பத்தோடு
ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு  வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல  சத்தம் கேட்கவே, இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான். 


அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில் உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?"
என்று கேட்பதோடு கதை இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்! பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த  கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு. தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின்  பேதப்பட்டு நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனிதமனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்தவர்.  


அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம் சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு
லட்சியவாதி. தமிழ் எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும்  இருந்தார்கள் என்பதே இன்றைக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப் பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம், கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில் இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?





பேதங்கள் தேவை தானா?  தவிர்க்க முடியாதவை தானா?

கொஞ்சம் நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்!

Friday, January 8, 2010

புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!



நேற்றைக்கு மகன் சென்னையில் இருந்து அலைபேசியில் பேசினான்.

"புத்தகக் கண்காட்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். உனக்கு ஏதோ புத்தகம் வேண்டுமென்று சொன்னாயே, இப்போது சொல்!"

கொஞ்சம் தயங்கினேன். என்னுடைய பட்டியல் மிகப் பெரியது. தவிர, புத்தகங்களை நேரில் பார்த்து, கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு, ஆசிரியரின் நடையை ஒரு சாம்பிள் பார்த்து வாங்குவது தான் எனக்குப் பழக்கம். மொட்டையாக, திடீரென்று என்ன வேண்டுமென்று கேட்டால், என்ன  சொல்வது?

இதயம் பேசுகிறது மணியன்  ஆதரவில் வளர்ந்த சில  எழுத்தாளர்களை, அவர்களுடைய அபத்தமான உளறல்களை, ஒரு பதத்திலேயே இனம் கண்டு, தவிர்த்தவன். அதே மாதிரி,  தம்பட்டம் கொட்டிக் கொண்டு, ஆர்ப்பாட்டமாக  வருகிறவர்களை எல்லாம், என்னுடைய முதல்தேர்வாக எப்போதுமே எடுத்துக் கொள்வது இல்லை.

பாலகுமாரனைக் கூட, அப்படித்தான், ஆரம்பத்தில் என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதில்லை. தொழிற்சங்க வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் அது. மதுரை வங்கியில் பணியாற்றி வந்த இரண்டு நண்பர்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்தார்கள். பாலகுமாரனை வெறியோடு வாசித்தவர்கள் அவர்கள். எனக்கும் சிபாரிசு செய்து, படிக்கக் கொண்டு வந்து கொடுத்தபோது அந்த நாட்களில் ஒதுக்கியிருக்கிறேன்.

அப்புறம் சிலகாலம் கழித்து, எனக்கு நேரம் கிடைத்த தருணத்தில் ஒரே மூச்சில் அத்தனை புத்தகங்களையும் படித்தும் பார்த்தாயிற்று! நண்பர்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு அப்படி என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் பாலகுமாரன்   என்றால் ஒருவிதமான அலுப்பும் வந்து விடுகிறது. எழுத்துச் சித்தராக, இன்றைக்கும் கூட சில வாசகர்களுக்குத் தென்படுகிற பாலகுமாரன், ஒரு கட்டத்தோடு தேங்கிப் போனவராகவே எனக்குத் தென்படுவதுதான் காரணம். ஏற்கெனெவே சொன்னதைத் தவிர, புதிதாக அவரிடம் ஏதுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. பொறுமை அதிகமாக இருந்தால், உடையார் ஆறு பாகங்களாக அதில் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துவிடும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் இல்லை.

என்னுடைய தேர்வு, சில அடிப்படைக் கேள்விகளோடு, தேடலோடு சம்பந்தப்பட்டது. எனக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தால் தான் படிப்பேன் என்று எப்போதுமே இருந்ததில்லை, நேரெதிர் கருத்தைச் சொல்லியிருந்தாலுமே கூட, சொல்வதில் ஒரு லாஜிக் இருந்தால், அந்த மாதிரி எழுத்தாளர்களையும் என்னுடைய வாசித்தே தீரவேண்டியவர்கள் பட்டியலில் வந்து விடுவார்கள்.

"அப்பா, தி.ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னாயே! இங்கே கேட்டால் எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். குறைந்த பட்சம் பதிப்பகம் பெயராவது தெரியுமா?  சொன்னாலாவது, சொல்லலாம் என்கிறார்கள்" ஏதோ ஒரு ஸ்டாலில் இருந்து, மகனிடமிருந்து மறுபடி கேள்வி.

"ஐந்திணைப் பதிப்பகம் என்று ஸ்டால் இருக்கிறதா என்று பார்!"

புத்தகக் கண்காட்சி பற்றிய, குவியல் குவியலான பதிவுகள், இத்தனை புத்தகம் போன வருடம் வாங்கியதே படிக்காமல் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு விட்டு, இந்த வருடம் இத்தனை ரூபாய்க்கு, இன்னின்ன பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தை வாங்கப் போகிறேன் என்றெல்லாம் அளந்து கொண்டிருக்கும் பதிவுகளை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டேவரும் நேரத்தில், தமிழ் எழுத்துலகின் மிகப் பெரிய ஆளுமையான தி. ஜானகிராமன்  புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத, அல்லது சொல்ல மனமில்லாத ஆசாமிகள்....புத்தகம் விற்கிறார்களாம்! 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் மகனே பேசினான். "என்னென்ன புத்தகம் சொல்லு!" ஐந்திணை ஸ்டாலை அடையாளம் கண்டு போய்ச் சேர்ந்து விட்டான்.

 "ஐந்திணை கதிரேசன் அங்கு இருக்கிறாரா கேள்!"  என்று நான் கேட்டதை அவனும் அங்கே எவரிடமோ கேட்க, " அதோ இருக்கிறார் பாருங்க! அவர்தான் கதிரேசன் " என்று சொல்வது இந்த முனையில் கேட்கிறது. "பேச வேண்டுமா? செல்லைக் கொடுக்கட்டுமா?" மகன் பரபரத்தான்.

"வேண்டாம், எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பார்த்தது, இப்போது அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்க முடியாது. மலர் மஞ்சம், உயிர்த்தேன், செம்பருத்தி இதெல்லாம் இருக்கிறதா என்று பார்!"

கேட்ட  மூன்றுமே இருந்தது. ஒன்று சேதப்பட்டதாக இருப்பதாகவும் தெரிந்தது.

ஒருவழியாக, மகன் கொள்முதல் செய்துவிட்டு, மறுடியும் பேசினான். "அப்பா! தி.ஜா புத்தகம் மட்டும் வாங்கவில்லை. ஒரு புத்தகம் இருநூற்றைம்பது ரூபாய் என்று சொன்னார்கள்! அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்."

"சரி! வேறு என்ன தான் வாங்கினாய்?"

"ஒரு பத்துப் பனிரண்டு புத்தகம்! இதுவே ஆயிரத்தைநூறு ஆகிவிட்டது! The Moneychangers வாங்கியிருக்கிறேன்! நூற்று முப்பது ரூபாய் தான்! அடிக்கடி இது படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வாயே!"

"நல்ல சாய்ஸ்! ராஜீவ் காந்தி கொலைவழக்கைப் பற்றி ஒரு புத்தகம் வந்திருக்கிறதே, அதை வாங்கினாயா? ராமச்சந்திர குஹா எழுதிய காந்தியை பற்றிய நூலின் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறதே பார்த்தாயா?"

"இல்லை.ஜெயமோகனுடைய காந்தி வாங்கினேன். மற்றதை அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்!"

இது நிஜமாகவே, நேற்றைக்கு இரவு என்னுடைய மகனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல். மதியம் தான் ஆர்தர் ஹைலியின் The  Moneychangers புத்தகத்தைப் பற்றி ஒரு விமரிசனமாக இங்கே எழுதி வலையேற்றம் செய்து முடித்தபோது மின்வெட்டு! மகனிடம், அந்த வலைப் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கச் சொன்னேன். என்னுடைய  பதிவுகளை எட்டிக் கூடப் பார்க்காதவன், ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால்,  காந்தி, நேரு, சாஸ்திரி, பொருளாதாரம் என்று தொட்டு எழுதிய பதிவுகளைப் பார்த்திருக்கிறான்.

இந்தப் புத்தகக் கண்காட்சி,  சென்னையில் நடக்கும் பத்தோடு பதினொன்றாக, ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டதோ என்று கூட, சில பதிவுகளைப் படித்த போது எண்ணம் வந்தது. ஒரு பொருட்காட்சிக்குப் போனால், அங்கே கூடத்தான் ஏதோ ஒன்றினால் உந்தப் பட்டுத் தேவை  இருக்கிறதோ இல்லையோ  எதையாவது வாங்கி வருகிறோமே, அதுபோலத்தானா இதுவும்?

நல்ல புத்தகங்கள், மிகப்பெரிய தோழனாகவும் துணையாகவுமே இருக்கக் கூடிய வல்லமை பெற்றவை. வெறும் சந்தைப் பொருள் மட்டுமே அல்ல!
வலைப் பதிவுகளில் கிறுக்கித் தள்ளுவதைஎல்லாம் தொகுத்து, அதையும் புத்தகமாக்கி விற்பனை செய்யும் வியாபார உத்திகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

அது போதாதென்று, வலைப் பதிவர்கள் சிலருடைய படைப்புக்களில் இருந்து கொஞ்சம் உருவி, அதையும் பதிப்பிக்கும் போக்கும்,பதிப்புலகமும், வாசகர்களும் என்ன திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அப்படிக் காட்டுவதும்  ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

குறைந்தது மூன்று அல்லது நான்கு பதிவுகளிலாவது, சென்ற வருடம் வாங்கினதையே  இன்னமும் படித்து முடிக்கவில்லை என்ற வாக்கியத்தைப் பார்க்க முடிவதும், அப்படியும் சொல்லிவிட்டு, இந்த வருடம் நான் இன்ன பதிப்பகத்தின் இந்த இந்தப் புத்தகங்களை வாங்கப் போகிறேன் என்றும் சொல்வது பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடியவை தானா?

வீணை இருந்தும் பயனேது? -வந்து
மீட்டும் வரையில் இசையேது?


இந்தப்  பழைய திரைப்படப் பாடல் தான் இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது!

என்னுடைய அடுத்த கேள்வி!

இப்போதெல்லாம் புத்தகம் வெளியிடுவது என்பது இன்றைய தலைப்புச் செய்திகள் மட்டும் தானா?
 

வாசிப்பது என்பது அதை மட்டும் வாசித்து விட்டுப் போய் விடுவது தானா?

Sunday, January 3, 2010

S M S எம்டன் 22-09-1914 ! படித்தது, பிடித்தது, விமரிசனம்!


தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஒரு கதையை, தொடர்கதையாக வாரம் ஒரு அத்தியாயம் என்று பொறுமையாக, ஆர்வம் குறையாமல் படிக்க வைத்த எழுத்து அவருடையது.

கதைக்குத் தேவையான சரித்திரச்சான்றுகளை, சந்தேகத்துக்கிடமில்லாமல், தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்வது, நிஜத்தில் வாழ்ந்த சரித்திர புருஷர்களோடு, கற்பனைக் கதாபாத்திரங்களையும் கலந்து, ஒரு கதையை உருவாக்குவது கடினம். கல்கி அதை சாதித்தார்! அதனால் தான், வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில்  அதிசயமில்லை!.

அதற்கு முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!

கல்கி சோழர்களையும், பல்லவர்களையும் வைத்துக் கொண்டு மூன்று அற்புதமான சித்திரங்களைப் படைத்தார் என்றால்  சாண்டில்யன், தனக்கென்று ஒரு சிருங்கார பாணியை, மொழிநடையை வைத்துக் கொண்டு, கல்கி தொடக் கூட  முயற்சி செய்யாத உயரங்களை,  இந்திய வரலாற்றின் பல பக்கங்களைத் தொட்டுக் காவியம் படைத்தார். ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் சாண்டில்யனுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அகிலன், நா.பார்த்த சாரதி, விக்கிரமன், கோவி.மணிசேகரன், அரு.ராமநாதன், கௌசிகன் என்று பலரும் சரித்திரப் பின்னணியில் கதை எழுதியிருக்கிறார்கள்.அவர்களுமே கூட, கல்கி, அடுத்து சாண்டில்யன், என்ற வரிசையில் அடுத்த மூன்றாவது இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை என்பது கொஞ்சம் நெருடலான உண்மை.

மிகச் சமீப  காலத்தில் தான்,  எழுத்தாளர்களுடைய கவனம் சரித்திரத்தின் பக்கம் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் என்னுடைய கவனத்தை சமீப காலத்தில் ஈர்த்த ஒரு புத்தகம், SMS எம்டன்! மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் விவாத இழைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணங்களில், இந்த நூலும் , நூலாசிரியர் திரு வி.திவாகரும் அறிமுகமானார்கள். நமக்கு அடுத்த வீடான ஆந்திராவில் இருக்கிறார், தமிழ்நாட்டில் பெயரைச் சொன்னவுடன் அல்லது முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. நான்கு சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்! SMS எம்டன் புதுவரவு!

S M S எம்டன்! இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், முதல் உலகப்போர் மூண்ட தருணத்தில், சென்னைத் துறை முகத்தின் மீது குண்டு வீசித் தாக்கிய ஒரு சம்பவம், சமீப காலத்திய வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கிறது. மிகப் பெரிய போர்க் கப்பலோ, அதிக யுத்த தளவாடங்களோ இல்லாத,ஒரு சிறிய கப்பல் தான்! நாலங்குல பீரங்கிகள் பத்து மட்டும் தான்! இந்தியப் பெருங்கடலில், மூன்றுமாதம் சுற்றித் திரிந்ததில், பிரிட்டிஷ் வர்த்தகமே படுத்துவிடுமோ, பிரிட்டனின் வலிமையான கடற்படை, ஆதிக்கம்  எல்லாம் வெறும் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் விடுமோ என்று ஆங்கிலேயர்களுடைய அடிவயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கரைத்த இந்தக் கப்பல் 'கிழக்கு திசையின் அன்னம்' என்றே வர்ணிக்கப் பட்டது!

1914, செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு சென்னைத் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கிடங்குகள் இருந்த இடத்தின் மீது 125 குண்டுகளை வீசிவிட்டு எம்டன் நகர்ந்து விடுகிறது. நினைத்திருந்தால், துறைமுகத்தை மட்டுமல்ல, சென்னப்ப நாயக்கன் பட்டினத்தையே முற்றொட்டாக அழித்திருக்க முடியும்! ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்?

இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டன. நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தின் தளபதியான டாக்டர் செண்பக ராமன் அந்த கப்பலில் இருந்தார் என்பது ஒன்று! அவரை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இறக்கிவிட்டு விட்டு, எம்டன் போய் விட்டது என்பது இன்னொன்று! ஆங்கிலேயர்களுடைய வியாபார சாம்ராஜ்யத்திற்கு எச்சரிக்கை விடுப்பதும், இந்திய விடுதலை வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கும்  தான் இந்த குண்டு வீச்சு என்பது இன்னொரு வதந்தி!

ஆக, எம்டன் சென்னையை அழிக்காமல் விட்டு விட்டதற்கு ஒரு இந்தியர் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ,நடந்த  ஒரு சரித்திர சம்பவத்தை வைத்துக் கதைக்களத்தை, கதாசிரியர் ஆரம்பிக்கிறார்,. தந்தையின் மரணத்தை, வெறும் இறுதிச் சடங்காகநடத்தாமல் முக்தி  நிலை பெற்ற மகானுக்குச் செய்வதுபோல சமாதிக் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன், எம்டன் கப்பலுக்குக் கடத்திவரப்படுவதில் இருந்து, எம்டன் கப்பலை வைத்து, அதன் பயணத்தை வைத்து ஒரு கதைக்களம், எம்டன் கப்பலின் காப்டன் முல்லர், துணை அதிகாரி முக்கே என்று சரித்திரக் கதாபாத்திரங்களையும், சென்னையில் குண்டு வீசியபிறகு எம்டன் பயணம் செய்த பாதை, இடங்கள் என்று கதைக்களம் விரிகிறது.

அதற்கும் சுமார் தொள்ளாயிரம்  வருடங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன், சிவபாதசேகரன் என்ற பெயருடன் சிவனடிக் கீழ் புகும்  களம் அடுத்து விரிகிறது. சித்தர் வழிபாட்டுமுறையில் என்று ஆரம்பித்து, ஒரு ஆன்மீகக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் ஆசிரியர். எம்டன் கப்பலில் கதாநாயகன் எதிர்கொள்ளும் விரோதமான சூழ்நிலைகளைக் கதாநாயகன் எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறான் என்று ஒரு ட்ராக்கில் சொல்லிக் கொண்டே, ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் இந்தக் கதைக்குள் எப்படி வருகிறார்கள், அன்று நடந்தது என்ன என்பதை இன்னொரு ட்ராக்காகச் சொல்லிக் கொண்டு,  இந்த இரண்டையும் நிகழ்காலக்கதா பாத்திரங்களோடு  எப்படி ஒருங்கிணைத்து, இரண்டிற்கும்  பொதுவான களம் ஒன்றை விரிக்கிறார் என்பது தான் கதை!

இந்த வெவ்வேறு தளங்களைத் தொட்டுத் தனியாகவும், இணைத்துப் பொதுவாகவும் சொல்லும்போது  ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மறந்து, ஒரு பேருண்மையை உணருகிற அனுபவமாகவும்  படித்துப் பார்த்துத் தான் புரிந்துகொள்ள முடியும்!

371 பக்கங்களில், முப்பத்தைந்து அத்தியாயங்களில், ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தலைப்புடன், கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார். இந்த மாதிரி, அத்தியாயங்களுக்குத் தலைப்பு வைக்கும் பாணி, கல்கி, சாண்டில்யன் இருவரிடமும் இருந்தது தான்  என்றாலும், இங்கே சில தலைப்புக்கள், கதைக்குள் இருக்கும் கருத்தை,நூலாசிரியர்   என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்றாகவே சொல்லி விடுகின்றன! உதாரணமாக, தன்னைத் தேடி வருவதும் தான் தேடி அடைவதும் என்று ஒரு அத்தியாயத் தலைப்பு! அடுத்த அத்தியாயம் அவரவர்க்கு வேண்டியதை அவரவர்க்கு அருள்வான் என்று ஆரம்பிக்கிறது!

எம்டன் கப்பல் பயணிப்பது, அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களை விவரிக்கும்போது சாண்டில்யனின் கடல்புறா ஆசிரியர் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தெரிகிறது. கதாபாத்திரங்கள் உரையாடிக் கொள்ளும் பகுதிகளில், இரண்டு வரிகள் இலக்கணத்தமிழிலும், அடுத்த ஒன்றிரண்டு  வரிகள் வழக்குத் தமிழுமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அத்தியாயங்களை இன்னும் கொஞ்சம் விவரங்களோடு எழுதியிருக்க முடியும் என்றாலும் கதையை ரொம்பவுமே நீட்டிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, சுருக்கமாக முடித்திருக்கிறார். ஆகம விஷயங்கள், வாசிப்பவர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவை என்பதை மனதில் வைத்துக் கொண்டாவது, கொஞ்சம் விவரித்துச் சொல்லியிருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கும்போது, ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!  முதலில், இப்படி வேறுபட்ட காலங்களைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சமீப நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் பொருத்தி, ஒரு புதினத்தைப் படைப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்திருக்கும் என்பது ஒன்று! அத்தனை விஷயங்களையும் அப்படியே கொட்டி விடவும் முடியாது. ஒரு மையமான சம்பவத்தை மட்டும் வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், சம்பவங்கள்,அதற்கும் மேலாக ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இருந்து  கதையைப் பின்னுவது!

கதை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்! ஒரு மையக் கருத்து! அதைச் சொல்வதற்காகத் தான், காரணத்தைச் சொல்வதற்காகத் தான் காரியங்கள்!  நூலாசிரியர்  அந்த வகையில், ஒரு நல்ல முயற்சியைப் படைத்திருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார்!

எம்டனுக்கு நிகர் எம்டன் தான்! SMS எம்டன் தனிக்காட்டு ராஜாவாக, இந்தியப் பெருங்கடலில் அதை நிரூபித்தது!

இந்தப் புதினத்தை எழுதியதில், சைவ ஆகமங்களைப் பற்றி, சித்தர் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஒரு சின்ன வெளிச்சக் கீறலை, திரு திவாகர் படைத்திருக்கிறார்! படிப்பவர்கள் பகிர்ந்துகொள்ளத் தந்திருக்கிறார்!

SMS எம்டன் கப்பலைப் பற்றியும், இந்தப் புதினத்தைப் பற்றிச் சொல்ல விடுபட்டுப் போனவைகளையும்   அடுத்த பதிவில்  பகிர்ந்து கொள்வோம்!

திரு திவாகர் எழுதிய இதர சரித்திரப் புதினங்கள் 

Friday, January 1, 2010

அன்னை என்னும் அற்புதப் பேரொளி!




ஜனவரி முதல் தேதி! உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், என்னென்ன வழிகளில் சாத்தியமோ அத்தனை விதங்களிலும் நடந்து கொண்டிருக்கும். கேளிக்கை, கூச்சல், விருந்து சோம, சுரா பானங்கள், பப் கல்ச்சர்  என்று ஒரு பக்கம் உலகம் ஆரவாரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்-------

பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் வாசலில், ஆயிரக்கணக்கான  மக்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வரிசையாக, ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காக, ஏற்கெனெவே பெற்ற அனுபவத்தை உயிர்ப்பித்துக் கொள்வதற்காக, அங்கே பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காண முடியும்!

பாண்டிச்சேரி, எத்தனையோ விஷயங்களுக்குப் "பேர்போனதுதான்"  என்றாலும், உன்னதமான ஆன்மீகத் தேடலோடு, அங்கே ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு வருபவர்கள் ஏமாற்றமடைந்தது இல்லை.

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த ஆரம்ப காலங்களில், ஸ்ரீ அரவிந்தரையோ, ஸ்ரீ அரவிந்த அன்னையையோ நினைத்த நேரத்தில் எவரும் பார்த்து விட முடியாது. ஆசிரமத்தில் சாதகர்களாக இருந்தவர்களே கூட, ஸ்ரீ அரவிந்தரிடம் தங்களுடைய ஆன்மீகத் தேடலில் எழுந்த வினாக்களை, ஒரு நோட் புத்தகத்தில் எழுதிக் கேட்டு, அவரிடமிருந்து எழுத்து வடிவத்தில் தான் பெற முடியும். ஸ்ரீ அன்னை தான், அடியவர்களுக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நடுவே இணைக்கிற பாலமாகவும், வழியாகவும் இருந்து உதவிய ஆரம்ப நாட்களில், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரையும் தரிசனம் செய்வதற்கு, வருடத்தில் சில நாட்கள் தரிசன நாட்களாக ஆகிப் போயின!

ஜனவரி முதல் தேதி, வருடத்தின் முதல் தரிசன நாளாக இன்றைக்கும் இருக்கிறது.

அன்றைக்கு ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும், அடியவர்களுக்கும் ஸ்ரீ அன்னை தன் கைகளினாலேயே ஒரு காலண்டரும், மலர்களைப் பிரசாதமாகவும் வாழங்குகிற வழக்கம் இருந்தது. காலண்டரில், ஸ்ரீ அரவிந்தர் அல்லது அன்னையின் படம், அவர்கள் சொன்னதில் ஏதாவது ஒரு வாக்கியம் இருக்கும்.

ஸ்ரீ அன்னையும்,  ஸ்ரீ அரவிந்தரும் மனித உடலை நீத்து சமாதி நிலையை  ஏற்றுக் கொண்ட பிறகு, ஆசிரமத்தில் காலை வேளையில் சமாதியைச் சுற்றி அன்பர்கள் அமர்ந்து, கூட்டுப் பிரார்த்தனை செய்வதும், காலண்டர், மலர் பிரசாதம், அப்புறம் அந்த தருணத்திற்காண செய்தியை அருளாசியாகப் பெறுவதும் இன்றைக்கும் தொடர்ந்து நடக்கிறது.

கொடுப்பினை உள்ளவர்கள் அங்கே ஆசிரமத்தில் நேரடியாக இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

அன்னை! ஸ்ரீ அரவிந்தர், ஒரு சாதகருக்கு எழுதிய ஆறு கடிதங்கள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டு ஒரே நூலாக வெளிவந்தது. ஸ்ரீ அரவிந்த அன்னையை, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரைத் தேடி வந்த மற்றொரு சீடர் என்று எண்ணிக் கேள்வி எழுப்பியிருந்ததற்கு, ஸ்ரீ அரவிந்தர் மிகத் தெளிவாகவே சொன்ன பதில் " மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று எண்ணி  ஏமாந்து விடாதே! அன்னை, பராசக்தியின் அவதாரம்!"

அன்னை என்னும் அற்புதப் பேரொளி! திருமதி விஜய சங்கரநாராயணன் எழுதிய அழகான தமிழ் நூல். ஸ்ரீ அரவிந்த ஆசிரம வெளியீடாகவே வெளி வந்த இந்தப் புத்தகம், எளிய தமிழில், ஸ்ரீ அரவிந்த அன்னையின் சரிதத்தைச் சொல்லும் புத்தகம். அம்மா, அம்மா என்று ஒரு சிறு குழந்தை மிழற்றுவதைப் போலவே, அவளைப் பேச முனையும் தருணமாக நெக்குருகுவதை, படித்துப் பார்த்த நினைவுகள் இப்போதும் தருகின்றன. 

இந்த வீடியோவில், ஸ்ரீ அன்னையின் தரிசனம் எத்தனை எத்தனை விதங்களில் தான் நமக்குக் கிடைக்கிறது! ஹூதா ஹிந்தோச்சா என்ற அடியவர், அன்னையின் வழிகாட்டுதலோடு அரவிந்த மகாகாவியமான சாவித்திரியில் இருந்து சில கருத்துக்களை மையப் படுத்தி ஓவியங்களாக வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் கொஞ்சம், ஸ்ரீ அன்னையின்  தரிசனம், பால்கனி தரிசனம் என்று பிரபலமான தரிசனம், ஸ்ரீ அரவிந்தரின் நூலை அன்னையின் குரலிலேயே வாசிக்கக் கேட்பது இப்படி எத்தனை எத்தனை அனுபவங்கள்!
 




கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்  என்கிறாள் ஆண்டாள்! ஆன்மீக அனுபவமும் கூட இப்படி எல்லோருடனும் கூடியிருந்து அனுபவிக்கப் படுவது தான்!

அன்னை என்னும் அற்புதப் பேரொளி

ஆசிரியர்: திருமதி விஜய சங்கர நாராயணன்

கிடைக்குமிடம் SABDA, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம், பாண்டிச்சேரி.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)