ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அவனால் பயன் பெற்றவர்கள் கொஞ்சம் மிகைப்படுத்திப் புகழ் பாடுவது இயற்கைதான்! அவர்கள் மட்டோடு நிறுத்திக் கொண்டால் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டியது கூடத்தான்! ஆனால் இங்கே திராவிடப் பம்மாத்துகள் மாதிரி அதீதமாக எல்லைதாண்டிப் போகும்போது புகழஞ்சலிக்கு எதிர்வினையாகக் கேலியும் கிண்டலும் வருவதும் கூட அவர்களே கேட்டு வாங்கியது என்றுதான் சொல்லவேண்டும்.
சுபவீ செட்டியார் வாங்குகிற காசுக்கு மேலேயே கூவுகிற ரகம் என்பது தெரிந்ததுதான்! பகுத்தறிவு பல் இளிக்கிற அளவுக்குப் பேசும்போது அங்கே புகழப் படுகிறவரும் சேர்ந்தே கேலிப்பொருளாகிவிடுகிறார் என்பது திராவிடப்புரட்டுகளுக்குப் புரிவதே இல்லை. கான்ட்ராக்டர் நேசமணியை வைத்து மோடியைத் தோற்கடித்து விட்டமாதிரி என்ன ஒரு கொக்கரிப்பு! சீனி சக்கர சித்தப்பா 37 எம்பி 109 சமஉ இருந்தும் ஏட்டில் எழுதி நக்கப்பா என்றல்லவா மக்கள் வாக்களித்து கரியைப் பூசியிருக்கிறார்கள் என்று நாமும் கேட்கலாம், தவறே இல்லை!
இந்த மாதிரிப் பீலா, புருடாக்களை எத்தனை பார்த்து இருப்போம்? முகநூலில் நம்ம சேட்டைக்காரன் இப்படிக் கலாய்க்கிறார்:
கருணாநிதி ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்புகள்:
1969- ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்றதிலிருந்து 49 ஆண்டுகள், முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும், இல்லாத காலகட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு விஷயங்களில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தார். இத்தனை நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த காரணத்தினாலோ என்னவோ, தமிழகத்தின் ஒரு பகுதி மக்களும், குறிப்பாக ஊடகங்களும் கருணாநிதியால் Stockholm Syndromeக்கு ஆளாகி விட்டனரோ என்று தோன்றுகிறது. (தங்களை யார் கடத்திக் கொண்டு போய் பணயக்கைதியாக நீண்ட நெடிய காலம் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் மீதே நம்பிக்கையும் நல்லெண்ணமும் பிறப்பதே Stockholm Syndrome ஆகும்.). 22.8.2018 துக்ளக் இதழை படித்த போது, துக்ளக் இதழும் இந்த Stockholm Syndrome -க்கு தப்பவில்லையோ என்ற ஐயம் ஏற் பட்டது.
கருணாநிதி நீண்ட காலம் அரசியலில் இருந்து அரசியல், நிர்வாக, பண்பாட்டு, சமூக, பொருளாதார மற்றும் மக்களின் மனநிலை சார்ந்த விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் சரி. அவர் எந்த மாதிரியான தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டு சென்றார் என்பதையும், அதன் விளைவுகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கத்தான் வேண்டும். அவற்றுள் சிலவற்றையாவது சுருக்கமாக பார்ப்போம்.
முதலில் தனி மனிதர்கள் மீதான வன்சொற்கள் மற்றும் வசவுகள். தேசிய ஊடகங்கள் அரசியலில் தனி மனிதர்கள் மீதான வன்சொற்கள் குறித்து ஒவ்வொரு முறை விவாதம் நடத்தும்போதும், தமிழக அரசியலையும் கருணாநிதி ஐம்பது ஆண்டுகளாக வளர்த்தெடுத்த தனிமனித வன்சொற்கள் மற்றும் தாக்குதல்களையும் பார்த்தவர்களுக்கு, மற்ற கட்சித் தலைவர்களின் உப்புச் சப்பில்லாத தனிமனித விமர்சனங்களுக்காக, ஏன் இப்படி தேசிய ஊடகங்கள் அங்கலாய்க்கின்றன என்ற எண்ணம் எழுவது தவிர்க்க முடியாதது. காரணம், கருணாநிதி தமிழக அரசியல் தலைவர்களையும், தேசிய அரசியல் தலைவர்களையும் யாருமே நினைத்துப் பார்த்திரா வண்ணம், அவதூறு வார்த்தைகளைத் தொடர்ந்து அள்ளி வீசி அசிங்கப்படுத்தியதுதான். அவரை எதிர்த்து அரசியல் நடத்திய தலைவர்களும், மற்ற பிரபலங்களும் கருணாநிதியிடம் இருந்து பெற்ற வன்சொற்கள் கணக்கில் அடங்காதவை.
கருணாநிதியின் வன்சொற்கள் மற்ற தலைவர்களது தோற்றம், சமுதாயப் பின்னணி, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றையே சுற்றிச் சுற்றி வந்தன. காமராஜ், ராஜாஜி, எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், மொரார்ஜி தேசாய், பா.ஜ.க. தலைவர்கள், அப்துல் கலாம், சோ, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்று கருணாநிதியிடம் இருந்து வன்சொற்களைப் பெறாதவர்கள் அரிதிலும் அரிது. இது போன்ற கருணாநிதியின் வன்சொற்களுக்கு மோடியும் தப்பவில்லை.
நரேந்திர மோடி சென்னையில் ஜெயலலிதா வீட்டில் மதிய விருந்துக்கு வந்து, உரையாடி விட்டு சென்றதைப் பற்றி ‘பால்கனிப் பாவை மோடிக்கு பகல் நேர விருந்து’ என்று பிரசுரித்து, நாகரிகத்தை தனது எண்பது வயதிலும் காட்டிக் கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி பிரயோகம் செய்த வன்சொற்களை வைத்து, வன்சொற்களுக்கான ஒரு அகராதியே போடலாம் என்கிற அளவுக்கு அது பரந்து விரிந்தது. காமராஜ், ராஜாஜி போன்று கடைசி வரை நேர்மையாக இருந்தவர்களையும் கூட, நேர்மைக் குறைவானவர்கள் என்று சித்தரித்து, அதன் மூலம் எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் தேர்தலில் வெற்றியும் ஈட்டியவர்.
அடுத்து, தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட பெண் அரசியல்வாதிகளை, அவர் தொடர்ந்து பாலியல் கோணத்தில் அருவெறுப்பாகப் பேசி வந்தது, இந்திய அரசியலில் யாரும் செய்யாத ஒரு செயல். அரசியல்வாதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெண்களை, பெண் அரசியல்வாதிகளைப் பற்றி அவதூறு பேசுவது என்பது உலகெங்கும் காணக் கிடைக்கிறது. ஆனால் சமயம் வாய்க்கும் போதெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் அந்த விமர்சனங்களை, தனது கடைசி காலம் வரை பேசி வந்தது கருணாநிதியின் தனிப் பெருஞ் சாதனை.
காங்கிரஸின் அனந்தநாயகி முதற்கொண்டு, இந்திரா காந்தி, ஜெயலலிதா என்று யாரெல்லாம் அவருக்கு எதிராக அரசியலில் கொடி பிடித்தார்களோ, அவர்கள் அனைவருக்கும் அவர் எண்ணிலடங்கா நேரங்களில் பாலியல் கோணத்தில் அந்தப் பெண் அரசியல்வாதிகள் கூசிக் குறுகும் வண்ணம் பதில் கூறி வந்தார். அவர் முதுமைப் பருவம் எய்த காலத்திலும் கூட இந்தப் பேச்சை அவர் கைவிடவே இல்லை. கருணாநிதியின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்தப் பேச்சுக்களை ஆங்கிலத்தில் எழுதி புத்தகமாக போட்டிருந்தால், குஷ்வந்த் சிங் எழுதிய அத்தனை புத்தக விற்பனையையும் அது தாண்டியிருக்கும்.
2006-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், தேர்தல் முடியும் நேரத்தில் ‘என்னையே மக்களுக்காகத் தந்து விட்டேன். ஜெயலலிதாவினால் இந்த மாதிரி பேச முடியாது’ என்கிற விளக்கம் வேறு கொடுத்தார். அதாவது ஒரு அரசியல் தலைவர் பெண்ணாக இருந்தால், மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கிறேன் என்று பேச முடியாதாம். இந்த மாதிரியான பேச்சுக்களை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக கருணாநிதியால் பேச முடிந்தது. அப்படி பேசி வந்ததன் காரணமாக, கட்சி பேதங்களைத் தாண்டி இந்த மாதிரி பேச்சுக்களால் கிளுகிளுப்பு அடையும் ஒரு கூட்டம், இது போன்ற பேச்சுக்களை கருணாநிதியின் தமிழ்ப் புலமையின் வெளிப்பாடு எனக் கொண்டாடி வந்தது.
கருணாநிதி மற்றவர்கள் எளிதில் அணுகும் நிலையில் இருந்தார் என்பதை பீட்டர் அல்ஃபோன்ஸும், இல.கணேசனும் தங்களது பேட்டிகளில் கூறியிருந்தார்கள். யார் யாரெல்லாம் கருணாநிதியின் நல்லெண்ணத்தில் இருந்தார்களோ, அவர்கள் கருணாநிதியை நேரடியாகச் சந்தித்து சட்டப்படியும், சட்டத்தை வளைத்தும், ஒடித்தும், தங்களுக்கு வேண்டிய காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது தான் கருணாநிதி மற்றவர்கள் அணுகும் நிலையில் இருந்தார் என்பதற்குப் பொருள்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், யார் யாரெல்லாம் அண்ணா பல்கலைக் கழகத்தில் முதலமைச்சர் ஒதுக்கீட்டில் படித்தார்கள் என்று பார்த்தாலே தெரியும், எத்தனை குப்பன்களும் சுப்பன்களும் கருணாநிதியை அணுகி பலன் பெற்றார்கள் என்று. கருணாநிதி செய்தது தனக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் சலுகை காட்டும் அப்பட்டமான செயல் (Nepotism). ‘தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும். அதனால் மத்திய அமைச்சர் ஆக்குகிறேன்’ என்றார். ஆக, ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கிளியே என்பதை, ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபித்துக் காட்டிய மனுநீதி சோழன் கருணாநிதி.
அடுத்தது- குடும்ப அரசியல். இந்தியாவைப் பொறுத்தவரை பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சிகளும் குடும்பக் கட்சிகள்தான். அப்படியிருக்கும்போது கருணாநிதியை மட்டும் குறை சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஆனால், மற்ற கட்சிகளுக்கும் தி.மு.க.விற்கும் ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது. மற்ற கட்சிகளில் கட்சி தலைவரின் குடும்பம் மட்டும் கோலோச்சும். தி.மு.க.விலோ கருணாநிதியின் சொந்த பந்தங்கள் எல்லாம் கோலோச்சும்.
மாநிலத்திலும் மத்தியிலும் பெரும் முறைகேடுகளிலும், ஊழல்களிலும் ஈடுபட்டு அறிவியல் பூர்வமாக ஊழல்களைச் செய்து தப்பித்ததும் கருணாநிதியின் உலக மகா சாதனை. இன்று தமிழ்நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து எந்தவித சஞ்சலமும், சாதாரண மக்களுக்கு இல்லாமல் போனதற்கு கருணாநிதி மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இதில் பொறுப்பில்லையா என்று கேட்டால், ஊழல் செய்தால் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று, இவர்கள் இருவருக்கும் கருணாநிதி கொடுத்த தைரியம் சாதாரணப் பட்டதா என்ன?
கடந்த இருபது ஆண்டுகளில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறையை நிறுவனமயமாக்கியது; பள்ளிக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும், எந்த அளவுக்குச் சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்தது; இலவசம் கொடுப்பதையே ஒரு தேர்தல் யுக்தியாக அறிமுகப்படுத்தியது; ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு தொலைநோக்குத் திட்டங்களுக்கு விடை கொடுத்தது; என்று தமிழகத்திற்கு கருணாநிதி செய்து விட்டு போன பெரும் பாதகங்கள், எளிதாக பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீண்ட பட்டியல்.
அரசியல், நிர்வாக, பண்பாட்டு, சமூக, பொருளாதார மற்றும் மக்களின் மனநிலை சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் என்பது அவ்வளவு எளிதல்ல. பழையவற்றின் தொடர்ச்சி தொடர்ந்து வெகுகாலம் நீடிக்கும். எதிர்காலத்தில் தி.மு.க. என்ற கட்சி முற்றிலும் வலுவிழந்து போகலாம். தேசிய கட்சிகளோ அல்லது புதிதாக உருவான கட்சிகளோ, தமிழ்நாட்டின் எதிர்கால வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தலாம்.
ஆனால், அவை கூட கருணாநிதி கைக்கொண்ட மிக மோசமான அரசியல், நிர்வாக, பண்பாட்டு, சமூக, பொருளாதார மற்றும் மக்களின் மனநிலை சார்ந்த வழிமுறைகளையே கைக்கொள்ளும். தமிழகமும், தமிழக இளைஞர்களும் அடுத்த இருபது ஆண்டுகளில் சந்திக்கப் போகும் பின் விளைவுகளுக்கு, கருணாநிதி கடந்த ஐம்பது வருடங்களில் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று முகநூலில் சொல்கிறார் - திருவண்ணாதபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்
லண்டன் மேயர் சாதிக் கானுக்குப் போதாத நேரம்! லண்டனுக்கு அரசுமுறை விஜயமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தரையிறங்கும் முன்பே மேயரை loser என்று ட்வீட்டரில் விமரிசித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மனிதர் எங்கேபோனாலும் யாரையாவது அழவைத்து விடுகிறார். பிரிடிஷ் பிரதமர் தெரெசா மே பதவி விலகப்போகிற நேரம்பார்த்து அமெரிக்க அதிபரின் விஜயம் இன்னும் கொஞ்சம் சுவாரசியமான ஊகங்களைத் தருகிறது.
மீண்டும் சந்திப்போம்.