Monday, September 20, 2010

பிரம்ம ரிஷி! எண்டமூரி வீரேந்திரநாத்


ராமாயணம் தெரிந்த எவருக்கும் 'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி' என்ற வார்த்தை பரிச்சயமாகியிருக்கும்! கௌசிகன் என்ற ராஜாவாக இருந்து வசிஷ்டருடைய தபோ பலத்துக்கு முன்னால் தான் ஒன்றுமே இல்லை என்பதை சகித்துக் கொள்ள முடியாமல், ராஜ்யபாரத்தைத் துறந்து காட்டில் தவம் செய்ய ஆரம்பித்த கதை, ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ராஜ ரிஷி என்றடைந்த பிறகும் கூட வசிஷ்டரோடு போட்டி, கடுமையான தவம் என்று போய்க் கொண்டே இருந்ததில் ஒரு வழியாக பிரம்ம ரிஷி என்றும் அழைக்கப் பட்டாயிற்று, வரம் கிடைத்தாயிற்று! அப்போது கூட கௌசிகனாக இருந்து விஸ்வாமித்திரனாக மாறிய தபஸ்விக்கு ஒரு குறை!   மும்மூர்த்திகளும் பிரம்மரிஷி என்று அழைத்து வரம் தந்ததனால் என்ன பயன்? அதை வசிஷ்டர் வாயால் அல்லவோ கேட்க வேண்டும்!



வசிஷ்டரும் விஸ்வாமித்திரரை,பிரம்ம ரிஷியே! என்றழைத்த பிறகுதான் விஸ்வாமித்திரர் சாந்தமடைகிறார்! இந்தக் கதையை, தசரதனிடம் விஸ்வாமித்திரர் என்னுடைய வேள்விக்கு அரக்கர்களால் தொந்தரவு வருகிறது. அதைத் தடுக்க ராமனை காவலுக்கு அனுப்பு என்று கேட்டு வரும் தருணம், தசரதன் பிள்ளைப் பாசத்தினால் மயங்கி மறுக்கிற நேரம். வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் கதையை தசரதனுக்குச் சொல்கிறார்.


இது எல்லோருக்கும்  தெரிந்த கதையாக இருக்கலாம்! ஆனால், இந்தக் கதை, இன்றைக்கும் கூட நமக்குள்  நடந்து கொண்டிருப்பது தான்! நம்முடைய நண்பர்கள் வாயால் பாராட்டப் படுவதை விட, நாம் போட்டியாக, எதிரியாக நினைப்பவரிடமிருந்து வருகிற சிறு அங்கீகாரத்துக்காகத் தான் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோமா?


எண்டமூரியின் இந்தச் சிறுகதையில்  நம் ஒவ்வொருக்குள்ளும் இருந்து 'பிரம்மரிஷி' பட்டத்தை எதிர்பார்த்துத் தவிக்கும் இயல்பு என்ன அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!


பிரம்ம ரிஷி!

புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்கிறானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஏன் என்றால் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

என்னைப் போலவே!

நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியத்தில் நுழைந்தவர்கள் இல்லை. இருவரும் சமவயதினரும் இல்லை. அவன் என்னை விட பத்து வயது சிறியவன். எனக்கு ஒரு சின்ன தம்பி இருந்தால் அவனைப் போலவே இருந்திருப்பானோ என்னவோ!

தொடக்கத்தில் நான் துப்பறியும் கதைகள், சிரிப்புத் துணுக்குகள், அம்புலிமாமா கதைகள் போன்றவற்றை எழுதி வந்தேன். பிறகு நாவல்களை எழுத ஆரம்பித்தேன். நான் எழுத ஆரம்பித்த போது தமிழ் இலக்கிய உலகில் பாபுலர் எழுத்தாளர் என்று யாருமே இருக்கவில்லை. நான்தான் முதலிடத்தில் இருந்தேன். ஓரிரு எழுத்தாளர்கள் இருந்தாலும் என்னை தோற்கடிக்கும் அளவுக்கு திறமைப் படைத்தவர்கள் யாருமே இல்லை.

அதற்குப் பிறகு பத்து வருடங்கள் நான் முடிசூடா மன்னனாக இருந்து வந்தேன், இலக்கிய உலகில் சசிதர் காலடி எடுத்து வைக்கும் வரையில்.

ooOOooOOoo

"வணக்கம். என் பெயர் சசிதர்!"

பணிவுடன் கைகளை கூப்பிக்கொண்டே சொன்னான் அவன். பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது போலவே என் கண்களுக்கு முன்னால் தோன்றியது.

"வாங்க" நாற்காலியை காண்பித்துக்கொண்டே அவனை பரிசீலனை செய்வது போலப் பார்த்தேன். அந்த முகத்தில் என்னை ஈர்த்தது ஒரே விஷயம்தான். அவன் கண்களில் தென்பட்ட தூய்மை!

அவன் உட்கார்ந்துகொண்ட பிறகு "சொல்லுங்க" என்றேன்.

"நான் உங்களுடைய நேரத்தைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாமா?" தெளிவான ஆங்கிலத்தில் கேட்டான்.

"வித் ப்ளெஷர்" முறுவலுடன் அலட்சியமாக சொல்லிவிட்டு, ரிலாக்ஸ்ட் ஆக பின்னால் சாய்ந்துகொண்டு சிகரெட்டை பற்றவைத்தேன்.

அவன் ஒரு நிமிடம் என் பக்கம் தயக்கமாக பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்த பைலை டீபாய் மீது வைத்தான். பிறகு சொன்னான். "நான் ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். என் அபிமான எழுத்தாளரான நீங்க இந்த ஸ்க்ரிப்டை படித்து விட்டு தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பீர்கள் என்ற எதிர் பார்ப்புடன் வந்தேன்."

சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் போட்டுவிட்டு மனதில் எழும்பிய எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முன்னால் குனிந்து பைலை கையில் எடுத்துக் கொண்டேன்.

"சப்ஜெக்ட் என்ன?"

அவன் சற்று வெட்கம் கலந்த முறுவலுடன் "யூனிவர்சல் சப்ஜெக்ட், காதல்!" என்றான்.

"காதலைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் பாக்கி ஏதாவது இருக்கிறதா என்ன? இருப்பதை எல்லாம் எங்களைப் போன்ற சீனியர்ஸ் எழுதி முடித்து விட்டோமே?" என்றேன்.

"மன்னிக்க வேண்டும். என் பார்வையில் காதல் என்பது எப்படி சாசுவதம் ஆனதோ. அந்த சப்ஜெக்டும் அப்படித்தான். தட் ஈஸ் எவர் க்ரீன் சப்ஜெக்ட். ஒரு நபர் மற்றொரு நபரிடம் தான் காதலிப்பதாக சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அந்தக் காதலில் தான் பெற்ற உணர்வுகளை எடுத்துச் சொல்வது கடினம். அனுபவத்தை பகிர்ந்து கொள்வது சாத்தியமோ என்னவோ. உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கொஞ்சம் கஷ்டம். அதைத்தான் நான் சப்ஜெக்ட் ஆக எடுத்துக் கொண்டேன். வெறும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல் இது. நாவலை படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஏதோ ஒரு இடத்தில் தன்னை அடையாளம் கண்டுகொள்வான் என்பது என்னுடைய கருத்து." ரொம்ப நிதானமாக, தெளிவாக சொன்னான். அப்படிச் சொல்லும் போது அவன் குரலில் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

அவன் பேசும் முறை, கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பாங்கு எல்லாமே நன்றாக இருந்தன. ஆனால் ஒரு எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளளை சந்திக்கும் போது, அங்கே இல்லாத மூன்றாவது எழுத்தாளனைப் பற்றித் தாழ்வாக பேசி பொழுது போக்கும் இந்தத் துறையில் இத்தனை நேர்மை, மென்மை கொஞ்சம் கூட ஒத்துவராது.

"ஓ.கே. ஆனால் நான் இப்பொழுது சற்று பிஸியாக இருக்கிறேன். ஸ்க்ரிப்டை கொடுத்துவிட்டுப் போ. நாளை மறுநாள் வந்தாயானால் அதற்குள் படித்து முடித்துவிட்டு என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்." நயம் கலந்த குரலில் சொன்னேன்.

மற்றொரு முறை அவன் வணக்கம் தெரிவித்துவிட்டு போய்விட்டான்.

அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ ஸ்க்ரிப்டை மேஜை மீது வீசி விட்டு யாரோ ஒரு வாசகன் என்னைப் புகழ்ந்து எழுதிய கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். அவன் மறுபடியும் வருவதற்குள் அங்காங்கே நாலு வரிகளை படித்துவிட்டு பரவாயில்லை என்றோ, சுமாராக இருக்கு என்றோ சொல்லிவிட்டால் வேலை முடிந்தது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அன்று இரவே நான் ஸ்கிரிப்ட் முழுவதும் படிக்க வேண்டியதாகிவிட்டது.

அதற்குக் காரணம் என் மனைவி சௌதாமினி. மாலை ஐந்து மணி அளவில் சௌதாமினி என்னுடைய அறைக்கு வந்தாள்.

"காபி ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டாள். நான் தலையை உயர்த்தி "கலந்து வை. நானே வருகிறேன்" என்றேன்.

"சரி" என்று சொல்லிவிட்டு திரும்பினாள். போகப் போனவள் நின்று கீழே குனிந்து தரையிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டே "இதென்ன? இங்கே கிடக்கிறது?" என்றாள்.
"எது?"
"தெரியவில்லை. காகிதம் ஒன்று தரையில் கிடந்தது" என்று சொல்லிக் கொண்டே என்னிடம் கொடுக்கப் போனவள் அந்தக் காகிதத்தில் எழுதியிருந்த வரிகளை படித்தாள்.

படித்து முடித்ததும் தலையை உயர்த்தி "இதை எழுதியது யாரு?" ஆர்வத்துடன் கேட்டாள்.

"அதை இப்படிக் கொடு." கையில் எடுத்துக் கொண்டு பார்த்தேன். சசிதரின் ஸ்க்ரிப்ட்தான் அது. அதைத்தான் அவளிடம் சொன்னேன்.

"நான் படிக்கலாமா?"

"தாராளமாக." பைலை அவளிடம் கொடுத்தேன். எப்படியும் நான் அதை படிக்கப் போவதில்லை. அவள் படித்த பிறகு கதையின் சுருக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

சௌதாமினி அந்த ஸ்க்ரிப்டை எடுத்துக்கொண்டு போன பத்து நிமிடங்கள் கழித்து, நானும் எழுந்து ஹாலுக்குப் போனேன். சௌதாமினி ஹாலில் இல்லை. படுக்கை அறையில் ஸ்க்ரிப்டை படிப்பதில் ஆழ்ந்து போயிருந்தாள்.

அன்று இரவு சாப்பிடும்போது சௌதாமினி சொன்னாள். "அவன் யாரோ தெரியவில்லை. மனதின் ஆழத்திற்குள் ஊடுருவுவது போல் எழுதி இருக்கிறான். அந்த ஸ்க்ரிப்டை படிக்கும்போது எனக்கு எவ்வளவு வியப்பு ஏற்பட்டது என்றால், இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் நீங்க அதுபோன்ற நாவல் ஒன்று கூட ஏன் எழுதவில்லை என்று தோன்றியது."

"அவ்வளவு நன்றாக இருந்ததா?" சாதாரணமான குரலில் கேட்டேன்.

சௌதாமினி சராசரி வாசகி இல்லை. ஸ்க்ரிப்ட் படித்துவிட்டு அவள் சொன்ன அபிப்பிராயத்தின் மீதுதான் இத்தனை நாளாய் என்னுடைய படைப்புகளின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டு வந்தன என்று சொன்னால் அது மிகை அல்ல.

அவள் மௌனமாக இருந்ததை பார்த்துவிட்டு மறுபடியும் கேட்டேன்.

"ஆமாம். இதுதான் அவனுடைய முதல் நாவலாக இருந்தால், பப்ளிஷ் ஆவதுதான் தாமதம், உங்களைப் போன்ற ஓரிருவரைத் தவிர மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் தங்களுடைய பேனாவை மூடி வைக்க வேண்டியதுதான்" என்றாள்.

என் மனைவி என் முன்னாடியே வேறு ஒரு எழுத்தாளனை புகழ்ந்து பேசியது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அவளை ஈர்க்கும் அளவுக்கு விஷயம் அதில் என்ன இருக்கிறது?

உறங்கப் போகும் முன் சற்று நேரம் மேலாக புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சாப்பிட்ட பிறகு அந்த ஸ்க்ரிப்டை கையில் எடுத்துக் கொண்டவன், ஒரு எழுத்து விடாமல் படித்தேன். சில இடங்களில் அவன் வெளியிட்ட எண்ணங்கள் கீட்ஸின் கவிதையை மிஞ்சி விட்டன. 

இதுவரையில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பிரமாதமாக யாருமே எழுதவில்லை என்று தோன்றியது.

அன்று இரவு நான் உறங்கவில்லை.

ooOOooOOoo

சசிதர் எழுதிய நாவல் பிரபல பத்திரிகை ஒன்றில் தொடராக வெளிவந்தது. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய இடத்தை இழக்க நான் தயாராக இல்லை.

அதற்குப் பிறகு நான் ஒரு நாவல் எழுதினேன். அந்த நாவலின் முன்னுரையில் நான் ஒரு ஆங்கில நாவலை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் என்றும், ஆனால் என்னுடைய சக எழுத்தாளர்களில் ஒருவர் அந்நாவலை அப்படியே காபி அடித்து எழுதிவிட்டதால் அந்த எண்ணத்தை கைவிட்டேன் என்றும் எழுதியிருந்தேன். அதோடு சசிதர் எழுதிய நாவலின் கதையை சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

இப்படி எழுதுவதால் எழுத்துலகில் என் எதிரியான சசிதர் ஆங்கில நாவல்களை காப்பி அடித்து எழுதுவான் என்ற எண்ணத்தை வாசகர்களின் மனதில் மறை
முகமாக பதிய வைத்தேன்.


இது நடந்த மூன்று மாதங்கள் கழித்து சசிதர் எழுதிய ஒரு நாவல் வெளியானது. திருவையாற்று காவேரியின் பின்னணியில் மிக அற்புதமாக நாவலை எழுதியிருந்தான். "ஆங்கில நாவல்களை காப்பி அடித்து எழுதுகிறான்" என்று அவன் மீது குற்றம் சாட்ட வாய்ப்பு இல்லாத விதமாக வேதங்களை, உபநிஷத்துக்களை கோர்வையாக கலந்து அந்த நாவலை மெருகேற்றி இருந்தான். அவ்வளவுதான்! இலக்கிய மதிப்பீட்டாளர்களின்  பார்வையில் சசிதர் ரொம்பவும் உயர்ந்துவிட்டான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் ஆங்கில நாவல்களை நிறைய படிப்பேன். அவற்றிலிருந்து சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து அங்கும் இங்குமாய் ஜோடனைகளை செய்து நாவல்களை மார்க்கெட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருந்தேன். நான் எழுதும் ரொமான்ஸ் முழுவதும் ஆங்கில இலக்கியத்திலிருந்து சுருட்டப்பட்டதுதான். காமெடி  ஓட்  ஹவுசுடையது.

ஆனால் நான் செய்து கொண்டிருந்த இலக்கியத் திருட்டை என் எதிரி மீது சுமத்த வேண்டும் என்று நான் செய்த முயற்சி தோல்வி அடைந்ததோடு, அவனுக்குள் புதைந்திருக்கும் உண்மையான எழுத்தாளன் வெளியில் வருவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இலக்கியத்தின் மீது முழுமையான  ஈடுபாடு இருக்கும் வாசகர்களின் மனதில் சசிதர் நிலையான இடத்தை பெற்று விட்டான்.

அவனை மனதளவில் ப்ரேக் செய்யும் அளவுக்கு எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் .......

இயக்குனர் ஒருவர் என்னிடம் வந்து என்னுடைய கதையை சினிமாவாக எடுக்கப் போவதாகச் சொன்னார். தமிழ் திரைப்பட உலகில் அந்த இயக்குனருக்கு நல்ல பெயர் இருந்தது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. என் மகிழ்ச்சிக்குக் காரணம் முதல் முறையாக என்னுடைய கதை திரைப் படமாக வரப் போகிறது என்பதால் இல்லை. சசிதருக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு!

உடனே அந்த விஷயத்தை அவனிடம் சொல்வதற்காக கிளம்பினேன்.
நான் போன பொழுது அவன் வீட்டின் முன்னால் மாருதி கார் ஒன்று நின்றிருந்தது. வந்தது யாராக இருக்கும் இன்று நினைத்துக் கொண்டே உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.

வெளியில் சசிதரின் அசிஸ்டென்ட் போலும், உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டது போல் அவள் கண்கள் மின்னின.

பரபரப்புடன் எழுந்து கொண்டு, "சாரிடம் நீங்க வந்திருப்பதாக சொல்லட்டுமா?" என்று கேட்டாள்.

"தேவையில்லை. உள்ளே யார் இருக்கிறார்கள்?" உரிமையுடன் கதவு அருகில் சென்றுகொண்டே அவளிடம் கேட்டேன்.

"டைரக்டர் சோமசுந்தரத்துடன் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார்."

"என்ன?" புரியாதவன் போல் மீண்டும் கேட்டேன்.

"ஆமாம் சார். டைரக்டர் சோமசுந்தரம் தெரியும் இல்லையா? அவர் சசிதர் சாரின் கதையை சினிமாவாக எடுக்கப் போகிறார்" என்றாள்.

என்னால் அந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

வேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். சோமசுந்தரம் சாதாரண டைரக்டர் இல்லை. ஒரே சினிமாவை பல மொழிகளில் எடுத்து வெற்றி பெற்று, புகழின் உச்சியில் இருப்பவர். அவருடன் ஒப்பிட்டால் என் கதையை சினிமாவாக எடுக்க முன் வந்த டைரக்டர் கால்தூசு கூட பெறமாட்டார் என்று எனக்குப் புரிந்துவிட்டது.

அதற்கு மேல்  அந்த விஷயத்தை சசிதரிடம் சொல்ல முடியாமல் திரும்பிவிட்டேன்.

ooOOooOOoo

பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. அதுநாள் வரையில் இலக்கியத் துறையில் சசிதரை மிஞ்சக் கூடிய எழுத்தாளர் யாருமே உருவாகவில்லை. நான் இரண்டாவது இடத்தில்தான் இருந்து வந்தேன். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சசிதர் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.என்னுடைய ஸ்டாண்டர்ட் காரை விற்று விட்டு ·பியட் காரை வாங்கினேன். அதை அவனிடம் காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய தவிப்பு. அதை வாங்கிய அடுத்த நாளே சசிதரைப் பார்க்கக் கிளம்பினேன்.

இப்போது அவனுடைய வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.

அவனுடைய புது பங்களா ரொம்ப பிரம்மாண்டமாக இருந்தது. விலை உயர்ந்த ·பர்னிச்சர், கிரானைட்டால் இழைக்கப்பட்ட தரை, வால் கார்பெட். எல்லாவற்றையும் பார்த்த பிறகு எனக்குள் நான் குன்றிப் போய்விட்டேன்.

அங்கிருந்து வந்த பிறகு முதல் முறையாக என்னை நான் சுயபரிசோதனை செய்துகொண்டேன். அவனுடைய முன்னேற்றதிற்கான காரணங்களை ஆராய்ந்தேன். அப்பொழுது புரிந்தது எனக்கு. நான் செய்ய வேண்டிய முதல் காரியம் என் எதிரியின் ஸ்தானத்தை தாழ்த்துவது இல்லை. அவனை விட ஒரு படி முன்னால் இருப்பதற்கு முயற்சி செய்வது.

மாதத்திற்கு ஒரு நாவல் என்ற கணக்கில் ரொம்ப சுலபமாக எழுதித் தள்ளும் நான் இந்த முறை புது கருத்துடன் நாவலை எழுதத் தொடங்கினேன். அதை எழுதி முடிக்க எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பிடித்தது. அதை எழுதும் போது தூக்கம் சாப்பாடு, இரவு பகல் எதுவுமே எனக்கு நினைவு இருக்கவில்லை. என்னுடைய லட்சியமெல்லாம் ஒன்றுதான். தாழந்துவிட்ட என் இடத்தை மறுபடியும் கைப்பற்றுவது மட்டுமே இல்லை. நிலைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்று.

எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் வேறு ஒன்று இருந்தது. இலக்கிய உலகில் சசிதரை காணாமல் அடித்துவிட வேண்டும் என்ற வெறி. சஸ்பென்ஸ், செக்ஸ், வயலென்ஸ் என்று எல்லா விதமான மசாலாக்களையும் கலந்து எழுதினேன்.

ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்த நாவல் வெற்றி பெறவில்லை. பொருள் ரீதியாகவும் எனக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை. எழுத்து உலகிலும் என்னுடைய இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. என் நாவல் தோல்வி அடைந்ததற்கான காரணம் புரிந்துவிட்டது. அதில் "மனம்" இருக்கவில்லை.

நான் எதிர்பார்த்த விதமாக என்னுடைய நாவல் சசிதரின் இடத்தை அசைக்க முடியாமல் போனதும் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நாவல் மீத நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தென். கமர்ஷியல் ஆக ஹிட் ஆகாவிட்டாலும் நான் வருத்தப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் இலக்கிய ரசிகர்கள் கூட அந்த நாவலை புறக்கணித்துவிட்டது எனக்கு ரொம்ப வேதனையைத் தந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இனி நேர் வழியில் போனால் பிரயோசனப்படாது என்று தோன்றியது. என்னுடைய செல்வாக்கை எல்லாம் பயன்படுத்தி மாநில அளவில் தரப்படும் இலக்கியப் பரிசை விலை கொடுத்து வாங்கினேன். இதற்காக இருபத்தையாயிரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டி வந்தது. இருந்தாலும் நான் கவலைப்படவில்லை. செலவை விட முக்கியம் சசிதரை தோற்கடிப்பது. அவார்டுக்காக என்னுடைய பெயரை வெளியிட்ட பிறகு எனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பத்திரிகை ஆசிரியர்களை அழைத்தேன். 

பப்பளிஷர்களும் வந்தார்கள். பெரிய பார்ட்டீ நடந்தது. அவர்கள் போகும் முன் அசல் விஷயத்தைச் சொன்னேன். எனக்கு அவார்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கான செலவுகளை நானே ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். சம்மதம் தெரிவித்தார்கள். பாராட்டு விழா பற்றி நாளேடுகளில் தொடர்ந்து விளம்பரம் செய்ய வைத்தேன். சீ ஃ·ப் கெஸ்டாக என் எதிரியான சசிதரை அழைக்கச் சொன்னேன். எல்லாம் நான் நினைத்தது போலவே நடந்தது. என்னுடைய ரசிகர்கள் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார்கள். சசிதரை சீ ஃ·ப் கெஸ்டாக அழைத்தார்கள்.

ரொம்ப த்ரில் ஆக உணர்ந்து கொண்டே ஆடிடோரியத்திற்கு முன்னால் காரில் போய் இறங்கினேன்.

ஆனால் அங்கே விழாவுக்கு வந்திருந்த இலக்கிய ரசிகர்கள் முதற் கொண்டு, முக்கியமானவர்கள் வரை எல்லோரும் சசிதரை சூழ்ந்து இருந்தாகள். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. 

மாநில அளவில் இலக்கியப்பரிசு பெற்ற என்னை விட்டு விட்டு எழுத்துலகில் நேற்று நுழைந்த சசிதரின் ஆட்டோகிராப் வாங்குவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களைப் பார்க்கும் போது எனக்குக் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டன.

என்னுடைய மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த நான் சசிதர் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. பின்னால் அசல் விஷயம் தெரியவந்தது. அதற்கு முதல் நாள் அவனுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது.

ooOOooOOoo

சசிதரின் ஸ்டேட்டஸ் மேலும் உயர்ந்தது. நான் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அவனுடைய இடத்தை இறக்க வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவனோ எந்த விதமான வாய்ப்பும் எனக்குக் கிடைக்காத விதமாக கவனமாக இருந்து வந்தான்.

பிறகு ஒரு கதை எழுதினேன். அதில் கதாநாயகன் ஒரு எழுத்தாளன். அவன் தன்னுடைய செயலாளர்களிடமிருந்து புதுப் புது கருத்துக்களை பெற்றுக் கொண்டு கதைகளை உருவாக்குவான் என்று எழுதி சசிதர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினேன். அவன் சுயமாக எழுத மாட்டான் என்றும் கோஸ்ட் ரைட்டர்ஸை விட்டு எழுத வைப்பான் என்று பிரசாரம் செய்தேன்.

ஆனால் இந்தக் குற்றச் சாட்டுகள் எதுவும் அவனுடைய மார்க்கெட் மீதோ, கேரீர் மீதோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில நாட்கள் சசிதர் விஷயத்தில் தலையிடாமல், என்னுடைய கேரீர் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு எழுத்தாளனாக எனக்கு திருப்தி கிடைக்காத நாவல்களை எழுதுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. கவனமாக ஆராய்ந்தேன். சசிதரால் வாசகர்களை எப்படி ஈர்க்க முடிந்தது என்று புரிந்து கொண்ட பிறகு என்னுடைய நடையை மாற்றி வேறு ஒரு நாவலை எழுத முடிவு செய்தேன்.

இரண்டு வருடங்கள் தொடர்ந்து சப்ஜெக்ட்டை ஆராய்ச்சி செய்தேன். அந்தக் கால கட்டத்தில் நான் எழுதியது ஒரே ஒரு நாவல் அதை எழுதுவதற்கு நூற்றுக் கணக்கான புத்தகங்களை ரெ·பர் செய்ய வேண்டியிருந்தத. குறிப்பிட்ட இனத்தை மக்களின் வாழ்க்கையை ஸ்டடீ செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய லட்சியம் ஒன்றுதான். சசிதரை மிஞ்சும் அளவுக்கு ஒரு நாவலையாவது எழுத வேண்டும்.

நாவலை எழுதி முடித்த பிறகு பப்ளிஷரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். வாழ்க்கையில் ஒரு நாளும் அந்த அளவுக்கு டென்ஷனை நான் அனுபவித்தது இல்லை. நஷ்டத்தைப் பற்றிக் கூட யோசிக்காமல் குறைந்த விலைக்கு டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குக் கொடுத்தேன்.

அவ்வளவுதான்! முதல் பதிப்பு வேகமாக விற்கத் தொடங்கியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு கூட வெளி வந்து விட்டது.

சரியாக அப்பொழுதுதான், நான் மட்டுமே இல்லை, யாருமே ஊகித்திராத விதமாக என்னுடைய நாவலுக்கு ஞானபீட அவார்ட் அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியால் சசிதரை மிஞ்சி விட்டேன். 

இப்பொழுது முதல் இடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான்தான்.
என் புத்தகங்களின் விற்பனை இரு மடங்காகிவிட்டது. ஞானபீட் அவார்ட் பெற்ற நாவலை படத் தயாரிப்பாளர் ஒருவர் ஐந்து லட்சம் பணம் கொடுத்து  உரிமைகளை வாங்கிக் கொண்டார். அதை டைரக்ட் செய்யப் போகிறவர் சோமசுந்தரம்.

நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேன். எங்கே போனாலும் பாராட்டு விழாக்கள்! ஆட்டோகிராப்கள்!

பப்ளிஷர்களிடம் என்னுடைய ராயல்டீயை உயர்த்தினேன். எடிட்டர்கள் என்னை சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

என்னுடைய வேலைகளில் மூழ்கியிருததால் சசிதர் என்ன செய்கிறான், என்ன எழுதுகிறான் என்று பொருட்படுத்தவில்லை. இனி மேல் என்ன எழுதினாலும் என்னுடைய படைப்புகளுக்கு பிறகுதான். அது மட்டும் நிச்சயம்.
எடிட்டர்களாகட்டும், டைரக்டர்களாகட்டும் என் படைப்புகளுக்குத்தான் முக்கியத்தும் கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நான் விரும்பியதும் அதைத்தான்.

இந்த அளவுக்கு வெற்றியைச் சாதித்த பிறகு நான் சசிதரின் வீட்டுக்குக் கிளம்பினேன். எனக்கு ஞானபீட  அவார்ட் கிடைத்த விஷயம் அவனுக்கு முன்னாடியே தெரிந்திருக்கலாம். ஆனால் என் வாயால் சொல்லி அவன் கண்களில் தெரியும் பொறாமையைப் பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

நான் போன போது அவன் அந்த வீட்டில் இல்லை. அதை விற்று விட்டு ஊர் கோடியில் இருக்கும் தோட்டத்தில் குடியிருக்கிறான் என்று தெரிந்தபோது வியப்பு அடைந்தேன். உள்ளூர மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு முறை வெற்றி கிடைத்தால் போதும், அதனை பிணைத்துக் கொண்டு அதிர்ஷ்டமும் வந்து சேரும் என்று நினைத்துக் கொண்டேன்.

உடனே அவனைச் சந்திக்கப் புறப்பட்டேன். கிட்டத்தட்ட ஊர் எல்லையைத் தாண்டி இருந்தது அந்த தோட்டம். சின்னதாக இருந்தாலும் ரொம்ப அழகாக இருந்தது.

காரை விட்டு இறங்கி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே கால் எடுத்து வைத்தேன். ஒரு ஆசிரமத்திற்கு உரிய சூழ்நிலை அங்கே நிலவியிருந்தது. நடைபாதைக்கு இரு பக்கமும் பூஞ்செடிகள், நடுவில் சின்னதாக ஒரு ஓலை குடிசை. சற்று தொலைவில் பள்ளிக்கூடமும், அதற்கு முன்னால் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மாணவர்கள் தென்பட்டார்கள். மற்றொரு பக்கம் ஊனமுற்றவர்களுக்காக ஏற்பாடு செய்த பள்ளி இருந்தது.

நான் குடிசையை நெருங்கியபோது அங்கே வராண்டாவில் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு பகவத்கீதையை படித்துக் கொண்டிருந்த சசிதரன் தென்பட்டான்.

அரவம் கேட்டு தலையை உயர்த்தியவன், என்னைப் பார்த்ததும் பகவத் கீதையை கண்ணில் ஒற்றிக் கொண்டு மூடிவைத்துவிட்டு "வாங்க" என்றான்.
நான் முன்னால் நடந்து அவன் காட்டிய ஓலை தடுக்கின் மீது உட்கார்ந்து கொண்டேன். அவனும் எனக்கு எதிரில் வந்து அமர்ந்துகொண்டே "அவார்ட் கிடைத்திருப்பதாக பேப்பரில் படித்தேன், வாழ்த்துக்கள்" என்றான்.

"ஆனால்... இதென்ன? நீ ... இப்படி இங்கே..?." குழப்பத்துடன் கேட்டேன்.
அவன் முறுவலித்து விட்டு பேசாமல் இருந்தான்.

"அத்தனை சொத்தையும் என்ன செய்தாய்?"

"முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டேன்." முறுவல் மாறாமல் சொன்னான்.

"என்ன?" வியப்படைந்தேன். "அப்படி என்றால் உன் வாழ்க்கைக்கு வழி என்ன?" என்று கேட்டேன்.

"மனிதனாக வாழ்வதற்கு பங்களாக்கள், கார்கள், ஸ்டேடஸ் எதுவுமே தேவையில்லை என்று தெரிந்து கொண்டேன். எனக்கு இது போதும் என்று தோன்றியது. இங்கே நான் வயிறு நிரம்ப சாப்பிடுகிறேன். மீதம் இருப்பதில் மற்றவர்களுக்கும் உதவி செய்கிறேன். இதில் எனக்கு முழுத் திருப்தி கிடைக்கிறது."

ஆழமான மூச்சு ஒன்று என்னையும் அறியாமல் வெளியில் வந்தது. மறுபடியும் அவனே சொன்னான்.

"அங்கே நாம் இருந்த துறையில் எப்போதும் அதிருப்தியாகத்தான் உணர்ந்து வந்தேன். சில சமயம் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சுயகௌரவத்தையும் இழக்க வேண்டிய நிலை. எழுத்தாளன் என்ற முறையில் எவ்வளவோ சாதித்தாலும் ஒரு மனிதனாக தனித்தன்மையை இழக்க முடியாது என்று தோன்றியது. மனதுடன் போராட்டம் நடந்த பிறகு இந்த முடிவுக்கு வந்தேன்."

"அப்படி என்றால் எழுத்துத்துலகிலிருந்து விலகிக் கொண்டாற்போல் தானா?"

"முழுவதுமாக! இனி மேல் என்னால் எழுத முடியாது. இது வரையில் நான் எதுவுமே படிக்கவில்லை. முதலில் இந்த உலகத்தைப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கோபதாபங்களுக்கு, கலவரங்களுக்கு மூலகாரணத்தை சோதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதை நீங்க வைராக்கியம் என்று அழைத்தாலும் சரி, விரக்தி என்று சொன்னாலும் சரி. எனக்கு ஆட்சேபணை இல்லை. முதலில் எனக்குள் இருக்கும் "நான்" யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்." சொல்லி முடித்தான்.

சற்று நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தேன். காரில் வரும் போது ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது அவன் எழுதியது தான்.

"ஞானமே இல்லாத போது என்னை பெரிய ஞானி என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் ஞானம் வந்த பிறகு என்னைப் போன்ற முட்டாள் எவனும் இருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டேன்."

நான் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக மேலே மேலே உயரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வளர்ச்சி என்பது ஒரு வட்டம் போன்றது என்றும், புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வந்து சேர்க்கும் என்றும், அதுதான் உண்மையான வேதாந்தம் என்றும் அவன் உணர்ந்து கொண்ட அளவுக்கு அவ்வளவு சீக்கிரமாக நான் புரிந்து கொள்ளவில்லை.

எப்போதும் அவன் என்னை விட ஒரு அடி முன்னாலேயே இருக்கிறான். எனக்கு பின்னால் பயணத்தைத் தொடங்கியவன், என்னையும் தாண்டிப் போய்விட்டான். மனதளவில் என்னைவிட உயர்ந்து விட்டான். 

எதிர் காலத்தில் நானும் வேதாந்தியாக மாறலாம்.

ஆனால் அதிலும் அவன் என்னை விட ஒரு படி முன்னால்தான் இருக்கிறான். 

ooOOooOOoo

தி பெஸ்ட் ஆ·ப் எண்டமூரி வீரேந்திரநாத்  (சிறுகதைத் தொகுப்பு)
எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்

அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர், சென்னை வெளியீடு.
 

Monday, September 13, 2010

மீண்டும் எண்டமூரி வீரேந்திரநாத்..!


எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு வர்ண ஜாலம் செய்யும் இந்த எழுத்தாளர்  என்னை அந்த அளவுக்கு மயக்கி இருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் ஒரு வித்தியாசமான பார்வை, மனித மனங்களில் வெளிப்படும் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்துத் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கும் எண்டமூரியின் கதை சொல்லும் திறமையை நான் ஒரு இருபது  வருடங்களுக்கு முன்னால் ரசித்த மாதிரியே, இன்றைக்கு மறுவாசிப்பு செய்கிற இந்தத் தருணத்திலும் கூட ரசிக்க முடிகிறது, தொய்வில்லாமல் கதையை நகர்த்திக் கொண்டுபோகிற அவருடைய வேகத்தையும், சம்பவங்களைப் பின்னும் லாவகத்தையும்  இப்போது கூட வியப்புடன் தான் பார்க்கிறேன்.

துளசிதளம், மீண்டும் துளசி இரண்டு கதைகள் தான் வார இதழில்  தொடராக வந்தபோது படித்தது. மற்ற எல்லா நாவல்களையும், புத்தக வடிவில் தான் சேகரம் செய்ய ஆரம்பித்தேன். பெரும்பாலானவை  சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்பில் வெளி வந்தவைதான். எண்டமூரியின் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு, திருமதி கெளரி கிருபானந்தன் எண்டமூரியின் கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்த பிறகு, அதுவும் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் வெளிவந்தவைதான், கிடைத்தது.

உடுமலைடாட்காமில் கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் வெளியீடாக பர்ணசாலை,  த்ரில்லர்  என்ற இரண்டு நாவல்களை வாங்கிய பிறகு, நண்பர் ஒருவர் தி பெஸ்ட் ஆப் எண்டமூரி வீரேந்திரநாத் என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். இதைக் கொண்டு வந்து கொடுக்கும்போதே, அவனவன் போர்ஹே, செகாவ், என்று உலக இலக்கியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான்! நீ என்னடாவென்றால், லோகல் ஆசாமிகள், மிகச் சாதாரணமான கதைகள், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாலு ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறாயே என்று கொஞ்சம் அதிருப்தியுடனேயே  ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போய்விட்டார்.

ஒரு கதை என்பது, அதை வாசிப்பவன் மனதில் என்னென்ன தாக்கத்தை, சிந்தனையைத் தோற்றுவிக்கிறது என்பதை வைத்து மட்டுமே அதன் தரத்தை எடைபோட்டுப் பழகியவன் என்பதால்,நண்பருடைய கேள்விக்கு நேரடியான பதிலைச்  சொல்லவில்லை.சொல்லித் தானாக வேண்டும் என்ற நிர்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இங்கே தமிழ் வலைப்பதிவுகளில், ஆணாதிக்க வக்கிரம், பெண் ஈயம், அப்புறம் சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் சொன்னாரா, பதிவுகளில் போட்டுத் தாக்கு என்ற மாதிரியான கலாசாரம் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆணோ, பெண்ணோ,எந்த ,ஒரு விஷயத்தையும்  எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கிறோம் என்பது தான் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதை மூன்றே  கதாபாத்திரங்களை வைத்து எண்டமூரி வீரேந்திரநாத் படைத்திருக்கும் இந்தச் சிறுகதை எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது என்பதை நினைத்துப் பார்த்தேன்! 

இந்தக் கதையில் வரும் விசுவநாதன் பாத்திரம், சொல்வதாக வரும் ஒரே ஒரு பாரா, மனித மனங்களில் தோன்றும் விகாரத்தை, அதை மாற்றிக் கொள்ள ஒரு சின்ன முயற்சியாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வியை முன்வைக்கிறது பாருங்கள்! அங்கே தான் இருக்கிறது, பிரச்சினையும், அதற்கான  தீர்வும்! பெரும்பாலான தருணங்களில் தீர்வு நம் கண் முன்னால் இருப்பதைப் பார்க்கத் தவறுகிறோம் என்பதை அழகாகச் சொல்லும் சிறுகதை இது.

அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா....!



வராண்டா பையன்

ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை  எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை.

வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்பதும் அவளுடைய பொழுதுபோக்கு. அவளுடைய கணவனுக்கு எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. மாலை ஐந்தரை மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான். பிறகு இருவருமாக சேர்ந்து சினிமா, டிராமா, பீச் என்று கிளம்புவார்கள். பெரும்பாலான இளம் பெண்கள் தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ ராதாவின் தற்போதைய வாழ்க்கை அப்படித்தான் இருந்தது.

அன்றும் கணவன் வங்கிக்கு சென்றபிறகு ராதா பத்திரிகையை படித்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தபோது வாசற்கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்று வியப்படைந்துகொண்டே எழுந்து போய் கதவைத் திறந்தாள்.

வராண்டாவில் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். கல்லூரி மாணவன் போல் தென்பட்டான்.

"என்ன வேண்டும்?" ராதா சற்று பயந்துகொண்டே கேட்டாள். அந்த ஏரியாவில் வீடுகள் தள்ளித் தள்ளி இருந்தன. எதிரே நின்றிருந்த இளைஞன் பார்ப்பதற்கு ரவுடியை போல் முரட்டுத்தனமாக இருந்தால். கையில் சிகரெட் இருந்தது.
"உங்கள் வீட்டில் அறை காலியாக இருக்கிறதென்று முரளி சொன்னார்."

முரளி கணவனின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர். முன் அறையை, அதற்கு அடுத்து இருந்த அறையை யாராவது புது தம்பதிகளுக்கு வாடகைக்கு விட்டால் நல்ல பொழுதாக போகும் என்று நினைத்து ராதா கணவனிடம் சொல்லியிருந்தாள். முரளி இப்படி சின்னப் பையனை அனுப்புவார் என்று எதிர்பார்க்கவில்லை.

"அறை எதுவும் காலியாக இல்லை." ராதா கடினமான குரலில் சொன்னாள்.

அவன் நகரவில்லை. "அப்படி என்றால் முரளி சார் பொய் சொல்லி இருக்கிறாரா?" என்றான்.

அவன் தன்னை எதிர்க் கேள்வி கேட்டதும் ராதாவுக்குக் கோபம் வந்தது.

"அறைகள் இல்லை, போர்ஷன் இருக்கு" என்றாள்.

"பரவாயில்லை. போர்ஷன் முழுவதையும் நானே எடுத்துக்கொள்கிறேன்" என்றான்.

"தனியாக இருப்பவர்களுக்கு தரமாட்டோம்."

"நான் தனியாக இருக்கிறேன் என்று யார் சொன்னார்கள்?"

"அப்போ .... உங்களுக்கு திருமணமாகிவிட்டதா?"

"திருமணம் ஆகாதவர்கள் எல்லாம் இந்த உலகில் தனியாட்கள்தானா?" என்று சொன்னவன் கடைசியாக சிரிப்பை சேர்த்தான். அந்தச் சிரிப்பு 'நீ சொன்னதற்கு பதிலடி கொடுத்து விட்டேன் பார்த்தாயா' என்பது போல் இருந்தது.

"சாரி" என்று சொல்லிவிட்டு ராதா கதவைச் சாத்திக்கொண்டாள். அன்று மாலை கணவன் வந்தபிறகு விஷயத்தைச் சொல்லி முரளிக்கு நன்றாக டோஸ் கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் கணவன் வரும் போதே அந்த இளைஞனை உடன் அழைத்து வந்ததை பார்த்து வாயடைத்துப் போய் நின்றுவிட்டாள். கணவனை தனியாக உள்ளே அழைத்து ஏதோ சொல்ல நினைக்கும் முன்பே அந்த இளைஞனுக்கு அந்த இரண்டு அறைகளைக்  காண்பித்தது, அவன் தலையை அசைத்துவிட்டு அட்வான்ஸ் கொடுத்தது ... எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

மறுநாள் சாமான்களை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இளைஞன் கிளம்பிப்போன பிறகு கணவனுடன் சண்டை போட்டாள். "இதுபோன்ற கல்லூரி இளைஞர்களுக்கு கொடுப்பதற்கு இது என்ன லாட்ஜிங் ஹவுஸ் என்று நினைத்து விட்டீர்களா?"

விஸ்வநாதன் திகைத்து விட்டான். " என்ன ராதா? இத்தனை பெரிய வீட்டில் பொழுதே போகவில்லை என்று சொன்னது நீதானோ?"

"அதற்காக கல்லூரி இளைஞனை கொண்டு வந்து குடிவைப்பார்களா? யாராவது பெண்கள் இருந்தால் நீங்க அலுவலகம் சென்ற பிறகு பேசிக் கொண்டு இருக்கலாமே என்று நினைத்தேன்" என்றாள்.

அவளைச் சமாதானப்படுத்துவதற்கு அவன் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. அரைமனதுடன் அவள் ஒப்புக்கொள்ளும்போது இரவு பதினோரு மணியாகிவிட்டது. சாதாரணமாக எந்த விவகாரமாக இருந்தாலும் ராதாவின் பிடிவாதம்தான் ஜெயிக்கும். அதற்காக மூர்க்கமாக பிடிவாதம் பிடிக்கும் பெண் இல்லை அவள். ரொம்ப உற்சாகமாக இருப்பாள். அதிலும் இரவு வேளைகளில் ரொம்பத்தான். சிலசமயம் அவள் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியாது. கணவனை திருப்திப்படுத்துவதன் மூலமாக டாமினேட் செய்யும் மனைவி மற்ற எல்லா விஷயங்களிலிலும் அவனைவிட ஒரு படி உயரத்தில் இருக்க முடியும். பெண் ·ப்ரிஜிட் ஆக இருக்க இருக்க கணவன் சுயநலம் பிடித்தவனாக, தான் சொன்னதுதான் நடந்தாக வேண்டும் என்று வீம்பு கொண்டவனாக மாறுவான். ஒரு தடவை இல்லற வாழ்க்கையில் அவனுக்கு திருப்தி கிடைக்க ஆரம்பித்தபிறகு தனக்குத்தானே அதிகாரத்தை மனைவியிடம் ஒப்படைத்து விடுவான். இந்த சின்ன சைகலாஜிகல் பாயிண்ட் அந்தக் கணவன் மனைவிக்கு தெரியாவிட்டாலும் அதுதான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் கஷ்டம் எதுவும் இல்லை என்பதோடு அந்த தம்பதிகள் மேலும் சந்தோஷமாக இருந்தார்கள். தனிமையில் இருக்கும்போது அவள் கணவனை "என்னடா!" என்று அழைப்பாள். சந்தோஷம் அதிகமாகி விட்டால் சில விஷயங்களில் அவளே உரிமை எடுத்துக் கொள்வாள். அந்த விவரங்கள் எல்லாம் இங்கே தேவையில்லை என்பதால் விட்டு விடுவோம்.



"நீங்க எவ்வளவு வேண்மானாலும் சொல்லுங்கள். எனக்கு அந்த ஹிப்பி பையனை கொஞ்சம்கூட பிடிக்கவில்லை" என்றாள். அவள் வார்த்தைகளில் முன்பு இருந்த கடினம் இல்லாதது கண்டு விஸ்வநாதன் மகிழ்ச்சி அடைந்தான் அவன் முரளிக்கு முதல் நாளே ரொம்ப பெருந்தன்மையோடு வாக்குக் கொடுத்து விட்டிருந்தான்.

மறுநாள் சரியாக பதினோரு மணிக்கு அந்த இளைஞன் வந்துவிட்டான். வாசலில் நாய் ஒன்று வள் வள் என்று குலைத்த சத்தம் கேட்டது. காம்பவுன்ட் சுவரைத் தாண்டி நாய் எப்படி உள்ளே வந்திருக்குமுடியும் என்று வியப்பு அடைந்தவளாய், படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பக்கத்தில் வைத்தவிட்டு கதவைத் திறந்து பார்த்தாள்.

அவனை வராண்டாவில் பார்த்ததும் தன்னையும் அறியாமல் ஓரடி பின்னால் வைத்தாள்.

"ஹலோ!" என்றான் அவன். அவள் அவனைப் பார்க்கவில்லை. கையில் பிடித்திருந்த சங்கிலியை அறுத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னங் கால்களில் குதித்துக் கொண்டிருந்த சடைநாய் குட்டியை, மற்றும் அவன் பின்னாடி இருந்த சாமான்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தனை சாமான்களுடன் நான்கு குடும்பங்கள் தாராளமாய் குடும்பம் நடத்தலாம். ஆனால் அந்த சாமானில் எதுவும் குடித்தனம் நடத்த பயன் படும் பொருட்கள் இருக்கவில்லை. அவன் இடுப்பு உயரத்திற்கு வரும் அளவுக் பெரிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருந்தன. கிடார் உருவத்தில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. நான்கைந்து பெரிய பெரிய ·போட்டோக்கள் இருந்தன. பெரிய மரப் பெட்டி. துணிமூட்டையிலிருந்து இரண்டு மூன்று ஜீன்ஸ் உடைகள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன.
திறந்த வாயை மூடாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு இந்த உலகத்திற்கு வந்தாள்.

"கொஞ்சம் என்னுடைய அறையின் கதவை உள் பக்கத்திலிருந்து திறக்கறீங்களா?" என்று கேட்டான்.

"ப்ளீஸ் கோ! வி ஆர் நாட் இன்டரெஸ்டெட் இன் லெட்டிங்" என்று கத்த நினைத்தவள் வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டு உள்ளே போனாள்.

படுக்கை அறைக்குள் சென்று அதற்கு அடுத்த அறையின் வழியாக போய்க் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அந்த அறையிலிருந்து அவன் தங்களுடைய படுக்கை அறையை பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தவளாய் வேகமாக சென்று கதவுகளை படாரென்று சாத்தினாள். ரோஷமும், யார் மீது  என்று தெரியாத கோபமும் ஒன்று சேர அவள் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது. தன்னுடைய சுதந்திரத்தை யாரோ பறித்துக் கொண்டு விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பக்கத்து அறையில் அவன் சாமான்களை எடுத்து வைக்கும் சத்தம்கேட்டது. தெளிவாக ... ஒவ்வொன்றும். அப்படி என்றால் தங்களுடைய அறையில் ஏற்படும் சத்தமும் அந்த அறையில் இருப்பவர்களுக்கு ஸ்பஷ்டமாக கேட்கும். அப்படித்தானே.

டேபிள் லேம்பை வீசியெறிய வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்து. அதற்குள் வெளியில் கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. அவள் படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தாள்.அந்த இளைஞன்தான்!

"எக்ஸ்க்யூஸ் மி. குடிக்க கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?"

"முடியாது" என்று சொல்லிவிட்டு முகத்தின் மீதே கதவைச் சாத்த வேண்டும் என்ற விருப்பத்தை அடக்கக்கொண்டு உள்ளே போய் டம்ளரில் தண்ணீரை கொண்டு வந்தாள். அவன் கையை நீட்டுவதற்குள் டம்ளரை டீபாய் மீது வைத்தாள்.

அவன் தண்ணீரை குடித்துக் கொண்டே "என் பெயர் சங்கர், ரவிசங்கர்" என்றான். அவன் டம்ளரை திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மறுபடியும் கதவைத் தட்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று நினைத்துக் கையோடு டம்ளரை வாங்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நின்றிருந்தாள்.

"உங்கள் பெயர்?" என்று கேட்டான்.

"மிஸஸ் வி.விஸ்வநாதன்." கடினமான குரலில் சொன்னாள்.

தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தவன் புரையேறும் அளவுக்கு சிரித்தான்.

"கங்கிராட்சுலேஷன்ஸ் ·பர் யுவர் சென்ஸ் ஆ·ப் தி பார்ட் மிஸஸ் வி.வி.நாதன்."
பாராட்டுவது போல் சொல்லி விட்டு தன் அறைக்குச் சென்று ராதாவின் கண்களுக்கு முன்னாலேயே கதவைச் சாத்திக் கொண்டுவிட்டான்.

அதற்குப்பிறகு ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. அவன் அறையிலிருந்து ஸ்பீக்கர்ஸ் வழியாக கிடார் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரொம்ப நல்ல ட்யூன்.  அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இளம் பெண்களை ஒரு ஆட்டம் ஆட்டிய பாட்டு அது. அந்த பாட்டை இந்த இளைஞன் இவ்வளவு இனிமையாக ...........

இந்த தொல்லையை தாங்க முடியாது.


கணவன் வந்ததும் சொல்லி வீட்டைக் காலிசெய்யச் சொல்லவேண்டும். இது வீடு என்று நினைத்தானா இல்லை நைட்கிளப் என்று நினைத்தானா?

டாமிட்!இந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பாற்றுவதுபோல் அவன் கதவை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான். அவள் நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள்.அப்போது  கிளம்பிப் போனவன் மாலை ஐந்து மணி வரையிலும் வராமல் இருந்ததும் இனி அவனைப் பற்றி தற்காலிகமாக மறந்து விட்டாள். இதுபோன்ற இளைஞர்கள் இரவு பதினோரு மணிக்குக் குறைந்து வீடு திரும்புவார்களா என்ன?

ஐந்தரை மணிவரையிலும் கணவனுக்காக எதிர்பார்த்து, வாசற்கதவை வெறுமே சாத்திவிட்டு குளிக்கச் சென்றாள். இரண்டு நிமிடங்கள் கழித்து கணவன் வந்த அரவம் கேட்டது.


"இதோ வந்துவிட்டேன். நான் வந்து காபி கலந்து தருகிறேன். சமையல் அறைக்குப் போய் ரகளை எதுவும் செய்யாதீங்க" என்று குரல் கொடுத்தாள்.

விஸ்வநாதன் ரொம்ப நல்லவன். ரகளை எதுவும் செய்யமாட்டான். அவளுக்கு ஏனோ கணவனை கலாட்டா செய்யவேண்டும் என்று குறும்புத் தனமான எண்ணம் வந்தது. புடவை கொசுவங்களை சொருகிக் கொண்டே குளியலறை கதவைத் திறந்தாள்.

"நீங்க செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் என்னை செய்யச் சொல்லி பிடிவாதம் பிடித்தீங்களே. இப்போ பாருங்கள், உடம்பெல்லாம் ஒரே வலி" என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தாள். இப்படி கலாட்டா செய்வது அவளுக்கு பழக்கம்தான். விஸ்வநாதனுக்கும் பிடிக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாய் முன் அறையில் இருந்தது அவளுடைய கணவன் இல்லை. சற்றுமுன் அவள் கேட்ட அரவம் சங்கருடையது. அவன் கையில் கூஜா இருந்தது.

நிலம் இரண்டாகப் பிளந்து, தான் அதில் புதைந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முன்பின் கவனிக்காமல் தான் அப்படி பேசி விட்டதற்கு தன்மீதே தனக்குக் கோபம் வந்தது. அவன் முகத்தில் மறை முகமாய் தெரிந்த அந்தச் சிரிப்பு அவளுடைய கோபத்தை, ரோஷத்தை மேலும் தூண்டி விட்டது. ஏதோ தன்னுடைய சொந்த வீடு என்பதுபோல் நேராக உள்ளே வந்து உட்கார்ந்துகொள்வதாவது? மேலும் தன்னுடைய ரகசியத்தைக்  கண்டு பிடித்து விட்டது போல் அந்தச் சிரிப்பு வேறு! இடியட்!

அன்று முழுவதும் அவளுக்கு வேலை எதுவும் ஓடவில்லை. யார்மீது என்று தெரியாமல் கோபம் கோபமாய் வந்தது. எப்படியாவது அந்த இளைஞனை அறையை காலி செய்ய வைக்க வேண்டுமென்ற விருப்பம் நிமிடத்திற்கு நிமிடம் பலமாக வளர்ந்த கொண்டிருந்தது. முடிந்தால் இன்று உண்ணா விரதம் இருக்கப் போவதாக கணவனிடம் சொல்ல வேண்டும் என்றுகூட நினைத்தாள்.

அவளுடைய கோபத்தை மேலும் அதிகரிப்பது போல் ரவிசங்கர் அன்று அறையைவிட்டு வெளியில் போகவில்லை. அது போதாது என்பது போல் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தான். அந்த சத்தம் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

மாலை ஆறுமணி. கணவன் இன்னும் வரவில்லை. ராதாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஹாலில் குறுக்கே நடை பயின்றுக்கொண்டிருந்தாள்.
அறையில் அவன் வாசித்துக் கொண்டிருந்த ட்ரம் பீட்ஸ் அவளுக்கு தன் இதயத்தின்மீதே அடிப்பது போல் இருந்தது. சற்று நேரம் கழித்து இனி கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், தானே போய் அவனை நாலு வார்த்தை சூடாக கேட்டு விடலாம் என்ற எண்ணத்தில் அவனுடைய அறையை நோக்கிப் போனாள். சாத்தியிருந்த கதவைத் தட்ட நினைத்து எண்ணத்தை மாற்றிக்கொண்டு லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்பக்கம் பார்த்தாள்.

அவ்வளவுதான்!

அவளுக்கு உடம்பு முழுவதும் திடீரென்று வியர்த்துக்கொட்டியது. கால்கள் நடுங்கத் தொடங்கின. கிடாருக்கு பக்கத்திலேயே கண்ணாடி டம்ளரில் மஞ்சள் நிறத்தில் திரவம் பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தது. ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே நடு நடுவில் ஒரு மடக்கு குடித்துக்கொண்டு இருந்தான். இந்த உலகம் முழுவதும் தன்னுடையதுதான் என்பது போல் ராயஸமாக அந்த மாலைப்பொழுதை அனுபவித்துக்கொண்டு இருந்தான்.

காற்றைவிட வேகமாய் தன்னுடைய அறைக்கு திரும்பியவள் அப்படியே படுக்கையின் மீது சரிந்து விட்டாள். டிரிங்க்ஸ் விஷயம் அவளுக்கு புதிது இல்லை. வங்கியில் ஏதாவது பார்ட்டீ நடந்தால் கணவன் ஒன்றோ இரண்டோ பெக்குகளை குடித்துவிட்டு வருவது வழக்கம்தான். இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டுமே என்று பொய்யாக கோபித்துக்கொள்வாள். ஆனால் உள்ளூர அவன் எப்போதாவது அதுபோல் குடித்துவிட்டு வருவது அவளுக்கு பிடித்துத்தான் இருந்தது. அப்படி வந்த நேரங்களில் அவன் வழக்கத்திற்கும் அதிகமான வேகத்தோடு செயல்படுவான். உண்மையைச் சொல்லப் போனால் அப்பொழுதுதான் அவளுக்கு சமமான நிலையில் இருப்பான்.
ஆனால் இதென்ன? வீடா இல்லை சத்திரமா? வீட்டிலேயே இந்த இளைஞன் மதுபானக்கடையை திறந்து விட்டான். நல்லவேளை இந்த விஷயம் முதல் முதலில் தன்னுடைய கண்ணில் பட்டுவிட்டது. வேறு யாராவது உறவினர்கள் வந்தபோது இந்த விஷயம் வெளிப்பட்டு இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?"

திடீரென்று அவளுக்கு வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்து உடம்பு சிலிர்த்து விட்டது.


வீட்டில் தாமிருவர் மட்டும்தான். அவனோ குடித்திருக்கிறான். வெளியில் இருட்டு. மணி ஏழடிக்கப் போகிறது.

அங்கங்கே  வீடுகள் அமைந்த அந்தக் காலனியில் ஒரு வீட்டில் என்ன நடந்தாலும் அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியப் போவதில்லை. அவள் ஜன்னல் கர்ட்டனை  விலக்கிவிட்டு எதிர் வீட்டுப் பக்கம் பார்த்தாள். எதிர்வீட்டு சுவாமிநாதன் இந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். ராதா எப்போ வெளியில் வருவாள் என்று பார்த்துக் கொண்டிருப்பது தான் தற்போது அவருடைய பொழுதுபோக்கு. அவள் எரிச்சலுடன் ஜன்னல் கதவைச் சாத்தினாள். கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. நேரத்தோடு வீட்டுக்கு வராமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கைக்கு அகப்பட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள். கணவன் சீக்கிரமாக வந்தால் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போகலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் கணவன் வரும் ஜாடையே தெரியவில்லை.அவள் படித்துக் கொண்டிருந்த நாவலில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. ஹீரோ அடிக்கடி ஹீரோயினை தோளைப் பற்றி அருகில் இழுத்துக் கொள்கிறானே தவிர ஒன்றுமே செய்யவில்லை. ஹீரோயினும் ரோஷத்துடன் ஹீரோவை பார்க்கிறாளே தவிர தன் மனதில் இருப்பதை வெளிப் படுத்தமாட்டேன் என்கிறாள். இருவரில் யாராவது அடுத்த கட்டத்திற்கு போயிருந்தால் இந்நேரத்திற்கு கதை முடிந்திருக்கும். போகாததால் முன்னூறு பக்கங்களுக்கு நாவல் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கும்போது குப்புறப் படுத்துக் கொண்டு மார்புக்குக் கீழே தலையணை அண்டை கொடுத்து கால்களை காற்றில் அசைத்துக் கொண்டே படிப்பது அவள் வழக்கம். இன்றும் அதே போல் படித்துக் கொண்டு யதேச்சையாக கதவு பக்கம் பார்த்தாள். தங்களுடைய அறைக்கும் அவனுடைய அறைக்கு நடுவில் இருந்த கதவு அது.

சட்டென்று ஏதோ சந்தேகம் வந்து கதவு அருகில் சென்றாள். கதவில் ஓட்டை ஏதாவது இருக்கிறதா என்று சோதித்தாள். அவள் இதயம் நின்று விடும் போல் இருந்தது. வலதுப்பக்கம் இரண்டு கதவுகளும் இணையும் இடத்தில் சிறிய ஓட்டை இருந்தது. இடுக்கு வழியாக அடுத்த அறைக்குள் பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தவள்போல் பின்னால் நகர்ந்தாள். அவள் முகம் சிவந்துவிட்டது.

விளக்கை அணைத்துவிட்டு முன் அறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். இதயம் வேகமாக துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்டது. தன்னைத் தானே சமாளித்துக் கொள்வதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது. நல்லவேளை! இந்த விஷயத்தை  முன்னாடியே கவனித்து விட்டாள். இல்லாவிட்டால் இரவு வேளையில் ரொம்ப நேரம் விளக்கு போட்டிருக்கும் தங்களுடைய பழக்கதினால் ...ச்சீ... ச்சீ. அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை.

மெழுகுவர்த்தியைக் கொண்டு வந்து அதன் மெழுகை எடுத்து அந்த ஓட்டையை அடைத்துக் கொண்டிருந்தபோது வாசற்கதவு தட்டிய சத்தம் கேட்டது. கணவன் தானோ என்று நினைத்து வேகவேகமாய் சென்று கதவைத் திறந்தாள். ஆனால் அவன்தான். அவள் சட்டென்று பின்னால் நகர்ந்து "என்ன வேண்டும்?" என்று கடினமாக கேட்டாள்.

"எனக்காக யாராவது வந்தால் அறையில் உட்காரச் சொல்லுங்கள். அரை மணியில் வந்து விடுகிறேன். பெயிண்டிங் ட்யூப்ஸ் தீர்ந்துவிட்டன. இதோ சாவி."

அவள் ஏதோ சொல்ல முற்படும் போதே அவள் கையில் சாவியை வைத்து விட்டு படிகளில் இறங்கி போய்விட்டான். இதெல்லாம் வெறும் நடிப்பு என்று அவளுக்குத் தெரியும். தான் ஒரு ஓவியன் என்று தெரியப்படுத்தும் முயற்சி. சாவியை கொடுக்கும் சாக்கில் தன்னை சந்திக்கும் திட்டம். எல்லாவற்றையும் விட முக்கியமாக சாவியைத் தரும்போது வேண்டுமென்றே கையைத் தொடுவது.

அவன்மீது அவளுக்கு துவேஷம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போனது. அவன் வந்து இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனையோ நிகழ்ச்சிகள். நடந்தவை எல்லாமே அவளை சங்கடத்தில் ஆழ்த்தியவைதான். யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டாள்.

இன்னும் ஒன்பது ஆகவில்லை. திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். அவன் உள்ளே வந்துகொண்டே "சாவி" என்றான். அவள் எழுந்துகொள்ளப் போனாள்.

அவன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவனுடைய எண்ணம் புரிந்தபோது அவள் பயந்துவிட்டாள். ஜன்னல் விளிம்பில் வைத்திருந்த சாவியை அவன் பார்த்தான். ஆனால் அந்தப் பக்கம் போகவில்லை. அவள் கத்த வேண்டும் என்று நினைத்தாள். பயத்தினால் வாயில் வார்த்தை வரவில்லை. அதற்குள் அவன் நெருங்கி வந்து இரண்டு கைகளாலேயும் அவளுடைய தோள்களை பற்றி அருகில் இழுத்துக் கொண்டான். அதில் பயமோ, தயக்கமோ இருக்கவில்லை. அவள் தனக்கு சொந்தம் என்பது போலவும், அவள் மீது தனக்கு எப்போதிலிருந்தோ அதிகாரம் இருப்பது போலவும் அவளை அணைத்துக் கொண்டான். உடலில் இருந்த சக்தியெல்லாம் திரட்டிக் கொண்டு அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அதற்குள் அவன் இதழ்கள் அவள் இதழ்கள் மீது அழுத்தமாய் பதிந்தன. அவனுடைய வலிமை, ஆளுமையின் முன்னால் அவள் வெறும் பதுமையாகிவிட்டாள். அவளை அப்படியே அலாக்காக தூக்கிக்கொண்டு கட்டில்மீது படுக்கவைத்தான். அவள் சரேலென்று எழுந்துகொள்ளப் போனாள். அதை உணர்ந்துகொண்டவன்போல் கைகளால் பலமாக அழுத்தி அவளை எழமுடியாமல் செய்துவிட்டான்.

இயலாமை நிரம்பிய குரலில் அவள் "விடு, என்னை விட்டுவிடு" என்றாள். அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் கை அவள் இடுப்பில் பதிந்தது. அவள் கழுத்தில் புதைந்திருந்த அவன் முகம் மேலும் கீழே இறங்கியது. அந்தச் செயல் அவன் உடலில் மின் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலேயே வலது பக்கம் திரும்புவதற்கு முயற்சி செய்தாள். அந்த முயற்சியில் அவனுக்கு மேலும் நெருக்கமாகிவிட்டாள். அவளுடைய உடலில் ஒவ்வொரு பகுதியும் அலை அலையாய் மூளைக்கு செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது. திடீரென்று நாலா பக்கத்திலிருந்து ஷவர் வழியாய் குளிர்ந்த தண்ணீர் தன் உடல்மீது பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டு மேனி நடுங்கியது. உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் குதித்துவிட்டது போல் உடல் இலேசாகி காற்றில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழித்து சுய உணர்வு பெற்றவளாய் அவன் கழுத்தைச் சுற்றியிருந்த தன்னுடைய கைகளை விடுவித்துக் கொண்டு பலமாக அவனைத் தள்ளிவிட்டாள். அவன் காற்றில் கரைந்து போய்விட்டான். அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தலையணையில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தாள்.
................
அதற்குள் வெளியில் சத்தம் கேட்டது. அவள் கண்களைத் திறந்தாள்.. கசங்காத படுக்கை கலைந்த கனவை கேலி செய்வது போல் இருந்தது. போய்க் கதவைத் திறந்தாள். விஸ்வநாதன் முறுவலுடன் "என்ன? நன்றாக தூங்கிவிட்டாயா? எத்தனை நேரமாய் கதவைத் தட்டுகிறேன் தெரியுமா?" என்றான்.

அவள் பதில் சொல்லவில்லை. அதற்குள் மறுபடியும் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. ரவிசங்கர் வந்து கொண்டிருந்தான். அவள் சட்டென்று ஜன்னல் விளிம்பில் வைத்திருந்த சாவியை எடுத்து கணவனிடம் கொடுத்துக் கொண்டே "இதை அவனிடம் கொடுங்கள். இதுபோல் நேரம் தப்பி நேரம் வந்தால் ஒத்துவராது என்று சொல்லுங்கள்" என்றாள். அந்த வார்த்தைகள் அவனுக்கும் கேட்கும் என்று அவளுக்குத் தெரியும். அதேபோல் நடந்தது. அவன் எதுவும் சொல்லாமல் சாவியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போய்விட்டான். விஸ்நாதன் மனைவியை கேள்விக்குறியுடன் பார்த்து விட்டு உள்ளே வந்தான். வாசற்கதவைச் சாத்திவிட்டு அவளும் உள்ளே வந்தாள்.
அன்று இரவு அவள் எதையும் பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால் மறுநாள் கணவன் ஆபீசுக்குப் போகும் முன் உணவு சாப்பிடும் போது சொன்னாள்.

"நீங்க எப்படியாவது அந்தப் பையனை அறையை காலி பண்ணும் விதமாக செய்யவேண்டும்."

தயிரைப் பரிமாறிக்கொண்டே "எதற்காக?" என்றான்.

"எனக்குப் பிடிக்கவில்லை, அதுதான்."

"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்?"

அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

"அவன் நேற்றும், இன்றும் உன்னிடம் ஏதாவது தரக்குறைவாக நடந்து கொண்டானா?"

அவள் பதில் பேசவில்லை.

"இத்தனைக்கும் நீ சொல்ல வந்ததுதான் என்ன? அவனை அறையை காலி செய்யச் சொல்லிவிட்டு வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றா? இல்லை யாருக்குமே கொடுக்க வேண்டாம் என்றா?"

"வேறு யாருக்காவது கொடுக்கலாம்."

"அவனை போகச் சொல்வதற்குச் சரியான காரணம் இருக்க வேண்டும் இல்லையா?"

அவள் பதில் சொல்லவில்லை. அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு பாக்கை வாயில் போட்டுக் கொண்டான். ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டே சொன்னான்.

"ராதா! நான் உன்னைப் போல் இலக்கியத்தை, மனிதர்களின் மனங்களை படித்தவன் இல்லை. எனக்கு சரியாக சொல்லவும் தெரியாது. நேற்றிலிருந்து உன்னைக் கவனித்துக்கொண்டு வருகிறேன். நீ ஒரு விதமான அப்செஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறாயோ என்று தோன்றுகிறது.  இந்த உலகில் எந்த மனிதனும் கெட்டவன் இல்லை. எதுவும் நாம் நினைத்துக்கொள்வதில்தான் இருக்கிறது. மற்றவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தாக வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. நாம் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறோமோ எதிராளியும் அதேபோல் தென் படுவான். பெண் என்பதால் ஆணைக் கண்டு பயப்பட வேண்டும். குறைந்த பட்சம் பயப்படுவது போல் நடிக்க வேண்டும் என்ற மனநோய் தான் உன்னை இந்த விதமாக மாற்றிவிட்டதோ என்று நினைக்கிறேன். 

பொய்யான உலகத்திலிருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய். உன் கண்ணில் பட்ட சில நிகழ்ச்சிகள், அவற்றின் ஆதாரமாக நீ ஊகித்துக் கொண்டது உண்மையாக இல்லாமல் போகலாம். ஒரு வேளை அது உண்மைதான் என்று தெரிந்தால் கட்டாயம் அவனை அறையை காலி செய்யச் சொல்லிவிடலாம். ஆனால் உன் பக்கத்திலிருந்து சின்ன முயற்சிகூட செய்யாமல் ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது என்னுடைய அபிப்பிராயம்." சொல்லி முடித்துவிட்டு ஆபீசுக்குப் போய்விட்டான்.

அவள் கற்சிலையாக நின்றுவிட்டாள். கணவன் இந்த விதமாக பேசியது அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கு அனலைஸ் செய்யக் கூடிய திறமை அவனிடம் இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவன் தன்னையும், தன் மனதில் நடக்கும் போராட்டத்தையும் கவனித்து வருகிறான் என்பதே அவளுக்குப் புதுமையாக இருந்தது.இங்கே மற்றொரு விஷயமும் இருக்கிறது. அவள் ஒன்றும் முட்டாள்தனமாக பிடிவாதம் பிடிக்கும் பெண் இல்லை. கணவன் அப்படிப் பேசியதும் முதலில் ஆவேசமடைந்தாள். ஆனால் பிறகு அதில் இருக்கும் லாஜிக்கை யோசித்தாள். யோசிக்க யோசிக்க தான் எடுத்த முடிவுகள் எத்தனை அர்த்தமற்றவை என்று புரிந்தபோது வெட்கமாக உணர்ந்தாள்.

அப்பொழுது மணி இன்னும் பத்தடிக்கவில்லை. ரவிசங்கர் தன்னுடைய அறையிலேயே இருந்தான்.

"உள்ளே வரலாமா?" வாசல் அருகிலேயே நின்றுகொண்டு கேட்டாள்.

அவள் வருவாள் என்று எதிர்பார்க்காததால் கொஞ்சம் வியப்பு அடைந்தாலும், அவள் குரலில் கோபமோ எரிச்லோ தென்படாதது கண்டு உற்சாகத்துட்ன் "வாங்க வாங்க" என்றான்.

அவள் உள்ளே காலடி எடுத்து வைத்து அவன் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்தாள். அவளுக்கு வர்ணங்களின் சேர்க்கை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் எதுவும் தெரியாதவர்களுக்குக் கூட நன்றாக இருக்கும் வகையில் அந்த ஓவியம் சிறப்பாக இருந்தது.

"எங்கே படிக்கிறீங்க?" என்று கேட்டாள்

"யூனிவர்சிடீ நைட் காலேஜில்" என்றான். "அதோடு ஒரு கமர்ஷியல் கம்பெனியில் பார்ட் டைம் வேலை செய்கிறேன்."

அவள் அவனை கவனமாக பரிசீலிப்பது போல் பார்த்தாள். தன்னைவிட மூன்று வயது சிறியவனாக இருப்பானோ என்னவோ. முகத்தில் இன்னும் குழந்தைத் தனம் மாறவில்லை. முரட்டுத்தனமாக தோன்றவேண்டும் என்பதற்காக தாடியை, கிருதாவை வைத்துக்கொண்டிருப்பான் போலும். அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது. ஊரில் படிக்கும் தம்பியின் நினைவு வந்தது. அவனும் இப்படித்தான் தன் வயதைவிட பெரியவனாக தென்பட வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருப்பான்.

அவளுடைய பார்வை கிடார், டிரம்ஸ்மீது படிந்ததை கவனித்தவன் சங்கடப் பட்டுக்கொண்டே சிரித்தான். "விடியற்காலை வேளையில் உங்களுடைய தூக்கத்தை டிஸ்டர்ப் செய்கிறேனோ?"

"இல்லை இல்லை." அவசரமாக மறுத்தாள். "நீங்க எப்போ எழுந்து கொள்கிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது."

"காலை வேளையில் பிராக்டீஸ் செய்தால் நன்றாக இருக்கும். அதான் நாலு மணிக்கே எழுந்துகொண்டு விடுவேன்."

திடீரென்று தர்ட் டைமன்ஷனில் ஏதோ ஜன்னல் கதவு திறந்துகொண்டு வெளிச்சம் பரவியது போல் அவளுக்குத் தோன்றியது. கணவன் சொன்னது நினைவுக்கு வந்தது. சிலர் வெளியில் பார்ப்பதற்கு நல்லவர்களாக, அப்பாவிகளாக தென்படுவார்கள். சிலர் முரடர்களாக, வாழக்கையில் லட்சியம் இல்லாதவர்களைப் போல் தோற்றம் தருவார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ புரியும். எப்போதும் சிகரெட் பிடித்துக் கொண்டு, இரவு வந்ததும் பாட்டிலைத் திறக்கும் இந்த இளைஞன் தங்கள் எல்லோரையும் விட இரண்டு மடங்கு உழைக்கிறான். வாழ்க்கையிடம் ஸ்திரமான அபிப்பிராயம் வைத்திருக்கிறான். அவனுக்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.

வாழ்க்கையில் லட்சியம் இருப்பது வேறு. அதைச் சாதிப்பதற்காக கஷ்டப் படுவது வேறு. அந்த மாதிரி கஷ்டப்படும்போது இந்த உலகின்மீது ஒரு விதமான அலட்சியம், ஆர்வமற்ற தன்மை ஏற்பட்டு இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ளாதது தன்னுடைய தவறுதான்.

கம்யூனிகேஷன் கேப் என்ற சுவரை தகர்ந்துவிட்ட பிறகு பனித்திரை விலகியதுபோல் அவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

"நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. அவரும் இருப்பார். எங்கள் வீட்டுக்கு லஞ்சுக்கு வரணும்" என்றாள்.

அவன் தன்னுடைய மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ளும் முயற்சி எதுவும் செய்யவில்லை. "கட்டாயம் வருகிறேன். நல்ல சாப்பாட்டுகாக ரொம்ப நாளாக ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்" என்றான் பளீரென்று சிரித்துக் கொண்டே.!



தெலுங்கில் எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் 



Saturday, September 4, 2010

கோழைச் சோழன்....! சாண்டில்யன்



முந்தின பதிவில் ஒரு பாடலைக் கொடுத்து அதில் சரித்திரம் எந்த அளவு இருக்கிறது, புனைவு எந்த அளவு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பிருந்தது "அட போங்கப்பா! அரசருக்கே புரிந்து விட்டது....நீங்க வேற கேள்வி கேட்டு கிட்டு!" என்ற மாதிரி ஆகி விட்டதோ?

இந்த நான்கு நாட்களாக, யாராவது, ஒரு சின்ன இழையைப் பிடிப்பார்கள் என்று நம்பிக் காத்திருந்தேன்!செம்மொழி மாநா
டு  எல்லாம் அட்டகாசமாக நடத்திக் காட்டியும் கூட, பயன் படவில்லையோ? சரி, போனால் போகிறது, விடுங்கள்!  


இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

இந்தப் பாடல், போர்வை
க்கோ பெருநற்கிள்ளி என்ற சோழ அரசனைப் பற்றி பாடுவதாக, ஆமூர் மல்லனை "பசித்துப் பணை முயலும் யானை போல"  தன்னுடைய தந்தை தித்தன் காண மல்யுத்தத்தில் வெற்றி வாகை சூடிய திறத்தைச் சொல்கிறது. 

சரி, இந்தப்பாடலும் சரி, அடுத்து வரும் ஐந்து பாடல்களும் சரி, போர்வைகோ பெருநற் கிள்ளியைப் பற்றி இதற்கு மேல் என்ன சரித்திரம், புனைவைப் பெரிதாகச் சொல்லிவிடப் போகின்றன? இது தான் கேள்வி !


பாடல்களை மேம்போக்காகப் படிக்கும்போதோ அரும்பதவுரை, தெளிவுரையோடு பார்த்தபோதோ ஒன்றுமே தெரியவில்லையே!

சாண்டில்யன் மாதிரித் திறமையான எழுத்தாளர் கண்கள் வழியாகப் பார்த்தால் தெரிவதே வேறு தான்!




அங்கே தான், சாண்டில்யன் என்ற எழுத்தாளரின் திறமை, பட்டை தீட்டப் பட்ட வைரத்தைப் போல, அவருடைய பரந்த வாசிப்பு , தேர்ந்தெடுத்த வார்த்தைகளில், வரலாற்றுப் பாத்திரங்களையும், கற்பனைப் பாத்திரங்களையும்  தன்னுடைய கற்பனையில் குழைத்துப் படைத்து ஒரு அற்புதமான கதையையும், வாசிப்பு அனுபவத்தையும்  விருந்தாகப் படைக்கிற திறம் வெளிப்படுகிறது!

"கோழைச் சோழன்"! இது அவர் இந்தக் கதைக்குக் கொடுத்த தலைப்பு!

"கோழைச் சோழன்" சங்க கால சரித்திரம். அதில் கண்ட சம்பவங்கள் அனைத்தும் அப்படியே நடந்தவை. கோழைச் சோழன் மூலமாக ஒரு வீர சரித்திரத்தை இந்தக் கதைகளில் படிக்கிறீர்கள். இதில் வரும் பாத்திரங்கள் அனைவரும் சங்க நூல்களில் இருக்கிறார்கள். சில உரையாடல்கள், சம்பவங்களைப் பற்றிய "ஜிகினா"வேலைகள், இவைதான் என் கற்பனை-- என்று சாண்டில்யன் இந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இனி, கோழைச்  சோழனைப் பார்ப்போமா?

கோழைச் சோழன்


தித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப்  பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். அங்கொரு திடீர் சிரிப்பொலி! பகடைகள் உருளும் சத்தம்! இவற்றைக் காதில் வாங்கிய தித்தன் தனது மடியில் இருந்த குறுவாளை எடுத்துக் கொண்டு அந்த ஒலிகள் எழுந்த இடத்தை நாடிச் சென்றான்.

ங்கு தலையில் பட்டுச் சீலையால் முக்காடிட்டுக் கொண்டு தோழியர் பலருடன் பகடைகளை உருட்டிக் கொண்டிருந்தான் அவன் ஒரே மகனான நற் கிள்ளி. அரசன் வந்ததை அவன் கவனிக்கவில்லை ஆயினும் தோழிகளுள் ஒருத்தி கவனித்ததால் பகடையிடத்திலிருந்து சரேலென்று எழுந்திருக்க அவள் முயல, அவள்  சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்ட நற் கிள்ளி, "எங்கே ஓடுகிறாய் பாதி ஆட்டத்தில்? உட்கார்" என்று அவளை வலிய இழுத்தான். 

முந்தானையை நற் கிள்ளி பிடித்ததால் மீதி ஆடையை மார்பில் பிடித்துக் கொண்டதோழி, "விடுங்கள் இளவரசே!" என்று கெஞ்சினாள்.

"வெற்றி கிடைக்கும் சமயத்தில் யார் விடுவான்? உட்கார்." என்று அதட்டினான் நற் கிள்ளி.

"இளவரசே! விடுங்கள்! பகடை வெற்றி ஒரு வெற்றி அல்ல. உங்கள் வெற்றி, வீரத்தில் இருக்க வேண்டும்" என்றாள் தோழி.

நற் கிள்ளி வேகமாக நகைத்தான். "அடி தோழி! பகடை வெற்றியிடம் வீரத்தின் வெற்றி பலிக்காது. சகுனி பகடையால் வெற்றி கொல்லவி;ல்லை பாண்டவரை? நாடு கடத்தவில்லை அவர்களை?" என்று கூறி மீண்டும் பகடையை உருட்டினான். தலையில் இருந்து நழுவ இருந்த பட்டாடையையும் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் தித்தன் குரல் கூரிய வாளென நுழைந்தது, அந்த உரையாடலுக்குக் குறுக்கே." "டேய் நற் கிள்ளி! விடு அவள் முந்தானையை" என்றான் தித்தன் சினம் பீரிட்ட குரலில்.

தித்தன் குரலைக் கேட்டதும் நடுங்கிய நற்கிள்ளி பகடையை அவசர அவசரமாக எடுத்து மடியிற் செருகிக் கொண்டு போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றான். "தந்தையே! தாங்களா!" என்று வினவினான் நற் கிள்ளி நடுக்கம் ஒலித்த குரலில்.

"நான் தான்! ஆனால் உன் தந்தையல்ல" என்றான் தித்தன்.

நற்கிள்ளியின் கண்களில் அச்சம் தெரிந்தது. "நீங்கள் என் தந்தை இல்லையா?" என்று வினவினான் மெல்ல.

"இல்லை! சகுனிக்கு ஒரு தந்தை இருந்ததாகப் புராணங்களில் குறிப்பிடவில்லை"

"நான்...."

"சகுனி பகடையில் வல்லவன். பெண்களிடை பழகுபவன்,  குதிரை ஏற்றம் பயில வேண்டிய காலத்தில் குலாவுகிறாய் அரண்மனைச்   சேடிகளிடம் ! வில்லையும், வாளையும் பிடிக்க வேண்டிய கைகள் பகடையையும் கழங்குகளையும் பிடிக்கின்றன." என்ற மன்னன் "டேய் நற்கிள்ளி! உன்னை அரண்மனைத் தோழிகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?" என்று வினவினான்.

"என்னவென்று..?" நற்கிள்ளி அக்கம் பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான். அவர்கள் தலைகள் தாழ்ந்து கிடந்தன. கமலக் கண்கள் தரையை நோக்கின!

"மடையா! எப்பொழுதும் பெண்களைப் போல உடலைப் பட்டாடை கொண்டு போர்த்தியிருக்கிறாய் அல்லவா?"

"ஆம்."

"அதனால் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கிறார்கள்.  உன் கோழைத்தனத்துக்கு அரண்மனைத் தோழிகள் சூட்டியுள்ள பட்டம் அது."
என்று வெறுப்புடன் சொன்னான் மன்னவன்.

நற்கிள்ளி பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான், "பட்டத்து இளவரசனான என்னையா அப்படிப் பழிக்கிறீர்கள்?" என்று வினவினான் அவர்களை நோக்கி. இந்த சமயத்தில் சுரீலென வாளைப் பாய்ச்சுவது போலக் கேட்டான் தித்தன். "நீ பட்டத்து இளவரசனென்று யார் சொன்னது?"

நற்கிள்ளியின் கண்கள் சலனத்தைக் காட்டின."யார் சொல்ல வேண்டும்? நான் உங்களுக்கு ஒரே மகன்...." என்ற  நற்கிள்ளியின் சொற்களை, "நீ என் மகனல்ல என்று முன்னமேயே சொன்னேன்." என்று பாதியிலேயே வெட்டினான் தித்தன்.

"அப்படியானால்.....?" நற்கிள்ளியின் குரல் நடுங்கியது.

"நீ நாடு கடத்தப் பட்டாய். நாளைக்குப் பிறகு உறையூரில் நீ தலை காட்டினால் தலை கொய்யப் படும். ஒரு கோழையை மகனாகத் தினம் காண்பதை விடக் காணாதிருத்தல் நன்று" என்ற மன்னன் அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றான். தோழியரும் பறந்தனர், பட்டத்தரசியிடம் அச் செய்தியைச் சொல்ல.

அரண்மனை உப்பரிகைக் கூடத்தில் தனியே நின்ற போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் அழகிய கண்களும் சிரித்தன. போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அரண்மனையை அடுத்திருந்த புறக்காட்டை நோக்கிச் சென்றான்.

கோழைச் சோழன், போர்வைக்கோ என்ற அடைமொழி எதைக் குறிக்கிறது என்பதை  சுவாரசியமாகச் சொல்லி ஆரம்பித்தும் ஆயிற்று !  அப்புறம்....!

காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்ததும் தூரத்தே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிச் சென்று அங்கிருந்த சிருவீட்டின் கதவைத் தட்டினான் மும்முறை! கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான் பிரம்மாண்டமான ஒரு மனிதன். அவன் உடற்கூறு இரும்பாய் இருந்தது. சதைகள் கெட்டிப்பட்டுக் கிடந்தன.கன்னக் கதுப்புகள் பெரியதாயிருந்தமையால் கண்கள் சிறிதாகத் தெரிந்தன.இளவரசனைக் கண்டது, "வாருங்கள் உள்ளே" என்று அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் கூடத்தை அடைந்ததும் கேட்டான். "எங்கே வந்தீர்கள் இங்கே?"என்று.

"நல்ல சேதி சொல்ல வந்தேன்" என்றான் நற்கிள்ளி.

"என்ன சேதி இளவரசே?"

"என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார்."

இதைக் கேட்ட அந்த மனிதன் சிறிதும் பதறவில்லை. பெருமூச்சு மட்டும் விட்டான். "நீங்கள் நினைத்தது நடந்து விட்டது?" எண்டு வினவினான் அந்த மனிதன்.

"ஆம்!" என்றான் நற்கிள்ளி மகிழ்ச்சியுடன்.

"இது சரியல்ல இளவரசே!" என்றான் அந்த மனிதன்.

"பெருஞ்சாத்தனாரே! என் ஆசானான நீருமா இதை ஏற்க மறுக்கிறீர்? என் ஆசையை ஏன் தடை செய்கிறீர்?" என்று கேட்டான் நற்கிள்ளி.

"நீங்கள் உறையூரை விட்டுப் போவதால்......?" என்று பெருஞ்சாத்தான் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

"ஒரு கோழையை உறையூர் இழக்கிறது!"

"ஆனால் உலகம் ஒரு........"

"நிறுத்துங்கள் சாத்தனாரே! காலம் புதிரை அவிழ்க்கட்டும் நான் வருகிறேன்" என்ற நற்கிள்ளி ஆசானை வணங்கி விடைபெற்று வெளியே சென்றான்.

பாட்டுடைத் தலைவன் போர்வைக்கோ பெரு நற்கிள்ளி அறிமுகம் ஆயிற்று! அவன் சோழ இளவல் என்பதும் காலம் புதிரை அவிழ்க்கட்டும் என்ற வார்த்தைகளுக்கு உள்ளேயே கதையின் சஸ்பென்ஸ் முடிச்சும் வைத்தாயிற்று! சரி, கதையை நகர்த்திச் செல்ல அடுத்த கதாபாத்திரங்கள் வரிசையாக வர வேண்டுமே! வருகிறார்கள்! அடுத்தது யாராக இருக்கும்? இதில் சந்தேகம் வேறு உண்டா?

முக்காவல் நாட்டின் சிறப்புற்ற சிற்றூரான ஆமூருக்கு ஆண்டுதோறும் ஒரு அதிர்ஷ்டமுண்டு! அந்த ஊர் முருகவேல் கோட்டத்தின் பெருந்திருநாளன்று அந்த நாட்டின் பல பகுதிகளினின்று வணிகரும் வீரரும் கூடி முருக வேளைத் தொழுது மறு ஆண்டைப் பயனுற்றதாகச் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், பெருங்கோழியூர் நாய்கன் என்ற வீரர் பெருமானும் தனது நெடுநாளையக் குறை ஒன்றைப் போக்கிக் கொள்ள, தனது மகள் நக்கண்ணையுடன் ஆமூருக்கு வெளியே உள்ள தோப்பு வீட்டில் தங்கியிருந்தான்.

பெருந்திருநாளின் மாலைப் பூசை நடந்து தம் குறி சொல்லும் பூசாரி கர்ப்பக் கிரகத்தை அடுத்த மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தைக் கற்பூரத் தட்டுடன் அணுகிக் கூட்டத்தின் மீது கண்களை ஓட விட்டான் ஒரு வினாடி. பிறகு தூரத்தே தோழியருடன் ஒரு தூணுக்கருகில் நின்றுகொண்டிருந்த நக்கண்ணையைக் கை காட்டி அழைத்து, "பெண்ணே! முருகவேள் அருள் உனக்குக் கிட்டி விட்டது. இன்னும் பத்து நாள் இங்கே இருந்து, கொட்டக் குளத்தில் நீராடி அவனை வணங்கு. பத்தாவது நாள் உன்னை மணப்பவன் உன் இல்லம் தேடி வருவான்." என்று கூறித் தட்டை நீட்டினான்.

நக்கண்ணையும் தட்டில் இருந்த விபூதியையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டாள். பிறகு தோழியருடன் தோப்பு வீட்டுக்குத் திரும்பினாள்.

கோட்டத்தில் நடந்ததைத் தோழியர் எடுத்துக் கூற, பெருங்கோழியூர் நாய்கன் இரும்பூதெய்தி முருகவேளை மனத்துள் துதித்தான். "என் குறை தீர்ந்தது அப்பனே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பெண்ணின் தலையைக் கோதி விட்டு "நக்கண்ணை! உன் புலமைக்கேற்ற புருஷன் நிச்சயம் கிடைப்பான்" என்றும் ஆறுதல் கூறினான் அவளுக்கு.

நக்கண்ணை தனது நளினமான அழகிய விழிகளை நிலத்தில் ஓட்டினாள். போன கோட்டங்கள் கணக்கில்லை. செய்த வழிபாடுகள் குறைவில்லை. "இரண்டு ஆண்டுகளாக நடக்காதது இப்பொழுது எங்கே நடக்கப் போகிறது?" என்று நினைத்தாள் நக்கண்ணை. இருப்பினும் தந்தையிடம் பதில் பேசாது இடை துவள அழகு நடை நடந்து உள்ளே சென்றாள்

ஆனால் பூசாரி சொன்னது போல அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் முருகவேளின் கோட்டத்திற்குச் சென்றாள். வாவியில் நீராடினாள். அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவை பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டு சந்நிதானம் சென்று வழிபாடு  செய்தாள். எட்டுநாட்கள் இப்படி ஓடியும் பயனேதுமில்லை என்றாலும் தந்தையைத் திருப்தி செய்ய விரதத்தை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாள். ஒன்பதாம் நாள் ஒரு விதமாக வழி பிறந்தது. ஆனால் அது நல்வழியல்ல.

சென்ற பதிவைக் கவனித்திருந்தால் போர்வைக்கோ பெருநற் கிள்ளியைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியவர் இருவர்! சாத்தந்தையார் முதல் மூன்று பாடல்கள், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் அடுத்த மூன்று பாடல்களைப் பாடிய விவரம் நினைவுக்கு வரும்! முதல்வர், இங்கே கதையில் ஆசானாகி விட்டார்! அடுத்தவரோ, கைக்கிளை, பழித்தல் என்று காதல் திணையில் பாட்டைப் பாடியதால், கதையின் நாயகியாகவே ஆகிவிட்டார்!  

வரவேண்டிய நபர் இன்னும் ஒருவர் தான்! ஆமூர் மல்லன்! ஆக வில்லனும், இதோ வந்தாயிற்று!

ன்று காலை வழக்கம் போல வாவியில் நீராடி, கரையில் தோழியர் தன்னைச் சுற்றித் திரைபோல் பிடித்த பட்டாடைக்குள் ஈர ஆடையைக் களைந்து புத்தாடை சுற்றிக் கச்சையணிந்து தலையில் செங்கழுநீர் மலர் சூடி வாவிப் படிகளில் ஏறினாள். அங்கு நின்று அவள் வழியை மறித்தான் திடகாத்திரமான ஒரு மனிதன். அவனை ஏற இறங்கத் தீ விழி கொண்டு நோக்கினாள் நக்கண்ணை. "யார் நீங்கள்?" என்றும் வினவினாள்.

"ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்" என்ற அவன் பதிலில் தற் பெருமையும் இருந்தது.

"அத்தனை போக்கிரியா நீ?" இம்முறை மரியாதையைக் கைவிட்டுக் கேட்டாள் நக்கண்ணை.

"போக்கிரியா?" வியப்பிருந்தது அவன் கேள்வியில்.

"பெண்ணை வழிமறிக்கும் ஆடவருக்கு வேறு  பெயர் ஏதாவது இருக்கிறதா?"

"எதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு."

"இது அப்படி ஒரு விலக்கு?"

"ஆம். உன் அழகு, ஆமூர் மல்லனையும் இவ்வழிக்கு இழுத்தது."

"இவ்வூர்ப் பெரு மல்லரா நீங்கள்?"

"ஆம்!" இதைப் பெருமையாகச் சொன்னான் மல்லன். அத்துடன் விடவில்லை அவன். "உனக்கு மணாளனைத் தேட, இரண்டு ஆண்டுகளாக உன்தந்தை முயலுவதாகக் கேள்வி. அந்தக் கஷ்டம் இனி இல்லை என்று அவரிடம் சொல். உன்னைப் பெண் கேட்க இன்று மாலை வருகிறேன்." என்று கூறி வழியினின்று விலகினான்.

அன்று பெருஞ் சீற்றத்துடன் முருகவேளை நோக்கினாள் நக்கண்ணை. "இவன் தான் நீ தரும் மணாளனா?" என்றும் வினவினாள் மனத்துள்.

முருகவேளின் வதனத்தில் புன்சிரிப்பு இருந்தது. கண்களில் அருள் இருந்தது. அந்தச் சிலை அவளுக்குப் பதில் சொல்லவில்லை தான். ஆனால், அவனுக்குப் பேச்செதற்கு? விழிகள் போதுமே!

இதை உணராத நக்கண்ணை ஆத்திரத்துடன் வீட்டை எய்தினா
ள்.  தந்தையிடம் நடந்ததைச் சொன்னாள். பெருங்கோழியூர் நாய்கன் மனம் எரிமலையாய் இருந்தது. அன்று மாலை ஆமூர் மல்லன் வந்தபோது வாயிலிலேயே நின்று விடை பகர்ந்தான்: "வல்லூறு புறாவை மணக்க முடியாது" என்று.

"நாய்கரே! ஆமூர் மல்லனை அவமதிப்பவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது!" என்றான் மல்லன்.

"தெரியும்! உன்னுடன் மற்போர் புரிய வேண்டும்." என்றான் நாய்கன்.
 

"ஆம்! நீயோ உன்னிடமுள்ள மல்லரோ இன்றிலிருந்து மூன்றாவது நாள் ஆமூர் மற்போர்க் கூடத்துக்கு வாருங்கள்!" என்று கூறி விட்டு அகன்றான் மல்லன். இதைக் கேட்ட நாய்கன் தன உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆமூர் மல்லன் கிழித்தெறிந்த உடல்கள் பல என்பதை அறிந்த நக்கண்ணை அன்று முழுதும் உறங்கவில்லை.

பத்தாவது நாளும் பிறந்தது.தோப்பு வீடு துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. அன்றும் முருகவேல் கோட்டத்திற்குக் கிளம்பிய நக்கண்ணை வெறுப்புடனேயே கிளம்பினாள். தமிழ்ப் புலமையை அன்று முருகவேளிடமே காட்டி இகழ்ப்பா பாடினா
ள் உள்ளூர. முருகன் முகத்தில் அதைக் கேட்டும் முறுவல் இருந்தது. அன்று கடைசித் தினமானதால் மாலையிலும் கோட்டம் வந்து விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வரிசையாக, கதையின் நாயகன் கோழையாக அறிமுகமாகி, தந்தை அவனை நாடு கடத்த, சந்தோஷத்துடன் வெளியேறுகிறான் கதாநாயகி அறிமுகம் ஆகிறாள்..   அவளைத் தொடர்ந்து வில்லன் தொந்தரவு செய்கிறான்.. கதாநாயகன் என்டர் ஆகவேண்டிய இடம் வந்து விட்டது இல்லையா? 

ஒரு ஃபைட்  சீன, அப்புறம் க்ளைமாக்ஸ், மறுபடி ஓபனிங் சீனுடன் கதையைக் கோர்த்தாக வேண்டுமே! எல்லாக் கதைகளும் மொத்தம் 43  கதைக்களம் (Plots)  பார்முலாக்களுக்கு உட்பட்டது தானாமே! சரித்திரக் கதை மட்டும் என்ன விதி விலக்கா?

......விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வீட்டின் திண்ணையில் தூணுக்கருகில் முக்காடிட்டு ஓர் உருவம் பதுங்கி
ருந்தது. உடல் முழுவதும் பட்டுப் புடவை மூடிக் கிடந்தது. "யார்?" என்று வினவினாள் நக்கண்ணை. பதில் கிடைக்காததால், பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையில் சிறிது உடைத்து அதன் உதவி கொண்டு முக்காட்டைத் தூக்கிப் பார்த்தாள். கரிய இரு விழிகள் அவளை நோக்கின.முகம் சந்திர பிம்பமாக இருந்தது. அது ஆடவன் என்பதற்கு ஒரே அறிகுறி உதட்டின் மீது மிக அழகாக வளர்ந்திருந்த அரும்பு மீசை.

"எழுந்திரு" என்று அதட்டினாள் நக்கண்ணை.

எழுந்திருந்தான் முக்காட்டுக் காளை! அவன் இடையில் ஒரு
வாளும் இருந்ததை அவள் கண்டாள். அவன் எழுந்ததில் ஒரு கம்பீரமும் இருந்தது அவளுக்குப் புலனாயிற்று. "யார் நீ?" என்று மீண்டும் வினவினாள் நக்கண்ணை.

அவளுடைய அழகிய விழிகளுடன் அந்த வாலிபன் தனது கண்களைக் கலந்தான் ஒரு வினாடி. அந்த வினாடியில் அந்தப் பார்வை மூலம் அவன் தன்னுள் புகுந்து விட்டானென்பதை  உணர்ந்து நக்கண்ணை நாணமெய்தினா
ள். "தோழி! அவர் யாரென்று கேள்!" என்று இம்முறை தோழியை ஏவினாள். தோழி திகைத்தாள். என்றும் யாரிடமும் நேராகப் பேசும் நக்கண்ணை அன்று தன்னைப் பேசச் சொன்னது திகைப்பாகவும் இருந்தது, வியப்பாகவும் இருந்தது அவளுக்கு. இருப்பினும் திகைப்பையும் வியப்பையும் உதறிக் கேட்டாள் "யார் நீ?" என்று.

"கோழைச் சோழன்!" என்று பதில் கூறினான் அவன்.

"கோழைச் சோழனா?!" வியப்புடன் வினவினாள் தோழி.

"ஆம். நான் பட்டாடைப் போர்வையுடன் முக்காடிட்டிருக்கவில்லை?" என்று வினவினான் அவன்.

"இருந்தாய்"

"அப்படிப்பட்டவன் தென்புலத்தில் ஒருவன் தானுண்டு. அவன்...."

"போர்வைக்கோ பெரு நற்கிள்ளி" என்று இடைப்புகுந்து வாசகத்தை முடித்த நக்கண்ணை அதிர்ச்சி வசப்பட்டாள். "சோழ இளவல் இங்கு ஏன் வந்தார்?"  என்று வினவினாள்.

"நாடு கடத்தப் பட்டேன்." என்றான் இளவல்.

"கேள்விப் பட்டோம்" என்றாள் நக்கண்ணை.

"கோழைத் தனத்திற்காக" என்று சொன்னான் இளவல்.

நக்க
ண்ணையின் மனம் குழம்பியது. அவன் முகம் கோழையின் முகமாகத் தெரியவில்லை அவளுக்கு. கண்களும் கோழையின் கண்களல்ல என்பது அவள் புலமை உள்ளத்திற்குப் புலனாயிற்று. ஆகவே "உள்ளே வாருங்கள்" என்று அழைத்துச் சென்றாள். உள்ளே பெருங்கோழியூர் நாய்கன் சோழ இளவலைத் தக்க மரியாதையுடன் எதிர் கொண்டான். மஞ்சத்தில் உட்கார வைத்து எதிரில் நின்று கொண்டான். "என்ன ஆணை?" என்றும் கேட்டான்.

"நா
ய்கரே! ஒரு உதவி வேண்டும்" என்றான் சோழ இளவல்.

"உத்தரவிடுங்கள்."

"நாளைக் காலையில் நீர் ஆமூர் மல்லனிடம் செல்லுங்கள்."

"உம்"

"சென்று நான் அவனுடன் மற்போர் புரிய விரும்புவதாகச் சொல்லுங்கள்."

இதைக் கேட்ட நாய்கன் திகிலடைந்தான்."இளவரசே இது வேண்டாம். இது வேண்டாம்" என்றான்.

"ஏன்?"

"அவன் உங்களைக் கிழித்துப் போட்டு விடுவான்."

"நாய்கரே!"

"இளவரசே"

"வீரர்கள் போரில் மரிப்பது நல்லதா? கோழையாக வாழ்வது நல்லதா?"

இதற்கு நாய்கன் பதில் சொல்லவில்லை. "ஏன் மரிக்க இஷ்டப் படுகிறீர்கள்?" என்று முடிவில் கேட்டான்.

"நக்க
ண்ணையின் நளின விழிகளுக்காக. அவளை நேற்று வாவிக் கையில் அவமதித்தான் மல்லன்."

"ஆம். நேற்று என்னையும் போருக்கு அழைத்தான்."

"உங்களுக்குப் பதில் நான் செல்கிறேன்." நற்கிள்ளியின் பதில் உறுதியாயிருந்தது.

 
ந்த விநோதத்தைக் கேட்டு, மறுநாள் ஆமூரே  நகைத்தது. "போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மாள ஆமூருக்கா வரவேண்டும்?" என்று ஊர்ப் பெரியவர்கள் நகைத்தார்கள். பெண்கள் கூட நகைத்தார்கள்.'இந்த மற்போர் நடைபெறாது.சமயத்தில் நற்கிள்ளி ஓடிவிடுவான்' என்று பலரும் சொன்னார்கள். ஆனால். குறிப்பிட்ட நேரத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஊர் மத்தியிலிருந்த மற்போர்க் கூடத்துக்கு வந்து சேர்ந்தான் நற்கிள்ளி. மக்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள். ஆமூர் மல்லன் எல்லோரும் கேட்கக் கூவினான்" "ஐயோ! சோழன் மகனே! விதி உன்னைப் பிடர் பிடித்து உந்த இங்கு வந்தனை. வேண்டுமானால் ஓடிவிடு," என்று.

பெருநற்கிள்ளி மெல்லப் போர்வையை எடுத்தெறிந்தான். தனது உடலின் மீதிருந்து. உள்ளே சல்லடம் மட்டுமே தரித்திருந்த அவன் தேக காந்தி, இளமை, விழிகளில் இருந்த அசட்டை இவற்றைக் கண்ட மக்கள் "இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்த விதி?" என்று கேட்டார்கள்.

சிலர் பெருங்கோழியூர் நாயகனைத் தூற்றினார்கள். "இந்தச் சிறு பிள்ளையை இவன் ஏன் காவு கொடுக்கிறான்?" என்று. இவையனைத்தும் சற்று எட்ட இருந்த பனைமரத்தில் சாய்ந்திருந்த நக்கண்ணையின் காதில் விழ, அவள் தனது நளின நயனங்கள் பனிப்ப நின்றாள். ஆனால், மற்போர் துவங்கியதும் விழிகளைத் துடைத்துக் கொண்டா
ள். வேதனை இருந்த இடத்தில் வியப்பு ஆட் கொண்டது. ஆமூர் மல்லன் மும்முறை இளவலைப் பிடித்தான் தனது முரட்டுப் பிடியில் மும்முறையும் மிக லாவகமாக நழுவினான் நற்கிள்ளி. நான்காம் முறை இருவரும் அணுகிய போது பிடித்தவன் ஆமூர் மல்லல்ல. நற்கிள்ளியின் மெல்லிய கரங்கள் மல்லன் கரங்களைப் புதுப் பாணியில் சுழற்றி மடக்கிப் பிடித்தன. திடீரென அக்கைகள் திரும்பிய வேகத்தில் மல்லன்  இரு முறை சுழன்றான்.

இந்தப் புதுப் பிடியைக் கண்டிராத மல்லன் இதயத்தில் சந்தேகம் எழுந்தது. "இவன் உண்மையில்கோழை தானா? சோன் மகன் தானா?"என்ற கேள்விகள் சித்தத்தில் பிறந்தன. ஆகவே தனது வலிமையை  எல்லாம் உபயோகிக்க நெருங்கினான் இளவலை. இளவலும் தயாராக நின்றான். இம்முறை காலுதைப்பில் ஈடுபட்டான் மல்லன். அதை எதிர்பார்த்த நற்கிள்ளி சற்று விலகித் தனது காலால் அவன் கணுக் காலுக்கு மேல் உதைக்க, மல்லன் மண்ணில் புரண்டான். அடுத்த வினாடி யானை மீது பாயும் சிங்கம் போலப் பாய்ந்த இளவரசன், மல்லன் மார்பில் தன காலை ஊன்றி அவன் தலையை எடுத்துப் பிடித்து, "இது உன் மமதைக்கு, இது ஏன் வீரத்துக்கு, இது நக்கண்ணையை வழி மறித்ததற்கு," என்று மும்முறை தரையில் மோதிவிட்டு எழுந்தான்.. மல்லன் வாயில் ரத்தம் வந்தது. அத்துடன் ஒரு பெருமூச்சு, அவன் உயிரும் பிரிந்தது.

ஆமூர் மக்கள் பிரமை பிடித்து நின்றனர். ஏதும் நடவாதது போல ச
ல்லடத்துடனும் உடம்பில் புழுதியுடனும் நக்கண்ணை நின்றிருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான் நற்கிள்ளி. அத்தனை புழுதியுடன் அவளைத் தழுவியும் கொண்டான். நக்கண்ணை மறுக்கவில்லை. ஊர் மக்கள் காண அவன் உடற்புழுதிகளைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

இப்போது கதை ஆரம்பித்த இடத்துடன் போய்ச் சேர வேண்டும் இல்லையா? வாருங்கள், நாமும் கூடப் போய்ப் பார்ப்போம்!

மகன் நாடு கடத்தப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் பெருஞ்சாத்ன் இல்லத்தை அடைந்த சோழ மன்னன் தித்தன், "பெருஞ்சாத்தனாரே! என் மகன் ஆமூர் மல்லனைக் கொன்று விட்டானாம்." என்றான்.

"ஆம்" என்றார் பெருஞ்சாத்தனார்..

"அப்படியானால் அவனுக்கு மற்போர் கற்றுக் கொடுத்தது யார்?" என்று வினவினான் மன்னன்.

"நான் தான்!"

"விற்போரும் தெரியுமா?"

"சகலமும் தெரியும்!"

"அப்படியானால் அவன் கோழையல்லவே?"

"சிங்கத்தின் வயிற்றில் நரி எப்படிப் பிறக்கும்?"

பெருஞ்சாத்தனாரின் இந்தக் கேள்வி மன்னனைத் திகைக்க வைத்தது. "பிறகு, கோழையாக வேடந்தான் போட்டானா நற்கிள்ளி?" என்று வினவினான்.

"ஆம்! உலகத்தைத் தனிப்படப் பார்க்க விரும்பினார் இளவரசர். ஒரே மகனானதால் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று  எண்ணினார். ஆகையால்....!"

"நாடகமாடினான்?"

"ஆம்!"

"அதற்கு நீரும் உடந்தை?"

பெருஞ்சாத்தனார் பதில் கூறவில்லை. வாயிலில் எதையோ கண்டு விழித்தார். "என்ன விழிக்கிறீர்?" எனச் சீறினான் மன்னன்.

வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நற்கிள்ளி. " தந்தையே! சாத்தனாரிடம் குற்றம் காணாதீர்கள்! குற்றம் என்னுடையது." என்றான்.

தித்தன் ஒரு வினாடி தாமதித்தான். பிறகு மைந்தனை அ
ணைத்துக் கொண்டு "நற்கிள்ளி! இன்று நான் புத்திரப் பேறு பெற்றேன்." என்று கூறிவிட்டு, "இனி அந்தப்புரம் சென்று விளையாடுவதில்லை என்று உறுதி சொல்" என்று கையை நீட்டினான்.

"அந்த உறுதி சொல்ல முடியாது."

"அப்படியானால்...?"

"இப்பொழுதே அந்தப்புரம் போக வேண்டும்!"

"காரணம்?"

"இவள்" என்ற இளவல் "இதோ உங்கள் மருமகள்!"
என்று வாயிலை நோக்க, நக்கண்ணை அன்ன நடை நடந்து வந்து மன்னனை வணங்கினாள்.

மன்னன் நகைத்தான்! " சரி, சரி! போ அந்தப் புரத்துக்கு!" என்றான்.

அன்றிரவு ம
வறையிலும் நற்கிள்ளி போர்வை போர்த்தி வந்தான். "புடவையை எடுத்து எறிகிறீர்களா, நான் எறியட்டுமா?" என்றாள் நக்கண்ணை.

"அது உன் தொழில் அல்ல! என் தொழில்!" என்று சீலையை நீக்கிப் பஞ்சணையை அணுகினான் நற்கிள்ளி.

சரி நண்பர்களே! முழுக் கதையையும் சொல்லி முடித்தாகி விட்டது. இப்போதாவது அந்தப் பாடலைப் படித்து விட்டு, எந்த அளவுக்கு சரித்திரம்,. எந்த அளவுக்குப் புனைவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?!


இந்தச் சிறுகதை 1960  களில் அமுதசுரபி மாத இதழில் வெளியானது. இன்னும் மூன்று சிறுகதைகளுடன், 1969 வாக்கில் புத்தக வடிவாகவும் வெளி வந்தது. வானதி வெளியீடு. என்னிடமிருப்பது 1988  இல் வந்த ஐந்தாவது பதிப்பு,  -விலை வெறும் ஐந்தே ரூபாய் தான்!

காசு கொடுத்து வாங்கிப் படிக்க நிறைய வாசகர்கள் தயாராக இருக்கும்  இந்தத் தருணத்தில்,  பதிப்பகங்கள் கொள்ளை விலை வைத்துப் புத்தகங்களை விற்கும் நிலை அநேகமாகத் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. இதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே
பார்த்திருக்கிறோம், இல்லையா?



 
 



 
 
 



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)