குடும்பமோ, தொழிற்சாலையோ, அல்லது ஒரு அரசியல் கட்சியோ இப்படி எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அது சுமுகமான முறையில் நடக்கவும், முன்னேறவும் அதற்கு அடிப்படையான ஒரு விஷயம் தேவைப்படும்! என்னவென்று ஊகிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் இந்தப்பாட்டை கொஞ்சம் கேளுங்கள்!
வண்டி உருண்டோட அச்சாணி தேவை! இந்த அச்சாணி எப்படி இருக்கும் என்பது மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பார்த்திருந்தால், வீடியோவில் மைனாவதி கையில் வைத்துக் கொண்டு பாடுகிறாரே, அதுதான் என்பது தெரிந்திருக்கும்! வீடியோவில் சரியாகத் தெரியவில்லையா? இங்கே படத்தில் பாருங்கள்!
அச்சாணி, கடையாணி என்று அழைக்கப்படும் இந்தக் கொண்டி தான் வண்டி ஓடுகிற வேகத்தில் சக்கரம் தனியாகக் கழன்று வெளியே போய்விடாமல் பாதுகாக்கும் அம்சமாக இருக்கிறது. Linchpin என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்! சேத் கோடின் இந்தத்தலைப்பிலேயே ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார்.
நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால், அங்கே பலவிதமான குணாதிசயங்களுடன் ஊழியர்கள் இருப்பார்கள். எவ்வளவு மெதுவாக வேலைசெய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செய்வோமே என்ற மனோபாவத்துடன் பலர். அவர்களை வேலைவாங்குவதற்கென்றே மேற்பார்வையாளர் என்று சிலர் அதிகாரம் செய்துகொண்டிருப்பதையும் பார்க்க முடியும் இல்லையா? இந்த இரண்டுக்கும் நடுவே, மிகச்சில பேர் தங்களுடைய வேலையை, கூலிக்காகச் செய்வதுதானே என்றில்லாமல் முழு ஆர்வத்தோடு செய்துகொண்டு இருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் தான் அந்த நிறுவனத்தின் அச்சாணிகள்! இந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்கிற சேத் கோடின் பதிவு இங்கே.
இதை படித்த பிறகு நமக்கு நன்றாகப் பெயர் தெரிந்த டொயோடா கார் நிறுவனம்! Toyota Production System (TPS) கார் தயாரிப்பதையே எப்படி ஒரு நுணுக்கமான மேலாண்மை முறையாக வளர்த்து வந்தது என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவின் தரமற்ற உற்பத்தியும் மலிவுவிலையில் உலகெங்கும் கொட்டி வருவதும் இன்றைக்கு எப்படியெல்லாம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது என்பதையும் யோசித்துப் பார்க்கிற விதமாக .......
வடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி! டொயோடா சரிந்தால்.....!
இப்படி டொயோடா கார் உற்பத்தி முறையைப் பற்றி, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தர உத்தரவாதம் என்றிருந்ததற்கும், தரமே இல்லாமல் விலை மலிவு என்ற சாக்கில் குப்பைகளைத் தள்ளிவிட்ட சீனக் கதையையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்! அன்றைக்கு எழுதும் போது சீனப்பூச்சாண்டி பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் உலகத்தைப் பீடித்திருக்கும் பெரிய அபாயமாக இப்போது நன்றாகப் புலப்படுகிறது.
2009, 2010களில் எப்படி எதைப்பற்றியும் கவலை இல்லாமல் செய்திகளைத் தேடிப்படித்து, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு என்ற தலைப்புக்களில் வரிந்துவரிந்து எழுதிக் கொண்டிருந்தேன் என்று இப்போது திரும்பிப் பார்க்கையில், வெப் சீரீஸ், சினிமா என்று எவ்வளவு சோம்பேறி ஆகிவிட்டேனென்று எனக்கே மிகக்கேவலமாக உறைக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment