ஒரு எண்பது வருஷங்களுக்கு முன்னால் கதாசிரியர்கள் தமிழில் எப்படிக் கதை சொன்னார்கள், ஜனங்களும் அதை எப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்பதையெல்லாம் திரும்பிப்பார்த்தால் நிஜமாகவே தலை சுற்றுகிறது! கூடவே கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அதைத் தாண்டி அவர் எழுதிய வேறு கதைகளைப் படிக்க ஏன் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை என்ற கேள்விக்கு விடைகிடைக்கிற மாதிரியும் இருக்கிறது!
கள்வனின் காதலி! இப்படித் தலைப்பில் 1937வாக்கில் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கதை! கதை என்னவோ மிகச் சாதாரணமானதுதான்! கல்யாணியும் முத்தையனும் மாமன் மகள் அத்தைமகன் உறவுமுறையுள்ள காதலர்கள்! மேலே பாரதியார் பாடலுடன் டைட்டில் கார்ட் இரண்டரை நிமிடம் பார்த்தீர்களானால் படத்தில் நடித்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள் தெரியும். டைட்டில் முடிந்தவுடன் ஒரு காதல் பாட்டு!
இதைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதும் போது காதல் பாட்டாகத்தான் எழுதினாரா இல்லையா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாததால் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்! முதலில் டூயட்டாக வரும் இந்தப்பாடலை கண்டசாலா மட்டும் பாடுகிற சோலோ வெர்ஷன் படத்தின் கடைசிப்பகுதியில் இருக்கிறது. பாட்டு முடிந்ததும், கதை ஆரம்பம்! கல்யாணியின் தந்தை மகள் முரடனும் ஏழையுமான முத்தையனுடன் பழகுவதைக் கண்டிக்கிறார். மகளுக்கு வசதியான கிழவர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் பேசியும் முடித்து விடுகிறார். கல்யாணி முத்தையனைச் சந்தித்து ஓடிப்போய்விடலாமாவென்று கேட்கிற அளவுக்கு கதை எழுதிய 1937 அல்லது படம் வெளியான 1955 காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறது! முத்தையன் தன்னுடைய தங்கை அபிராமிக்கு, திருமணம் செய்துவைத்தபிறகுதான், கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பற்றியே யோசிக்க முடியும் என்று மறுத்துவிடுகிறான். கோபத்துடன் கல்யாணி தந்தை பார்த்த கிழவருக்கே இரண்டாம் தாரமாக ஆகிறாள். முத்தையன் தங்கையுடன் வெளியூருக்குப் போய்விடுகிறான்.
கதாநாயகன் கள்வனாக மாற வேண்டாமா? ஒரு மடத்தின் கார்வாரிடம் வேலைகேட்டுப்போகிறவனை முதலில் விரட்டி அடிக்கும் அந்தக் கார்வார் சங்குப்பிள்ளை (TS துரைராஜ்), முத்தையனின் தங்கை அபிராமியைப் (குசலகுமாரி) பார்த்துவிட்டு, நாயகனைத் தாஜா செய்து அழைத்துவரச் செய்து கணக்கப் பிள்ளை வேலை கொடுக்கிறான். பின்பு ஒரு நாள் நாயகனை வெளியூர் வசூலுக்கு அனுப்பிவிட்டு தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். நாயகனிடம் நன்றாக உதைவாங்கித் தப்பித்துப் போகிற சங்குப் பிள்ளை போலீசில் முத்தையன் திருடியதோடு தன்னைத் தாக்கியதாகவும் புகார் கொடுத்துவிடுகிறான். லாக்கப்பில் வைக்கப்படுகிற முத்தையனுக்கு அங்கே சொக்கன் என்கிற குறவன் ஆறுதல் சொல்கிறான், இருவருமாகத் தப்பித்துப் போகிறார்கள். ஒருதரம் திருடன் என்று முத்திரை குத்திவிட்டால் அதுவே காலத்துக்கும் நிற்கும் என்று உபதேசம் செய்து முத்தையனையும் கள்வனாக மாற்றுகிறான்! கொள்ளிடக்கரை சுற்றுவட்டாரமே பயப்படும் கள்வனாக நாயகன் மாறியாயிற்று!
நாயகி கல்யாணியைத் திருமணம் செய்து கொண்ட கிழவர் மனம் மாறி இந்தப்பாட்டுடன், சொத்துக்களை நாயகியின் பெயருக்கே உயில் எழுதி வைத்து விட்டு விவாக விடுதலை கொடுப்பதாகச் சொல்லிவிட்டு செத்தும் போய்விடுகிறார். இந்த இரண்டுபேரும் சந்திப்பதற்கும், அபிராமி என்ன ஆனாள் என்பதற்கு முடிச்சுப் போடுகிற மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாஸ்திரி (கே சாரங்கபாணி) அவர் மனைவியாக அதான் எனக்குத்தெரியுமே முத்துலட்சுமி, நாடகத்தில் பெண் வேடமிடும் துணைக்கதாநாயகனாக கமலபதி (TR ராமச்சந்திரன்) என்று வரிசையாகக் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். படத்தைப் பொறுமையாகப் பார்ப்பதற்கு கே சாரங்கபாணி, முத்துலட்சுமி TR ராமச்சந்திரன், TS துரை ராஜ், குறவனாக நடித்தவர் என்று இவர்கள் வரும் காட்சிகள்தான் உதவியாக இருக்கின்றன .
யூட்யூபில் இந்தப்படத்தைப் பார்த்தபோது இந்தப்பத்து நிமிட சதாரம் நாடகத்தில் வருகிற கள்ளன் சதாரம் (சிவாஜி TR ராமச்சந்திரன்) சந்திக்கிற காட்சி நன்றாக இருந்தது. என்தம்பி படத்தில் கூட இதே காட்சி கொஞ்சம் சுருக்கமாக இருந்தது நினைவுக்கு வருகிறதா?
என்னதான் கதாநாயகனாக இருந்தாலும் போலீஸ் வேட்டையாடுகிற கள்வனை விட்டுவிட முடியுமா? அதுவும் அந்த நாட்களில்? நாயகனைப் போலீஸ் சுடுகிறது, நாயகி தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறாள். இப்படித் திரைப்படம் முடிக்கப்பட்டாலும், கல்கியின் கதையில் முடிவு அப்படி இல்லை.
கல்கியின் கதைக்கு S D சுந்தரம் வசனம் எழுதியிருக்கிறார் என்பதை விட கள்வனின் காதலி கதையை முதலில் என் எஸ் கிருஷ்ணன் தயாரிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டதாக விக்கி தகவல் சொல்கிறது. எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.
கல்கியின் கதைகளான பார்த்திபன் கனவு, தியாகபூமி இரண்டும் படமாக எடுக்கப்பட்டதில், பார்த்திபன் கனவு படம் ஒன்றில் தான் கதையில் இருந்த வசனங்களை அப்படியே எடுத்துப்பயன் படுத்தப்பட்டதாக நினைவு. படம் மிக நன்றாக எடுக்கப்பட்டுமே கூட வெற்றிப்படமாக அமையவில்லை. இந்தப் படத்துக்கு வசனம் கொஞ்சம் அல்ல நிறையவே மைனஸ்!
மீண்டும் சந்திப்போம்.
அப்போ... ஒருதரம் பார்க்கலாம்.. ந்னு சொல்றீங்க!...
ReplyDeleteவாங்க துரை செல்வராஜூ சார்!
Deleteஇதுவரை பார்த்ததில்லை என்றால் நிச்சயம் ஒருதரம் பார்க்கலாம்! பாவம், சரக்கே இல்லாத ஒரு திரைக் கதையை துணைக்கதாபாத்திரங்கள் தான் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை அத்தநாட்களிலேயே கல்கி துணிந்து சொல்லிவிட்டார் என்றுகூட பீதியைக் கிளப்பலாம்!
.