Saturday, October 23, 2010

ஏழு நிமிடங்கள்! இர்விங் வாலஸ்....!

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா?

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும் வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங் வாலசின் The Seven Minutes! 


இந்தப் புத்தகத்தின் கதையோட்டம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம் டிராமா வகை தான் என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்த நூலும், சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.


ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பேசும் போது, இந்தியாவில் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை, அப்படி ஒரு நிலை அமெரிக்காவிலும்  வந்தால் என்ற ரீதியில் கற்பனை செய்து எழுதப்பட்ட கதை என்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே 42 வது அரசியல் சாசனத் திருத்தம் அங்கே அமெரிக்காவில் 35 வது அமெண்ட்மென்ட் என்று கதைக் களத்தை, அமெரிக்க அரசியல் சூழலோடு நகர்த்திக் கொண்டு போனதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.



இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  


மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்! 


அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது. 

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை
ஏற்று நடத்தினார்.

அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962 இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று!



காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!


கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்!
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர், ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம்
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes!

இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.



 

7 comments:

  1. // அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! //

    சத்தியமாக எனக்கு இது புது செய்திதான். இந்திராவின் எமர்ஜென்சியின் போது நான் பட்டப்படிப்பு முதல் வருட மாணவன்.அதற்கு முன்பும் ஒரு எமர்ஜென்சி இருந்தது என்ற செய்தி சற்று அதிர்ந்துதான் போனேன்.

    மொத்தத்தில் காந்தி யின் முட்டாள்தனத்தினால் , தொலை நோக்கு பார்வை இல்லதாத , வெறும் அடிவறுடுகளுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு கோழையினால் தான் காங்கிரஸ், இல்லை நேருவும் அவர்தம் வாரிசுகளும் தொடர்ந்து இந்த தேசத்தை ஆளும் அவலம் ஏற்பட்டது . இவாறு சொன்னால் மீதம் உள்ளவர்கள் என்னை அடிக்க வருவார்கள். கோழைகள்.

    அந்த இரண்டு புத்தகங்களையும் படிக்க வேண்டும். தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நல்ல புத்தகம்! அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. வாருங்கள் மாணிக்கம்!

    இதில் மகாத்மா காந்தியின் முட்டாள்தனம் எங்கே வந்தது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் நேருவைத்தனது அரசியல் வாரிசு, பட்டத்து இளவரசராக நடத்தியதற்குக் காரணமே படேல் மீது இருந்த அவநம்பிக்கை தான்! ஹிந்து மதப் பிடிமானம் கொண்ட படேல், ஹிந்து முஸ்லிம் இரு சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்திவிடுவார் என்று பயந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, நேரு ஒரு அரசை அமைத்து, அது எடுத்த முடிவுகளுக்கு காந்தி எந்தவிதத்திலும் சம்பந்தப்படவே இல்லையே! உண்மையைச் சொல்லப் போனால், ஜனங்களை ஒவ்வொரு கட்டத்திற்குமாகத் தயார் செய்து, ஒரு அடக்குமுறை அரசு இயந்திரத்தை எதிர்த்து நிற்கக் கற்றுக் கொடுத்த ஒரே தலைவர் அவர். இந்த தேசத்தின் மக்களை அவர் அறிந்த அளவுக்கு வேறு எந்தத் தலைவரும் நேரடியாகச் சந்தித்து அறிந்திருக்கவில்லை, ஜனங்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக இருந்ததுமில்லை என்ற நிலை இன்றைக்கு வரைக்குமே தொடர்கிறதே!

    நேருவைக் கூட, அவருடைய உள்நோக்கங்களுக்கு ஒரு கிரிமினல் நோக்கம் இருந்ததாகச் சொல்லி விட முடியாது! அந்த வகையில் இந்திராவை நேருவோடு சேர்த்து விட முடியாது!

    எஸ் கே!

    நன்றிக்கு, இன்னொரு நன்றி! புத்தகங்களைப் படித்துப் பார்க்க முயற்சி செய்தால் இன்னும் அதிகமான விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவான நிலை எடுக்கவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  4. Sir, Interesting besides informative post. Pity I missed it earlier. In my college days I read The man, The Second Lady. Do you remember the controversy surrounding The Second Lady, which has an indian connection?

    ReplyDelete
  5. எனக்குத் தெரிந்து, ஹேமமாலினி தயாரித்து நடித்து மெகா பிளாப் ஆன ட்ரீம் கேர்ல் படத்தைத் தவிர வேறு இர்விங் வாலஸ் நாவலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருந்ததாக நினைவில்லை. இந்தப்படம் செகண்ட் லேடியின் கதையைத் தழுவி எடுக்கப் பட்டது. இப்போது திருமதி அம்பானியாக இருக்கும் டினா கூட அதில் நடித்திருந்தார்(?)

    ReplyDelete
  6. செகண்ட் லேடி கதையில், அமெரிக்க குடியரசுத்தலைவரின் மனைவியின் ரஷிய அஜெண்டாவில், 'இந்தியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது' பற்றிப் பேசப் போவதும் இருக்கும். பின்னர் ஒரு இந்திய ரசிகர், 'இந்தியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை தேர்தல் தொடங்கிய காலம் முதலே உள்ளது' என்று சுட்டிக்காட்டவும், வாலஸ் தனது தவறுக்கு மன்னிப்பு தெரிவித்து அடுத்த பதிப்பில் அதனை மாற்றிக் கொண்டார். குமுதம்தான் சுட்டிக்காட்டியது என்று நினைக்கிறேன்.

    சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எப்பொழுது ஓட்டுரிமை கிடைத்தது என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்!

    ReplyDelete
  7. மீள்வருகைக்கு நன்றி பிரபு சார்!

    பெண்களுக்கும் வாக்குரிமை என்பது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது சோவியத் ஒன்றியத்தில் தான் 1917 அடுத்தது ஆஸ்திரியா 1918 ஜெர்மனி 1919 நான்காவதாகத்தான் அமெரிக்கா 1920 பழமைவாதத்தில் அதிக நம்பிக்கை கொண்ட பிரிட்டனில் கூட 1928 சுதந்திரம், சமத்துவம் பற்றிப் பெரிதாக முழங்கிய பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது 1944 இல்தான்!அதற்கடுத்த வருடம் இத்தாலியில்! ஆகக் கடைசியில், சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது 1971 இல்தான்!

    இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை ஆரம்பத்தில் இருந்தே இருப்பதென்னவோ, எழுத்தளவில் உண்மைதான்! ஆனால், அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இன்றைக்கும் கூடப் பெண்கள் சுதந்திரமாக யோசித்துத் தாங்களே வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது! குடும்பத்தில் யாரோ ஒரு ஆண் தான் பெரும்பாலான தருணங்களில் அதையும் தீர்மானிக்கிறான். அப்படி ஆண்களாவது சுதந்திரமாக யோசித்து வாக்களிக்கிறார்களா என்று பார்த்தால், அதிலும் ஏகப்பட்ட....! இந்தியாவில் வாக்குரிமை, ஜனங்கள் அதைப் பயன்படுத்துகிற விதம் இரண்டிலுமே இந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் தொடர்ந்து புரிந்துகொள்ளாமல் ஒரு தேசமாகத் தவறிக் கொண்டிருக்கிறோம்.என்றுதான் எனக்குப்படுகிறது.

    //கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?//


    இந்தப்புத்தகம் என்னுள் எழுப்பிய கேள்விகள், சிந்தனையின் சாராம்சம். ஒரு வழக்கறிஞராக உங்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு கொஞ்சம் விரிவான பதில்லை எதிர்பார்த்தேன்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)