துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதோடு, சுடச்சுட அதை என்னுடைய பதிவிலும் கொடுக்கிற வேலையை இந்த வருடம் செய்ய முடியாத படி இந்த ஜனவரி 14 இல் சுணக்கம் ஏற்பட்டது. முன்பு கலாகேந்திரா நிறுவனம் செய்துகொண்டிருந்த நேரலை ஒளிபரப்பு, இந்த வருடம் துக்ளக் டிஜிட்டல் என்ற புது அமைப்பின் வழியாகச் செய்யப்பட்டது. ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனலின் நேரலையில் தான் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன்.
துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் எப்போதும் இடம் பெறுகிற நிகழ்வுகள் தான்! ஆனாலும் ஆடிட்டர் குருமூர்த்தி மீது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வன்மமும்,வெறுப்பையும் கக்குகிற மாதிரி முகநூல் ட்வீட்டர், ஊடக விவாதங்கள் என்று இந்த வருடம் கிளம்பியிருப்பதில், கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருந்த ஒரே ஊடகவிவாதம் தந்திடிவியில் கடந்த 15ஆம் தேதி ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி மட்டும்தான்.
தந்திடிவியிலா? அர்த்தமுள்ள விவாதமா? சந்தேகம் எழுவது இயற்கைதான்! இந்த விவாதத்தைப் பொருட் படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியதே தேவையான விவரங்களை எடுத்துச் சொல்லிய துக்ளக் இதழின் முதன்மை நிருபர் ரமேஷும், பிஜேபியின் K.T. ராகவனும் தான்! இன்றைக்கு முகநூலில் நண்பர் K.G. ஜவர்லால் கூட குருமூர்த்தி பேசியதைக் கண்டிக்கிற மாதிரி ஒரு பகிர்வை எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பிஜேபியை ஆதரிக்கிற பல பதிவர்களே, குனாமூனாவும் சுனா சாமியும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று கொதித்துப் போய்க் குமுறியிருப்பதையும் பார்த்தேன்
குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர். சோ ஆசிரியராக இருந்த நாட்களிலிருந்தே துக்ளக் தேர்தல் காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காரண காரியங்களோடு ஒரு பரிந்துரையாகச் சொல்வது வாடிக்கைதான்! அதையே குருமூர்த்தியும் இப்போது செய்திருக்கிறார். பிடிக்காவிட்டால் விட்டுவிடலாம், அவ்வளவுதானே! அப்புறமும் ஏன் கொந்தளிக்கிறார்கள்?
மந்திரி ஜெய்குமாரோ டிடிவி தினகரனோ சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்! 2021தேர்தலின் முக்கியமான கேள்வி, பிரச்சினை என்ன?
ஊழல் திமுகவை மறுபடியும் தமிழகத்தை ஆளவிடப் போகிறோமா? 10 வருடங்களாகக் காய்ந்து கிடந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் என்ன நடக்கும் என்பது தெரியாதா?
அதிமுகவும் ஊழலில் திமுகவுக்குச் சளைத்தவர்கள் இல்லை! திமுக குடும்பமாகக் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால், அதிமுக கூட்டுக்கொள்ளை அடிப்பவர்கள் தான்!
வேறு மாற்று எதுவும் இங்கே வளர்ந்து விடாமல் இரண்டு கழகங்களும் இங்கேயுள்ள உதிரிக்கட்சிகளைக் கூட்டு சேர்த்துக் கொண்டு , திமுக அல்லது அதிமுக இரண்டு தான்! எது உங்கள் சாய்ஸ் என்று மக்களுக்கு கெக்கலி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இனியும் அப்படியே இருக்க விட்டு விடப்போகிறோமா என்ற கேள்விக்கு குருமூர்த்தி 2026 தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். அதன் பொருளே இங்கே திமுக அல்லது அதிமுக என்கிற சாய்ஸ் தவிர வேறு வழியில்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் குருமூர்த்தி சொன்னார். தவறென்ன?
துக்ளக் ஆண்டுவிழாவில் குருமூர்த்தி என்னதான் பேசினார்? வீடியோ 140 நிமிடம் பார்த்துவிட்டு நீங்களே ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் சரியானது என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்வேன்
நான் குருமூர்த்தியைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறவன் அல்ல! உண்மையைச் சொல்லப்போனால் குருமூர்த்தி தவிரவும் வேறு யார்யார் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருப்பவன்!
வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லாதவர்களுக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது? நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
உண்மையிலேயே சாய்ஸ் இல்லைதான். குமூ மேல் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரும் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறார் என்று படித்தேன்.
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteஇரண்டு கழகங்களில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்கிற சாய்ஸ் மட்டுமே நமக்கு முன்னால் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! பிஜேபி இங்கே ஒரு சீரியசான மாற்றாக வளரவில்லை என்பதைவிட , அவர்களே அதைப்பற்றிய சிந்தனை, செயல்திட்டம் எதுவுமில்லாமல் இருப்பது, இன்னுமொரு பரிதாபம்!
பிஜேபியைத் தவிர மாற்று அரசியலைச் சிந்திக்கிற, தரக்கூடிய கட்சி வேறெதுவும் தமிழகத்தில் இல்லை. ஆனால் ஒரு மாற்று அரசியலைத் தீர்மானிக்கிற சக்தியாகத் தங்களை வளர்த்துக்கொள்ளவில்லை. Shortcut தேடுவது சிலநேரங்களில் மட்டுமே பலனளிக்கக் கூடியது. எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் அது கைகொடுக்காது.
இப்போது மட்டத்தில் உசத்தி என்கிற ரீதியில் இருக்கிற இரண்டு கழகங்களில் எது குறைவான தீய அம்சங்களைக் கொண்டது என்பதைக் கவனித்துத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த அடிப்படையில் குருமூர்த்தி பேசியதில் என்ன தவறிருக்கிறது என்பதுதான் இந்தப்பதிவின் கேள்வி.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது இங்கே மிகக்குரூரமான ஜோக். நீதிமன்றம் இந்தப்புகாரை ஏற்றுக் கொள்ளுமா என்பதே சந்தேகம் சிலகாலத்துக்கு முன்னால் நடிகை புவனேஸ்வர் ஏற்படுத்திய அதிர்வலைகளில், செய்திகளைப் பகிர்வதே நீதிமன்ற அவமதிப்பாகலாம் என்று கிளம்பியபோது அதைப்பற்றிய விரிவான விளக்கங்களை இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன். .