கூகிள் ப்ளஸ் இருந்த நாட்களில் வலைப்பதிவுகள் எழுதத் தோன்றியதே இல்லை. முக்கியமான காரணமாக, கூகிள் பிளஸ்சில் நடப்புச் செய்திகளின் மீது சுருக்கமான விமரிசனங்களை எழுத முடிந்ததுதான்! ஒரேநாளில் இருபது, முப்பது விமரிசனக் குறிப்புக்களைக் கூட நடப்பு செய்திகளின் மீது சுடச் சுட எழுத முடிந்ததும் இன்னொரு காரணம். எதற்காக இந்த பழைய கூகிள் ப்ளஸ் புராணம் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
சிவசேனா, அகாலி தளம் இரண்டுமே பிஜேபியை பிடித்த சாபங்கள் என்று நீண்டநாட்களாகவே (2014 நாடாளு மன்றத் தேர்தல்களுக்கு முன்பிருந்தே) என்னுடைய கருத்தாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன்.இதை எழுத நான் பிஜேபி/RSS உறுப்பினர் அல்லது அனுதாபியாக இருந்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே போதும் இல்லையா?
சேகர் குப்தா மேலே இருக்கும் 28 நிமிட வீடியோவில் பிஜேபி அகாலி தளத்தைக் கைகழுவியது ஏன் என்பது குறித்து அவரது அரசியல் அகடவிகடத்தைச் சொல்லி இருக்கிறார். வாஜ்பாயி காலத்து அரசியல் நிதானம் நரேந்திர மோடி-அமித்ஷா காலத்தில் இல்லாமல் போனதே என்று அனாவசியமாக விசனப்படுகிறார்
சோனியா அமைத்த ஐமுகூ எப்படி பெரும் ஊழலுக்கான கூட்டணியாக மட்டுமே இருந்தது என்பதைச் சொல்லத் தைரியம் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒப்பாரி வைக்க முடியும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியால் அந்தக்கூட்டணிக்கு என்ன வலுசேர்க்க முடிந்தது என்ற ஒரு கேள்வியிலேயே சேகர் குப்தாவின் ஒருதலைப்பட்சமான விமரிசனத்துக்கான பதிலும் கூட இருக்கிறதே!
சிவசேனாவின் அதிகாரப் பேராசை அது மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியதிலும், ஊழலில் திளைத்ததிலும் முன்னரே வெளிப்பட்டது. அதிகாரப் பசிக்காக தாக்கரேக்கள் சோனியாவுடன் கூட கூட்டுச் சேர்ந்ததுமே தெரிந்த கதைதான்! தாக்கரேக்கள் புலிகள் அல்ல வெறும் எலிகள்தான் என்பதும் நிரூபணமானது. கங்கனா ரணாவத் கேலியாகச் சொன்னது போல இன்று அது சோனியா சேனா மட்டும் தான்!
ஆக நேற்று சிவசேனா, இன்றைக்கு அகாலி தளம் இவை பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறியது நல்லது தான்! விட்டது சனியன், விலகியது சாபம் என்று பிஜேபி கட்சியினர் சந்தோஷப்பட்டால், அதில் நியாயம் உண்டு!
அதேபோல தமிழகத்திலும் கூட ஏதோ ஒரு கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பது என்பதையும் விட்டார்களானால் இன்னொரு சாபமும் கூட விலகிவிடும்!
தமிழக பிஜேபிக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.
.