நேற்றைக்கு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா இங்கே மதுரைக்கு என் இல்லத்துக்கு வந்திருந்த செய்தியை முந்தைய பதிவில் லேசாகத் தொட்டுச் சொல்லி இருந்தேன், நினைவிருக்கிறதா? பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக் கொண்டிருந்ததில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஆர் நல்லகண்ணு, ஒரு புத்தகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் B T ரணதிவே எழுதியது ஞானாலயாவில் இருக்குமா என்று நாலைந்து மாதங்களுக்கு முன் கேட்டதைச் சொல்லி என்னிடம் விவரம் கேட்டார். அந்தப்புத்தகம் இதுவாக இருக்கக் கூடும். பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கிற ரூ.30 விலையுள்ள சிறு புத்தகம்.
இதிலென்ன இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறீர்களா? தங்கள் சேகரத்தில் இருந்ததைத் தொலைத்து விட்டு அப்புறம் எங்கெங்கோ தேடியலைவது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டான அசட்டை அல்ல. புத்தகங்களுடைய அருமை உணர்ந்து அதை எதிர்வரும் சந்ததிக்கும் பாதுகாத்துத் தரவேண்டும் என்று செயல்படுகிறவர்களை ஒருகை விரல். விட்டே எண்ணிவிடலாம் அதிலும் நிறையவே வித்தியாசமானவர் புதுக்கோட்டையில் ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நிர்வகித்து வரும் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா? இங்கே நூலகங்கள், புத்தக சேகரங்கள் பல இருக்கலாம். ஆனால் ஞானாலயாவில் உள்ள புத்தகங்கள் ஒன்று விடாமல் படித்து, நூலாசிரியர், பதிப்பித்தவர், பதிப்பித்த காலம் என்று புத்தக விமரிசனம் தாண்டிய நிறைய சுவாரசியமான தகவல்களைத் தருகிறவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஒருவர் மட்டுமே. அவருடைய புத்தக சேகரத்தைப் போலவே புத்தகம் குறித்த மேலதிகத் தகவல்களுடன் அவர் சொல்லும் oral history யும் மிகவும் முக்கியமானது. நான் பேசுவதை sound cloud இல் கேட்டுக்கொண்டே, தேவியர் இல்லம் பதிவர் ஜோதிஜி 2012 இல் தன் வலைப்பதிவில் வெளியிட்ட நேர்காணலைப் படிக்கலாமா?
பத்திரிக்கையில் - எனது நேர்காணல்
தொடங்கப்போகும் ஜனவரி 2013 ஆண்டுக்கான ஆழம் முதல் இதழில் எனது நேர்காணல் வெளியாகி உள்ளது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடத்திய நேர்காணலின் முழுவடிவம்.
ஞானாலயா திரு. கிருஷணமூர்த்தி - ஒரு நேர்காணல்.
திருப்பூர் ஜோதிஜி
படங்கள் நிகழ்காலத்தில் சிவா
தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.
‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’என்று பதிலளித்தாராம் மகாத்மா.
விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.
புத்தகங்கள் நல்ல மனிதர்களை, தலைவர்களை உருவாக்குகின்றது. ஆனால் புதுக்கோட்டையில் திருக்கோர்ணம் பகுதியில் பழனியப்பா நகரில் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புத்தகளுக்கென்றே தன் சொந்த உழைப்பின் மூலம் 1200 சதுர அடி பரப்புள்ள அறிவுக் கோவிலை கட்டி வைத்து மக்களுக்கு அர்பணித்து பாதுகாத்து வருகின்றார். இடம் போதாமல் மேற்கொண்டு மாடியில் கட்டிட நிர்மாண பணியையும் செய்து கொண்டிருக்கின்றார்.
கட்டணம் ஏதுமின்று இந்நூலகத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சிப்பட்டங்களைப் பெற்றவர்கள் (2007) வரைக்கும் 75 பேர்கள். பி.ஹெச்டி என்ற முனைவர் பட்டம் பெற்றவர்கள் 15 பேர்கள். இளம் முனைவர் (எம்பில்) 60 பேர்கள் பெற்றுள்ளனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஒருவர் PRIVATE LIBRARIES: WITH SPECIAL PEREFERNCE TO GNANALAYA. A USER LIBRARY என்ற தலைப்பிலேயே ஆய்வை முடித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.
ஒரு நூலகமென்பது எப்படியிருக்க வேண்டும் என்பதன் முழு அர்த்தத்தையும் இங்கே தான் உணர்ந்து கொண்டேன். காரணம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஞானாலயா என்ற இந்த நூலகத்தை நடத்தவில்லை. மாறாக புத்தகங்களையே சுவாசிப்பதால் தான் இந்த மகத்தான் சாதனையை செய்திருந்த போதிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத மனிதராக காட்சியளிக்கின்றார்.
திரு. கிருஷ்ணமூர்த்தி பி.எஸ்சி (கணிதம்) எம்.ஏ (தமிழ்), எம்.எட் பட்டம் பெற்றவர். கணித ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தி எம்.எஸ்சி, எம்.பிஃல் பட்டம் பெற்று புதுக்கோட்டை அரசு மகளில்கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதங்களை தாண்டி கலப்பு மணம் புரிந்து வாழ்வில் இணைந்தவர்கள்.
முதல் மகள் நிவேதிதா பாரதி மருத்துவர் (லண்டன்) பட்டம் பெற்று சென்னையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றுகின்றார். இரண்டாவது மகள் ஞானதீபம் இலண்டனில் எம்பிஏ பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர்.
இந்த நூலகத்திற்கு வருகைபுரிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியன் தனது வருகை குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதை தனி மனிதனாக செய்துள்ளார். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் கிருஷ்ணமூர்த்தி, டோரதி சம்பத்திக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்வேன்.
புத்தகங்களை நேசிப்பவர்களை, விரும்புவர்களை பார்த்து இருக்கின்றேன்? ஆனால் இப்படி சேகரிகத்த புத்தகங்களை பாதுகாத்து அதற்கென்று உங்கள் தனிப்பட்ட வருமானம் முழுமையும் இதற்கென்று செலவழித்து ஒரு கட்டிடத்தை உருவாக்கி இன்று வரையிலும் ஆட்கள் போட்டு பாதுகாக்கும் உங்கள் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது?
திருவாரூருக்கு அருகில் உள்ள காலாலகுடி எங்கள் சொந்த ஊர். 1926ல் திருச்சி புனித ஜோசப்பில் பிஎஸ்சி இயல்பியல் படித்த எனது தந்தையார் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.
திருச்சி லால்குடியில் ஆசிரியராக பணியாற்றி அவர் என் புத்தகவாசிப்பின் குருவும் கூட. தான் படிக்கும் அத்தனை விசயங்களையும் கவனமாக கோடிட்டு வைத்து எங்களுடன் அது குறித்து உரையாடுவார். என் தாயாரின் குடும்பமும் மிகவும் படித்த குடும்பம். சென்னை மகாணம் பிரிக்கப்படாத போது என் தாயாரின் அப்பா சென்னையில் தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். ஐந்து மொழிகள் இயல்பாகவே பழகியிருந்தார்.
இந்த படிப்புச் சூழலில் வாழ்ந்த எனக்கு என் அப்பா தான் சேகரித்துவைத்திருந்த 100 புத்தகங்களை கொடுத்து இவற்றையெல்லாம் பாதுகாத்து படி என்றார். இது தான் தொக்க வித்தாக இருந்தது.
எனது தந்தையார் பணிமாறுதலின் பொருட்டு பல ஊர்களில் என் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது. 8ஆம் வகுப்புவரை பெரம்பலூர் பள்ளியில் படித்தேன். அங்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் பாரதிதாசனின் பள்ளித் தோழரான முருசேக முதலியார். 1950களில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் தமிழ் முழக்கம் ஓங்கியிருந்த காலம். எந்த ஒரு மாணவனும் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிப்பான். பாரதி, பாரதிதாசன் பாடல்களை ஒப்பிக்காத மாணவர்களையே பார்க்க முடியாது. பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். எனக்கு பாவேந்தர் பரம்பரையில் வந்த வேணுகோபால் ரெட்டியார் தமிழ் ஆசிரியராக இருந்தார். அவர் பாடம் நடத்திய விதங்களிலேயே நமக்கு மனப்பாடமே ஆகிவிடும். என் இளமையில் கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்புகள் தான் தமிழ் உணர்வும் கலையுணர்வுமாக அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்தியது.
1957 ல் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை அரசியல் கட்சி எனத் திருச்சி மாநாட்டில் அறிவித்து தேர்தலில் ஈடுபட்டது. வெளிவந்த திரைப்படங்கள் கட்சியின் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் மாணவர்களிடையே பெரிய எழுச்சியை உருவாக்கியது. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கி.வா.ஜ, அ.ஞ.ஞானசம்பந்தம் போன்றோர்களின் சொற்பொழிவுகளை கேட்ட எனக்கு என் இந்த ஆர்வத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே சென்றது.
திருச்சி ஜமால் முகம்து கல்லூரியில் 1959 62 பிஎஸ்சி கணிதம் படித்தேன். அப்போது தான் பியூசி அறிமுகமானது. பெரிய மனிதர்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்க வாய்ப்பும் கிடைத்தது. பெரியாருடைய பல சொற்பொழிவுகளை கேட்டு இருக்கின்றேன். தமிழரசு கழகம் நடத்தி மா.பொ.சி உரையை 1959ல் கேட்டேன். அவர் பேசிய தமிழ்க்கல்வி பற்றி பேசியது என் மனதை மிகவும் கவர்ந்தது.
கல்லூரி மாணவர்களுடன் ஜீவாவை, பாஸ்கர தொண்டைமான் போன்றவர்களையும் சந்தித்தேன். என்னுடைய இந்த புத்தக ஆர்வத்திற்கு தொடக்கத்தில் குடும்பம் காரணமாக இருந்தது. ஆனால் என்னைச் சுற்றியிருந்த சூழல் அடுத்தபடிக்கு நகர்த்தியது. அதுவே இன்று இந்த ஞானாலயா என்ற 85 000 புத்தகங்களுக்கு மேற்பட்ட சேகரிப்பு நிலையத்தை உருவாக்க காரணமாகவும் இருந்தது.
1965 இல் மணச்சநல்லூர் உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த போது என் மனைவி டோரதி அங்கு பயிற்சி பட்டதாரியாக வந்து சேர்ந்தார். பிறகு பெண்கள் கல்லூரிக்கு மாறிச் சென்ற போதிலும் இருவருக்குள்ளும் இருந்த புரிந்துணர்வும், என்னைப் போலவே அவரும் புத்தகத்தில் காட்டிய ஆர்வமும் இருவரையும் வாழ்க்கையில் ஒன்று சேரவைத்தது. அவர் கிறிஸ்துவராக இருந்த போதிலும் ஜீவா, பெரியார் கொள்கையில் பிடிப்புள்ள எனக்கு மதங்களை தாண்டி எங்களை மனங்களை இணைய வைத்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. எங்களுக்கு வந்த மாப்பிள்ளைகளும் எங்கள் பணிக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.
பெரும்பாலும் புத்தக வாசிப்பவர்களுக்கு ஏதோவொரு குறிப்பிட்ட துறையில் தான் ஆர்வம் இருக்கும். அது குறித்த புத்தகங்களில் தான் ஆர்வத்தை செலுத்துவர். ஆனால் நீங்கள் பல்துறையிலும் ஆர்வம் செலுத்தி சேகரித்தது ஆச்சரியமாக உள்ளது? எப்படி இது சாத்தியமானது?
என்னை உற்சாகப்படுத்தி இவ்வளவு பெரிய நூலகம் உருவாவதற்கு மிக முக்கிய முழுமுதற் காரணமாக இருந்தவர் ஏ.கே.செட்டியார். உலகம் சுற்றிய முதல் தமிழர். மகாத்மா காந்தி பற்றி குறும்படம் எடுத்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கே பார்வையிட வைத்தவர். ரோஜா முத்தையா செட்டியார் தொடர்பு எனக்கு பல விதங்களில் உதவியாக இருந்தது.
தொடக்கத்தில் இதற்கு மீனாட்சி நூலகம் என்று பெயரிட்டு வைத்திருந்தோம். நண்பர்கள் ஏதோவொரு வாடகை நூலகத்தின் பெயர் போல இருக்கின்றது என்றார்கள். மனைவியின் யோசனைப்படி 1987ல் ஞானத்தின் ஆலயம் என்ற அர்த்தத்தில் ஞானாலயா என்ற பெயர் உருவானது.
1958, 1959ல் திருச்சி பழைய புத்தகக் கடைகளிலே சென்று புத்தகம் வாங்கக்கூடிய பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய நோக்கம் முதற்பதிப்பு புத்தகங்களை சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல பக்கங்களுக்கும் சென்றேன். இதற்கு முக்கிய காரணம் முதற்பதிப்பில் வரக்கூடிய உண்மையான விசயங்கள் அனைத்தும் அடுத்த பதிப்பில் வருவதில்லை என்பதை கண்டு கொண்டேன். அதுவே அடுத்தடுத்த பதிப்பில் மாறி மாறி கடைசியில் உண்மைக்கும் சொல்லவ்ந்த விசயத்திற்கும் சம்மந்தம் இல்லாத அளவுக்கு மாறிப் போயிருப்பதை கண்டேன். முதற்பதிப்பில் உள்ள முன்னுரை மற்றும் படங்கள் கூட நீக்கப்பட்டு கடைசியில் வெறும் தாள்களைப் போலவே வரத் தொடங்கியதால் இதில் அதிகம் ஆர்வம் செலுத்தினேன். 1938 ல் நான் பார்த்த பாரதிதாசன் கவிதைகள் அடங்கிய புத்தகத்திற்கும் 1959க்குப் பிறகு நான் பார்த்த அதே புத்தகத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள்.
1940க்கு முன்னால் வந்த பெரியாரின் ஒரு சில நூல்கள் என்னிடம் உள்ளது. இந்த மாதிரி நூல்களை தேடிச் சென்ற போது தமிழில் வந்த வேறு சில அரிய நூல்களையும் பார்கக முடிந்தது. 1985 லேயே மரின் மெடிக்கல் மேனுவல் என்று நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்டுகொண்டேன். 1888 லேயே கிரிமினல் லா, சிவில் லா ஆகியவை மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதை 1922 இல் கூட ஒரு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கொழும்பிலும்,யாழ்ப்பாணத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். மருத்துவம், வானியல், சட்டம் பற்றியெல்லாம் கொழும்பிலும், யாழ்பாணத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் முதல் முறையாக எழுத்து சீர்திருத்தத்தை சுப்பையா பிள்ளைதான் அறிமுகப்படுத்தியோடு தந்தை பெரியார் அவர்களிடம் அந்த புத்தகத்திறகு ஒரு முன்னுரை கேட்கிறார். பெரியாரும் இதுவொரு நல்ல முயற்சி என்று முன்னுரை கொடுத்துள்ளார். முதலில் நானே இதை பின்பற்றுகின்றேன் என்று விடுதலை,குடியரசு இதழ்களில் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.
1986 இல் ஊதிய உயர்வு வரும் வரையிலும் உங்களைப் போன்ற ஆசிரியர்களின் சம்பளம் சொற்பமானது தானே? எப்படி இது போன்ற சேகரிப்புக்கு பணத்தை எப்படி ஒதுக்க முடிந்தது?
மனைவியும் ஆசிரியர் பணியில் இருந்த காரணத்தாலும், எங்களின் அடிப்படைத் தேவைகளை மிகவும் சுருக்கிக் கொண்டு புத்தகங்கள் வாங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தினோம். 1990க்குப் பிறகு தான் நாங்கள் டிவியே வாங்கினோம்.
செட்டிநாட்டு பகுதிகளில் உள்ள செட்டியர்களின் பழைய வீடுகளில் நாள் முழுக்க காத்திருந்து என்னால் முடிந்த தொகையை தருகின்றேன் என்று பல அரிய புத்தகங்களை சேகரித்துள்ளேன். புதுக்கோட்டைக்கு நான் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்த காரணமே இந்த புத்தக சேகரிப்புக்கு வசதியாக இருப்பதால் தான். எங்கள் இருவரின் பணி ஓய்வின் மூலம் கிடைத்த தொகையை வைத்து ஏறத்தாழ பத்தரை லட்சத்தில் நூலக பாணியில் ஒரு கட்டிடம் கட்டி இந்த ஞானலயாவை உருவாக்கினேன்.
இங்கு உள்ள புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
இங்கு 1842 ஆம் ஆண்டு வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதி முதல் இன்றைய நவீன எழுத்தாளர்களின் புத்தகங்கள் வரைக்கும் உள்ளது. 1904ல் விவேகபானு இதழில் வெளிவந்த பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், அப்போதைய ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட பாரதியின் படைப்புகள், 1920க்கு பிறகு வெளிவந்த சிற்றிதழ்கள் இப்படி கிடைத்தற்கரிய பல புத்தகங்கள் இங்கு உள்ளது.
சமயம் சார்ந்த நூல்கள், பழந்தமிழ் இலக்கிய நூல்கள், நவீன இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள், காந்தி இயக்கம் சார்ந்த நூல்கள், திராவிட இயக்கம் சார்ந்த பகுத்தறிவுயக்க நூல்கள், பொதுவுடைமை இயக்கம் சார்ந்த முற்போக்கு நூல்கள், இதழ்த் தொப்புகள் மற்றும் ஆங்கிலத்தில் தத்துவம், இலக்கியம், வரலாறு சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் என் சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் உள்ளடக்கிய 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எளிதில் கிடைக்காத பல தனி இதழ்களும் ஏராளமாக உள்ளது. கன்னிமாரா நூலகத்தில் இல்லாத புத்தகங்கள் கூட ஞானலாயாவில் உள்ளது.
இன்னமும் இந்த புத்தக சேகரிப்பில் சேகரிக்க வேண்டிய புத்தகங்கள் உள்ளதா?
1970க்குப் பின் மருத்துவ நூல்களும், சட்ட நூல்களும் வந்துள்ளன. நல்ல மொழிபெயர்ப்பு நூல்களும், கிரிமினல், சிவில் சட்ட நூல் மொழிபெயர்ப்புகளும் இல்லை என்ற குறையை தீர்க்க உதவும். மயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை வழக்கு அதற்குத்தான் வழங்கிய தீர்ப்பு இரண்டையுமே நூலாக 1870களில் வெளியிட்டுள்ளார். அரசாங்கம் மனது வைத்தால் தான் இது போன்ற அரிய பல நூல்களை சேகரிக்க முடியும்.
இங்கு வருகை புரிந்தவர்களைப் பற்றிய உங்கள் அனுபவம்?
அமெரிக்கா ஆய்வாளர் திருமதி. சுமதி ராமசாமி, அமெரிக்கா நாட்டு தமிழ் அறிஞர் பவுலா ரிச்மேன், சிகாகோ பல்கலைக்கழக நூலகர் ஜேம்ஸ் நே. சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஈவ்லின் மாசிலாமாணி இதைத்தவிர கலைஞர் மு. கருணாநிதி, செல்வி செ.ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்ட புத்தகங்கள் இங்கிருந்து கொடுத்து அனுப்பியிருக்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பல்துறையில் உள்ள பெரிய மனிதர்கள் என்று அத்தனை பேர்களும் இங்கே வருகை புரிந்துள்ளனர்.
எங்களிடமிருந்து பெற்று மறுபதிப்பு கண்ட நூல்கள் 500க்கும் அதிகமாக இருக்கும். எங்கள் நூலகம் தமிழகத்தில் உள்ள தனியார் நடத்தும் நூலகத்தின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நூலகம் ஆராய்ச்சி மாணவர்கள் வரைக்கும் பயன்படுத்தும் விதத்தில் மிக பயன் உள்ளதாக ஆகியுள்ளது. மேற்கொண்டு உங்கள் திட்டங்கள் என்ன?
நாம் நம் மொழியின் அருமையை இன்னமும் உணராமல் தான் இருக்கின்றோம். இந்த நூலகத்தை எங்கள் காலத்திற்குப் பிறகும் இந்த தமிழ் உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வெறும் நூலகம் மட்டுமல்ல. நம் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் பற்றிய ஆவணக் காப்பகமும் கூட. பய நூல்கள் பலவற்றை டிஜிட்டல் செய்ய வேண்டும். அல்லது மைக்ரோ பிலிம்மில் பதிய வேண்டும். அரிய நூல்களை பாதுகாப்பது சவாலாகவே உள்ளது. செலவு பிடிக்கும் சமாச்சாரமும் கூட. இங்குள்ள புத்தக தொப்பினை இணையத்தில் பட்டியல் வாரியாக இணையத்தில் பதிய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். ஆள்பலமும், பொருட்பலமும் எங்களிடம் இல்லை.
என்னுடைய வயதுக்கு மீறிய உழைப்பை தமிழர்கள் அத்தனை பேர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இங்குள்ள பல புத்தகங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தவை. இன்றைய நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு ஒளிப்படிவமாக எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஞானாலயாவை ஆராய்ச்சி நூலகமாக அங்கீகரித்து நிதியுதவி செய்ய வேண்டும்.
இதுவரையிலும் குறிப்பிட்ட சிலரின் உதவிகள் கிடைத்த போதிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொந்த உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டே இங்கேயுள்ள பெரும்பாலான வசதிகளை உருவாக்கியுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டேயிருக்கின்றது. தனிநபரால் எந்த அளவுக்கு சமாளிக்க முடியும்? முடிந்தவர்கள் எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
முகவரி
பா. கிருஷ்ணமூர்த்தி
ஞானாலயா நூலக நிறுவனர்
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140
வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI
IFS CODE: UCBA0000112
e-mail: gnanalayapdk@gmail.com
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment