பிரியங்கா வாத்ரா இரண்டு நாட்களாக ஏற்கெனெவே குழம்பிக் கிடக்கும் காங்கிரஸ் கட்சியை இன்னமும் குழப்புகிற விதமாக அதிரடி காட்டி வருகிறாரோ? சோன்பத்ரா பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கலவரம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 10 பேர் பலி என்ற விஷயத்தில் மூக்கை நுழைத்து, பலியானவர்கள் குடும்பத்தை சந்திக்கப் போகிறேன் என்று கிளம்பியதில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டுநாள் அரசு விருந்தினர் மாளிகையில் சௌகரியமாக இருந்து கொண்டே தர்ணா நாடகம் நடத்தியதில், யோகி ஆதித்யநாத் அரசு பலியானவர்கள் குடும்பங்கள் விருந்தினர் மாளிகையில் வந்து சந்திக்க அனுமதித்ததில், தர்ணா நாடகத்தை முடித்துக் கொண்டு, மறுபடி வருவேன் என்று முழங்கிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
சுட்டுக்கொண்டு பலியானவர்கள் குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் உதவி என்ற அறிவிப்புடன். நேற்றைக்கு டில்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மரணத்தைக் கூட தனக்கான பப்ளிசிடியாக, மாற்றிக் கொண்ட கூத்தும் நடந்தது. ராகுல் காண்டி ராஜினாமா வாபஸ் பெறவில்லை என்றால் அடுத்து காங்கிரஸ் தலைமைக்கு பிரியங்காவை விட்டால் வேறு ஆளில்லை என்ற குரல்கள் கொஞ்சம் வலுத்து எழுந்த பிறகே பப்பி இந்த நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார் என்பது இயல்பாகவே சில சந்தேகங்களை எழுப்புகிறது.
நமக்கே இப்படி சந்தேகங்கள் வருகிறபோது, ஊடகக்காரர் ரங்கராஜ் பாண்டேவுக்கு மட்டும் வராதா என்ன? ராகுலை பதவியிலிருந்து இறக்க சதி செய்கிறாரா பிரியங்கா | தங்கபாலுடன் பாண்டேவின் பரபரப்பு நேர்காணல் என்றொரு தலைப்பைக் கொடுத்து, இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். 54 நிமிடங்கள். உபயோகமில்லாத பிக் பாஸ் அழுவாச்சி சீரியல்கள் பார்ப்பதைத் தவிர்க்க விரும்பினால், அரசியல் எங்கே போய்க்கொண்டிருக்கிறது, என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நேர்காணல் கொஞ்சம் உதவியாக இருக்கும். சதி, பரபரப்பு வார்த்தைகள் எல்லாம் உங்கள் ஆவலைத் தூண்டுவதற்காக மட்டுமே! சதி ஏதாவது இருக்குமானால், இதுமாதிரி நேர்காணல், அதுவும் தங்கபாலு மாதிரியான ஆசாமிகளிடமிருந்து தெரிந்துகொள்ள முடியாது என்பது நமக்குத் தெரியாதா என்ன? அதையும் மீறி ஒரு சுவாரசியமான நேர்காணல் இது! தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் தொடாத சப்ஜெக்ட் இது.
அப்பாடா! ஒருவழியாக மம்தா பானெர்ஜி சிரித்த முகமாய்த் தெரிகிற ஒரு படம் கிடைத்து விட்டது!
"மேற்குவங்கத்தில் ஏதேனும் கலவரம், பிரச்னை நடந்தால் உடனடியாக உண்மை அறியும் குழுவை அனுப்புகிறது பா.ஜ.க. அதுவே உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கலவரத்தைப் பற்றி அறிந்துகொள்ள நாங்கள் ஒரு குழுவை அனுப்பினால் மட்டும் அம்மாநில காவலர்கள் எங்கள் குழுவைத் தடுக்கிறார்கள். நாங்கள் சொல்ல வருவதைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. அனைவரும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரியங்கா காந்தி தர்ணா செய்ததில் எந்த தவறும் இல்லை” என்று தனது பொருமலையும், பிரியங்காவுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிற ஒரே குரல் மம்தா பானெர்ஜியுடையது. மிகவும் நியாயமான பொருமல் தான்!
செய்திகளின் அரசியல் புரிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.
//தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் தொடாத சப்ஜெக்ட் இது//
ReplyDeleteசரியான வார்த்தை சொன்னீர்கள் சார்.
-கில்லர்ஜி
இங்கே தமிழகத்தில் ஊடகங்களில் யார் எவருடைய பிடிமானம் இருக்கிறது என்பதைச் சேர்த்துப் பார்த்தால், ஏன் அவர்கள் இதை மட்டுமல்ல இன்னும் நிறைய உருப்படியான விஷயங்களைத் தொட்டுப் பேசுவதே இல்லை என்பதும் கூடப் புரிந்துகொள்ளக் கூடியதுதான்!
Deleteவருகைக்கும் முதல் கருத்துரைக்கும் நன்றி.