இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகியிருக்குமே, கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம் என்று வாசிக்க ஆரம்பித்தவனை, ஜெயகாந்தனுடைய நீளமான முன்னுரை நாவலுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது என்பதில், இன்றைய பகல்பொழுது வாசிப்பும் யோசனையுமாகப் போனதில் ஜெயகாந்தன் எழுத்தின் வீரியம் மீதான பிரமிப்பு இன்னமும் அடங்க மறுக்கிறது.
என்னிடமிருக்கிற இந்தப்புத்தகம் மதுரை மீனாட்சி புத்தகநிலையத்தாரால் 1964 இல் முதல் பதிப்பாக வந்ததன் மறுபதிப்பாக 2014 செப்டெம்பரில் வந்த பிரதி. 195 பக்கங்கள். அதற்கு ஜெயகாந்தன் எழுதிய முன்னுரையே 10 பக்கங்கள். விலை நூறு ரூபாய், இதை நான் எங்கே எப்போது வாங்கினேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இது நான் வாங்கியதில்லை என்பதே உறைத்தது. மகன் வாங்கி வாசித்ததை இங்கே விட்டுப் போயிருக்கிறான்! புத்தகமாகுமுன் ஆனந்த விகடனில் 15 வாரம் தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது
கதை தங்கம் என்கிற காதலனால் கைவிடப் பட்ட சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு பெண்மணி, தன்னுடைய 10 வயது மகன் சிட்டியோடு, தனித்து வாழ்வதிலிருந்து தொடங்குகிறது. தகப்பன் முகத்தை பார்த்திராத சிட்டி, ஆரம்பத்தில் பொறுப்பே இல்லாதவனாகத் தான் வளர்கிறான். தொண்டர் துரைக்கண்ணு என்றொரு ஐஸ் ஃபேக்டரி முதலாளியின் அறிமுகம் கிடைப்பதில் சிட்டிக்குத் தாயின் அருமை தெரிகிறது. பகலில் ஐஸ் ஃபேக்டரி வேலை, இரவில் முதலாளி நடத்தும் இரவுப்பள்ளியில் படிப்பு என்று நல்லவிதமாகப் போகிறது. இந்த நேரத்தில் மாணிக்கம் என்கிற ஒரு சோசியனுக்கும் தங்கத்துக்கும் நெருக்கமான உறவும் வயிற்றில் கருவாகவும் வளர்கிறது. மாணிக்கம், தங்கம், சிட்டி, இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்க வருவதில், மாணிக்கம் என்னதான் தந்தை மாதிரிப் பாசமாகப் பழகினாலும், சிட்டிக்கு மாணிக்கத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேலைக்குப் போவதை விடுவதுடன் வீட்டையும் விட்டு வெளியேறுகிறான் மாணிக்கம் புரிந்து கொண்டு தங்கத்தை விட்டுப் பிரிந்த செய்தி தெரிந்த பிறகுதான் தாயுடன் வசிக்க மீண்டும் வருகிறான். தங்கத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மகனை அழைத்து, தன்னுடைய பூர்வக்கதையைச் சொல்லி, உன் தங்கையை என்மாதிரி இல்லாமல் நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கு என்று சொல்லி, இறந்தும் போகிறாள். சிட்டி இப்போது, தாயையும் இழந்து நிற்கிற நிலையில் இருக்கிற ஒரே உறவு அவன் தங்கைதான்!
சுற்றியுள்ள மனிதர்கள் பழிக்காமல் உதவுகிறார்கள். சிட்டி மறுபடி பகலில் வேலை அப்புறம் படிப்பு, அதன் பிறகு தங்கையை எப்படி வளர்த்து ஆளாக்கலாம் என்ற கனவுகளோடு வாழ ஆரம்பிப்பதுடன் கதை முடிகிறது. அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கிற கதைமாந்தர்கள் ஜெயகாந்தனின் இந்த நாவலில் இப்போது படித்து முடிக்கிற தருணத்திலும் வாழ்கிறார்கள்.
1964 மே மாதம் புத்தகமாக வந்த உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன் தயாரித்து இயக்கி திரைப்படமாகவும் 1965 இல் வெளிவந்தது. பாடல்களே இல்லாமல், வெறும் ஒருலட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், 21 நாட்களிலேயே எடுக்கப்பட்ட படம் என்பது இன்றைக்கு கொஞ்சம் நம்பமுடியாத ஆச்சரியமாகத்தான் இருக்கும். தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களில் மூன்றாவது பரிசைப் பெற்ற இந்தப்படத்தின் படச்சுருள் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம்