தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைய அறிவிப்பும் வந்தாயிற்று. தமிழகத்தில் கூட்டணிகள் அப்படியே தொடருமா, அவர்கள் கேட்கிற சீட்டுகள் கிடைக்குமா என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிற நிலையில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்து, அதிமுக கூட்டணியில் பாமகவின் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது சீட்டு எண்ணிக்கை ஏறத்தாழ இருந்தாலும் பெட்டிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்காது அந்தவகையில் அதிமுக பல படி முன்னால்!
திமுக கூட்டணியில் சற்றே பெரிய உதிரியான சோனியா காங்கிரசுக்கு எத்தனை சீட்டு என்பதில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லையாம்! ஜெயித்து விடுவோம் என்கிற மிதப்பில் 180+ என்ற கனவோடு திமுக இருப்பது, இதர உதிரிக்கட்சிகளுக்கு இன்னும் சிக்கலாக இருக்கலாம்! காங்கிரசுக்காவது இரட்டை இலக்க சீட்டுகள்! மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கம் என்பதிலும் மையமாக 4 அல்லது 5 தாண்டாது என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டு நிலவரம்தான் இப்படியென்றால் நேற்று வரை காங்கிரஸ் தலைமையில் ஜூனியர் பார்ட்னராக திமுக என்றிருந்த புதுச்சேரியில் நீ பாதி நான் பாதி என்கிற நிலையை திமுக எடுக்கலாம் என்கிற வதந்தி மிக வலுவாக வலம் வருகிறது. அங்கே புதுச்சேரி அரசு கவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கேரளா டூரில் இருந்த ராகுல் காண்டி மீனவர்களுடன் மீன் பிடித்தார், கடலில் குதித்தார் என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன.
என்னதான் பக்கவாகப் பிளான் செய்து நாடகத்தை நடத்தியிருந்தாலும் வயநாடு எம்பிக்கு இது சிக்கலான சோதனை தான்! UDF காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை சீட் கெலித்துத் தரப்போகிறார் என்பதைவைத்துத் தான் மல்லுதேசமும் காங்கிரஸ்காரர்களும் ராகுல் காண்டியை எடைபோடுவார்கள்! இங்கும் தோற்றால் ராகுல் போகிற இடமெல்லாம் காங்கிரஸ் தோற்கிறது என்கிற கிண்டல் இன்னுமொருதரம் உறுதியாகும்,
அவ்வளவுதானே! அவரும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் போய்விடுவார்!
புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இப்போதே கதற ஆரம்பித்து விட்டார்கள்!
சீட்டாட்டத்தில் வேண்டுமானால் ஜோக்கருக்கு எங்கே இருந்தாலும் மரியாதை இருக்கலாம்! ஆனால் அரசியல் ஜோக்கர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்குமா என்பது சந்தேகமே! ஸ்தாபன காங்கிரசில் இருந்தவரை மரியாதையோடு இருந்தவர் பழ கருப்பையா. அவர் போதாத காலம் கழகங்களுடைய அரசியலுக்குள் போனார். ஒரு கழகத்துடைய அரசியல் ஒத்துவராது என்று வெளியேறி இன்னொரு கழகத்துக்குப் போய்க் கொஞ்ச காலத்துக்குப் பிறகு முந்தைய கழகத்துக்கே போய், இன்று எங்கேபோவதென்று புரியாமல் திகைத்து நிற்கிறார். ஆனாலும் ஸ்தாபன காங்கிரசில் இருந்த பழைய நினைப்பு மனிதருக்குள் அவ்வப்போது வெளிப்படுவதைப் பார்க்கையில், பெருங்காயம் இருந்த டப்பா தான்! இப்போது காலி என்றாலும், பழைய வாசனை இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேதனையாக இருக்கிறது.
கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கடந்த 11 அம தேதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பழ. கருப்பையா பேச்சை 10 நிமிடம், 14 நிமிடத் துண்டுகளாக முன்பே பார்த்திருந்தாலும் முழுதாயக கிடைக்கவில்லை இந்த 26 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டால், அவர் சொன்னதில் இருந்த ஆதங்கம், ஏக்கம் புரியும். சேரக்கூடாத கழகங்களுடன் சேர்ந்து, நம்பகத்தன்மை அறவே இழந்து போனாலும், பழைய ஸ்தாபன காங்கிரஸ் வாசனை இன்னமும் இருக்கத்தான் செய்கிறதோ?
பழ. கருப்பையா புகழ் பாட இந்த வீடியோவை இங்கே எடுத்துக்கொள்ளவில்லை.முந்தைய பதிவுகளில் நான் வலியுறுத்திவரும் சில அடிப்படையான கேள்விகளை அவரும் எழுப்புகிறார். இரண்டு கழகங்களும் மிகவும் மோசமானவை என்று நன்றாகத்தெரிந்த பிறகும் கூட இதற்கு மாற்று அதுதான் என்று ஏதோ ஒரு கழகம் நம் தலையை மொட்டையடிக்க ஏன் விட்டுவிடுகிறோம்?
இந்த 9 நிமிட வீடியோவின் முதல் 1.20 முதல் 1..50 நிமிடத்தில் கமல் காசர் கூட்டணிக்காகத் தங்களிடம் தூது வந்ததைப்பற்றிச் சொல்கிறார். ஆனால் நேரடியாகத் தன்னிடம் பேசியிருக்க வேண்டும் என்று சொல்வதையும் கொஞ்சம் கவனியுங்கள். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.
மேலும் மேலும் என் தரப்பு வாதங்களை வைப்பதற்குப் பதிலாக, பழ கருப்பையாவின் ஆதங்கம், இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று சொல்கிற கமல் காசர். இவை மீதான உங்களுடைய புரிதல், கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மாற்றுக்கருத்தையும் தெரிந்து கொள்வதும் அதை இங்கே பகிர்வதும் எனக்கும் இங்கே வரும் நண்பர்களுக்கும் புதிது அல்ல ஒரு முனிசிபாலிடி அளவே இருக்கும் பாண்டிச்சேரி அரசியலுக்கு இத்தனை முக்கியத்துவமா என்றால், ஆமாம் என்பதே பதிலாக இருக்கும்! காரணம் ஊடகங்கள் தேர்தல் பரபரப்புச் செய்திகள் வேறெதுவும் இல்லாமல் இந்த விஷயத்துக்குக் கொடுத்த ஓவர் தம்பட்டம் தான்! சேகர் குப்தா, நான் மதிக்கும் ஒரு அனுபவமுள்ள ஊடகக் காரர், இந்த விஷயத்திலும் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலோடு இருந்தேன்.
இந்த 20 நிமிட வீடியோவில் சேகர் குப்தா கடந்த ஏழு வருடங்களில் பிஜேபி ஒரு தெளிவான அரசியல் நோக்கத்துடன் கவிழ்த்திருக்கிற /கைப்பற்றியிருக்கிற 9வது ஆட்சி என்று சொல்லிவிட்டு, அதே மூச்சில் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றும் சொல்கிறார். மாற்றுப் பார்வை என்ற வகையில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை உண்டு என்று இதே பாண்டிச்சேரி காங்கிரசார் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டதை, சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வேறுவழியே இல்லாமல் அவையை விட்டு வெளியே(றிய) ஓடிய நாராயணசாமி கேலிப்பொருளானார் என்பதை சேகர் குப்தா சொல்லவில்லை. ஆனால் வேறு சில பயனுள்ள தகவல்களை சொன்னதென்னவோ நிஜம் ஆனால் தமிழக ஊடகங்கள் எப்படி இந்தவிஷயத்தைப் பார்க்கின்றன? ஆயுத எழுத்து::தந்திடிவிவேடிக்கை பார்த்த திமுகஇதெல்லாம் ஒரு சாம்பிள்தான்!
தினமலருக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி! மொய்லி வந்தா மட்டும் கருணாநிதி அன்றைக்கு 63 சீட் அள்ளிக் கொடுத்தது போல இன்றைக்கும் கிடைத்துவிடுமா என்ன?
தேர்தல் நேரம் நெருங்கினாலே காமெடி டைம் கூடவே சேர்ந்து வரும்! சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் ஜெயிக்க முடியுமோ என்கிற ஜுரம், ஜன்னியாக மாறும்போது எழுகிற உளறல்கள் ஒருபக்கம்! திமுகவின் துரை முருகன் எப்போது வாயைத்திறந்தாலும் நையாண்டி ஒருபக்கம், என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டாரு என்கிற கோபம் கவலை மறுபுறமுமாக துரை முருகன் வாழ்கிறாரய்யா ஒரு வாழ்க்கை!
வீடியோ 4 நிமிடம்தான்! வீடியோவை மூடிவிடலாம்! துரை முருகன் வாயை மூட,அவராலும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாதே! வீடியோ நிமிடம். கோட்டைவாயாக ஒருகாலத்தில் இருந்தவர் நாசா! அதே வாயால் கெட்டவரும் அவரே! கடைசியாக ராஜினாமா செய்த காங்கிரஸ் சமஉ சொன்னாராம் :: எல்லோரும் நாளை ராஜினாமா செய்யத்தான் போகிறார்கள். நான் ஒரு நாள் முன்னதாகச் செய்கிறேன்! அவ்வளவுதான், விஷயம் முடிந்தது!
காங்கிரஸ்காரர்களே கிறுக்கு மாய்க்கான்கள் தான்! சந்தேகமே இல்லை என்பதை வயநாடு எம்பி, ரோட்டில் ட்ராக்டர் ஓட்டி நிரூபித்திருக்கிறாராம்! வீடியோ 1 நிமிடம்
பாண்டிச்சேரி அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இன்றைக்கு ஆளும் தரப்பிலிருந்து இரண்டு சமஉக்கள் ராஜினாமா செய்து ஆட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். இதில் ஒருவர் காங்கிரஸ் இன்னொருவர் திமுக என்பதுதான் தமாஷ்! கிரண் பேடி மீதே குறைசொல்லி இத்தனை நாட்கள் அரசியல் செய்துவந்த கோட்டைவாய் நா சாவின் பவிசு அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. நாராயணசாமியை முதல்வராக்கிய நாளிலிருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த அதிருப்தி இப்போது வெளிப்பட்டிருப்பதில், ஒன்று: காங்கிரஸ் மீது கட்சி MLA/MPக்களே நம்பிக்கை இழந்து வருவது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு:மேலிடத்திலிருந்தே முதல்வர்களை நியமனம் செய்கிற காங்கிரஸ் கலாசாரம் தொடர்வதில் மாநிலங்களில் கட்சி வேரற்ற மரமாக மட்டுமே இருந்திருக்கிறது. இதை ஒதுக்கித்தள்ளிவிட்டு, வெளியே காரணங்களைத் தேடி, பழிசுமத்துவது வீணாய்ப்போன அரசியல் மட்டுமல்ல, தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வதும் கூட!
ராஜினாமா செய்த திமுக சமஉ, இசுடாலினையும் கோர்த்துவிட்டுப் பேசியது பக்கா திராவிட தமாஷா! நாசா என்ன செய்யப்போகிறார்? காலதாமதம் செய்யாமல் கண்ணியமாக ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கப்போகிறாரா? அல்லது கடைசிவரை வறட்டு இழுப்பாகவே இருந்து இன்னும் அசிங்கப்படப் போகிறாரா? இதுவரை தகவல் எதுவும் இல்லை.
Twitter தளம் இந்தியாவில் தனக்குத்தானே மூடுவிழா நடத்திக் கொள்ளும் நிலைமையை வலிந்து செய்கிற மாதிரித்தான் இருக்கிறது. முந்தாநாள் சத்ரபதி சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு நரேந்திர மோடி எழுதிய செய்தியை இப்படி வடிகட்டியிருக்கிறது. வாட்சப் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருவது, முகநூல் செலெக்டிவாகச் செயல் படுவது, இப்படி எல்லாமாகச் சேர்ந்து இன்னொரு கிழக்கிந்திய கும்பேனி மாதிரி ஆக முயற்சிக்கிறார்களோ?
இந்திய இறையாண்மையை மறுதலிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
மூன்று நிமிடத்துக்கும் குறைவான இந்த தினமலர் வீடியோ பார்த்ததில் எனக்குள் எழுந்த முதல் கேள்வி::: IPAC பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்காகத்தான் உத்தி வகுக்கிறாரா அல்லது தன்னுடைய சொந்த அஜெண்டாவை முன்வைத்து மத்திய அரசு, பிஜேபி, நரேந்திர மோடி மீதான வெறுப்பை முன்வைக்கிறாரா?
நடக்கப்போவது மாநில சட்டசபைத் தேர்தல் பிரதான எதிரியாகக் களத்தில் முன் நிற்பது அதிமுக என்கையில் மோடி அட்டாக் மோடுக்கு மாறி இசுடாலின் என்ன சாதிக்கப் போகிறார்? உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்!
கரூர் லைட்ஹவுஸ் (சினிமா தியேட்டர்) கார்னரில் இருந்த காந்தி சிலையை, எனக்குத்தெரிந்து இத்தனை வருடங்களில் எந்தக் காங்கிரஸ்காரனும் கண்டு கொண்டதாக நினைவுக்கு வரவே இல்லை இப்போது கரூர் தொகுதியின் எம்பியாக இருக்கும் ஜோதிமணி கூட, தேர்தலுக்கு முன்போ பின்போ அந்த காந்தி சிலையைக் கண்டுகொண்ட செய்தி எதையும் பார்த்ததாக நினைவும் இல்லை! இப்போது திடீரென்று அம்மணிக்கு அங்கே புதிதாக ஒரு வெண்கலச்சிலை வைக்கப்பட்டதில் ஒரிஜினல் காந்தி மீது அக்கறை வந்துவிட்டதாம்! சிலையின் பீடம் தரமற்றதாக இருப்பதாக ஒரு அக்கப்போரை நடத்திக் கைதாகி இருக்கிறார் என்கிற செய்தியை புதிய தலைமுறை சேனல் செய்தியில் பார்த்தேன் முன்னாட்களில் இசுடாலின் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு போஸ் கொடுத்ததை அப்படியே நினைவு படுத்துகிற மாதிரி இந்தப்படம் இணையத்தில் கிடைத்தது. அதிக வசதி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த இந்தப்பெண்மணி ராகுல் காண்டியின் கவனத்தை ஈர்த்ததால் காங்கிரஸ் வேட்பாளராகி, திமுகவின் செந்தில் பாலாஜி தனது அகதவிகடத்தையெல்லாம் காட்டியதில் ஜெயித்தும் விட்டார்! ஆனால் காங்கிரஸ் எம்பி மாதிரி செயல்படாமல் திமுக எம்பிக்கள் மாதிரியே நாடக அரசியல் செய்வது, இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிற என்னைப்போன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமே!
என்னாது? காந்தியை சுட்டுட்டாங்களா? மொமண்ட்!
மாசேதுங்கால் அவமதிக்கப்பட்டு வெளியேற்றவும் பட்ட, மாவோ காலத்துக்குக் கொஞ்சம் பின்னாடி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டு தலைமைப்பொறுப்பேற்றவருமான டெங் சியாவோ பிங்கின் 24வது நினைவுதினமான நேற்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்வீட்டரில் இப்படி நினைவு கூர்ந்திருப்பது சரிதான்! வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த சீனாவை, அந்நிய முதலீடுகள், தொழிற் சாலைகளுக்குக் கதவைத் திறந்து முப்பதே ஆண்டுகளில் ஒரு பொருளாதார வல்லரசாக மாற்றியவர் டெங் சியாவோ பிங்! கம்யூனிஸ்ட் கட்சியின் வரட்டுத் தத்துவங்களை ஒதுக்கிவைத்துவிட்டே சீர்திருத்தங்களை துணிந்து மேற்கொண்டார் என்பதை சௌகரியமாக இந்திய மார்க்சிஸ்டுகள் மறந்துவிட்டு டெங் சியாவோ பிங்கை இப்போது முன்னிலைப் படுத்திப் பேசும்போது, நரசிம்மராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்தார்களா என்பதையும் பேசட்டுமே! 1964 இல் கையூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது சீன ஆதரவு நிலை எடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகளாகவும் அதுவும் 1968 இல் உடைந்து ஒரு பகுதி நக்ஸலைட்டுகளாகவும் ஆனதை இதுவரை வெளிப்படையாகப் பேசாதவர்கள் இப்போது சீன ஆதரவு நிலையை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!
சீன கம்மினிஸ்டுகள் சீனாவிற்கு விசுவாசமானவர்கள். இந்திய கம்மின்ஸ்டுகளும் சீனாவிற்கு விசுவாசமானவர்கள் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிரிகள். என்று இங்கே நண்பர் ராஜசங்கர் பொங்கி இருப்பது நியாயமானதுதான்!
கோமகன், காதல் என்றாலே நிறைய வில்லங்கம் நிறைய ஊர்வம்பு, அக்கப்போர் என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மட்டும் தான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெங்கும் இருந்தது இல்லை! அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கத்தைப் பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது. இப்போது பிரிட்டனை ஆள்வது Windsors வம்சம் முந்தைய அரசபரம்பரைகளை மிஞ்சிய ராயல் அக்கப்போர்களாக, பிரிட்டிஷ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் உலக ஊடகங்களாலும் கதைக்கப்படுவதாக இன்றைக்கு ஆகியிருக்கிறது.
பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஒரு அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கிலை காதல் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே பிரிட்டிஷ் ஊடகங்கள் கொஞ்சம் பொறாமை, வெறுப்பு கலந்த செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன. இயல்பாகவே பிரிட்டிஷ் மீடியாவுக்கு அமெரிக்கர்கள் என்றாலே கொஞ்சம் இளப்பம்! மட்டந்தட்டுவதும் கூட வாடிக்கைதான்! அதுவும் போக மூத்த இளவரசர் வில்லியம், இளையவர் ஹாரி இருவருக்கும் இடையில், ஒரு பனிப்போர், ஹாரியின் திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததாக ஊடகங்களில் செய்திகள், மறுப்பு என மாறி மாறி வந்துகொண்டே இருந்ததில், கடந்த வருடம் ஹாரி மேகன் தம்பதியினர் அரசகுடும்பத்தின் சீனியர் உறுப்பினர்களாகச் செயல்படுவதில் இருந்து வெளியேற இருப்பதாக செய்தி ஒன்று கசியவிடப்பட்டது. பாட்டி எலிசபெத் ஒரு சமரச முயற்சியாக இளைய பேரனும் அவர் மனைவியும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒருவருட காலம் அவகாசம் கொடுத்ததில், ஹாரியும் மேகன் மார்க்கிலும் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் முதலில் கனடாவிலும், அது சரிப்பட்டு வராததால் அமெரிக்காவிலும் குடியேறினார்கள். அரச குடும்பத்தை சார்ந்திராமல், Netflix முதலான ஊடகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மில்லியன் கணக்கான் டாலர்களை சம்பாதித்து காலை வலுவாக ஊன்றிக்கொண்டும் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடத் தீர்மானித்து விட்டமாதிரியே செய்திகள்.
#Megxit என்று பிரிட்டிஷ் ஊடகங்களால் ஊதிப்பெரிது படுத்தப்பட்ட இந்த விவகாரம் கடந்த ஒருவருட காலமாகவே புகைந்துகொண்டிருந்ததில் இளவரசர் ஹாரி தம்பதியினர், தாங்கள் செயல்படும் ராஜ குடும்பத்தினராகத் தொடரப்போவதில்லை என்று தெளிவாகத் தங்களது முடிவை பிரிட்டிஷ் ராணிக்குத் தெரியப்படுத்தியிருப்பது இன்றைக்கு ராயல் அக்கப் போராக ஊடகங்களில் பரபரப்பாகியிருக்கிறது.
அவர்கள் இனிமேல் அரசகுடும்பத்தினருக்கு அளிக்கப் படும் கௌரவ ராணுவ பதவி அடைமொழிகளையோ, மாட்சிமை தாங்கிய என்ற முன்விகுதியையோ பயன் படுத்த முடியாது என்பதை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
பிரச்சினை இப்போது வேறுவிதமாகத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் உச்சகட்ட தமாஷ்!
எலிசபெத்துக்கு அடுத்து அரசராகப் பதவியேற்க மகன் சார்லஸ் காத்திருக்கிறார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் வில்லியம் இவர்களெல்லாம் பதவிக்கு வந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப்போகிறார்கள்? முடியாட்சி எலிசபெத்துடனேயே முடிந்து போகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவரே இனி இருக்கவேண்டும் என்கிற குரல்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உரத்து எழ ஆரம்பித்திருக்கின்றன.
இரண்டாம் உலகப்போர் முடிவிலேயே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது பிரிட்டிஷ் அரச குடும்பம் அதற்குப்பிறகும் கூட எழுபத்தைந்து ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டது. காலாவதியாகிப் போகிற நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது போல!
ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்லி விட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்! அவர் போகிற இடங்களில் எல்லாம் கோஷ்டிப்பூசலும் தோல்வியும் சேர்ந்தே துரத்துகிறது! இதில் ராகுல் காண்டியை மட்டுமே குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற காங்கிரஸ் கலாசாரம் வேறு இருக்கிறதே!
மத்திய அரசில் ராஜாங்க மந்திரியாக இருந்த நாட்களில் கேள்வி கேட்பாரில்லாத கோட்டைவாயாக உளறித் திரிந்த நாராயணசாமி பாண்டிச்சேரி முதல்வரான பிறகு ஒப்பீட்டளவில் சற்று அடக்க ஒடுக்க, மாகவே இருந்தார் தான்! அவருடைய கர்மா, கிரண் பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வரவழைத்து அவருடன் மோதுவதையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் ஆக்கிவைத்தது. வாய்தான் பெரிதே தவிர காரியத்துக்கு ஆகாதவர் என்று தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து அரசியலில் பயணித்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் தான் தயாராக இருப்பார்? ஆக இதுவரை காங்கிரஸ் ஊழல் கோட்டையாகவே இருந்துவந்த பாண்டிச்சேரி முதன்முதலாக, அந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடுகிற நேரமும் வந்துவிட்டது போல! நாளைக்கு ராகுல் காண்டி புதுச்சேரிக்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரப்போகிறாராம்! வந்து நாராயணசாமி ஒப்பாரி வைப்பதைக் கேட்கப் போகிறாரா? பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்குமா? கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
பானாசீனா 2009 தேர்தலில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ.கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்றைக்கு தேர்தல் வெற்றி செல்லும் எனத்தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிமன்றங்களில் இதுமாதிரியான வழக்குகள் வெற்றி பெறுவது எப்போதாவது நடக்கும் அதிசயம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் ஆச்சரியம் ஏதுமில்லை.
அதீதக்கற்பனைகளினாலேயே இந்திய சரித்திரத்தை எழுதிவரும் ராமச்சந்திர குகா இன்றைக்கு NDTV தளத்தில்Why Modi And Shah Fear Young Activistsஎன்ற தலைப்பில் மோடி அமித் ஷா இளைஞர்களைக் கண்டு பயப்படுவது ஏன் என்கிற மாதிரிப் பொருமித் தீர்த்து எழுதியிருக்கிறார்
The first reason is that the Modi-Shah regime fears independent thinking in general. Indians must be obedient, conformist, loyal to the state and the ruling regime, and worshipful towards the Great and Visionary Leader. Ideally, the Indian state would like no critical, objective, detailed, scrutiny of its policies and actions to be permitted at all. However, while democratic freedoms have been greatly attenuated since May 2014, they have not been fully extinguished. There still exists (bare) elements of a free press, some (rapidly shrinking spaces) in civil society, and a few major states which are not ruled by the BJP. இது ராமச்சந்திர குகா எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதி.
உண்மையே உன் விலை என்ன? இது சோ. ராமசாமி எழுதி நடித்த ஒரு நாடகத்தின் தலைப்பு.பின்னாட்களில் திரைப்படமாகவும்! உடனடியாக நினைவுக்கு வந்தது.
ராமச்சந்திர குகா போன்றவர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான்! ஆனால் அவர் போல நிறையப்பேர் எழுப்புகிற ஜனநாயகம்,கருத்து சுதந்திரம் இவைகளைப் பற்றி நம்முடைய புரிதல் என்ன? கட்டுப்பாடுகளில்லாத கருத்து சுதந்திரம், ஜனநாயகம் என்று இவர்கள் கூக்குரல் எழுப்புவது போல எங்காவது முன்னுதாரணம் அல்லது definition இருக்கிறதா?
இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.
அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.
"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.
இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.
1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Societyஎன்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.
குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.
டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.
நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.
"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.
உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?
Incalculable Divine “There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”
The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:
An hour comes when fail all Nature's means,
Forced out from the protecting Ignorance
And flung back on his naked primal need,
He at length must cast from his surface soul...
When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.
We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”*
அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,
"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.
உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.
ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!
*quoted text thankfully excerpted from and acknowledged”
“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.
திராவிடப்புரட்டு, திராவிட மாயையாக தமிழ்நாட்டில் ஒரு விஷவிருட்சமாகவே வளர்த்துவிடப்பட்டிருப்பதை எதிர்த்து மாரிதாஸ் செய்து வந்த தொடர்முயற்சிகளின் பலனாக ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உலவ விடப்பட்ட ஒரு பொய்ச்செய்தி அம்பலமானது. ஈவெராவின் பிம்பத்தைக்கட்டமைக்க ஏதுவாக ஊரெங்கும் சிலைகள், அரசுநூலகங்களில் வரிப்பணத்தை வீணடித்து திக,திமுக வரலாறு புகழ் பாடும் புத்தகங்கள் இன்னபிறவற்றோடு, இந்தக் கருமத்தையெல்லாம் பள்ளிமாணவர்கள் பாடமாகவும் படித்தாகவேண்டும் என்றும் திணித்தார்களே, அந்தப் பாடத் திணிப்பு, நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது. மாரிதாஸ் மற்றும் குழுவினரால் நல்லதொரு ஆரம்பம்!
வீடியோ 13 நிமிடம் ஈவெரா பெயருக்குப் பின்னால் நடந்து வரும் வேறுசில தகிடுதத்தங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!
2021 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற சர்வே / கருத்துக்கணிப்பை குமுதம் ரிபோர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. இதன்மீது தனியாக என்னுடைய கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. சாம்பிள் சைஸ் 58500 என்பது உண்மையிலேயே பெரியது தான்! அதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைவிட அதிமுகவின் எடப்பாடியார் தனது வலுவான இருப்பையும், அதிகரித்துவரும் செல்வாக்கையும் சொல்லியிருப்பதுமே கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. என்னுடைய கடந்தகால கள அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட இரண்டு அடிப்படையான விஷயங்கள்:: 1)தமிழக வாக்காளர்கள் தங்களுடைய உண்மையான சாய்ஸ் இதுதான் என்று இப்படி சர்வே எடுப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை 2) இன்னகட்சிக்கு வாக்கு என்று முடிவுசெய்து கொண்டு போகிறவர்களில் கணிசமானவர்கள் வாக்களிக்கும் போது உல்டாவாக வேறேதோ கட்சிக்கு வாக்களிப்பது!.இளைஞர்கள்தான் பெரும்பாலும் இப்படி கடைசிநொடியில் மாறுகிறவர்கள் என்பது கூடுதல் தகவல். கருத்துக்கணிப்புகள் தோற்கிற இடம் எது என்பதை இங்கும், அந்தப்பக்கங்களிலும் பலமுறை சொல்லியிருக்கிறேன்
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி சசிகலா நடராஜன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் ரத்து செய்யப்பட்டன.
பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்
என்ற பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டன. அதிமுகவின் கட்சி விதிமுறை பிரிவு-20 இன் படி
நடந்து இருந்தால் இந்த நியமனங்கள் சரியானவை.பொதுச் செயலாளர் பதவி வகிப்பவர் இல்லாத போது மாற்று ஏற்பாட்டுக்கான வழிமுறையை இந்த பிரிவு தெளிவாக சொல்கிறது.ஏதாவது காரணங்களால் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கும் போது,புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை, முந்தைய பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது.இடைக்கால ஏற்பாடாக கூட தேர்ந்தெடுக்கப்படாத பொதுச் செயலாளரை நியமினம் செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும.இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களில் தவறு இல்லை;ஆனால், அவை நிரந்தரமானவைகளாக ஆக முடியாது.( பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மட்டுமின்றி இடைக்கால நிர்வாக ஏற்பாட்டுக்கும் கட்சி விதிமுறைகள் படி திருமதி நடராஜன் தகுதியற்றவர்.ஏனெனில், அவர் முந்தைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.) ஆனால், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் உருவாக்கியது மட்டுமின்றி பொதுச் செயலாளர் என்கிற பதவியையே நீக்கிவிட்டதாக ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்கிறது.அதிமுக அமைப்பு விதிமுறைகளில் மாற்றி அமைக்க பொது குழுவுக்கு அதிகாரம் உண்டு என விதிமுறை 43 கூறுகிறது.
அந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு அவசியமில்லை என்ற திருத்தம் செய்யப்பட்டு இருக்குமால் அது தவறு.ஏன்எனில்,அதே விதி எண் 43 தான் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு என்ற விதிமுறையைத் தவிர மற்ற விதிமுறைகளை மாற்றி அமைக்க மட்டுமே பொதுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்கிறது.
அதாவது, பொதுச் செயலாளர் பதவி குறித்த எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை.மேலும்,பொதுச் செயலாளர் விஷயத்தில் திருத்தங்கள் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்ற விதி எண்-43 அதற்கான காரணத்தையும் தெளிவு படுத்துகிறது.அதாவது,பொதுச் செயலாளரே அதிமுக என்ற கட்சி அமைப்பின் அடித்தளம்;அதனால், அதில் திருத்தம் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறது.அந்த அம்சத்தை கொண்டு பார்த்தால் பொதுச் செயலாளர் என்னும்பதவியையே நீக்கிவிட்டதாக சொல்வது அதிமுகவின் அடித்தளத்தை தகர்த்து விட்டதாக ஆகிவிடும்.எனவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்காலிக ஏற்பாடு.ஆனால், கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டது. சரியானது.தேர்தல் ஆணையம் இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து இருப்பதில் குறை காண முடியாது!
சாணக்யா சேனலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் சசிகலா புராணம் எடுபடாது என்று இன்றைக்குப்பேசும் வீடியோ முதல் 39 நிமிடம் வரை அடுத்த 16 நிமிடம் மேற்கு வங்க அரசியல் என மொத்தம் 55 நிமிடம். ஆர்வம் இருக்கிற நண்பர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன்,
இன்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களுக்கெதிராக கூக்குரலிடும் எதிர்க்கட்சி வரிசைக்கு 70 நிமிடங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. பிரதமரின் உரை ஹிந்தியில் இருப்பதால் முழுப்பேச்சையும் புரிந்து கொள்வதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. ராஜ்ய சபா டிவியோ அல்லது அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையோ ஆங்கிலத்தில் சப்டைட்டில் மாதிரி கீழே கொடுக்க முன்வந்தால் ஹிந்தி தெரியாத குறை நீங்கும்
இந்த 10 நிமிட வீடியோவில் பிரதமர் முந்தைய நாட்களில் சரத் பவார், மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பேசியதை எடுத்துச் சொல்கிறார். அன்று மன்மோகன் சிங் சொன்னதைத்தானே செய்திருக்கிறோம் என்று கேட்டதில் காங்கிரஸ் NCP, TMC போன்ற உதவாக்கரை கட்சிகளுக்குஎ சரியான பதில், அவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிகிறமாதிரி இருக்கிறது. (ஆங்கில சப்டைட்டில்கள் உபயத்தில்!) பஞ்சாப் மண்டி வாலாக்களுக்கு மட்டுமே கசப்பாக இருக்கிற வேளாண் சட்டங்களை என்னமோ மொத்த விவசாயிகளுக்கும் எதிரானதாகச் சொல்லி, வேறு யார் யார் அஜெண்டாக்களுக்காகவோ போராடுகிற டிகாயத்துக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?
சன்டிவியில் கேள்விக்களம் நிகழ்ச்சியை குணசேகரன் நடத்திக் கொண்டிருக்கிறார். சசிகலா வருகையை வைத்து திமுகவின் அஜெண்டா இது என்பது ஒருபக்கம். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி அங்கிருந்தும் விலகி அமமுக பேச்சாளர் போலவே செயல் படுகிறவருக்கு சன்டிவி திராவிட இயக்கப் பேச்சாளர் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்களே! அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதாம்? #குழப்பம்
மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களின் ராஜாங்க அமைச்சராக இருந்த, நாசா என்றே அந்தநாட்களில் அழைக்கப்பட்ட வி நாராயணசாமி அமர்த்தலாகப் பேசி வலம்வந்த பழைய நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, அதேநபர் புதுச்சேரி CM ஆகப் பேசும் தொனி மிகவும் பரிதாபமாக இருக்கிறதே, அந்தத் தமாஷாவை நண்பர்கள் யாராவது கவனிக்கிறீர்களா?
ஜெகத்ரட்சகனை வைத்து திமுக நடத்திய நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்கிய ஒரே சீனோடு அவர் காமெடிப்பீசாகிப் போனது ஓருபக்கம்! அந்த ஒரே சீனில் நொந்து நூடுல்சாகிப்போனவர் நாசா என்பது அந்தக் காமெடியின் இன்னொருபக்கம். அசோகவர்த்தினியுடன் நாசா உரையாடும் இந்த 22 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி புதுச்சேரி தமாஷாவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. வெறும் விளையாட்டுப்பிள்ளையாகவே இருக்கும் ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு இரண்டுமுறை அரசியல் விஜயம் செய்து ஷோ காட்டியது கூட நாசா சோனியாவிடம் அழுதுபுலம்பியதால் தான் என்கிற மாதிரி செய்திகளும் வந்தனவே! திமுகவுக்குத் தாங்கள் யார் என்பதை ஒரு காட்டுகாட்ட வேண்டும் என்பதற்காகவே முதலில் ஜல்லிக்கட்டு, அதன்பின் மூன்று நாள் விஜயம் செய்தார் ராகுல் காண்டி என்பது ஊரறிந்த விஷயம். பதிலுக்கு திமுக என்ன காட்டப் போகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரியலாம்.
இந்த லட்சணத்தில் `கமல்ஹாசன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்!' - என சிலிர்த்திருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்! உண்மையாகக்கூட இருக்கலாம்! அந்த அளவுக்கு சோனியா காங்கிரசைப்போலவே கமல் காசரும் படு கலப்படம், பெரும் குழப்பம்! சிலகாலமாக பீட்டர் அல்போன்சின் பெயர் செய்திகளில் காணாமல் போயிருந்தது.இப்போது பீட்டர் அல்போன்ஸ் மீது, கட்சி தலைமைக்கு புகார் கொடுத்துள்ளார் கோபண்ணா. இதையடுத்து, பீட்டரும், கோபண்ணா மீது புகார் அளித்துள்ளார். ராகுல், சோனியா என, இருவருக்குமே இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.'தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படி புகார்கள் வருகிறதே' என, ராகுல் வெறுப்படைந்து உள்ளார். சோனியாவுக்கும் இது பிடிக்கவில்லை. 'சண்டையை நிறுத்திவிட்டு தேர்தல் வேலைகளைப் பாருங்கள்' என்று ராகுல்.சொன்னதாக தினமலர் செய்தி.
இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் பேசப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால் திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயக்கடன்கள் ரத்து என்ற அறிவிப்பொன்றே போதுமே! பாமகவைக் கழற்றிவிட அதிமுகவுக்கு இதை விட வேறு நல்லதருணம் இருக்கமுடியாது! ஒரு உதிரிக் கட்சியாவது பலவீனப்பட்டு ஒழியட்டுமே!
இன்னொரு குழப்பமும் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது போல. இப்படியாக தமிழக அரசியல் நிலவரம் இன்று.
இனிமேலும் கிராக்கி பண்ணிக்கொண்டே போக முடியாது என்பதால் ஒருவழியாக பாமக, அதிமுக கூட்டணியில் நீடிப்பது என்பது உறுதியாகிவிட்ட மாதிரி செய்திகள் வருகின்றன. சீட்டு பேரம் பெட்டி பேரம் இரண்டும் அநேகமாக வருகிற ஒருசில நாட்களில் முடிவாகி விடும்.அடுத்த அழைப்பு தங்களுக்கு வருமென்று தேமுதிக போன்ற சில கட்சிகள் காத்திருக்கின்றன. வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு முன்னாலேயே இப்படி உதிரிக்கட்சிகள் தங்களுக்கான முக்கியத்துவம், ஆதாயம், சமயங்களில் அதிகாரத்தையும் பெற்று விடுகிற நமது ஜனநாயக அதிசயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சசிகலா வகையறா அதிமுகவுக்கே உண்டான தனிப் பிரச்சினை என்றாலும், உதிரிகளால் என்ன மாதிரி சேதம் விளைவிக்க முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
இந்தப்பக்கம் பாமக அதிமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிற மாதிரி அந்தப்பக்கம் சோனியா காங்கிரஸ், திமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து போய்விட்டார். தமிழக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த வருகை இருந்தது. இப்போது மூன்றாவது முறையாகவும் ராகுல் வருகிற 14,15,16 தேதிகளில் தமிழகத்துக்கு வருகிறாராம். திமுகவுடன் தான் கூட்டணி, இசுடாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று ராகுல் காண்டி சொல்லி விட்டாலும் இந்த முறையும் இசுடாலினை சந்திக்கிற ஐடியா இல்லை என்றே தெரிகிறது. காங்கிரசுக்கு 15 சீட் என்று திமுக தரப்பில் கோடி காட்டப்பட்டதில் அதிருப்தி, பின்னால் இருந்து கையை முறுக்குகிற வேலையை காங்கிரஸ் சைலண்டாக செய்து வருவது வெளிப்படை.
இப்படி இரண்டு கூட்டணிகளிலுமே, வலுவான உதிரிக் கட்சிகளான பாமக, சோனியா காங்கிரஸ் இரண்டும் வறட்டு இழுப்பாக அரசியல் செய்து கொண்டிருப்பதில், தமிழ்நாட்டில் இருக்கிற மற்ற உதிரிக்கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.
கழகங்களிடம் உறுதியாகப் பேரம் முடியாமல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் பொருமுவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் இருப்பது 2021 தேர்தல் களத்தில், தமிழக அரசியல் நிலவரம். இன்னும் வேடிக்கையான விஷயம், இரண்டு கழகங்களுமே கூட இந்த உதிரிகளை உதறித்தள்ளி விட்டுத் தனித்தே களம் காணத் தயங்கிக் கொண்டிருப்பதுதான்!
கோபுரத்தில் இருக்கும் பொம்மை எதுவும் கோபுரத்தைத் தூங்குவதில்லை. ஆனால் தேர்தல் அரசியலில் அப்படியே தலைகீழ் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
தேர்தல்நேரங்களில் நான் எப்போதுமே வலியுறுத்தி வருவதைத் தான் இப்போதும் சொல்கிறேன். ஒருநல்ல ஜனநாயகமாக நாம் வலுப்பட அவ்வப்போது தேர்தல் முறைகளில் தேவையான சீர்திருத்தங்கள் செயதே ஆக வேண்டும். தேர்தல் சீர்.திருத்தங்களை செய்யாததால் தான் இங்கே உதிரிக்கட்சிகள் ஆட்டம்போட முடிகிறது. தகுதியில்லாத கழகங்கள் அரசியலில் ஆட்டிப்படைக்க முடிகிறது. வாக்குச்சீட்டுகளை முந்திக்கொண்டு பணப் பெட்டிகளே முடிவைத் தீர்மானிப்பவை என்றாகிப் போகும் அவலமும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இப்படிக் குறைபாடுடைய தேர்தல் முறைகளே இருக்கின்றன என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?
மாற்றத்துக்காக என்ன செய்யப்போகிறோம்? எப்போது செய்யப் போகிறோம்?
தாத்தா கருணாநிதி பிரசார நாடகங்களில் நடித்தார்! மகன் இசுடாலின் குறிஞ்சிமலர் டிவி சீரியலில் நடித்தார். பேரன் உதயநிதி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர்களுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! ஆனால் அசல் அக்மார்க் அரசியல்வாதிகளாக இவர்களுடைய நடிப்பு மகான் கவுண்டமணி சொல்கிற மாதிரி உலகமகா நடிப்புடா சாமீ என்பதை அறிந்திருக்கிறீர்களா?
முரசொலி தளத்துக்குப் போகாமலேயே என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம்.
தேமுதிக தொண்டன் பிரேமலதாவுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிற மாதிரி நேற்றைய முரசொலியில் சிலந்தி என்கிற புனைபெயரில் ஒரு மித்ர பேதம் செய்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஆழுததாம்! அந்தமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது முரசொலியில் அந்த நாட்களில் கருணாநிதியின் ஸ்பெஷாலிட்டி! இப்போது இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்து உளறுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை முரசொலியில் போட்டு நிரப்பவேண்டியிருக்கிறதென்ற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அரசியல் நாடகத்தனமானது,, நயவஞ்சகங்கள் நிறைந்தது! இதைத் தமிழ்நாட்டு மகாஜனங்கள் என்றுதெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்தைப் பிடித்த பெருவியாதிக்கு விமோசனம்!
முழுச்செய்தியும் இங்கே ஆதாரமில்லாமல் உதயநிதி ஏன் இப்படிப்பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்தே இப்படி ஒரு அந்தர்பல்டி. திமுகவினர் எந்தக்காலத்தில் உண்மையை, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்? கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட திராவிடங்கள் செய்வதெல்லாம் பொய்ச்செய்தியைத் தெரிந்தே பரப்புவதுதான் என்பது புரியுமே! நான் அதிமுக ஆதரவாளன் அல்ல, இரண்டு கழகங்களுமே தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள் தான் என்பதை உறுதியாக நம்புகிறவன்.
அதிமுக கூட்டணியில் சரத்குமார், லொடுக்குப்பாண்டி கருணாஸ் இருவரும் 2+ சீட்டுகளைக் கேட்கிறார்கள், AC சண்முகம் 8 சீட் கேட்கிறார், பாஜக, பாமக இரண்டும் சமமான சீட்டுக்களை கேட்கின்றன தேமுதிக பிரேமலதா 41 சீட் கேட்கிறார் இப்படி அதிமுக கூட்டணியில் விரிசல் என்ற செய்தியைப் பரப்பி, திமுக ஆதரவு ஊடகங்கள் திமுக கூட்டணியின் நிலை என்ன என்பதை சாமர்த்தியமாக மறைத்தாலும், இந்தவார முடிவுக்குள் இரண்டு கூட்டணிகளிலுமே என்ன நிலைமை என்பது ஏறத்தாழத் தெரிந்துவிடும். நாளை பாமக அதிமுக இடையிலான பேச்சுவார்த்தை என்னவாகும் என்பதிலிருந்தே அணிமாற்றம் இருக்குமா இருக்காதா என்பதும் ஒருவாறாகத் தெளிந்துவிடும்! அங்கே திமுக, காங்கிரசைத் திருப்திப் படுத்தத் தவறினால் பெயரளவிலான மூன்றாவது அணி ஒன்று உருவாகலாம் என்ற பூச்சாண்டி நிஜமாகக் கூட ஆகிவிடலாம்!
திமுக என்ன லேசுப்பட்டவர்களா? பாஜகவின் காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணம், மடிப் பிச்சை இப்படி சென்டிமென்டாக எதையாவது செய்து ஓட்டுக்கேட்கத் தெரியாதா என்ன? !!
ஹிந்து ஓட்டுவங்கி என்று இன்னமும் உருவாகவே இல்லை என்கிற போதே இப்படியென்றால் ......?
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தை நிறுவிய ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி ஐயா ஜனவரி 31 அன்று பிறந்தநாள் காணுகிறார் என்பதில் கூடுதல் விசேஷம் 79 அகவையை நிறைவு செய்து எண்பதில் அடியெடுத்து வைக்கிறார். நேரில் சென்று வணங்க முடியாததால் இங்கே வலைப்பதிவில் வணங்கி ஞானாலயா தம்பதியினர் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஒரு கூகிள் வலைக்குழுமத்தின் வழியாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய புத்தகசேகரம் குறித்து அறிந்திருந்தாலும் புதுத்திண்ணை இணைய இதழில் மறைந்த எழுத்தாளர் மலர்மன்னன் (இயற்பெயர்:: சிவராம கிருஷ்ண அரவிந்தன்) எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தூண்டுதலாக இருந்தது. இளமையில் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கம் என மிகப்பல வெட்டி வேலைகளில் களம் இறங்கி, பின்னாட்களில் அதுவும் கசந்துபோய் ஒதுங்,கி இருந்தவனை ஒரு உருப்படியான களத்தில் வேலை செய்கிற வாய்ப்பாகவும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு அமைந்ததை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கூகிள் பிளஸ் தளத்தில் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்களை வேண்டி எழுதிய பல பகிர்வுகள் நிறையத் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கூடவே அனுபவங்களையும்!
எண்பது வயது நிறைவை சதாபிஷேகம் நடத்திக் கொண்டாடி வணங்குகிற தேசம் நம்முடையது. ஒரு லட்சியத்துடன் புத்தகசேகரத்தை, தன்னுடைய 17வது வயதிலிருந்தே தொடங்கியவருக்கு, அந்த லட்சியத்தில் இன்றும் உறுதுணையாக இருப்பவர் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி.மீனாட்சி நூலகமாகத் தொடங்கி, இன்று ஞானாலயா ஆய்வு நூலகமாக ஒரு ஆலமரமாக வளர்ந்திருப்பதில் ஞானாலயா தம்பதியினரது ஆர்வமும் கடும் உழைப்பும் இருக்கிறது.
அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆகஸ்ட் 2012 இல் ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கும் இதர புத்தக சேகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள 2012 ஆகஸ்டில் சதீஷ் என்கிற வலைப் பதிவருக்கு எழுதிய மின்னஞ்சலில் நான் எழுதியது இது::
//தமிழ்நாட்டில் மிகப்பெரிய தனியார் புத்தக சேகரமாக இருந்த மறைமலையடிகள் நூலகம், வாரிசுகளின் பேராசையால் காணாமல் போனது.திருவருட் பிரகாச வள்ளலார் சென்னையில் வந்தபோது உரையாற்றிய இடம் என்பதைக் கூடக் கருத்தில் கொள்ளாது, வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாத்து வித்திருக்க வேண்டிய அந்த இடம், இன்றைக்குப் பணத்தாசையால் ஒரு வணிக வளாகமாகி விட்டது.அரும்பாடுபட்டு எகேசெட்டியார் சேகரித்துக் கொடுத்த நூல்களில் பெரும்பாலானவை கவனிப்பாரில்லாமல் கரையானுக்கு இரையாகக் கொடுக்கப் பட்டதில், தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞை இல்லை என்பதும், பாதுகாத்து வைக்கத்தவறிக் கொண்டே வருகிறோம் என்பதையும் நமக்கு ஒரு பாடமாகச் சொல்லி வைத்துப் போயிருக்கிறது.
ரோஜா முத்தையா நூலகம் சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு விற்கப்பட்டு விட்டது.தரமணியில் ஸ்கேன் செய்து வைக்கப் பட்ட சுமார் ஒருலட்சம் நூல்களுடன் அதனுடைய கிளை சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.அனால், அங்கே ஞானாலயாவைப் போல எளிதில் அணுகி பயன்படுத்த முடியாது. அரசின் பராமரிப்பில் இயங்கி வரும் கன்னிமாரா நூலகம், மிகப்பெரிய எண்ணிக்கையில் புத்தக சேகரத்தைக் கொண்டது. ஆனால், பயன்படுத்திக் கொள்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.புதுக்கோட்டை ஞானாலயா வெறும் நூல்களை சேகரிக்கும் கிடங்கி அல்ல!எந்தப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றே தெரியாத நூலகர்களைக் கொண்டிருக்கும் நூலகமும் அல்ல! ஒரு ஆராய்ச்சிக் கருவூலம்!மிகக் கவனமாகத் தகவல்களைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அறிவுக் களஞ்சியம்!
இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ள எழுத்தாளர் விக்கிரமன் நடத்தி வரும் இலக்கியபீடம் மாத இதழில், சென்ற ஆண்டு பிப்ரவரி இதழில் வெளியான ஒரு ஏழுபக்கக் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள். புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதை சுருக்கமாக இந்தச் சுட்டியில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்//
எண்பதாம் அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அவரது துணைவியார் இருவருக்கும் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துப் பதிவை நிறைவு செய்கிறேன்.
டிஸ்கி 1:: நான் எழுதிவரும் மூன்று வலைப்பூக்களிலும் சேர்த்து இது என்னுடைய 2000வது பதிவு. நேற்றே வெளி வந்திருக்கவேண்டும். புத்தகங்களை பேச ஆரம்பித்த இந்தப்பக்கங்களில் இது 648 வது.