Sunday, January 3, 2010

S M S எம்டன் 22-09-1914 ! படித்தது, பிடித்தது, விமரிசனம்!


தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஒரு கதையை, தொடர்கதையாக வாரம் ஒரு அத்தியாயம் என்று பொறுமையாக, ஆர்வம் குறையாமல் படிக்க வைத்த எழுத்து அவருடையது.

கதைக்குத் தேவையான சரித்திரச்சான்றுகளை, சந்தேகத்துக்கிடமில்லாமல், தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்வது, நிஜத்தில் வாழ்ந்த சரித்திர புருஷர்களோடு, கற்பனைக் கதாபாத்திரங்களையும் கலந்து, ஒரு கதையை உருவாக்குவது கடினம். கல்கி அதை சாதித்தார்! அதனால் தான், வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில்  அதிசயமில்லை!.

அதற்கு முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!

கல்கி சோழர்களையும், பல்லவர்களையும் வைத்துக் கொண்டு மூன்று அற்புதமான சித்திரங்களைப் படைத்தார் என்றால்  சாண்டில்யன், தனக்கென்று ஒரு சிருங்கார பாணியை, மொழிநடையை வைத்துக் கொண்டு, கல்கி தொடக் கூட  முயற்சி செய்யாத உயரங்களை,  இந்திய வரலாற்றின் பல பக்கங்களைத் தொட்டுக் காவியம் படைத்தார். ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் சாண்டில்யனுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அகிலன், நா.பார்த்த சாரதி, விக்கிரமன், கோவி.மணிசேகரன், அரு.ராமநாதன், கௌசிகன் என்று பலரும் சரித்திரப் பின்னணியில் கதை எழுதியிருக்கிறார்கள்.அவர்களுமே கூட, கல்கி, அடுத்து சாண்டில்யன், என்ற வரிசையில் அடுத்த மூன்றாவது இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை என்பது கொஞ்சம் நெருடலான உண்மை.

மிகச் சமீப  காலத்தில் தான்,  எழுத்தாளர்களுடைய கவனம் சரித்திரத்தின் பக்கம் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் என்னுடைய கவனத்தை சமீப காலத்தில் ஈர்த்த ஒரு புத்தகம், SMS எம்டன்! மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் விவாத இழைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணங்களில், இந்த நூலும் , நூலாசிரியர் திரு வி.திவாகரும் அறிமுகமானார்கள். நமக்கு அடுத்த வீடான ஆந்திராவில் இருக்கிறார், தமிழ்நாட்டில் பெயரைச் சொன்னவுடன் அல்லது முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. நான்கு சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்! SMS எம்டன் புதுவரவு!

S M S எம்டன்! இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், முதல் உலகப்போர் மூண்ட தருணத்தில், சென்னைத் துறை முகத்தின் மீது குண்டு வீசித் தாக்கிய ஒரு சம்பவம், சமீப காலத்திய வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கிறது. மிகப் பெரிய போர்க் கப்பலோ, அதிக யுத்த தளவாடங்களோ இல்லாத,ஒரு சிறிய கப்பல் தான்! நாலங்குல பீரங்கிகள் பத்து மட்டும் தான்! இந்தியப் பெருங்கடலில், மூன்றுமாதம் சுற்றித் திரிந்ததில், பிரிட்டிஷ் வர்த்தகமே படுத்துவிடுமோ, பிரிட்டனின் வலிமையான கடற்படை, ஆதிக்கம்  எல்லாம் வெறும் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் விடுமோ என்று ஆங்கிலேயர்களுடைய அடிவயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கரைத்த இந்தக் கப்பல் 'கிழக்கு திசையின் அன்னம்' என்றே வர்ணிக்கப் பட்டது!

1914, செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு சென்னைத் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கிடங்குகள் இருந்த இடத்தின் மீது 125 குண்டுகளை வீசிவிட்டு எம்டன் நகர்ந்து விடுகிறது. நினைத்திருந்தால், துறைமுகத்தை மட்டுமல்ல, சென்னப்ப நாயக்கன் பட்டினத்தையே முற்றொட்டாக அழித்திருக்க முடியும்! ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்?

இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டன. நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தின் தளபதியான டாக்டர் செண்பக ராமன் அந்த கப்பலில் இருந்தார் என்பது ஒன்று! அவரை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இறக்கிவிட்டு விட்டு, எம்டன் போய் விட்டது என்பது இன்னொன்று! ஆங்கிலேயர்களுடைய வியாபார சாம்ராஜ்யத்திற்கு எச்சரிக்கை விடுப்பதும், இந்திய விடுதலை வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கும்  தான் இந்த குண்டு வீச்சு என்பது இன்னொரு வதந்தி!

ஆக, எம்டன் சென்னையை அழிக்காமல் விட்டு விட்டதற்கு ஒரு இந்தியர் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ,நடந்த  ஒரு சரித்திர சம்பவத்தை வைத்துக் கதைக்களத்தை, கதாசிரியர் ஆரம்பிக்கிறார்,. தந்தையின் மரணத்தை, வெறும் இறுதிச் சடங்காகநடத்தாமல் முக்தி  நிலை பெற்ற மகானுக்குச் செய்வதுபோல சமாதிக் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன், எம்டன் கப்பலுக்குக் கடத்திவரப்படுவதில் இருந்து, எம்டன் கப்பலை வைத்து, அதன் பயணத்தை வைத்து ஒரு கதைக்களம், எம்டன் கப்பலின் காப்டன் முல்லர், துணை அதிகாரி முக்கே என்று சரித்திரக் கதாபாத்திரங்களையும், சென்னையில் குண்டு வீசியபிறகு எம்டன் பயணம் செய்த பாதை, இடங்கள் என்று கதைக்களம் விரிகிறது.

அதற்கும் சுமார் தொள்ளாயிரம்  வருடங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன், சிவபாதசேகரன் என்ற பெயருடன் சிவனடிக் கீழ் புகும்  களம் அடுத்து விரிகிறது. சித்தர் வழிபாட்டுமுறையில் என்று ஆரம்பித்து, ஒரு ஆன்மீகக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் ஆசிரியர். எம்டன் கப்பலில் கதாநாயகன் எதிர்கொள்ளும் விரோதமான சூழ்நிலைகளைக் கதாநாயகன் எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறான் என்று ஒரு ட்ராக்கில் சொல்லிக் கொண்டே, ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் இந்தக் கதைக்குள் எப்படி வருகிறார்கள், அன்று நடந்தது என்ன என்பதை இன்னொரு ட்ராக்காகச் சொல்லிக் கொண்டு,  இந்த இரண்டையும் நிகழ்காலக்கதா பாத்திரங்களோடு  எப்படி ஒருங்கிணைத்து, இரண்டிற்கும்  பொதுவான களம் ஒன்றை விரிக்கிறார் என்பது தான் கதை!

இந்த வெவ்வேறு தளங்களைத் தொட்டுத் தனியாகவும், இணைத்துப் பொதுவாகவும் சொல்லும்போது  ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மறந்து, ஒரு பேருண்மையை உணருகிற அனுபவமாகவும்  படித்துப் பார்த்துத் தான் புரிந்துகொள்ள முடியும்!

371 பக்கங்களில், முப்பத்தைந்து அத்தியாயங்களில், ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தலைப்புடன், கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார். இந்த மாதிரி, அத்தியாயங்களுக்குத் தலைப்பு வைக்கும் பாணி, கல்கி, சாண்டில்யன் இருவரிடமும் இருந்தது தான்  என்றாலும், இங்கே சில தலைப்புக்கள், கதைக்குள் இருக்கும் கருத்தை,நூலாசிரியர்   என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்றாகவே சொல்லி விடுகின்றன! உதாரணமாக, தன்னைத் தேடி வருவதும் தான் தேடி அடைவதும் என்று ஒரு அத்தியாயத் தலைப்பு! அடுத்த அத்தியாயம் அவரவர்க்கு வேண்டியதை அவரவர்க்கு அருள்வான் என்று ஆரம்பிக்கிறது!

எம்டன் கப்பல் பயணிப்பது, அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களை விவரிக்கும்போது சாண்டில்யனின் கடல்புறா ஆசிரியர் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தெரிகிறது. கதாபாத்திரங்கள் உரையாடிக் கொள்ளும் பகுதிகளில், இரண்டு வரிகள் இலக்கணத்தமிழிலும், அடுத்த ஒன்றிரண்டு  வரிகள் வழக்குத் தமிழுமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அத்தியாயங்களை இன்னும் கொஞ்சம் விவரங்களோடு எழுதியிருக்க முடியும் என்றாலும் கதையை ரொம்பவுமே நீட்டிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, சுருக்கமாக முடித்திருக்கிறார். ஆகம விஷயங்கள், வாசிப்பவர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவை என்பதை மனதில் வைத்துக் கொண்டாவது, கொஞ்சம் விவரித்துச் சொல்லியிருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கும்போது, ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!  முதலில், இப்படி வேறுபட்ட காலங்களைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சமீப நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் பொருத்தி, ஒரு புதினத்தைப் படைப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்திருக்கும் என்பது ஒன்று! அத்தனை விஷயங்களையும் அப்படியே கொட்டி விடவும் முடியாது. ஒரு மையமான சம்பவத்தை மட்டும் வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், சம்பவங்கள்,அதற்கும் மேலாக ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இருந்து  கதையைப் பின்னுவது!

கதை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்! ஒரு மையக் கருத்து! அதைச் சொல்வதற்காகத் தான், காரணத்தைச் சொல்வதற்காகத் தான் காரியங்கள்!  நூலாசிரியர்  அந்த வகையில், ஒரு நல்ல முயற்சியைப் படைத்திருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார்!

எம்டனுக்கு நிகர் எம்டன் தான்! SMS எம்டன் தனிக்காட்டு ராஜாவாக, இந்தியப் பெருங்கடலில் அதை நிரூபித்தது!

இந்தப் புதினத்தை எழுதியதில், சைவ ஆகமங்களைப் பற்றி, சித்தர் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஒரு சின்ன வெளிச்சக் கீறலை, திரு திவாகர் படைத்திருக்கிறார்! படிப்பவர்கள் பகிர்ந்துகொள்ளத் தந்திருக்கிறார்!

SMS எம்டன் கப்பலைப் பற்றியும், இந்தப் புதினத்தைப் பற்றிச் சொல்ல விடுபட்டுப் போனவைகளையும்   அடுத்த பதிவில்  பகிர்ந்து கொள்வோம்!

திரு திவாகர் எழுதிய இதர சரித்திரப் புதினங்கள் 

7 comments:

  1. புத்தாண்டில் புது வலைப்பதிவுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. வாருங்கள் திரு கோவி கண்ணன்!

    இது புத்தாண்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட புது வலைப்பதிவு இல்லை! புத்தகங்களைப் பேசுவதற்காக, பார்த்ததில், கேட்டதில் மனதில் தங்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு வாசகனாக வெளிப் படும் முயற்சி! கிறிஸ்துமஸ் அன்றே நுழைவாயில்திறந்தாயிற்று!

    ReplyDelete
  3. அருமையான அறிமுகம்.. நிச்சயம் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது... ebook ஆக கிடைக்கும் வசதியேதும் உள்ளதா!! முன்பெல்லாம் நூலகங்களில் எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்தேன், கடந்த 3 வரடமாக நூலகத்துக்கு செல்லவே நேரமில்லாதது போன்று கம்பியுற்றரே கதி என்று கிடக்கும் நிலை....

    வாசிக்க ஆரம்பித்தபோது வசிகரித்த சாண்டில்யனின் புத்தகங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிட்டன எனக்கு.. கிட்டத்தட்ட அவருடைய இருபது நாவல்களையாவது படித்திருப்பென்.. அதன் பின் புதிதாக ஒரு நாவலை ஆரம்பித்தால் கூட அடுத்த வரி என்னுமளவுக்கு தொடர்ந்து அவருடைய நாவல்களை வாசித்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. அலுத்துப் போனது சாண்டில்யன் எழுத்தில் இல்லை! கொஞ்ச அதிகமான வர்ணனை, சிருங்காரம் என்று ஒரே மாதிரி எழுதிக் கொண்டிருந்தார் என்று தான் தோன்றும்! ஆனாலும் விளக்கெண்ணெய் குடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சரித்திரத்தைப் படமாகப் படிக்க வேண்டுமே என்று தயங்குபவர்களுக்கு சாண்டில்யன் மாதிரி, ஒரு அற்புதமான ஆரம்பத்தை அவர் போலச் செய்தவர் இல்லை!

    பாரதம் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட, பலதரப்பட்ட மொழி, இனங்களை உள்ளடக்கியது. சாண்டில்யனுடைய கதைகளுமே, பாரதத்தின் பன்முகப்பட்ட வரலாற்றைச் சொன்னவை தான்! உதாரணமாக, மலைவாசல் என்ற அவருடைய கதையை எடுத்துக் கொண்டால், ஹூணர்கள் சாரி சாரியாகத் தொடர்ந்து நடத்திய படையெடுப்பில், வலுவிழந்த குப்த சாம்ராஜ்யம், ஹூணர்களும் கூர்ஜர மக்களும் சேர்ந்து உருவான கலப்பு இனம், இன்றைய ராஜபுத்திரர்கள் என்று நிறையத் தகவல்களைச் சொல்கிறது.

    அது மட்டும் தானா? Devaluation of the currency என்பது இன்றைய காகிதப்பணம் வந்த பிறகுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? அந்த நாணய மாற்றுக் குறைவுகூட குப்த சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்தபோது நடந்தது தான் என்பதை, ஆதாரங்களோடு சொல்கிறது!

    வர்ணனைகள் அலுத்துவிட்டால், அந்தப் பத்தியை மட்டும் ஒதுக்கி விட்டு, சாண்டில்யனை இன்னும் ஒரு தரம், அடுத்து ஒருதரம் வாசித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது போல சாண்டில்யன் கதைகளில் தமிழர் வரலாறு வெளிப்படும். ஆதாரங்களும் தருவார். அவர் கதைகளின் வெற்றி என்பது ஒரு MGR, ரஜினி பாணி போல Hero வின் சாகசங்கள் வெளிப்படும் அழகு...அவனைப் பற்றி குறைவாக மதிப்பிடும் எதிரியை அனாயசமாக அலட்சியமாக கதாநாயகன் சந்திக்கும் அழகு...போர்த் திட்டங்கள் பற்றி விரிவான அலசல்...நாயக நாயகி சரசங்கள்...யவனராணி, கடல்புறா, ஜலதீபம் போன்ற கதைகளையும் பாத்திரங்களையும் மறக்க முடியாது. மைவிழிச்செல்வி, டைபீரியஸ், இதயச்சந்திரன், கனோஜி ஆங்கரே..

    ReplyDelete
  6. எம்டன் பற்றிச் சொல்லும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ தளபதி என்று சொல்லப் பட்டிருக்கிறது...
    புத்தகத்தில் எப்படி சொல்லப் பட்டுள்ளது என்று தெரியாது...
    இந்திய தேசிய ராணுவம் அமைக்கப் பட்டது 1942. நேதாஜி அதன் தலைவரானது 1943. செம்பகராமன் (செண்பகராமன் அல்ல!) எம்டனில் வந்தது 1914. எப்படி அவர் INA யின் தளபதியாக இருக்க முடியும்? 'ஜெய் ஹிந்த்' கோஷத்தின் முன்னோடி, INA முன்னோடி, என்றெல்லாம் நெட்டில் தகவல் அறியக் கிடைக்கிறது. 1934 இல் நாஜிகளால் செம்பகராமன் சித்ரவதை செய்யப் பட்டு இறந்தார்.
    இந்தத் தகவல் தவிர கதை பற்றி தங்கள் விமர்சனங்கள் கதையைப் படிக்கத் தூண்டுபவையாய் அமைகின்றன.

    ReplyDelete
  7. எம்டன் கதாசிரியருடைய பிழை எதுவுமில்லை ஸ்ரீராம்! செய்தியில் தவறு இருந்தால், அது முழுக்க முழுக்க என்னுடையது தான். என்னுடைய குறிப்புக்களில் இருந்து எழுதியதை மறுபடி சோதித்த பொது, தமிழக அரசின் இந்த வலைப் பக்கங்களில் இருக்கும் செய்தி, இந்திய தேசீய ராணுவம் உருஆஅவதர்கு முன்னோடியாக செண்பகராமன் பிள்ளை அமைத்த இந்திய தேசீயத் தொண்டர் படை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தளபதி என்ற வார்த்தை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், மற்றவை மறுபடி சோதித்து உறுதி செய்யப்பட்டவை.

    http://www.tn.gov.in/pressrelease/archives/pr2008/pr170708/pr170708_tyagi_shenbagaraman.pdf

    இதில் இருக்கும் தகவலுமே, 1914 இல் முதல் உலகப் போர் மூண்டபோது எம்டன் கப்பலை இயக்கிவந்தார் என்று தவறான செய்தியோடு இருக்கிறது. செம்பகராமன் எம்டனில் இருந்தார் என்ற வதந்தியோடு, பாண்டிச்சேரி வந்தார் பாரதி, வ வே சு ஐயரைச் சந்தித்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட தவறான சமீப கால "வரலாற்றுத் தொடர்களில்"இருக்கின்றன. . திரு திவாகர், தன்னுடைய புத்தகத்தில், செம்பகராமன் எம்டனில் ஆரம்பகாலங்களில் இருந்திருக்கலாம், ஆனால், 1914 தருணத்தில் அந்தக் கப்பலில் இல்லை என்ற தகவலைஉறுதி செய்து எழுதியிருக்கிறார்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)