தமிழிலும் கோரா தளம் தன்னுடைய வீச்சை அதிகரித்து வருவது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிற ஓரு செய்தி. கேள்விகளும் பதில்களும் உண்மையிலேயே மிகுந்த யோசனைக்குப் பிறகே! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எவரும் கும்மியடிப்பதில்லை என்பது கோரா தளத்தின் இன்னொரு பாசிட்டிவான அம்சம்.
தந்தி டிவி முட்டுக் கொடுத்தால் முதல்வராகிவிட முடியுமா?
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு நரேந்திர மோதியைக் கண்டு அச்சம் வந்துள்ளதா? இது ஒரு பயனாளர் தெரிந்துகொள்ள விரும்பியது இப்படிக் கேள்வியாக
C.V.Rajan, ஆன்மீகத் தேடலில் இருக்கும், ஒரு முதிய மாணவன்
(ஆங்கில கோராவில் நான் அளித்துள்ள பதிலின் தமிழாக்கம் இது).
ஆம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
தி.மு.க சில பல வருடங்களாகவே தமிழ்நாட்டில் பிடிமானத்தை இழந்துகொண்டே தான் வந்திருக்கிறது. 2006 க்கு முன்பிருந்தே, ஒரு மாநிலத் தலைவராகக் கருணாநிதியின் நிலைமை மேலே போவதும், கீழே வருவதுமாக ஆட்டம் கண்டுகொண்டே தான் இருந்தது. கடந்த 13 வருடங்களாக, அவரது தி.மு.க.. கண்ட வெற்றிகளைவிட சந்தித்த தோல்விகளும் அவமானங்களுமே அதிகம். 2006-11 இல் அவர் கடைசியாக ஆண்ட அரசு, காங்கிரஸின் வெளி ஆதரவில் ஓட்டப்பட்ட ஒரு மைனாரிடி அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆக, ஒன்று மட்டும் நிச்சயம். திராவிடர்களின் தனிப்பெரும் தானைத் தலைவராகத் தம்மைத் தாமே முன்நிறுத்திக்கொண்ட கலைஞரின் பீடும், பெருமையும் அவருக்கு வயதாக ஆகச் சரிந்துகொண்டே வந்ததும், அவரது கவர்ச்சியெல்லாம் மங்கிக் கொண்டே போனதும் கண்கூடு. அவர் மீண்டும் போராடிப் பதவியைப் பிடித்ததெல்லாம் பெரும்பாலும் அவரது தகுதியை மக்கள் மதித்ததால் அல்ல; "வேறு உருப்படியான மாற்று" ஒன்றும் தமிழகத்தில் இல்லாததால், 'குப்பன் போனால் சுப்பன் தான் வருவான்' என்கிற ரீதியில் தான் அவர் ஆட்சிக்கு வந்ததும்!
இப்போது கருணாநிதியும் இல்லை; ஜெயலலிதாவும் இல்லை என்கிற அரசியல் சூழலில், 'அம்மா' இல்லாத அ.தி.மு.க மிகவும் புத்திசாலித்தனமாக, மத்தியிலுள்ள 'அப்பா'வை ("மோடிதான் எங்கள் டாடி"!) இறுகப் பிடித்துக்கொண்டு தனது ஆட்சி கவிழாதிருக்கத் தன்னைத் தற்காத்துக்கொண்டது!
ஆனால், தந்தையை இழந்த ஸ்டாலினோ, 'அம்மா' இல்லாத அ.தி.மு.க. வைத் தன்னால் 'ஒண்டிக்கு ஒண்டி' சமாளிக்க முடியும் என்கிற மிதப்பில் இருந்தாரோ என்னவோ? அம்மா இல்லாமல் ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க உள் கட்சிச் சண்டைகளிலேயே துண்டு துண்டாகி விடும், அதனால் அதனைத் தூக்கியெரிந்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடலாம் என்கிற கனவில் இருந்திருப்பார் போலும்.
இங்குதான் எடப்பாடியாரும் பன்னீர் செல்வமும், தமிழ் நாடு அரசியல்வாதிகள் எளிதில் செய்யாத ஒரு ஆச்சரியத்தை அரங்கேற்றினார்கள்! 'ஒருவர்க்கொருவர் குடுமியைப் பிடித்து சண்டை போட்டுக்கொண்டால் இருவரும் ஒன்றாக அரசியல் களத்திலிருந்து முற்றிலும் காணாது போய்விடும் நிலை வரும்' என்பதைப் புரிந்துகொண்டு, மத்திய அரசின் ஆதரவோடும் ஆசியோடும் ஒன்றாய் இணைந்தார்கள்! சுயமாய் தமக்கென ஒரு பெரும் ஆளுமையோ, பெரும் நிர்வாகத் திறனோ இல்லாதபோதும் கூட அரசியலில் தாக்குப்பிடித்து நிற்பது எப்படி என்கிற வித்தையை அவர்கள் செய்து காட்டினார்கள்!
பாவம், ஸ்டாலின்! ' கோட்டை இப்போது காலியாகும்; உள்ளே நுழைந்திவிட வேண்டியதுதான்' என்று சாலையில் வெய்யிலில் காத்திருந்தது தான் மிச்சம்!
அவரது தந்தையின் கடைசிக் கால அரசியல் போலவே ஸ்டாலினும் "நமது திறமையோ, சாமர்த்தியமோ ஒன்றும் பெரிது இல்லை; அவசியமும் இல்லை; அவர்களை மக்கள் விரட்டினால், தானே வேறு மாற்று ஒன்றும் இல்லாததால் நம்மைக் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்துவிடுவார்கள்" என்று தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.
ஆனால், நாளுக்கு நாள் மத்தியில் மோதியின் விசுவரூபம் ஸ்டாலின் எதிர்பாராத அளவிலாய் வளர்ந்துகொண்டிருந்தது கண்கூடு. இன மொழி உணர்ச்சி மிக்க மறத் தமிழர் கூட்டம், இத்தனை நாட்களாய் திராவிடக் கட்சிகளின் பொய்ப்பிரச்சாரங்களாலும், மோதி எதிர்ப்பு அரசியலாலும் மயங்கிக் கிடந்ததிலிருந்து மாறத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாமலேயே ஒரு புதிய விழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது!
எத்தனை தான் "திரும்பி போ" என்று கூச்சலிட்டாலும், தமிழகத்தில், படித்த, மெய்யான முன்னேற்றம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ள, வளர்ச்சியின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களும் நடுத்தர வர்க்கங்களும் சிறிது சிறிதாக நரேந்திர மோதியின் திறமை மிக்க தலைமையையும், ஆட்சியின் உத்வேகத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த விஷயத்தில் அ.தி.மு.கவின் தற்போதைய தலைமை, மக்களின் எண்ணப்போக்கை தி.மு,கவை விடத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் தான், அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகத் தேவையான அளவு நீக்குப் போக்கோடும் கூடி, ஒரு வலுவான கூட்டணியை பா.ஜ.க.. பா.ம.க., தே,மு.தி,கவுடன் அமைத்து, ஒரு பிரச்சனையான மூன்றாவது அணி உருவாகி ஓட்டுகளைப் பிரிக்க முடியாதபடி செய்துவிட்டார்கள்!
ஆக, இப்போது ஸ்டாலின் கண்டிப்பாக ஒரு சிக்கலில் தான் மாட்டியுள்ளார். மோதியின் பலத்தை அவர் இப்போது மோதிப்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்!
ஒரு வேளை, தமிழகத்தில் இன்னும் ஆழ வேரூன்றாத பா.ஜ.க., இந்தத் தேர்தலில் தாம் போட்டியிரும் 5 பாராளுமன்றத் தொகுதிகளில் ஒரு மூன்றில் வெற்றி பெற்றாலும் கூட அது தி.மு.கவுக்கு ஒரு அடிதான். தமிழகத்தில் தி.மு.க. முற்றிலும் விரும்பாத வகையில், நாடுதழுவிய சிந்தனை உள்ள ஒரு தேசியக் கட்சி தன் பரவலாக்கத்தை இங்கே விரைந்து செயல் படுத்தும் ஒரு சூழல் கண்டிப்பாக உருவாகிவிடும். 'குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு' குடும்ப அரசியல் நடத்தும் தி.மு.கவுக்கு இது கண்டிப்பாக ஆபத்தானது.
ஆக, ஸ்டாலின் மற்றும் அவர் கட்சிக்காரர்களுக்கு தொடை நடுக்கம் ஆரம்பித்தாகிவிட்டது. வெளியே இன்னும் தெரியவில்லை; அவ்வளவுதான்!
வடிவேலுவின் ஒரு வசனம் உங்களுக்கு ஞாபகம்வருகிறதா? ("பில்டிங் ஸ்டிறாங்கு, பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு") !
மீண்டும் சந்திப்போம்
//இந்தத் தேர்தலில் தாம் போட்டியிரும் 5 பாராளுமன்றத் தொகுதிகளில் ஒரு மூன்றில் வெற்றி பெற்றாலும் கூட அது தி.மு.கவுக்கு ஒரு அடிதான்.// - எனக்கு இதுகுறித்து நம்பிக்கை இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி 35க்கு மேலே, அதிலும் 39ஐப் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கு அதிமுக வாக்குகள் பிரிப்பும், பாஜகவுடனான கூட்டணியும், சிறுபான்மையினர் வாக்குகள் திமுக கூட்டணிக்குப் போவதும் காரணமாயிருக்கலாம். பார்க்கலாம்.
ReplyDeleteதிரு சிவி ராஜன் இதை கோராவில் எழுதியது ஏப்ரல் 9 அன்று. இது அவருடைய மதிப்பீடு. இங்கே ஏற்கெனெவே எழுதிய பதிவுகளில் மோடி மீதான பயமே நிறையப் மோடி மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை உங்களுடைய மதிப்பீட்டில் திமுக அணியே அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஜெயித்தாலும் 2014 இல் ஜெயலலிதா 37 சீட் ஜெயித்தும் பிரயோசனமில்லாமல் போனமாதிரி ஆவதற்கே வாய்ப்பு அதிகம்.
Deleteஇல்லை... உடனே மோடியோடு சேராமல், வெளியிலிருந்து 'நாட்டு நலனுக்காக ஆதரவு' என்ற ஸ்டாண்ட் எடுக்கலாமோ ஸ்டாலின்? ரிசல்ட் மட்டும்தான் நம் சந்தேகங்களைக் களையும்.
Deleteபொதுவா அதிமுக எம்பிக்களால தமிழகத்துக்கு எப்போதும் பிரயோசனம் இருந்ததில்லை. திமுக எம்பிக்கள் அவங்களையும் நல்லா வளப்படுத்திக்குவாங்க... இதைச் சாக்கிட்டு தமிழகத்துக்கும் ஏதேனும் வரும் (டி ஆர் பாலுவின் கடலில் மணல் அள்ளும் திட்டம் தவிர ஹாஹா)
ஜெ. ஆரோக்கியமா இருந்திருந்தால் 37ஐ வைத்து ஏதேனும் தமிழகத்துக்கு சாதித்திருப்பார், நிச்சயமா