திருமதி நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதில் புறநானூற்றில் இருந்து பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் சொன்ன அறிவுரையாக ஒரு பாடலை மிகப் பொருத்தமாக எடுத்துச் சொல்லி அசத்தியிருக்கிறார்! சொன்னதோடு நாணயமாக வரிசெலுத்துகிற மக்களுக்கு நன்றியையும் சொன்னது இந்த பட்ஜெட் அறிக்கையில் ஒரு சுவாரசியம்!
பட்ஜெட் முழு உரையை இனிமேல்தான் அச்சில் முழுதாகப் படிக்க வேண்டும். முந்தைய நாட்களில் மதுரை வர்த்தகர் சங்கத்தில் பட்ஜெட்டை எப்படிப் புரிந்து கொள்வது என்றமாதிரி கூட்டங்களில் தவறாமல் போய்க் கேட்டதுண்டு. இப்போது இணையத்திலேயே நிறைய அலசல்கள் காணக் கிடைப்பதால், ஒவ்வொன்றாகத் தேடிப்பார்க்க வேண்டும். அதன்மீது பதிவுகள் எழுதி உங்களில் எவரையும் பயமுறுத்தப் போவதில்லை! மகிழ்ச்சிதானே! நிர்மலா புறநானூறு பாடலைச் சொன்னபோது, தயாநிதி மாறன், ஆ!ராசா இருவர் முகத்திலும் அதிர்ச்சி கலந்த சந்தோஷம்! நான் போட்டால் தெரியும் போடு! தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு என்கிற திரைப்படப்பாடல் பின்னணியில் கேட்டிருக்குமோ?
சிலநாட்களுக்கு முன்னால் ஒரு பிஜேபி தலைவரின் மகன் ஒரு அரசு அதிகாரியைக் கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுமாதிரிப் போக்கை சகித்துக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.அதுமட்டுமல்லாமல் அந்த நபர் மீது கட்சிநடவடிக்கையும் எடுத்திருக்கிறது. நேர்மாறாக காங்கிரசில் என்ன நடக்கிறது? மகாராஷ்டிராவில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த நாராயண் ரானேவின் மகன் நிடேஷ் ரானே, இவரும் ஒரு MLA, அதனது ஆட்களுடன் சென்று ஒரு அரசு அதிகாரி மீது சேறு கலந்த நீரை மூன்று வாளிகள் கொட்டி மிரட்டிய காட்சிகள் டிவியில் தொடர்ந்து காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. போலீஸ்காரர்கள் சமாதானப் படுத்த முயன்றபோது அங்கேயும் ரானே மிரட்டல் தர்பார்! அப்பா நாராயண் ரானே தன்மகன் எந்த அடாவடியும் செய்யவில்லை கூடப்போனவர்கள் தான் செய்தார்கள் என்று கூசாமல் சொல்கிறார். டிவியில் சம்பவம் பிரபலமானதால் போலீஸ்காரர்கள் கைது செய்திருக்கிறார்களாம்!
நஸ்ரத் ஜஹான்! 29 வயதே ஆன இந்த இளம் நடிகை , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆன கையோடு தான் காதலித்த நிகில் ஜெயின் என்பவரை துருக்கியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டார் இப்போது திருமண வரவேற்பு கொல்கத்தாவில், மம்தா பானெர்ஜியும் கலந்து கொண்டாராம்! கொஞ்சம் சிரித்தமுகமாய் இருக்கக் கூடாதோ? சமீபகாலங்களில் மம்தா பானெர்ஜியை சிரித்த முகத்தோடு எங்கேயும் பார்த்ததாய் நினைவுக்கு வரவில்லை.
இவருக்கு தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்கிற பிரசாந்த் கிஷோரை நினைத்தால் பாவமாக இருக்கிறது! இன்னும் என்னென்ன பாடெல்லாம் படப்போகிறாரோ?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment