கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.
அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.
அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.
இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.
காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.
ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.
அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.
இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.
காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.
ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.
மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.
சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.
பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.
அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.
காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.
ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.
அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.
திரு B R மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment