தந்தியும் தமிழும் என்ற தலைப்பில் ரங்கராஜ் பாண்டே இன்று காலை உரையாற்றியிருப்பதாக இந்த மாதிரி ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் jerk ஆனது நிஜம்! தந்தியின் தமிழ் என்றவுடன் கள்ளக்காதலில் வாலிபர் பட்டப்பகலில் குத்திக் கொலை என்று தலைப்பிட்டு சதக் சதக்கென்று 17 முறை குத்தியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்ற டெம்பிளேட் தான் உடனடியாக ஞாபகம் வந்தது.
பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் ஒரு பத்திரிகையாளனாக வரவேண்டுமென்கிற ஆசை நிறைய இருந்தது. தினத்தந்தி நிறுவனர் சி பா ஆதித்தன் எழுதிய எழுத்தாளர் கையேடு புத்தகமாக வந்த சூட்டிலேயே மதுரை தினத்தந்தி அலுவலகத்துக்கே போய் வாங்கிவந்ததும் அடிக்கடி புரட்டிப் பார்த்து மனதில் ஏற்றிக்கொண்ட அந்த நாட்களும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூட எப்படிப் பாமரருக்கும் ருசி தட்டுகிற செய்தியாக்குவது என்று அந்தப்புத்தகம் சொல்லிக் கொடுத்தது. உண்மை! ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தை எப்படிச் செய்தி ஆக்குவது என்பதை மதுரை தினமணியில் உதவி ஆசிரியர்களாக இருந்த சிலரும், The Hindu நாளிதழ் நிருபர்களில் சிலரும்தான் கற்றுக் கொடுத்தார்கள். எழுத வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தவர்களில் சி பா ஆதித்தன் (எழுதிய அந்தப்புத்தகம் வழியாக) அவர்களும் ஒருவர்தான்! மதுரை தினத்தந்தியில் செய்தியாக்கி எழுதிக்கொண்டிருந்த ஓரிரு துணை ஆசிரியர்கள், அந்த எழுத்தாளர் கையேடு எப்படி தினத்தந்தியின் நடைமுறை வழிகாட்டியாக (manual) இருந்தது என்பதையும் தாண்டி வேறு சில எழுதப்படாத விதிகளையும் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். தந்தியின் தமிழ் என்றால் அது பாமரனுக்கான தமிழ், பாமரனுக்கும் புரியவேண்டுமென்பதற்காக எளிமையான வார்த்தைகளில் செய்தியைச் சொல்ல முயன்ற தமிழ் என்பது மட்டும் அவர்களுடைய நிறுவன பலம், அரசியல் சாய்மானங்களையும் தாண்டி மனதில் இப்போது நிற்கிறது. ஆனால் இன்றைக்கு தேவையே இல்லாமல் போய்விட்ட ஒரு கையேடு என்பதையும் சொல்லியாக வேண்டுமே! ஏன்?
கல்வித்தந்தைகளுக்கே கையேடு/கைத்தடி தேவைப் படுகிற காலமாகி விட்டதே! அதனால்தான்!
கார்ட்டூனிஸ்ட் பாலா இந்த ANI செய்திநிறுவனத்தின் ஒரு குறுஞ்செய்தி மீது ஒரே ஒருவரிதான் தன் கருத்தாக சார் ...பெண்ணுரிமை போற்றும் திமுக சார் என்று எழுதியிருப்பதிலேயே முழுச் செய்தியும் புரிந்து விடுகிறதா இல்லையா? blogs, micro blogs,twitter, FB, என்று ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் நிறுவனப்படுத்தப்பட்ட செய்தி ஊடகங்களுக்கு இணையாக, ஏன், அவைகளைத் தாண்டியும் செய்திகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான விமரிசனங்களை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வெறுப்போடு கக்கிக் கொண்டிருந்ததை சட்டை செய்யாமல் தன்னுடைய தரப்பை, பிரசாரத்தை twitter வழியாகவே ட்ரம்ப் நடத்தி ஜெயித்ததும் மிகச் சமீபகாலத்தைய நிகழ்வுதான்!
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் that கரடியே காறித்துப்பின moment காமெடியை வைத்து ஓரிரு வரிகளில் மாயவரத்தான் ரமேஷ் குமார் ஏதோ சொல்கிறாரே! புரிகிறது இல்லையா?
ஓர் நல்ல எழுத்தாளன் எழுதுவதோடு நின்று விடுவதில்லை! தேர்ந்த வாசகனையும் எழுத வைத்து விடுகிறான் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இது !
மீண்டும் சந்திப்போம்!
ஓர் நல்ல எழுத்தாளன் எழுதுவதோடு நின்று விடுவதில்லை! தேர்ந்த வாசகனையும் எழுத வைத்து விடுகிறான் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இது !
மீண்டும் சந்திப்போம்!
No comments:
Post a Comment