Sunday, June 20, 2021

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்? 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக செய்த மிகப்பெரிய தவறாக தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை ஒதுக்கிவைத்தது தான் என்பது என்னுடைய கருத்து. பாமகவுக்கு மட்டுமே கொடுத்த முக்கியத்துவம், பிஜேபி உடன் ஒருவிதமான அலட்சியம் இவைகளும் அதிமுகவின் தோல்விக்குக் காரணங்களாக இருந்தன. பிஜேபியும் கூட அதே தவறைத்தான் இன்று வரை செய்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்று பிரதான எதிர்க் கட்சியாக, பெயரளவுக்கே அதிமுக இருந்து வருகிறது. அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாமகவின்  டாக்டர் ராமதாசும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமியும் தான்  செய்துவருகிறார்கள் என்பதை இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.  இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றால்  தமிழ்நாடு என்பது ஊராட்சிகளின் ஒன்றியமா என்ற அழுத்தமான கேள்வியை தமிழக அமைச்சர்களிலேயே கடைக்குட்டி தியாகராஜனுக்கு முன்வைக்கிற தைரியம் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமிக்கே இருந்தது. தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமரிசனத்தையும் கிருஷ்ணசாமி தொடர்ந்து செய்து வருகிறார். கவனிக்கிறோமா?

உதாரணத்துக்கு முகநூலில் இன்று அவர் பதிவுசெய்து இருக்கும் ஒரு அரசியல் விமரிசனம்::

'ஸ்டாலின் டெல்லி பயணம்' சாதனை ஆனதா? வெறும் சம்பிரதாயத்தில் முடிந்ததா.?

மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி!! இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா?

மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 40 தினங்கள் கழித்து ஜூன் மாதம் 17ஆம் தேதி டெல்லியில் பாரத பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அரசு விழா ஒன்றுக்கு வருகை புரிந்த மோடி அவர்களுக்கு எதிராக திமுகவும், அதன் தோழமை இயக்கங்களும் கருப்பு கொடிகளாலும், கருப்பு பலூன்களாலும் சென்னையின் மண்ணையும், விண்ணையும் நிரப்பி போராட்டம் செய்தனர். அதையும் தாண்டி மோடி அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி மாணவர் வளாகத்திலும் அத்துமீறி நுழைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவங்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. எந்த மோடிக்கு எதிராக ”திரும்பிப் போ” என்று கோஷம் எழுப்பினார்களோ? அந்த மோடியை தேடி அவருடைய இல்லம் சென்று சந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சென்னையில் மோடிக்கு எதிராக நடந்தது போல, டெல்லியில் ஸ்டாலினுக்கு எதிராக எவரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது டெல்லி அரசியல் நாகரீகம்!

மாநிலங்களில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்கள் பாரத தேசத்தின் பிரதமரைச் சந்திப்பது வெறும் சம்பிரதாயத்திற்கானது மட்டுமல்ல, தங்களது சாதுரியத்தால் அந்தந்த மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்களை வலியுறுத்தி சாதிப்பதே அதில் உள்ளார்ந்த அம்சம். இதுபோன்ற ஒரு முக்கியமான சந்திப்பிற்கு முன்பாக கள அளவில் “Home Work” என்று சொல்லக்கூடிய முன்னோட்ட பணிகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.

“Go Back Modi” என சமூக வலைதளங்களில் டிரென்டிங் செய்ததும், விமான நிலையத்தைத் தாண்டி பதினைந்து கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கிண்டி ஐஐடி வளாகத்திற்குள்ளும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததும் மோடியின் நெஞ்சில் நீங்காத வடுவாகி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சுமூகமான உறவுக்கான பாதையை ஸ்டாலின் அவர்களால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஒரு ராஜ தந்திர நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

ஏனெனில் பிரதமருடனான சந்திப்பு என்பது வெறும் சம்பிரதாயத்தையும் தாண்டி தமிழகத்திற்குக் கேட்டுப் பெற வேண்டிய பல கோரிக்கைகள் அவர் தலைக்குமேல் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறக்க ஒரு இதமான சூழலை உருவாக்கி அதன் பின் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் டெல்லி சென்று சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சில கோரிக்கைகள் நிறைவேறியிருக்கக் கூடும். கடந்த 17 ஆம் தேதி  பிரதமர் – ஸ்டாலின் நேரடி சந்திப்பின் போது 25க்கும் மேற்பட்ட  கோரிக்கைகள் அடங்கிய ஒரு புத்தக வடிவிலான மனு அவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன தலை மேல் இருக்கக்கூடிய பிரச்சனைகளா? அதையெல்லாம் ஏன் தற்போதைய உடனடி கோரிக்கைகளில் சேர்க்க வேண்டும்? கரோனா இரண்டாவது அலையில் தொழில், வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும் நாற்பது நாட்களுக்கு மேலாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினருமே ஊரடங்கால் சிக்கித் திணறுகின்றனர்.  தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசும் மிகப்பெரிய அளவிற்கு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. எனவே, இப்பொழுது தமிழக அரசை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போதிய நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை தானே முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்?

ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூபாய் 1000, அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபாய்1000-லிருந்து 1500, பெட்ரோல் டீசலுக்கு தலா ரூ 5 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற நிதி ஆதாரத்தோடு சமந்தபட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட தமிழ்நாடு அரசு நிறைவேற்ற எந்த முனைப்பும் காட்டவில்லையே? இந்நிலையில் 12,500 கோடி நிலுவையில் உள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வீராவேசமாகப் பேசினால் மட்டும் போதுமா? பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி நிலுவை, 13 மற்றும் 14-வது நிதி ஆணைய பங்கீடுகள் போன்ற மிக முக்கிய நிதி அம்சங்கள் அல்லவா அக்கோரிக்கை மனுவில் முக்கிய இடம் பெற்றிருக்க வெண்டும்?

தமிழக நிதி நிலைமையை எடுத்துச் சொல்லி, குறைந்தபட்சம் அந்த நிலுவைத் தொகையை இரண்டு, மூன்று தவணைகளாகப் பெறுவதற்கு உண்டான உத்தரவாதத்தைப் பிரதமரிடத்திலே அப்போதே பெற்று அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேருவதற்கு முன்பாக ரூபாய் 4000 அல்லது 5000 கோடி பெறப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற முக்கியமான வாய்ப்பை ஸ்டாலின் நழுவவிட்டு விட்டார். சாதனை நிகழ்த்துவதைக் காட்டிலும் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதிலும், வெறுப்பு அரசியல் செய்வதையுமே முக்கியமானதாகக் கருதியதன் விளைவுதான் இதுவோ? 

சாதனைகளை நிகழ்த்த அதற்குண்டான வலுவான முன்னேற்பாடுகள் “Spade Work” முறையாகச் செய்யப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் மாறாக ”எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல” -  ”பச்சை புண்ணில் உப்பைத் தடவுவது போல” மே 07-ஆம் தேதி பதவியேற்ற நாள் முதல் டெல்லி சென்று திரும்புவது வரை மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என இழிவு படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு; தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை மட்டுமே கையில் எடுப்பது தமிழகத்துக்கு நிகழ்காலத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது; எதிர்காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பு என்ன? மாநில அரசின் அதிகார வரம்பு என்ன? என்பது கூட தெரியாமல் ஒரு மாநிலக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, இப்போது அத்தனையையும் நிறைவேற்ற வேண்டும் என பட்டியலிட்டுக் கேட்டால், அதை நிறைவேற்றுவது எப்படி மத்திய அரசுக்கு சாத்தியமாகும்? ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த அறிக்கை என்பது வேறு; தேர்தல் வாக்குறுதி என்பது வேறு; நடைமுறை பிரச்சினை என்பது வேறு. புதிய கல்வித் திட்டம் (NEP), நீட் தேர்வுகள் (NEET), மூன்று வேளாண் திட்டங்கள், மின் சட்டம் போன்றவை எல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இந்தியா முழுமைக்குமான சட்டங்களை ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ரத்து செய்ய முடியுமா?

7 பேர் விடுதலை, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகம் போன்ற அம்சங்கள் குறித்து என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நடந்த சந்திப்பு 20 நிமிடங்கள். வெளியே வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு ’மன நிறைவையும், மகிழ்ச்சியையும்’ தந்தது என்று கூறினார். பொதுவாக இது அரசியல் தளத்தில் பயன்படுத்தப்படும் Diplomatic வார்த்தை அல்ல, பொதுவாக ’திருப்தி’ என்ற வார்த்தைதான் பயன் படுத்தப்படும். அதாவது தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே ’மகிழ்ச்சி’ என பயன்படுத்தப்படும். ஏன் ’திருப்தி’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, மனநிறைவு என்ற வார்த்தை பயன்படுத்தினார்? என்பது புதிராக உள்ளது.

மோடி அவர்களுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியதாக ஸ்டாலின் அகமகிழ்ச்சி கொள்கிறார். மோடி அப்படிச் சொல்லியிருந்தால் அது அவரின் பெருந்தன்மையும், திறந்த மனப்பான்மையும் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழ் மாநிலத்தைப் பாகுபாடில்லாமல் தங்களுடன் அணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அடுத்த பத்தாவது நிமிடத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மீண்டும் ’ஒன்றிய புராணம்’ பாடி தனது வெறுப்பு அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கலக்காமல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகச் செல்லுமா? அல்லது பிணக்குடனே தொடருமா? என்பதே கேள்வி.

இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா இருக்குமா?

மிகவும் எதிர்பார்த்த மோடி - ஸ்டாலின் சந்திப்பு வெறும் சம்பிரதாயமாகவே முடிந்து விட்டது; சாதிக்க வாய்ப்பிருந்தும், ஸ்டாலின் சாதிக்க தவறிவிட்டதால் ஏமாந்து போனது தமிழ் மக்களே! ஸ்டாலின் அவர்களின் மன மகிழ்ச்சி - மன நிறைவுக்கு அவரின் வேறு எந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்? என்பதற்கு எதிர்வரும் காலமே பதில் சொல்லும்! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.

20.06.2021

கவனிக்கவேண்டிய முக்கியமான பகுதிகளை தடித்த எழுத்துக்களில் தந்திருப்பது என்னுடைய வேலை. 

குப்பை அரசியல்வாதிகளுக்குத் தேவையே இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதில், டாக்டர் கிருஷ்ணசாமி மாதிரி கவனிக்கப்படவேண்டியவர்களை கவனிக்க மறந்து விடுகிறோமா? எப்போது நம்முடைய பார்வையை விசாலமாக்கிக்கொள்ளப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.   

4 comments:

 1. // திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு; தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு... //

  வைர வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. இப்போதுள்ள தமிழக அரசியல்வாதிகளில் டாக்டர் கிருஷ்ணசாமியின் அரசியல் நிலைப்பாடும், விமரிசனங்களும் மிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் இருப்பதை கவனிக்கையில் நிறைவாகவே இருக்கிறது துரை செல்வராஜு சார்!

   Delete
 2. எப்போதுமே டாக்டர் கிருஷ்ணசாமி ரொம்பவே வித்தியாசமானவர். கொஞ்சம் நேர்மையா இருக்கும் அவர் பேசுவது.

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் சரிதான் நெல்லைத்தமிழன் சார்! என்னுடைய கேள்வி, ஆதங்கம் என்னவென்றால் இவரைப்போன்ற அரசியல்வாதிகளை நாமுட்பட எவரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லையே, அது ஏன் என்பதுதான்!

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)