குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.
ரங்கராஜ் பாண்டே இந்த நேர்காணலில் கூர்மையான கேள்விகளை புகழேந்தியிடம் முன்வைக்கிறார். அவரும் எரிச்சலடையாமல் பொறுமையாக பதில் சொல்கிறார். அதுமட்டுமல்ல சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அதிமுகவில் பிளவு வருமா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா என்ற கேள்விகள் நேரடியாகக் கேட்கப் படவில்லை என்றாலும், புகழேந்தி கொஞ்சமும் தயங்காமல் அதிமுகவின் இன்றைய நிலைபாட்டை சொல்கிறார். ஏதாவது சதி இருந்ததா. பாஜகவின் அழுத்தம் இருந்ததா என்று திரும்பத் திரும்ப பாண்டே கேள்வியெழுப்பியதற்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் புகழேந்தி! பொய்யான பதிலில்லை, ஆனால் உண்மையை உடைத்துச் சொல்லவில்லை. ஒரு திறமையான ஊடகக்காரரிடம் முரண்படாமல் சமாளித்த புகழேந்தியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியக்கிறேன். அதிமுகவின் தற்போதைய மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நேர்காணல். நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.