ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் அதிகாரப் பூர்வமாக பிரிக்கப் படுவதற்கு (2014 ஜூன்) இரண்டு மாதங்களுக்கு முன்பே தெலங்கானாவின் 119 சட்டசபைத் தொகுதிகளுக்குத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அது வரை காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கே சந்திரசேகர ராவ், கடைசி நிமிடத்தில் காங்கிரஸைக் கைகழுவிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது மிகச் சமீபத்திய நிகழ்வுதான்! ஆனால் நேற்றைய நிகழ்வுகளையே மறந்து விடுகிற வியாதி திருவாளர் பொதுஜனத்துக்கு இருப்பதால் தான் நம்மூர் அரசியல்வாதிகள் #ஏய்ப்பதில்கலைஞன் என்றாகி விடுகிறார்கள்!
அடுத்த சட்டசபைத் தேர்தல் 2019 இல்தான் என்றாலும், சந்திரசேகர ராவ் ஓராண்டுக்கு முன்னாலேயே 2018 இல் சட்டசபை தேர்தல்களை நடத்தினார். கூடுதல் இடங்களுடன் மறுபடியும் வென்றார். ஆனால் அந்த வெற்றியை நீண்டநாட்கள் தக்கவைத்துக் கொள்ள முடியாது, பிஜேபிக்கு ஆதரவான வாக்குவங்கி வளர்ந்து வருகிறது என்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அடுத்து நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் KCR புரிந்து கொள்ள வேண்டி வந்தது. அதனால் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற வேண்டிய Greater Hyderabad Municipal Corporation ஹைதராபாத் பெருநகர உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார். அரசியலே ஒரு சூதாட்டம் தான்! அதிலும் KCR ஒரு குள்ளநரித்தனமான சூதாடி! சூதாடிகளும் தோற்கிற தருணம் உண்டென்பதை GHMC தேர்தல்கள் நிரூபித்திருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் 2023 இல் தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களுக்கான முன்னோட்டம் என்பதை, தேர்தல் பிரசாரத்துக்கு அமித் ஷா, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பிஜேபி பிரபலங்கள் முன்னிறுத்தப்பட்டதே தெளிவாக்கியிருக்கிறது.
No comments:
Post a Comment