சேகர் குப்தா இந்த 24 நிமிட வீடியோவில் என்னதான் சொல்ல வருகிறார்? நிஜாமுதீன் தர்காவில் கூடிய கூட்டமே இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது என்பது இங்கே அரசல்புரசலாக எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்!நம்மூர் ரங்கராஜ் பாண்டே கூட ஒரு ஒன்றரை மணிநேர வீடியோவில் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார் என்பதை அப்புறம்தான் பார்த்தேன்.
உலகின் பெரும்பாலான நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவின் அன்பளிப்புத்தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் வெளியே கசிய ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்கர்கள் சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று சொல்வதை சீனா கடுமையாக எதிர்த்தாலும், சீனாவின் கைவரிசை இந்த வைரஸ் தொற்றின் பின்னாலிருப்பதை மறைக்க முடியவில்லை. கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 28 நிமிட வீடியோவில் கொரோனா விபரீதம் எப்படி சீனாவிலிருந்து பரவியது என்பதைத் தொகுத்துச் சொல்கிறார். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.
//Blogger இல் பதிவெழுதுவதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிற மாதிரித் தெரிகிறது. கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கிறது. நேற்றுவரை படங்கள், யூட்யூப் வீடியோக்களை சேர்க்க முடிந்த மாதிரி, இன்று சேர்க்க முடியவில்லை. // இப்படி முதலில் சொல்லியிருந்ததில் ஒரு சின்னத்திருத்தம், எப்படி என்பதைக் கற்றுக் கொண்டாயிற்று
மாற்றங்கள் நிரந்தரமானவை. தவிர்க்கமுடியாததையும் கூட! கற்றுக்கொள்ளத் தவறுகிறவர்கள், தனிமனிதர்களோ, ஒரு சமுதாயமோ, மதப்பிரிவோ எதுவானாலும் காலாவதியாகிப் போய்விட வேண்டியதுதான் என்பதை நினைவுபடுத்துகிற மாதிரி இன்றைய வீடியோ பகிர்வுகள் இருக்கின்றன.
Covid-19 என்று நாமகரணம் செய்யப்பட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் 185 பில்லியன் டாலர்/ 1.38 லட்சம் கோடி யுவான் அளவுக்குச் சீனப்பொருளாதாரம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இழப்பைச் சந்திக்கும் என்று ஜூ மின் என்கிற முன்னாள் IMF துணை மேனேஜிங் டைரக்டரும் தற்போது பெய்ஜிங் சின்குவா பல்கலைக் கழகத்தில் National Financial Research Institute இன் தலைவராக இருப்பவர் இன்று சொன்ன விவரம்.
சுற்றுலாத்துறையில் சுமார் 900 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும், உணவு, பானங்களில் நுகர்வோர் குறைந்ததால் 420 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் கல்வி மற்றும் பொழுதுபோக்குத்துறை கொஞ்சம் ஈடுகட்டும் என்றாலும், மொத்த இழப்பு 1.38 லட்சம் கோடி யுவான் அளவில் இருக்கும். முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3% முதல் 4% வரை குறையலாம். இதை ஈடுகட்ட பத்துமடங்கு வேகத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் என்கிறார். முழுச்செய்தியும் இங்கே
கொரானா வைரஸ் சீனாவைச் சீரழித்திருக்கிறது. அசைக்கமுடியாதது என்று உலக நாடுகளால் நம்பப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கதிகலங்கிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை. மிக வலிமையானவர் எனக் கருதப்பட்ட ஜின்பிங்கிற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. சாதாரண சீனன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தனது துன்பத்திற்கெல்லாம் காரணம் என உணரத் தலைப்பட்டிருக்கிறான். சீனாவிற்குள் பெரும் அதிருப்தியும், அச்சமும் இன்றைக்கு நிகழ ஆரம்பித்திருக்கிறது.
இதே நிலைமை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடித்தால் அனேகமாக ஜின்பிங் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம். அல்லது ஜின்பிங் இரும்புக்கரம் கரம் கொண்டு தனது எதிர்ப்பாளர்களை படுகொலை செய்யலாம் எனப் பலவித சாத்தியங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லா கம்யூனிஸ நாடுகளைப் போல சீனாவிலும் தனிமனித சுதந்திரம் என்பது இல்லை.
இந்தியாவில் எவனும் எதைப்பற்றியும் பேசலாம். எழுதலாம். அல்லது தேச விரோதமாக கூட்டம் கூட்டிக் கூக்குரலிடாம். ஆனால் சீனாவில் எவனும் அதைப்போலச் செய்து விட்டு அடுத்த நாள் உயிரோடு இருப்பது சந்தேகம்தான். சீனாவில் ஃபேஸ்புக்கும் இல்லை, வாட்ஸப்பும் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என எதுவும் இல்லை. எனவே வெளியில் கசியும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளாக, அச்சமூட்டுபவைகளாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா போன்ற திறந்த, சாதாரண மக்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ள நாட்டில் வதந்திகள் உடனடியாக தோலுறிக்கப்பட்டு உண்மைகள் சிலமணி நேரத்திலேயே வெளியே வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சீனாவில் வதந்தி வதந்தியாக அதையும் தாண்டி அச்சமூட்டும் வதந்தியாக மாறி சீனர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
கொரானா வைரஸ் பாதித்தவர்களை சீனா சுட்டுக் கொல்கிறது என்று பரவும் வதந்தியால் சீன நகரங்கள் பெரும் சிறைக்கூடங்களைப் போல மாறிவிட்டன. சீனர்கள் வீடுகளின் கதவுகளை வெல்டிங் செய்து அடைத்து கொண்டு உள்ளேயே வாழ்கிறார்கள். நகரங்களில் ஆள் நடமாட்டமில்லாமால் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. எங்கும் பெரும் அச்சமும் பதட்டமும் நிலவுகிறது என்பதே உண்மை.
சீன அரசாங்கம் கொரானா வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம் என்றாலும் உலகம் அதனை நம்பத் தயாராக இல்லை. உலக நாடுகள் விமானப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கின்றன. சீன உள்நாட்டுப் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
இன்றுவரை சீனா உலகின் மலிவான ஃபேக்டரியாக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து உலகின் மூலை முடுக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அளவில்லாதவை. இன்றைக்கு அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. சீனர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்ப அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தொழிற்சாலைகள் இயஙகவில்லை. துறைமுகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்யூனிஸ சீனர்களை கர்மா கடித்து வைத்துவிட்டது.
இன்னொருபுறம் இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகிற பாதிப்புகள் அச்சமூட்டுபவை. சீனாவிலிருந்து வரும் பொருட்களை நம்பி உலகின் பல நாடுகளின் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இன்றைக்கு அது அத்தனையும் நின்று போயிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மிக, மிகப் பெரியதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் தாக்கம் தெரியும். இந்தியாவும் சந்தேகமில்லாமல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உண்டாகும் பாதிப்பை விடவும் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேககமில்லை.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்க பங்குச் சந்தை கீழிறங்கும் என்பது என்னுடைய கணிப்பு. அது தவறாக இருப்பதாக. இந்தியப் பங்குச் சந்தைக்கும் பாதிப்பு உண்டாகலாம்.
இன்னொருபுறம் இது இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வாய்ப்பு. அதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதினை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதில் சிவப்பெழுத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் சரியானதல்ல என்றே எனக்குப் படுகிறது. கொஞ்சம் அதீதமானவை என்றே நினைக்கிறேன். ஆனால் பிப்ரவரி மாதத்துக்கு மேலும் கரோனா வைரஸ் பாதிப்பை சீனா கட்டுப்படுத்தத் தவறினால் அதன் பொருளாதாரம் ஏப்ரல் - ஜூன் இரண்டாவது காலாண்டிலும் சரிவைத் தொடர்ந்து சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடைசிப்பாராவில், இது இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பு என்று எதைவைத்து சொல்கிறார்? இந்தியத் தொழில் அதிபர்கள் எவரும் இதை ஒரு சவாலாக ஏற்று செயலில் இறங்கி விடுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியாவது இந்த இரண்டு மாதங்களில் தெரிந்ததா?
சீனர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரை சரி! சரிகிறார்கள், வீழ்ந்துவிட்டார்கள் என்பது அதீத கற்பனை.
இப்போதைக்கு கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் தான் போல! ஜனங்களை கலவரப்படுத்தாமல், அதேநேரம் உறுதியான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
அதே மாதிரி ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதிலும் கூட இருக்கவேண்டும் என்பதுமட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது!