Wednesday, January 27, 2010

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?


எது நல்ல எழுத்து என்று சொல்வதை விட எதுவெல்லாம் எழுத்து இல்லை என்று எளிதாகச் சொல்லிவிடலாம்!

அந்த அளவுக்கு, இப்போது எழுதிக் குவிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்! பெரும்பாலானவர்கள்,எழுதியதைப் படித்தார்களா, புரிந்து கொண்டார்களா என்பதே கூட சமயங்களில் தெரிந்துகொள்ள முடிவதில்லை, ஆனாலும் விமரிசனம் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்! நாலுபக்கம் கிறுக்கித் தள்ளியதுமே, புத்தகம் எழுதுகிற ஆசையும் வந்துவிடுகிறது! சிறுகதைப் பட்டறை, உரையாடல் பட்டறைக்குப் போய்வந்தால், உலக மகா எழுத்தாளனாகி விட்ட மாதிரி, ஒரு look வந்துவிடுகிறது பாருங்கள், அங்கே தான் செம காமெடி!

ஒரு வாசகனாக, வாசித்ததைக் கொஞ்சம் யோசித்து யோசித்து உள்வாங்கிக் கொள்வதில் இருக்கும் சுகத்தை அனுபவித்துப் பார்த்த பிறகே, கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணமே வந்தது. சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கொஞ்சம் நகாசு பண்ணி, மெலடியாக மெட்டமைத்துப் பாட்டுக் கேட்கும் பொது, நம்மையறியாமலேயே, மனம் ஒன்றிப்போய் நாமும் சேர்ந்து ஹம்மிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோமில்லையா, அதைப் போலத் தான் இதுவுமே என்று கூடத் தோன்றும்!

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?

கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் எழுத்தைப் பற்றிய கேள்விக்குமே  விடையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது!

பூவனம் வலைப்பதிவில் எழுத்தாளர் ஜீவி, தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜெயகாந்தன் என்று எழுத்தாளர்  ஜெயகாந்தனைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். முந்தைய பதிவிலுமே கூட இந்த வலைப்பதிவைத் தொட்டுத் தான் எழுத்து என்று ஒன்று பிறப்பது எப்போது என்ற கேள்வியை முன் வைத்திருந்தேன்.  

இந்தப் பதிவில் சிங்க(மாக) இருந்த ஜெயகாந்தன் என்று காவிரிமைந்தன்  என்ற பதிவர் ஜெயகாந்தனை வர்ணித்துவிட்டு, அதன் லிங்கையும் பூவனம் வலைப்பதிவில் "ஆனால் இப்போதுள்ள ஜெயகாந்தன் வேறு. முற்றிலும் மாறி விட்டார்" என்றும் விமரிசிக்கிறார். அதன் பின்னூட்டமாக ஜவஹர்லால் என்ற பதிவர் சொல்கிறார்:"நிச்சயம் ஜெயகாந்தன்தான். முரண்பாடுகளுக்குப் பெயர் போன அவர் செய்திருக்கும் இதுவும் முரண்பாடுதானே!"

வேறொரு பேட்டியில் ஜெயகாந்தன், அவரைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றி, சொன்னபதில் காவிரிமைந்தன், ஜவஹர்லால் போன்ற  விமரிசகர்களுக்குமே பொருத்தமான பதிலாகவும் இருக்கிறது! ஜெயகாந்தன், உயர்ந்து கம்பீரமாக நிற்கும் தருணம் இது என்றே நான்சொவேன்! 

 

"உங்கள் மீது மரியாதையும், நேசமும் வைத்திருக்கக்vகூடிய இடதுசாரி அமைப்புகள்,  உங்கள் மீது விமர்சனங்களையும்,  சில நேரங்களில்  ஆதங்கங்களையும்  வெளிப்படுத்தும் போது அவைகளை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? 
 
அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க முடியாது என்றுதான். நான்கூட அங்கே இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பேன். இந்த புரிதல் இருப்பதனால் அது என்னை பாதிப்பதில்லை. ஆனால் அவர்களை நான் பாதித்துக்கொண்டே இருப்பேன். அதுவே எங்கள் உறவின் ரகசியம். அப்புறம் கவனித்தீர்களா? 

அவர்கள் எல்லோரும் மாறிக் கொண்டே வருவதை. என் விஷயத்தில் கூட."

வெறும் கதைசொல்லி என்று ஒதுக்கிவிடமுடியாத ஆளுமை ஜெயகாந்தனுடையது!  தன்னுடைய சுயநலத்திற்காகப் பிரபலங்களின் நிழலில் நின்று கொண்டு தானும் பெரிய பருப்புத்தான் என்று சொல்ல முனைகிற எவனோ ஒரு crook வந்து கெடுத்துவிட முடியாத ஆளுமை ஜெயகாந்தனுடையது!

புதுச் செருப்பு கடிக்கும்! 1971 வாக்கில் வெளிவந்த சிறுகதை! 

அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.

" என்ன காலிலே?"  என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"
போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை  யாராவது வாங்குவாங்களாங்கோ?"

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்.

நந்தகோபால்! புதிதாகக் கல்யாணமானவன் அவன்.

அவனுடைய உணர்வுகளையோ, தவிப்பையோ புரிந்து கொள்ளாமல்திரும்பிப் படுத்துக் கொண்டு  தூங்குகிற மனைவி. முதுகில் இரண்டு அறை வைத்தால் என்ன என்ற நினைப்பின் ஊடேயே, இதே மாதிரித் தன்னுடைய தகப்பன் தாயை நடுராத்திரி, போட்டு மிதிப்பதும் , ஐயோ பாவி சண்டாளா என்று தாய் அழுதுகொண்டே திட்டத் திட்ட தகப்பன் அவளை மீண்டும் மீண்டும் அடிக்கிற காட்சியும், மறுநாள் காலை இருவருமே எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாக இருக்கிறமாதிரி நடிப்பதையும் தனது பதினைந்து வயது வரை பார்த்து அதிர்ந்ததும் நினைவு வருகிறது.

யாருக்கு வேண்டும் இந்த திருமணம், பந்தம் உறவு எல்லாம் என்று சலித்துக் கொள்கிறபோது, அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தூண்டிய  அந்த சைத்தான்-கிரிஜாவின் நினைவு வருகிறது.
சைத்தானைக் கட்டிக் கொண்டு வீட்டில் வைத்துக் கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று சொல்கிறேனே, அவளைப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான்.

கிரிஜா! இங்கிதம் தெரிந்தவள், இவனோடு குடித்தனமாகக் கொஞ்ச நாள் இருந்தவள். தொழிலாக இல்லாமல், நம்பிக்கை, தேவையின் அடிப்படையில் வேறு சிலரோடும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள். அவளோடு பேசிக் கொண்டிருந்தாலே மனதுக்கு இதமாக இருக்கும் அதற்காகத் தான், வேறு எதற்காகவுமில்லை என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டே கிரிஜாவின் வீட்டுக்குப் புறப்படுகிற பின்னணியில், இருவருக்கும் ஏற்பட்ட உறவை சுருக்கமாக சொல்கிறார் ஜெயகாந்தன். தன்னுடைய தாய், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதை, அவளிடம் சொல்லி, தன்னுடைய தயக்கத்தையும் பகிர்ந்து கொள்கிற சிநேகிதம், "அம்மாவை உங்க நயினா அடிச்சாருங்கிறதுக்காகவா கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க? நீங்க உங்க பொஞ்சாதியை அடிக்காம இருங்க." என்று கனிவோடு சொல்கிற இங்கிதம், உறவிலேயே, செல்லமாக வளர்க்கப் பட்ட பெண் ஒருத்தியை திருமணம் பேசியிருப்பதைச் சொல்லும்போது . அவள் மனத்துள் அவளே அறியாத வண்ணம் ஒரு  ஏமாற்றமும் வருத்தமும் இருந்தாலும், மனம் நிறைய அவனை சந்தோஷமாக வாழ்த்துகிற  காதலின் ஒரு புறமும் சொல்லப் படுகிறது.

திடீரென அவன் வந்து நின்றதில் ஒரு அதிர்ச்சி, உள்ளூர ஒரு சந்தோஷம். மண வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று அவனை விசாரிக்கிறாள்.
நந்தகோபால் தன்னுடைய மனைவி பாராமுகமாக இருப்பதையும், ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஒரே அழுகையும் பிடிவாதமுமாக இருப்பதையும் சொல்லி,
உன்னையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் என்று திரும்பத் திரும்ப அவன் மனைவி அவனைப் புறக்கணித்ததில் எழுந்த அவமானத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்.

அவனைத் தேற்றுகிறாள்! எப்படி!!

கல்யாணம்  ஆனதினாலேயே அவன் மனைவி, பாவம் சிறு பெண்  அவனுக்குச் சமமாகி விடுவாளா?  செல்லமாக வளர்ந்தவள், திடீரென்று ஊர்விட்டு வந்து, தனியாக..குழந்தைப் பெண்தானே? நீங்கள் அனுபவமுள்ளவர். அந்தப்பெண்ணுக்கோ எல்லாம் புதிது அல்லவா? ஆண் என்றாலே பயம், அருவருப்பு கூட   வருமே! நான் உங்களிடம் இயல்பாக இருந்தேன் என்றால், அதற்கு எக்ஸ்பீரியன்ஸ் தானே கரணம்! அதே எக்ஸ்பீரியன்ஸ் தானே  கல்யாணம் செய்து கொள்ள டிஸ்க்வாலிபிகேஷனுமாகவும் ஆகிப் போனது? உங்கள் மனைவியை விட நீங்கள் அனுபவஸ்தர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு,  அவள் குழந்தை என்று பொறுத்துப் போனால், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்.

அவள் பேசப் பேச, மனம் லேசாவதை அவன் உணர்கிறான். இவளைத் தேடி வந்தது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது?

கதை அவள் கால்விரல் புண்ணுக்கு செருப்புக் கடித்த காயத்திற்கு எண்ணெய் ஊற்றுவதில் திரும்புகிறது.

செருப்புக் கூடப் புதியதாக இருக்கும்போது கடிக்கிறது! அதற்காகப் பழைய செருப்பை யாராவது வாங்குவார்களா என்ன?

கிரிஜா சிரித்துக் கொண்டே தான் நந்தகோபாலிடம் கேட்கிறாள்! அவன் அவள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுவதோடு இந்தக் கதை முடிகிறது. அந்தக் கடைசிக் கட்ட உரையாடலைத் தான் முதலில்பார்த்தோம்!

கேள்வி இன்னமும் அப்படியே இருக்கிறது அல்லவா? எத்தனை தரம் படித்தாலும் இந்த கேள்வி
எதிரொலித்துக்  கொண்டே இருப்பதை நிறுத்த முடியவில்லையல்லவா!

அதுதான் ஜெயகாந்தன்! யோசிக்க வைக்கும் எழுத்து, நல்ல எழுத்து இதை விட வேறு என்ன இருக்க முடியும்?




ஜேகே என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜெயகாந்தன், தனக்கென்று எந்த ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முனைந்தவர்  இல்லை . உண்மையைச் சொல்லப் போனால், பிம்பங்களை உடைக்கிற மாதிரித் தான் அவருடைய புயல் வேகத்திலான எழுதும் காலம் இருந்திருக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் இயல்பைத் தன்னிடம் காண முடிந்த அளவுக்கு மற்றவர்களிடத்திலும் காண முடிந்து அதை ஏற்றுக் கொண்ட பக்குவம் அவரிடம் இருந்தது. அவருடைய உலகத்தைக் கண்டு மிரண்டவர்கள்ஏராளம்!

தான் ஜேகேயைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பம் உடைந்ததைப்  பற்றிய ஒரு  விமரிசனத்தை இங்கே கீற்று தளத்தில் வாசிக்கலாம்!


அலங்கார வார்த்தைகளின் அடுக்கு, எதுகை மோனை, எழுத்துச் சித்தர், கருத்துப் புத்தர் என்ற அடைமொழிகள் எதுவுமே இல்லாமல், காமத்தைத் துணைக்கழைத்துக் கொள்ளாமல், உபதேசம் செய்வது, ஊரை ஏமாற்றுவது இப்படி எந்த போலித்தனமுமில்லாமல், வாழ்க்கையின் நிதர்சனம், யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைகிற மாதிரி,

சொல்ல முடியுமானால் --

அது எழுத்து!





4 comments:

  1. அலங்கார வார்த்தைகளின் அடுக்கு, எதுகை மோனை, எழுத்துச் சித்தர், கருத்துப் புத்தர் என்ற அடைமொழிகள் எதுவுமே இல்லாமல், காமத்தைத் துணைக்கழைத்துக் கொள்ளாமல், உபதேசம் செய்வது, ஊரை ஏமாற்றுவது இப்படி எந்த போலித்தனமுமில்லாமல், வாழ்க்கையின் நிதர்சனம், யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைகிற மாதிரி,

    சொல்ல முடியுமானால் --

    அது எழுத்து"//

    அதற்கு தெளிவான எண்ண ஓட்டமும், நேர்மையான எழுத்து வெளிப்பாடும் வேண்டும். அலங்கார வார்த்தைகள் சொல்ல வந்த கருத்தை புறந்தள்ளி வாசகனை திசை மாற்றிவிடும்.

    ReplyDelete
  2. முழுதும் படித்து விட்டேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நான் மறந்த'புதுச் செருப்பு கடிக்கும்' சிறுகதையை எடுத்துக் கொண்டு,தகுந்த இடத்தைத் தேர்ந்து,மேற்கோள் கொடுத்து சிறப்பாகக் கையாண்டிருக்கிறீர் கள்.தலைப்பு கொடுப்பதில் நீங்கள் எப்பொழுதுமே சோடைபோனதில்லை அதனால் தான் தனியே குறிப்பிடவில்லை.

    திரு.தாஜ்ஜின்'கீற்று' கட்டுரையை நெடுங்காலத்திற்கு முன்னேயே படித்த நினைவிருக்கிறது. படித்து முடித்ததும்,அப்பொழுது என்ன நினைத்தேனோ நினைவில்லை. ஆனால், இப்பொழுது அதைப் படித்ததும், இரண்டு அற்புதமான சிறுகதைக்களுக்கான வித்து அதில் இருப்பது கண்களை உறுத்தியது. கதையாக எழுதியதும் தெரியப்படுத்துகிறேன்.

    இந்த 'சுவாசிக்கப்போறேங்க' தளம் வெகு அழகாக உருவாகி வருகிறது.
    இப்பொழுது தான் தவழ ஆரம்பித்திருப்பதால், தனிக்கவனம் எடுத்துக் கொண்டு கட்டிக் காப்பாற்ற வேண்டுகிறேன்.

    மிகுந்த அக்கரையுடனான அன்பான வாழ்த்துக்கள், கிருஷ்ணமூர்த்தி சார்!

    ReplyDelete
  3. வணக்கம் ஜீவி சார்! வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளத் தனியாக ஒரு வலைப்பதிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே, என்னுடைய இன்னொரு பதிவுக்கு என்ன மாதிரியான வாசகர்கள் வருகிறார்கள் என்பதோ, அங்கே சில புத்தகங்களைத் தொட்டு எழுதியபோது என்ன நினைக்கிறார்களோ என்பதோ சரியாகத் தெரியாமல் இருந்ததில் இருந்து எழுந்தது தான்!

    மின்தமிழில் அறிமுகமான எழுத்தாளர் திரு வி.திவாகர், தன்னுடைய S M S எம்டன் 22-09-1914 புதினத்தை சென்ற டிசம்பர் மாதம் எனக்கு அனுப்பி வைத்து, படித்துவிட்டு உங்களுடைய கருத்தைச் சொல்லுங்கள் என்றும் கேட்டிருந்தார். அவருடைய புத்தகத்தை, பத்தோடு பதினொன்றாகப் போகிற போக்கில் புத்தகங்களையும் தொட்டுப் பேசுகிற எழுத்தாக எழுதுவதா, இல்லை தனி வலைப் பூவாகவே ஆரம்பித்து, எழுதுவதா என்ற எண்ணத்தில் சென்ற கிறிஸ்துமஸ் அன்று தான் இந்த வலைப்பக்கங்களை ஆரம்பித்தேன்.

    எழுத்து! மனித மனங்களின் நுண்ணிய உணர்வுகளின் நாடியாக இருப்பது! நாடிபிடிக்கத் தெரிந்தவன் மனித மனங்களின் சோகத்தைப் புரிந்து கொள்கிறவனாகவும், மனிதநேயமிக்கவனாகவும் இருக்கிறான். அந்த நிலைக்கு உயர முடிகிறவனை மட்டுமே எழுத்தாளனாக, எழுத்தின் வித்தகனாகக் கருத வேண்டியிருக்கிறது. மனித மனங்களை அறியாதவன் வெறும் கதை சொல்லியாகவே கீழ்நிலையில் நின்று விடுகிறான்.

    ஆக, நல்ல எழுத்து எது என்பதையே கொஞ்சம் தரம் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது! எழுதியது, வாசிக்கும் என்னுள் என்னென்ன ரசவாதத்தை நிகழ்த்தியது என்பதைக் கவனிக்கும்போது தான் நான் என்னை மட்டுமல்ல, படைப்பாளியையும், படைப்பின் ஆற்றலையும் ஒருசேர அனுபவிக்க முடிகிற திறம் வருகிறது.

    மண்ணைக் கொத்திப் பண்படுத்துவது போல, நல்ல எழுத்து, சில கேள்விகளை எழுப்பி மனங்களைக் கொத்திப் பண்படுத்துவதை ஜெயகாந்தனுடைய இந்த ஒரு சிறுகதை மட்டுமல்ல, யாருக்காக அழுதான், அக்கினி பிரவேசம் இன்னும் நிறைய கதைகளில் அனுபவித்திருக்கிறேன். வாழ்க்கையை, அது எப்படியிருந்தாலுமே, அனுபவித்து உணர்ந்த ஒருவருடைய அனுபவம், அங்கே மிகச் சிறந்த எழுத்தாக, கேள்விகளாக வெளிப்படிவதை நிறைய யோசித்திருக்கிறேன்! வாழ்க்கையை அனுபவித்து, உணர்ந்து அதை எழுதும் எழுத்திற்கும், ஊருக்குத்தான் உபதேசம் அது எனக்கில்லை என்று மார்தட்டி எழுதும் எழுத்திற்கும் நிறைய வித்தியாசமிருப்பதைப் பார்க்க முடிகிற ஒரு வாசகனின் எண்ணங்களாக இந்த வலைப்பக்கங்களை, அவசரமே இல்லாமல், நிதானமாக உருவாக்கவே விரும்புகிறேன்.

    எனக்குத் தெரிந்தது மட்டும் தான் உலகம் என்று பேசுகிறவர்களில் இருந்து விடுவித்து, வாசகனை இன்னொரு படி உயரத்துக்குக் கொண்டுபோய் யோசிக்க வைக்கவும், அடுத்தபடியைத் தேடவைக்கவும் இந்த மாதிரி எழுத்து ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை, தமிழில் நிறைய எழுத்தாளர்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)