கவியோகி சுத்தானந்த பாரதியார்!அன்பே சிவமாகிக் கனிந்த துறவி, பன்மொழிப் புலமை, துறவையும் மீறித் தமிழில், இலக்கியங்களின் மீது காதல் கொண்டு, ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர், அதே போலப் பாடல்கள்எழுதியவர், சுதந்திரப் போராட்ட வீரர், ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி முதற்கொண்டு எண்ணற்ற ஞானிகளோடு கூடவே இருந்து அவர்களுடைய சாதனையை நேரடியாகவே அறியும் பேறு பெற்றவர், ரமண சரிதம், அரவிந்த விஜயம் என்று அவர்களுடைய சரிதையை நாம் அறியத் தந்தவர்.
என்ன காரணமோ, உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த தேசம் அறிந்துகொள்ளத் தவறிக் கொண்டே இருக்கிறது. நடிப்புச் சுதேசிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தமிழ், தனித்தமிழ் என்று மூக்கினால் பேசிக் கொண்டே தமிழ்வளர்த்த பெரியோர்களை உரிய மரியாதையோடு நடத்தத் தவறியிருக்கிறது. வெறுப்பில் எரியும் மனங்களாகப் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உண்மையைப் பார்க்கவொட்டாமல், வம்பு செய்து கொண்டே இருக்கிறது.
சுத்தானந்த பாரதியாரை, தமிழ் கூறும் நல்லுலகம், அவருக்குரிய இடத்தில் மரியாதையோடு வைக்கத் தவறியதை என்னுடைய குமுறலாக, ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்
இதை என்னுடைய சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இரண்டாவது பகுதி, சோதனையும் சாதனையும் என்ற புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தற்போது இரண்டு பகுதிகளையும் ஒரே புத்தகமாக, சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில், சுவாமிகளிடம், வடலூரில் அருட்பணி, கல்விப்பணி செய்து வந்த நாட்களில் அவரிடம் பயின்ற இரு சகோதரர்கள், திரு நாகராஜன், திரு. நாக சுப்பிரமணியம், கவியோகியாரது படைப்புக்களை சுத்தானந்த நூலகம் என்ற பெயரில் மறுபடி வெளியிடுகிற செய்தியை திரு சந்திர சேகரன் ஏற்கெனெவே தெரிவித்திருந்தார்.
பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும் எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருந்தது
மற்ற நூல்களைப் போல, படித்து விட்டு, அந்த நேரத்தில் தோன்றுகிற எண்ணங்களை முடிவாகச் சொல்கிற விதத்தில் இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுத முடியாது. விமரிசனம் என்று எழுத முடியாத அளவுக்கு, சத்தியக் கனல், அனுபவச் சிதறல்கலாகக் கொழுந்து விட்டெரிகிற தன்மையைப் பார்த்தேன், பிரமித்தேன்!
ஒரு சிறு பகுதி, இங்கே நூல் அறிமுகமாக!
சுதந்திரப் போராட்டம் நடந்த போது, அதில் பங்கு கொண்ட எவரும் தங்களுக்கு மாலை மரியாதை வேண்டுமென்றோ, அரசு வழங்கும் கட்டாந்தரை பூமி ஐந்து ஏக்கர் மானியத்துக்காக ஏங்கித் தவித்தோ, போராட்டத்தில் குதிக்கவில்லை! தங்களுடைய ஜாதி, அந்தஸ்து, தொழில், குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு,தேச விடுதலை ஒன்றில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அப்போதெல்லாம் கூட வராத சொந்த பந்தம், ஜாதியெல்லாம், இப்போது சமீப காலங்களில் அவர்களை ஜாதிக்குள் குறுக்கி வைத்துச் சிலை வைத்துத் தகராறு வளர்க்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!
"சோதனையும் சாதனையும்" என்ற தனது சுயசரிதையில் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குப் போனபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதில் முதல் பகுதியை இங்கே பார்க்கலாம்!
சமீப கால வரலாறு கூடத் தெரியாமல் வளர்க்கப் படும் இன்றைய இளம் தலைமுறைக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம்! இது புத்தக மதிப்புரையோ, விமரிசனமோ இல்லை! இந்த மண்ணை நேசிக்கும் ஒருவனின் ஆதங்கமாக....குமுறலாக,,,,!
சிதம்பரம் பிள்ளையுடன்....!
தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.
நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.
(வ. உ.சிதம்பரம் பிள்ளை இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்)
நான் : தங்களைக் காணவே மகாநாட்டிற்கு வந்தேன். எந்தாய் வாழ்க!
சித : பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும் உமது நண்பர் தாமே!
நான் : எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில் பொறிக்கும்.
சித : நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:
"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "
இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.
நான் : இந்தக் காலம் கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.
சித : ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா? இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.
நான் : தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.
சித : எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.
நான்: தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.
சித : தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.
இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ் சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.
கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.
நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்.வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப் பட்டது.
சோதனையும் சாதனையும்
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு. மேல்விவரங்களுக்கு
shuddhashakthi@gmail.com
தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.
சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!
**2010 ஏப்ரலில் இன்னொரு பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு.
No comments:
Post a Comment