நல்லதொரு வாசிப்பு அனுபவத்துக்கு காலம் தடையாக இருந்ததே இல்லை என்பதை இன்றைக்கு முகநூலில் பார்த்த ஒரு மீள்பதிவு, அதற்கு இன்னும் வலுசேர்த்த ஒரு பின்னூட்டம் எனக்குப் புரிய வைத்தது. வாசிக்கிறேன், வாசிப்பை நேசிக்கிறேன் என்ற பெயரில் புத்தகங்களுக்கு தத்துப்பித்து விமரிசனங்களாக எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இந்த மாதிரி அற்புதமான பகிர்வைப் படித்தால் உவகை ஏன் பெருகாது!!
Jataayu B'luru
"ஹிந்து மத சாரம் அறிந்தவன் பாரதி அவன் சொல்லியிருக்கிறான் இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து" என்கிறார் Venkateswaran Chittor Venkatsubramanian. சும்மா மேம்போக்காக பாரதி பாடல்களைப் படித்த நினைவில் சொல்லப்படும் அபத்தமான, சாரமற்ற கூற்று இது.
இயேசு கிறிஸ்து என்று தலைப்பிட்ட மூன்று பாடல்கள் கொண்ட அக்கவிதையில் பாரதி சொல்லும் "உயிர்த்தெழுதல்" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார் என்பதை அதை வாசிப்பவர்கள் எளிதாகவே உணர முடியும். கிறிஸ்தவர்கள் நம்புவதைப் போல அதை ஒரு வரலாற்று சம்பவமாகவோ அல்லது அதன்மூலம் இயேசு அனைவரது பாவங்களை ரத்தத்தால் கழுவியதாகவோ எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம்அகந்தையை நாம்கொன்று விட்டால். (1)
கவிதை முழுவதும், முதலில் அதிகம் அறியப்படாமலிருந்து, பின்பு அண்மைக்காலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாக அறிய வந்த மரியா மக்தலேனா (Mary Magdalene) என்ற பைபிள் கதாபாத்திரத்தை பாரதி கொண்டு வந்திருக்கிறார்.
அன்புகாண் மரியா மக்தலேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை
அன்பெனும் மரியா மக்தலேநா
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. (2)
ஏசு சிலுவையில் அறையப் பட்டதை "தீமை வடிவினைக் கொல்லுதல்" என்று இந்தப் பாடலில் பாரதி கூறுகிறார். எந்தக் கிறிஸ்தவ மதப்பிரிவுக்காவது இந்தக் கருத்து ஏற்புடையதாகுமா என்ன? 🙂
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும். (3)
The Passion of Christ போன்ற படங்களின் வாயிலாக சிலுவையில் அறைதல் என்ற காட்சியை ரத்தமும் சித்ரவதையும் வலியும் வன்முறையும் நிரம்பியதாக, உணர்ச்சிவசத்தை உண்டாக்குவதாக கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால், பாரதி அது ஒரு குறியீடு மட்டுமே என்பதை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார். சிவபெருமான் திரிபுரங்களை எரித்த புராணத்தைக் குறித்து "முப்புரம் செற்றனன் என்பர் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்" என்று திருமூலர் கூறும் அதே வகையான விளக்கம் தான் இது. அத்துடன் மக்தலேநா - இயேசு இணையை பெண்மை - அறம் என்பதன் வாயிலாக பிரகிருதி - புருஷன் (சாங்கிய தரிசனம்), சிவ - சக்தி, சீன மதங்களின் யிங் - யாங் என்பது போன்ற ஒன்றாக பாரதி சித்தரிக்க முயல்கிறார். இத்தகைய குறியீட்டாக்கம் மூலமாக கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற/ஆக்கிரமிப்பு வெறித்தனத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்யலாம் என்று பாரதி கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கிறிஸ்தவ மதமாற்றம், கிறிஸ்தவ பள்ளிகள் செய்யும் கலாசார/பண்பாட்டு அழிப்பு ஆகியவை பற்றி மிகவும் தீவிரமாகவும் காட்டமாகவும் தனது கட்டுரைகளில் பாரதி எழுதியிருக்கிறார் (உதாரணமாக, மிஷன் பள்ளிகளை விலக்கி வைத்தல் என்ற இந்தக் கட்டுரை - https://goo.gl/wF6SRx).
சர்ச் அதிகாரபீடம், மதவெறி, ஆக்கிரப்பு, காலனியம் ஆகியவை அடங்கிய கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீஅரவிந்தர் போன்றவர்களின் கருத்துக்களில் கூட இத்தகைய இழையைக் காணமுடியும். அதன் தாக்கமே இந்தப் பாரதி கவிதையிலும் உள்ளது. இவ்வாறான ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்.
நமது சமகாலத்தில் கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களையும் அவற்றின் சில கூறுகளையும் நல்லிணக்கம் என்ற பெயரில் சும்மாவாவது புகழ்ந்துரைக்கும் இந்து ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோர் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். அத்தகைய தேவையற்ற புகழ்ச்சிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பரம சத்தியமும் என்றும் நிலைத்திருக்கும் தர்மமுமாகிய இந்துமதத்தின் கருத்துக்களை நேரடியாக உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தாலே போதும்; உண்மையான ஆன்மீக நாட்டமும், இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும் கொண்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தாமாகத் தேடி வருவார்கள். அப்படி வருபவர்களை ஏற்கவும், இந்து ஆன்மீகத்திலும், இந்து சமூகத்திலும் முறையாக சேர்க்கவுமான வழிகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இந்து ஆன்மீகத் தலைவர்களின் பணியாக இருக்கவேண்டும். அதைவிட்டு, சும்மா அன்னிஇன்னும் ய மதங்களின் கூறுகளைப் புகழ்வதால் எந்த நல்லிணக்கமும் ஏற்படாது. அத்தகைய புகழ்ச்சிகள் இந்துக்களை மேலும் குழப்பவே பயன்படுத்தப் படும். :
(மீள்பதிவு. முதற்பதிவு December 23, 2018. நன்றி Facebook Memories)
இந்தப்பகிர்வுக்கு வந்திருக்கும் ஒரு பின்னூட்டம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றுவதைப் பாருங்கள்:
உண்மையே. நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் " தத்துவத்திற்குத் தான் முக்கியம் கொடுத்தார் என்பதை பின்வரும் பாடல்கள் மூலம் தெளிவாகிறது
#நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.
#பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்
நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.
எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.
இத்தகைய தத்துவப் பாடல்களை எடுத்துக் கொண்டு " ஏசு கிறிஸ்துவத்தை ஆதரித்தார் என விஷமப் பிரச்சாரம் செய்கிறது மெஷினெரிகள்
வாசிப்பு அனுபவமும் ருசியும் பெரிதிலும் பெரிதுகாண் என்று சொல்வதைத்தவிர வேறென்ன சொல்லிவிட முடியும் சொல்லுங்கள்!
No comments:
Post a Comment