உதவாத ஒரு இடதுசாரியாகத் திரிந்து கொண்டிருந்த 40+ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பிரபலமான அரசியல் ஆளுமையைப் பற்றி, தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டே தோழர் வரதராஜன் சொன்ன ஒரு சத்தியவாக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஞாபகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்த்தால் அது எத்தனை சத்தியமான வாக்கு என்பதும் புரிந்துவிடும்.
தோழர் வரதராஜன் குறிப்பிட்ட அந்தப்பிரபலமான அரசியல்வாதி பலவித கிறுக்குத்தனங்களுக்குப் பெயர் போனவர். கருணாநிதி மாதிரி எல்லாவற்றிலும் கருத்துக் சொல்லி எல்லா விதங்களிலும் சிக்கிக்கொண்டவர் அல்ல. எப்படி அவர் தப்பித்துக்கொண்டே வருகிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. அதற்குத் தோழர் சொன்ன பதில் தான் கிளாஸ்! இருகோடுகள் தத்துவம் தான்!
" ஒருவிஷயம் மிகவும் முட்டாள்தனமானது என்று ஜனங்கள் கூக்குரல் எழுப்ப ஆரம்பிக்கிறபோதே இன்னுமொரு முட்டாள்தனத்தை முன்னிறுத்துவது! புதிய விஷயம் கிளம்பியவுடன் பழைய கிறுக்குத்தனத்தை ஜனங்கள் மறந்துவிட்டுப் புதிய விஷயத்தைப் பிடித்துக் கொள்வார்கள். இப்படி வரிசையாகத் தொடர்வதிலேயே ஜனங்கள் மறதியும் கூடிக்கொண்டே போவதுதான் அவருடைய பலம், சாமர்த்தியம்! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பிளேட் தயிர்வடை ஆர்டர் செய்யச் சொல்வார். தயிர்வடை என்னுடைய குரு தட்சிணை என்பது நண்பர்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும்!
திமுக ஆட்சிக்கு வந்து இன்று 50 நாட்களாவதில், இரு கோடுகள் தத்துவம் சொல்கிற மாதிரி, வலுவில் ஒரு பிரச்சினையை உருவாக்கி, ஜனங்கள் குய்யோமுய்யோ என்று கூவ ஆரம்பிப்பதில் இன்னொரு பிரச்சினையை ஆரம்பித்து, தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத அவலத்தை மறைத்து ஜனங்களுடைய கவனத்தை எதிலும் நிலைகொள்ள விடாதபடி திசைதிருப்புவதில், அநேகமாக வெற்றி அடைந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு விஷயமாக நினைத்துப்பாருங்கள்! முதலில் அமைச்சர் தியாகராஜன்! ஒன்றியம் குன்றியம் என்ற விதண்டா வாதத்தை ஆரம்பித்தது அவர்தான்! நடுவில் சேகர்பாபு என்டர் ஆனார். அப்புறம் மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று ஒரேபோடாக செந்தில் பாலாஜி போட்டது ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைக்கு கொங்கு ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் என்பது ஆளுநர் உரையில் இடம்பெறாமல்போனதே பெரிய சாதனை என சட்டசபையில் பேசியது சர்ச்சையாக.
கூட்டிக் கழித்துப்பாருங்களேன்! திமுகவின் சிக்சர்கள் காணாமல் போனதும் வெட்டி சர்ச்சைகளில் அவர்களது கையறுநிலை மறைக்கப்படுவதும் புரியுமே!
மீண்டும் சந்திப்போம்.
அது சரி... திமுக அரசு சொன்ன ஒன்றியம் வார்த்தையை பயத்தில் எப்போதும் உபயோகிக்கும் பத்திரிகை தொலைக்காட்சிகள், இந்திய என்பதற்குப் பதிலாக பாரத என்றும் உபயோகிக்குமா?
ReplyDeletePaid Media என்பது தெரிந்தே இப்படிக் கேட்கலாமா நெல்லைத்தமிழன் சார்? !!ஒன்றியம் என்று கும்மியடித்தால் காசுகொட்டுகிறது! பாரதம் என்று சொல்ல யார் காசு தருவார்களாம்?
Delete