நேற்று முன்தினம் இங்கே எழுதிய பதிவுக்கு நண்பர் திருப்பூர் ஜோதிஜி பின்னூட்டங்களில் ஸ்வராஜ்யா இதழிலிருந்து சில தகவல்களை மேற்கோள் காட்டிக் கேள்விகள் எழுப்பியிருந்தார். இங்கே அரசியல் என்றால் பொய், சூது, களவு, துரோகம் இல்லாமலா என்கிற கேள்வி இரண்டுநாட்களாக என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
இந்த 26 நிமிட வீடியோவில், பத்திரிகையாளர் மணி, சிவசேனா விவசாயிகளுக்கு ஆதரவு என்ற போலியான போர்வையில் மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவந்தது குறித்துக் கொஞ்சம் சொல்கிறார். ஆரே என்கிற இடத்தில் புல்லெட் ட்ரெயின் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒரு பார்க்கிங் ஷெட் அமைப்பதற்காக சிலநூறு மரங்களை வெட்டுவதில் பிரச்சினை கிளப்பப்பட்டு, நீதிமன்றத்த தடை அப்புறம் தடை நீக்கம் என்றானாலும் சிவசேனா ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த முதல் விஷயங்களில் ஆரேவில் மரங்களை வெட்ட அனுமதிக்கப்போவதில்லை என்பதும் ஒன்று. ஆக ஜப்பான் நிதிஉதவியோடு துவங்கப் படும் ஒரு திட்டத்துக்கு, மறுபடியும் சிவசேனாவால் முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.
அதேபோல ரத்னகிரி பகுதியில் உள்ளூர் எண்ணெய் நிறுவனங்களுடன் சேர்ந்து சவூதி ஆராம்கோ அமைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் கூட விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போர்வையில் சிக்கலுக்கு ஆளாகப்போகிறதா? அப்படி ஆகுமேயானால் சர்வதேச அளவில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்கிற கேள்விகளை திரு.மணி முன்வைத்திருக்கிறார்.
துக்ளக்50 நிகழ்வை ஒட்டி அதன் ஆசிரியர் திரு குருமூர்த்தி திருச்சியில் பேசிய வீடியோவை இரண்டு வலைப்பக்கங்களிலும் முன்னமே பதிவு செய்திருக்கிறேன். சரத் பவாரைப் பற்றித் தமிழக மக்களுக்கு சரியாகாது தெரியாது என்று குறிப்பிட்டுச் சொன்ன பகுதிக்காகவே இன்னொரு முறை பார்த்து விடலாமே!
அஜித் பவாரை வைத்து சித்தப்பூ சரத் பவார் ஆடிய உள்ளே வெளியே ஆட்டத்தைப் பற்றி மெல்லமெல்ல பின்னணித்தகவல்கள் கசிய ஆரம்பமாகி இருப்பதில் சரத் பவாரின் குள்ளநரித்தனம் எப்படிப்பட்டது என்பதுமே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு இருக்கிறது.
மகள் சுப்ரியா சுலேவை மத்திய விவசாயத்துறை அமைச்சராக ஆக்கவேண்டும், தேவேந்திர ஃபட்னவிஸ் மீண்டும் மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக ஆகக் கூடாது என்ற இரண்டு கோரிக்கைகளோடு சரத் பவார் தொடர்ந்து பிஜேபியோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த இரண்டையும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பதற்கு உறுதியாக மறுத்துவிட்ட பின்னால் தான் காங்கிரசின் தயக்கம், பயத்தையும் மீறி, சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து அரசையும் அமைத்திருக்கிறார் என்று சொல்வதும் கூட அதே ஸ்வராஜ்யா இதழ் தான்! ப்ப்பூ! இன்னொரு கான்ஸபிரசி தியரி என்று ஒதுக்கித்தள்ள முடியாதபடி சரத் பவாரின் வஞ்சக நரித்தன அரசியல் கடந்த கால சரித்திரம் இருக்கிறது.
சரத் பவார் காப்பாற்றிக் கொண்டு வருவது சொந்தக் குடும்ப நலன் மட்டும்தான் என்பது புரியாமல் சதீஷ் ஆசார்யா செய்கிற கார்டூன் டிராஜெடி ரசிக்கிற மாதிரியாகவா இருக்கிறது? !!
இப்படி லந்தடித்து மட்டும்தான் நம்முடைய ஆற்றாமை கோபம் இவைகளை வெளிப்படுத்த முடியும் போல. பொய் சூது களவு துரோகம் நாலும் கலந்தது தான் அரசியல்! அப்படித்தானே?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment